Tuesday, 30 April 2019


தினம் தினம் வேண்டும் மேதினம்... 
அதிகாலை முதல் அந்திசாயும் வரை...
உதிரம் சிந்தினான்... நெருப்பில் நீந்தினான்..
உழைத்து உழைத்து இளைத்த மனிதன்...
ஒரு நாள் எழுந்தான்... ஒன்றாய் எழுந்தான்...
விடிந்தது பொழுது... முடிந்தது இரவு என...
கூத்தாடினான்... கொண்டாடினான்...

விடிந்ததா...  இரவு ?  
முடிந்ததா இழவு ?
இன்னும் நீள்கிறது...
இடைவிடாமல் தொடர்கிறது...
செய்த வேலைக்கு கூலி...
செயல் திறனுக்கேற்ற கூலி...
குறைந்தபட்சக்கூலி...
குடும்பம் காத்திடும் கூலி...
வாழ்க்கைக்கேற்ற  வசதி... 
உணர்வுக்கேற்ற உரிமை...
வந்து சேர்ந்ததா? ...
வளம் சேர்த்ததா?
இன்னும் இல்லை...
இனியும் இல்லை...
இங்கே வலுத்தவன் வாழ்கிறான்...
உழைத்தவன் நோகிறான்..
இந்நிலை மாறவேண்டும்...
உழைப்பாளி இனம் உயர வேண்டும்...
கரம் உயர்த்திக் குரலொலிப்போம்...
வேண்டும் மே தினம்...
வேண்டும்.. தினம்... தினம்...
வேண்டும் மே தினம்...
மீண்டும் மேதினம்..
 அனைவருக்கும்...
மேதின நல்வாழ்த்துக்கள்...

மே தின நிகழ்வுகள் 
மேதினக்கொடியேற்றம்

01/05/2019 – புதன்காரைக்குடி
----------------------------------------
காலை 10.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம்
----------------------------------------
காலை 10.30 மணி
RSU தொலைபேசி நிலையம்
----------------------------------------
காலை 11.00 மணி
கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம்
----------------------------------------
காலை 11.30 மணி
D-TAX தொலைபேசி நிலையம்
----------------------------------------
மாலை 06 மணி 
பொதுக்கூட்டம் 
காரைக்குடி ஐந்து விளக்கு 

தோழர்களே... வருக...

Saturday, 27 April 2019


செ ய் தி க ள்

இயக்குநர் பொறுப்புக்கள்

திரு.சுரேஷ் குப்தா குமார் அவர்கள்  DIRECTOR FINANACE 
இயக்குநர் நிதியாக மூன்று மாதங்களுக்கு 
கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளார்.

திரு.சீத்லா பிரசாத் DIRECTOR (CM) நுகர்வோர் இயக்க இயக்குநராக 
மூன்று மாதங்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளார்.
-----------------------------------------------------------------
பதவிப்பெயர் மாற்றம்

பல்வேறு கேடர்களுக்கு பெயர்மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 
19 பதவிகள் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது விடுபட்ட அனைத்துக் கேடர்கள் பெயரையும் ATTENDANT என்று 
பெயர் மாற்றம் செய்திட 26/04/2019 அன்று கூடிய
 பதவிப்பெயர்மாற்றக்குழு முடிவு செய்துள்ளது. 

இந்தியாவின் புகழ் பெற்ற CHOWKIDAR செளக்கிதார் பதவி கூட ATTENDANT என்று BSNLலில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------
8வது உறுப்பினர் சரிபார்ப்பு

NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கான சங்க அங்கீகாரம் 18/05/2019 அன்று முடிவடைகின்றது. எனவே நிர்வாகம் உடனடியாக 8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலை நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 23/05/2019 அன்று வெளியாகும். எனவே நிர்வாகம் ஜூன் மாதம் தேர்தலை நடத்திட முடியும். ஆனால் நிதிநிலையக் காட்டி நிர்வாகம் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை ஆறு மாதங்களுக்குத் தள்ளிப்போட நினைக்கின்றது. இதனை எதிர்த்தும் உடனடியாக உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலை நடத்திடக்கோரியும் NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

Friday, 26 April 2019


மாவட்டங்கள் இணைப்பு
BUSINESS AREA - MERGER OF SSAs

BSNLலில் SSA தகுதியில் இருந்த சிறு சிறு மாவட்டங்களை பெரிய மாவட்டங்களுடன் இணைத்து வணிகப்பகுதி BUSINESS AREA என்ற பெயரில் நிர்வாக அமைப்புக்களை உருவாக்க DELOITTEE குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்  இதுவரை நடைமுறைக்கு வராமல் இருந்தது.  தற்போது இந்த வணிகப்பகுதி நிர்வாக நடைமுறையை 01/06/2019  முதல் அமுல்படுத்த வேண்டும் என 
CORPORATE நிர்வாகம் 26/04/2019 அன்று உத்திரவிட்டுள்ளது.

