GPF
வழி மேல் விழிகள்..
இப்போதெல்லாம் நமது தோழர்கள்
சந்தித்துக்கொண்டால் கேட்கும் முதல் கேள்வி
" தோழரே.. GPF FUND வந்து விட்டதா? என்பதே...
இப்படித்தான் முதுகுளத்தூர் பகுதியில் இருந்து
நாளொன்றுக்கு நாலு முறையாவது போன் செய்யும்
தோழர்.மலைராஜன் என்பவர் தொலைபேசியில் கேட்டார்..
"சார்.. GPF வந்துவிட்டதா? என்று..
எத்தனையோ கேள்விகளுக்கு எகத்தாளமாகப் பதில் சொல்லத்தெரிந்த நமக்கு ஏனோ..
இதற்கு மட்டும் பதிலே சொல்ல முடியவில்லை.
ஆனாலும் சங்கத்தலைவர்கள்
எதையாவது சொல்லி சாமாளிக்க வேண்டுமே..
நம்மிடம் கேள்வி கேட்ட தோழர். மலைராஜனிடம்
நாம் ஒரு கேள்வி கேட்டோம்.
"தோழர்.மலைராஜன் முதுகுளத்தூர் பகுதியில்
இன்று மழை வருமா? என்று..
அவர் சொன்னார்.."சார் எனக்கு என்ன தெரியும்..
மழை வருமா? என்பது வானிலை ரமணனுக்கே தெரியாத வானத்து ரகசியம் அல்லவா..
மேலும் மழைப்பேறும்.. மகப்பேறும்...
மகாதேவனுக்கே தெரியாது என்ற
பழமொழி உங்களுக்குத் தெரியாதா?
மழைராஜனுக்கே.. தெரியாத ரகசியம்
சாதாரண போன்மெக்கானிக்
மலைராஜனுக்கு எப்படித் தெரியும்?
என்று நம்மைத்திருப்பிக்கேள்வி கேட்டார்.
நாம் அவரிடம் சொன்னோம்..
"எப்படி மழை வருவது உங்களுக்குத்தெரியாதோ..
அதைப்போலவே GPF வருவதும் எனக்குத் தெரியாது.
எனக்கு மட்டுமல்ல இந்தியத்திருநாட்டில் எந்த தலைவருக்குமே
இது பற்றி உறுதியாக சொல்லத்தெரியாது..
இது வரும்.. ஆனால்.. வராது ரகம்.."
என்று சொல்லி முடித்தோம்..
ஆனால் எதிர்முனையில் எந்த சத்தத்தையும் காணோம்.
பின்புதான் புரிந்தது மலைராஜன் தொலைபேசியைத் துண்டித்து
ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று.
வாராது வரும் மழை போலவே நேற்று வந்தது GPF.
பெருவானம் போல் மழை பெய்யும் என்று காத்திருந்தோம்..
ஆனால் GPF நிதியோ தூவானம் போல் தூவிச்சென்று விட்டது.
காரைக்குடி மாவட்டத்திற்கு கேட்டது 50 லட்சம்.
கிடைத்தது 30 லட்சம்.
கன்னடர்கள் காவிரியில் திறந்து விடும்
டிஎம்சி கணக்காக GPFம் ஆகி விட்டது.
கடைசியில் 50 ஆயிரம் ரூபாய் வறுமைக்கோடு
என்று நிர்ணயித்து 50 ஆயிரத்துக்கு கீழே விண்ணப்பித்திருந்தவர்களுக்கு
நேற்று GPF பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
50ஆயிரத்துக்கு மேலே கல்யாணச்செலவுக்கும்,
கல்விக்கட்டணத்திற்கும் விண்ணப்பித்தவர்கள்
வலியோடு வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
நேற்று கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள்..
அவரது நினைவாக பாடல் வானொலியில் ஒலித்தது..
"உன்னைச்சொல்லிக்குற்றமில்லை..
என்னைச்சொல்லிக்குற்றமில்லை..
காலம் செய்த கோலமடி..
கடவுள் செய்த குற்றமடி.."