Monday 9 June 2014

தோழியர். குழந்தைமேரி
அற்புதங்களின் சாட்சியம்

மானாமதுரை தொலைபேசி நிலையத்தில் TM ஆகப்பணி புரிந்த தோழியர்.குழந்தைமேரி தோழர்.ஜெகன் நினைவு நாளன்று உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். தோழியர்.மேரியின்
இறுதிச்சடங்கில் கலந்து கொண்டபோது அற்புதத்தலைவர் தோழர்.ஜெகனின் நினைவுகளே நெஞ்சில் நிழலாடியது. காரணம்  தோழியர்.குழந்தைமேரி அவர் விளைவித்த
 அற்புதங்களின் ஓர் சாட்சி என்பதே.

அப்போது...

மஸ்தூர்கள் பாவப்பட்ட மனிதர்களாக வாழ்ந்த காலம்.
பரமக்குடி பகுதியில் மஸ்தூராகப்பணி புரிந்த தோழர்.பிச்சை என்பவர் மின்விபத்தில் மரணமுற்றார். தனது இளம் மனைவி இரண்டு குழந்தைகளைத்தவிக்க விட்டு தான் மட்டும் பரலோகம் சென்றார். தோழர்கள் அஞ்சும் பத்துமாக  சேர்த்து வழங்கிய நிதி அஞ்சு பத்து நாட்களுக்கு கூட வரவில்லை. காதல் திருமணம் என்பதால் சுற்றம் யாரும் வீட்டு முற்றம் கூட மிதிக்கவில்லை. குழந்தைகள் நிலை கண்டு அழும் குழந்தையானார் குழந்தைமேரி. அந்த நேரத்தில்தான் மஸ்தூர்களின் சிறப்புக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற இரட்சகனாய் தோழர்.ஜெகன் வந்தார். தோழியரின் துயர் சொன்னோம். வறுமை வலி நீக்க வழி வேண்டினோம். அந்த தோழியரிடம்  "உங்களது கணவர் பார்த்த வேலையை உங்களால் பார்க்க முடியுமா? என்று  தோழர்.ஜெகன் கேட்டார். என் குழந்தைகளைக் காப்பாற்ற எந்தப்பணியும் செய்வேன் என்று அவர் சொன்னார். சரி பார்க்கலாம்  என்று கூறிசசென்றார்.
புதிதாக பொறுப்பேற்றிருந்த தோழர்.தமிழ்மணி அவர்களும் நிச்சயம் தோழியர்.குழந்தைமேரிக்கு நல்வழி பிறக்கும் என கூறிச்சென்றார். நல்லோர் கூற்று நடப்பது நிச்சயம் என்பது நானிலத்து நல்லோர் வாக்கு. நல்லது நடந்தேறியது. மஸ்தூர் இறந்தாலும் வாரிசுக்கு வேலை தர வேண்டும் என்ற உத்திரவு பிறந்தது. தோழியர். குழந்தைமேரி பரமக்குடி துணைக்கோட்ட அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். வயிற்றில் எரிந்த நெருப்பு அடுப்பில் எரிய ஆரம்பித்தது. 

போன்மெக்கானிக் தேர்வு வந்தது. தோழியர் குழந்தைமேரி விண்ணப்பித்தார். வழக்கம்போல் நிர்வாகத்திற்கு குழப்பமும் வந்து சேர்ந்தது. பரிவு அடிப்படையில் பணி புரியும் மஸ்தூருக்கு தேர்வு  எழுத தகுதி உண்டா? என்பதே குழப்பம். குழப்பம் தீரும் முன் தேர்வு  வந்து சேர்ந்தது.  தோழியர்.குழந்தைமேரிக்கு தேர்வு அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை. E3/E4 பாராமல் இரவு பகல் பாராமல் உழைத்த அன்புத்தோழர். ஆர்.கே முதல் நாள் இரவு சொன்னார் "அந்த தோழியரை மறுநாள் தேர்வு மையத்துக்கு செல்ல சொல்லுங்கள்... நான் பார்த்துக்கொள்கின்றேன்" என்று. சங்கம் சாதிக்கும் என்ற நம்பிக்கையோடு குழந்தைமேரி தேர்வு மையம் சென்றார். . தேர்வு ஆரம்பித்தது. தேர்வு மணி அடித்தது. குழந்தைமேரி குழப்பமானார். நாங்கள் நம்பிக்கை மணி அடித்தோம். நம்பினோர் கெடுவதில்லை. அழைக்கப்பட்டார் குழந்தைமேரி. "சென்னையில் இருந்து உங்களுக்கு தேர்வு எழுத அனுமதி வந்துள்ளது. நீங்கள் தேர்வு எழுதலாம் என்று சொல்லி கையால் எழுதப்பட்ட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. தேர்வு எழுதினார்.. தேர்ச்சியும் பெற்றார்... மஸ்தூர் என்னும் அன்றாடக்கூலியில் இருந்து மத்திய அரசின் மூன்றாம் பிரிவு ஊழியர் என்னும் போன்மெக்கானிக் ஆக நிரந்தர ஊழியராக வளர்ச்சி பெற்றார்  தோழியர்.குழந்தைமேரி. குழந்தைகளும் பொறியியல் பட்டதாரிகளாக  வளர்ச்சி பெற்றனர். இல்லாமை ஒழிந்தது.. வங்கிக்கடனில் புதிய இல்லம் பிறந்தது. ஆனாலும் பரிதாபம்... பாடுபட்டு உழைத்த அவரை பரலோகம் அழைத்து விட்டது.

குழந்தைமேரி... 
சங்கம் விளைவித்த ஒளிவீசும்  அற்புதங்களின் ஓர் சாட்சி...

அவர் மரித்த அன்று அவரது உறவினர்கள் கேட்டார்கள்.."தம்பி.. இந்த பிள்ளைகளுக்கு BSNLலில் ஏதாவது வேலை கிடைக்குமா? என்று...
கூலி வேலை பார்த்த பிச்சை இறந்தபோது
குழந்தைமேரியிடம் சொன்னோம்.."கட்டாயம் உங்களுக்கு வேலை வாங்கித்தருவோம்" என்று. கூலியின் மனைவிக்கு வேலையும் கிடைத்தது.
இன்று நிரந்தர ஊழியர் மேரியின் பிள்ளைகள் கேட்கின்றர்கள்
"எங்களுக்கு வேலை கிடைக்குமா? என்று.. 
நம்மால் ஏதும் சொல்ல முடியவில்லை..

கனத்த மனதோடு 
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தோம்...
அற்புதங்கள் ஏதுமின்றி..
 வானம் வெறிச்சோடிக் கிடக்கின்றது...

1 comment:

  1. குழந்தை மேரியைப் பற்றி காரைக்குடி மாரியின் எழுத்து கண்களைப் பனிக்க வைத்தது. ஜெகனின் நினைவு நாளில் மறைந்த அந்த தோழியரை ஒட்டி இப்படியாக ஒரு செய்தியை தோழர் மாரியால்தான் தர முடியும்.
    உங்கள் செய்தியைப் படித்த பின் நானும் வானத்தைப் பார்த்தேன். வானம் வெறிச்சோடாமல் எனக்குள் அற்புதத்தைக் காட்டியது.


    '' கனத்த மனதோடு
    ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தோம்...
    அற்புதங்கள் ஏதுமின்றி..
    வானம் வெறிச்சோடிக் கிடக்கின்றது...''

    ஈரம் தொட்டு எழுதப்பட்ட இந்த இறுதி வரிகளால் என் மனம் மேலும் கனத்தது.

    ReplyDelete