தமிழகம், குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, ஒரிசா, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் கொல்கத்தா தொலைபேசி 
ஆகிய பகுதிகளில் வணிக இணைப்பு மேற்கொள்ளப்பட 
வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்...
காரைக்குடி   மதுரையுடனும்...
விருதுநகர்   தூத்துக்குடியுடனும்...
திருநெல்வேலி   நாகர்கோவிலுடனும்...
கும்பகோணம்   தஞ்சாவூருடனும்...
குன்னூர்   கோவையுடனும்
தர்மபுரி   சேலத்துடனும் இணைக்கப்படவுள்ளன.

சென்ற முறை பாண்டிச்சேரி வணிகப்பகுதியுடன் இணைக்கப்பட்ட கடலூர் தற்போது தனித்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது. 
யூனியன் பகுதி என்பதால் 
பாண்டிச்சேரியும் தனித்த வணிகப்பகுதியாக இயங்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 
விருதுநகர் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மட்டுமே 
இணைப்பு பிரச்சினையாக விளங்கும்.

காரைக்குடி மாவட்டம் 
மிகுந்த ஆள்பற்றாக்குறையுடன் செயல்பட்டு வந்தது. 
சிறிய மாவட்டம் என்பதால் உரிய கவனம் செலுத்தப்படாமல் இருந்தது
தற்போது மதுரையுடன் இணைவது என்பது வரவேற்புக்குரியதே. 

வணிகப்பகுதி இணைப்புக்குப் பின் நிர்வாக அதிகாரம் வணிகப்பகுதி வசம் சென்று விடும். அதன் பின் சங்கங்கள் எந்த அமைப்பில் செயல்படுவது என்பது கேள்விக்குறியாகும்.  வணிகப்பகுதி என்பது  சோதனை முயற்சியாகும். இது நிறுவனத்திற்கு எவ்வகையில் பயன் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எது வரினும் ஏற்றுக்கொண்டு செயல்படத் தயாராவோம்...

Thursday, 25 April 2019


கடன் கேட்டார் நெஞ்சம்... 

சென்னைக் கூட்டுறவு சங்கத்தில்
கடனுக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள் ஏராளம்.

பணியில் இருக்கும்போது மரணமுற்ற ஊழியர்களுக்கு 
இன்னும் கணக்கு முடிக்கப்பட்டு அவர்களின்
வாரிசுகளுக்கு பட்டுவாடா செய்யப்படவில்லை.

ஓய்வு பெற்ற ஊழியர்களின் கணக்கு முடிக்கப்பட்டு 
அவர்களுக்கும் பட்டுவாடா செய்யப்படவில்லை.

கல்யாணம், கல்வி,கட்டுமானம், கடன் அடைத்தல் என
பல தேவைகளுக்காக பணம் தேவைப்படும் தோழர்கள் 
கடனுக்கு விண்ணப்பித்து விட்டு...
காத்திருக்கும் கொடுமை தொடர்கின்றது.


அவசரத் தேவைக்காக கடனுக்கு விண்ணப்பித்து விட்டு 
அல்லும் பகலும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தோழர்கள் தொழிற்சங்கத்தில் முறையிடுகின்றனர்.

நாமும் சம்பந்தப்பட்ட RGB மூலமாக 
கூட்டுறவு சங்கத்தலைவருக்கு கோரிக்கை விடுக்கின்றோம். 
ஒருசிலருக்குப் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது.
தற்போது ஒட்டுமொத்தமாக
கடன் பட்டுவாடா நின்றுவிட்டது.
பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
மார்ச் மாதம் வரை ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் கூட்டுறவு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 
இருந்தும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஒரு சில இடங்களில்
இயக்குநர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு
லஞ்சம் கொடுத்து கடன் பெறப்படுகின்றது.

கடன் வாங்குவதற்கே கமிசன் கொடுக்கும்
கேவல நிலை இங்கே உண்டாகிவிட்டது.

சென்னைக் கூட்டுறவு சங்கம் 
ஊழலின் ஒட்டுமொத்த உருவம் என்பது 
நாடறிந்த நாமறிந்த உண்மை..

சொசைட்டி என்றாலே ஊழல்தான்...
எல்லோரும்  திருட்டுப்பசங்கதான் என்ற எண்ணம்
சாதாரண ஊழியர் மத்தியில் வேரூன்றியுள்ளது.
ஆனாலும் சாதாரண ஊழியரின் எதிர்பார்ப்பு
தனது தேவைக்கு கடன் கிடைக்க வேண்டும் என்பதுதான். 
அதுவும் தற்போது நின்றுவிட்ட சூழலில் 
ஊழியர்களின் கோபம் எல்லை மீறிச் செல்கின்றது.

கோவை மாவட்டத்தில்...
NFTE தோழர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எல்லா மாவட்டங்களிலும் தோழர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
தொழிற்சங்கம் என்ற முறையில் நாம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியது தொழிற்சங்கக் கடமையாகும்.

இந்த மாதம் சம்பளம் வழங்குவதற்கான
பணிகள் முடிவடைந்து விட்டன.
மே முதல் வாரத்திற்குள்
இறந்து போன, பணிஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களும், கடனுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் ஊழியர்களின் கடனும் பட்டுவாடா செய்யப்படவில்லை என்றால்...

மதுரையில் அமைந்திருக்கும்
சென்னைக்கூட்டுறவு சங்கத்தின் முன்பாக...
மறியல்போராட்டம் நடைபெறும்.
மேலும் ஊழியர்களின் கூட்டுறவு சங்கப் பிடித்தத்தை
மே மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யலாகாது எனவும் 
நாம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உதிரத்தை
உறிஞ்சிதான் கூட்டுறவு சங்கம் வளர்ந்துள்ளது.
கூட்டுறவு சங்க வேரிலே தங்கள் வியர்வையைப் பாய்ச்சித்தான் தோழர்கள் அதனை வளர்த்துள்ளனர்.
தங்கள் வாழ்நாள் முழுவதும் பல லட்சம் ரூபாய்களை
வட்டியாகவேக் கட்டி வாழ்ந்து வருகின்றார்கள்

ஆனால் ஒருசிலரோ கூட்டுறவு சங்கத்தைக் கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சட்டப்படியான தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது  என்ற பாமர எண்ணம்
நமது தோழர்களின் மத்தியிலே ஆழமாக இருக்கின்றது....

நரிகள்
வலம் போகலாம்... இடம் போகலாம்....
கண்டுகொள்ளாமல் போனால்...
கடன் கொடுக்காமல் போனால்...
நரிகள்... தடிகளால் விசாரிக்கப்படுவர்...

கடன்பட்ட நெஞ்சங்கள்...
இனி கலங்கி நிற்காது...
கலக்கி நிற்கும்...

Saturday, 20 April 2019


சிறகொடிந்த பறவை 

1992ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி துவங்கப்பட்டு
பல்வேறு விருதுகளைப் பெற்று வானூர்திப்பயனாளர்களின் பெருமதிப்பையும் பெற்ற JET விமான நிறுவனம்
2019 ஏப்ரல் 19ந்தேதியோடு தனது சேவையை முடக்கிக்கொண்டுள்ளது.
27 ஆண்டுகள் வானில் சிறகடித்துப்  பறந்த பறவை
இதோ நிதிப்பற்றாக்குறையால் சிறகொடிந்து நிற்கின்றது.
ஏறத்தாழ 20 ஆயிரம் ஊழியர்களின் 
எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 
வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை.
வண்டிக்கு பெட்ரோல் போடக்கூட காசில்லை.
ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை.
எந்த வங்கியும் கடன் கொடுக்கத் தயாரில்லை. 
JET நிறுவனத்தின் மானம் காற்றில் பறந்த நிலையில்
27 வருடங்கள் காற்றில் சிறகடித்துப் பறந்த JET AIRWAYS...
இன்று சிறகொடிந்து கிடக்கின்றது.

JET ஊழியர்கள் தலைநகர் டெல்லியில் ஒன்று திரண்டு
எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஏறத்தாழ 4 லட்சம் வரை சம்பளம் பெற்ற ஊழியர்கள்
ஒருலட்சம் சம்பளத்திற்கு மற்ற விமானசேவை நிறுவனங்களின்
வாசலில் காத்துக்கிடக்கின்றனர். தொழில்நுட்பமல்லாத பிரிவில்
பணி செய்தவர்களின் நிலை இன்னும் மோசமானது.
அன்றாட வாழ்விற்கே அல்லாட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
மத்திய அரசு வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.
இத்தகைய நிலையில் 20000 ஊழியர்களின்
குடும்ப நிலை பெரும் கேள்விக்குறியாக நிற்கின்றது.

பேய் அரசாண்டால் தெருவில் பிணங்களே நடமாடும்...
மனிதர்கள் நடமாட்டம் குறைந்து விடும்...
இத்தகைய சூழலே இன்று நம் தேசத்தில் நிலவுகிறது.
சிறகொடிந்த JET நிறுவனத்தை நினைக்கையில் நெஞ்சம் கனக்கின்றது.

வங்கி ஊழியர்கள் சங்கம் JET நிறுவனத்தை அரசு நிறுவனமான
AIR INDIA எடுத்துக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
நலிந்து போன தனியார் நிறுவனங்களை
அரசு நிறுவனங்கள் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
என்று நமது தேசத்தில் குரல் ஒலிக்கத்துவங்கியுள்ளது.

நிச்சயம் என்றேனும் ஒருநாள்...
எல்லோரையும் ஏமாற்றும் JIO நிறுவனம் வீழ்ந்துபடும்.
அன்று JIOவை BSNL உடன் இணைத்து விடுங்கள் என்று குரல் எழும்.
இது நிச்சயம்... சர்வ நிச்சயம்...

நேற்று... RELIANCE COMMUNICATIONS
இன்று... JET AIRWAYS....
நாளை... RELIANCE JIO...

Wednesday, 17 April 2019


மாற்றம் பிறக்கட்டும்…

மாற்றம் பிறக்கட்டும்…
மக்கள் வாழ்வில்...
ஏற்றம் பிறக்கட்டும்…
கருமை அகலட்டும்…
விரல்மை ஒளிரட்டும்…
பொய்மை போகட்டும்…
வாய்மை வெல்லட்டும்…

Monday, 15 April 2019


குறைந்த பட்ச ஓய்வூதியம்

ஊதியமாயினும், ஓய்வூதியமாயினும் 
எதிலும் ஒரு குறைந்தபட்சம் உண்டு. 
7வது ஊதியக்குழுவில் குறைந்த பட்ச ஊதியம்
ரூ.18000/- என நிர்ணயம் செய்யப்பட்டது.
எனவே குறைந்த பட்ச ஓய்வூதியம் 
ரூ.9000/- என நிர்ணயம் செய்யப்பட்டது. 

ஆனால் மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் 
BSNL ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம்
ரூ.9000 என இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. 
இரண்டாவது ஊதிய மாற்றத்தில் 01/01/2007க்குப் பின் 
BSNLலில் குறைந்த பட்ச ஊதியம் ரூ.7760/= ஆகும். 
எனவே குறைந்தபட்ச ஓய்வூதியம்  ரூ.3880/= ஆகும்.

01/01/2017ல் IDA 119.5 சதமாகும்.
எனவே குறைந்தபட்ச ஓய்வூதியமாக 
BSNL ஓய்வூதியர்களுக்கு 01/01/2017 முதல் 
ரூ.8517/= (3880+4637)  மட்டுமே வழங்கப்பட்டது. 
மாதம் ரூ.483/= குறைவாக வழங்கப்பட்டது. 

01/04/2019 அன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் 
ரூ.9366/- மட்டுமே வழங்கப்படுகின்றது. 
(Pension Rs.3880 + IDA 141.4% = Rs.5486) 
ஆனால் 01/01/2017க்குப்பின் ஊதிய மாற்றம் பெற்ற
பொதுத்துறை ஊழியர்களுக்கு IDA 10 சதமாகும். 
எனவே ஓய்வுபெற்ற தோழர்கள் 01/04/2019 அன்று 
ரூ. 9900/- குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறவேண்டும். 
ஆனால் மாதம் ரூ.534/= குறைவாகப் பெறுகின்றார்கள். 

குறைந்தபட்ச ஓய்வூதியம் அறிவிக்கப்பட வேண்டும் என 
அனைத்துத் தரப்பிலும் BSNLலில் தொடர்ந்து குரல் எழுப்பியும் கூட 
DOT இன்னும் செவிசாய்க்கவில்லை.

குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுபவர்கள் பெரும்பாலும் 
குடும்ப ஓய்வூதியர்களாகவே இருப்பார்கள். 
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாற்றியமைக்கவேண்டும் என்ற 
குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட  இல்லாமல் DOT நடந்து கொள்வது மிகவும் வேதனையானது... கண்டனத்திற்குரியது. 

காலம் இப்படியே செல்லாது... 
கட்டாயம் பாடங்கள் சொல்லும் DOTக்கும் சேர்த்து...

Saturday, 13 April 2019

ஏ ப் ர ல்  - 14
அண்ணல் அம்பேத்கார்
அ வ தா ர தி ன ம்

போலியான வாக்குறுதிகள்…
பொய்யான பசப்பு வார்த்தைகள்…
மக்களை மடமையாக்கும் பிரச்சாரங்கள்…
இவற்றையெல்லாம் விட மக்களின் அறியாமை…
இவையே அரசியல்வாதியின் மூலதனங்கள்…
அறியாமையில் இருந்து விடுதலை பெற்றால்தான்…
அரசியல்வாதிகளிடம் இருந்து நாம் விடுதலை பெறமுடியும்…
---------------------------------------------------------------------------------------
- அண்ணல் அம்பேத்கார் -
 --------------------------------------------------------------------------------------
அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு மாலையணிவித்தல்…
14/04/2019 – ஞாயிறு காலை 07 மணி – காரைக்குடி.
தோழர்களே வருக….

சித்திரைத்திருநாள் 
சித்திரை பிறக்கட்டும்…
இந்திய மக்களின்
நித்திரை கலையட்டும்…

விகாரி பிறக்கட்டும்…
இந்திய மக்களின்
வேதனை அகலட்டும்…

அனைவருக்கும் இனிய
சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

அன்று சிந்திய ரத்தம்… 

இந்திய விடுதலை…
கண்ணீரால் பிறந்ததில்லை…
செந்நீரால் விளைந்தது…

1919 ஏப்ரல்13…
ஜாலியன் வாலாபாக்கில்…
வாய்ப்பூட்டு சட்டமாம்…
ரெளலட் சட்டத்தை எதிர்த்து…
இந்துக்கள்… சீக்கியர்கள்…
முஸ்லிம்கள்… கிறிஸ்துவர்கள்…
ஒன்று சேர்ந்து சிந்திய இரத்தத்தில்…
தோய்த்துச் சிவந்தது… பொற்கோவில் நகரம்…
துயரத்தில் சினந்தது இந்திய தேசம்…

நாமார்க்கும் குடியல்லோம்…
நாம் இந்தியாவிற்கு மட்டுமே குடியாவோம் என
கொதித்து எழுந்தனர் இந்திய மக்கள்…
வீணர்கள் தந்த விருதுகளை வீசி எறிந்தனர்…
கவிஞர் தாகூரும்… அண்ணல் காந்தியும்…

100 ஆண்டுகள் ஓடிவிட்டன…
நம்மைக் கொன்று குவித்த டயர்களும்…
நம் குரல்வளை நெறித்த ரெளலட்களும்…
இன்று செங்கோட்டை சிம்மாசனத்தில்…
காட்டிக்கொடுத்தவர்கள் கையிலே அசோகசக்கரம்…
காந்தியைக்கொன்றவர்கள் கையிலே செங்கோல்…

அன்று ஒன்று சேர்ந்து ரத்தம் சிந்தினோம்…
தாய் நாட்டுக்காக… தேச விடுதலைக்காக…
இன்று ஒருவருக்கு ஒருவர் ரத்தம் சிந்துகிறோம்
பாழும் மதத்திற்காக… பாவிகளின் லாபத்திற்காக….

அன்று சிந்திய ரத்தம் போதாதா?
இன்னும் நாம் சிந்த வேண்டுமா?
நமக்கு சிந்தனை வேண்டாமா?

ஏப்ரல் 13 நினைவு கொள்வோம்….
ஏப்ரல் 18ஐ நினைவு கொள்வோம்…
ஏற்றமிகு மாற்றம் பிறக்க…
ஏப்ரல் 18ல் உறுதி கொள்வோம்…