Wednesday 17 July 2019


கொடுமையிலும் கொடுமை...

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் இல்லை...
நிரந்தர ஊழியர்கள் சம்பளம் மாதாந்திரக் கேள்விக்குறி....
வாடகை கட்டிடங்களுக்குப்  பல மாத வாடகை பாக்கி...
வாடகைக்கார்கள் நிறுத்தப்பட்டு விட்டன...
மின்கட்டணம் செலுத்தப் பணமில்லை...
டீசல் வாங்க வக்கில்லை...
வளர்ச்சிப்பணிகள் முற்றாக முடக்கம்...
மருத்துவப்பில்கள் மாதக்கணக்கில் தேக்கம்...
இப்படி பல வேதனைகளும் கொடுமைகளும்
இன்று BSNLலில் சாதாரணமாகிவிட்டன....

இப்போது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்
அவசரத்திற்கு சிகிச்சை பெறுவதும் நின்று போனது...
இதுவே கொடுமையிலும் கொடுமையாகும்....

பல அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள்
தங்களுக்கு பல லட்சம் ரூபாய் நிலுவை இருப்பதால்
இனியும் தொடர்ந்து BSNL ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை
அளிக்க  முடியாது என கையை விரித்து விட்டன.

மதுரைப்பகுதியில் வேலம்மாள் மருத்துவமனை,
வடமலையான் மருத்துவமனை மற்றும்
அரவிந்த் கண் மருத்துவமனை போன்றவை
BSNL மருத்துவ திட்டத்தின் கீழ சிகிச்சை அளிக்க முடியாது
என முற்றாகக்  கையை விரித்து விட்டன...

இராமநாதபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற
தோழர் அரியமுத்து மதுரை வேலம்மாள் மருத்துவமனையில்
மருத்துவ திட்டத்தில்  சிகிச்சை பெற்றார்.
சிலநாட்கள் கழித்து மீண்டும் தொடர்சிகிச்சைக்காக சென்றபோது
அவரை மருத்துவ திட்டத்தின் கீழ் அனுமதிக்க
மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.

சில்லறையை கொடுத்தால் சிகிச்சை என்ற நிலைக்கு
மருத்துவமனை சென்றுவிட்டது. வேறு வழியின்றி பணம் கட்டி
சிகிச்சைக்கு சேர்ந்தார் தோழர் அரியமுத்து.
தோழர் அரியமுத்து ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்.
தன்னுடைய ஓய்வூதியம் முழுமையும் மருத்துவமனைக்கு செலுத்தியும் பணம் பற்றாக்குறையானதால் மனைவியின் நகைகளை அடகு வைத்து பணம் செலுத்தியுள்ளார். தாலிமட்டுமே பாக்கி எனவும் அதுவும் கூட
பெரிய அளவிற்கு தமக்கு உதவாது எனவும்
தனது நிலையைச்சொல்லி தொலைபேசியில்
நம்மிடக் கண்ணீர் விட்டுக் கதறினார்.
நமது BSNL ஏன் இப்படி போய்விட்டது ? என
அவர் கேட்கும் கேள்விக்கு நம்மிடமோ... யாரிடமோ விடை இல்லை.

சென்றவாரம் அதே இராமநாதபுரம் பகுதியில்
குடும்ப ஓய்வூதியம் பெறும் திருமதி முத்துராக்கு
திருச்சி சென்ற வழியில் விபத்துக்குள்ளாகி தலையில் காயம் பட்டு
திருச்சி மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரைக்குடியில் இருந்து மருத்துவமனைக்கு அனுமதிக்கடிதம் கொடுக்கப்பட்டும் கூட மாருதி மருத்துவமனை நிர்வாகம்
அதனை ஏற்க மறுத்துவிட்டது.
பணத்தைக் கட்டி வைத்தியம் செய்து கொள்ளுங்கள் என்று
சாவகாசமாக கூறிவிட்டது. குடும்ப ஓய்வூதியம் பெறும்
திருமதி முத்துராக்கு மிகப்பெரிய இருப்புத்தொகையை 
தனது வங்கிக்கணக்கில் வைத்திருக்கவில்லை.
மாதாமாதம் கிட்டும் ஓய்வூதியத்தில்தான்
அவரது வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருந்தது.
இப்போது மருத்துவ செலவிற்குத் திண்டாடும் நிலை உருவாகி விட்டது.
நமது BSNL ஏன் இப்படி போய்விட்டது ?
என அவரும் நம்மிடம் கேள்வி கேட்டார்... விடைதான்  இல்லை..

இது போன்ற சோகநிகழ்வுகள்
காரைக்குடி மாவட்டம் மட்டுமில்லை
ஒட்டுமொத்த இந்திய தேசம் முழுமையும் இருக்கத்தான் செய்யும்.
தனது ஊழியர்களுக்கு வைத்தியச்செலவு பார்ப்பதற்கு கூட
BSNL வக்கற்றுப்போய்விட்டது என்பது 
கொடுமையிலும் கொடுமையாகும்.

BSNL மறுசீரமைப்பு செய்யப்பட்டு நிலைநிறுத்தப்படும்வரை
BSNL ஊழியர்களின் உயிர்கள் நிலைநிறுத்தப்படுமா?
என்ற கேள்வி நம் நெஞ்சில் எழுகின்றது.

தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்
அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
மாவட்டத்தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில்  
எல்லா வசதிகளும் நிறைந்துள்ளன.
போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை
என்பது மட்டுமே குறையாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள்
மருத்துவ சிகிச்சைக்குப் பணம் செலுத்தி
SPECIAL WARD என்னும் சிறப்பு அறைகளில் தங்கி
தங்களது சிகிச்சையைத் தொடர முடியும்.
அந்த செலவு தொகையை நிர்வாகத்திடம் திரும்பப் பெற முடியும்.
அரசு மருத்துவமனை தரும் பில்கள் என்பதால்
அப்படியே பணம் திரும்பக் கிடைக்கும்.
எனவே நமது மாநில மாவட்ட நிர்வாகங்கள்
சம்பந்தப்பட்ட மாநில மாவட்ட மருத்துவமனை நிர்வாகங்களோடு பேசி
BSNL  ஊழியர்களுக்கு SPECIAL WARDகளில் அனுமதித்து 
சிகிச்சை அளிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.

தற்போது கூட இந்த நடைமுறை இருந்தாலும்
BSNL நிர்வாகம் மருத்துவமனை நிர்வாகத்தோடு பேசி
உரிய ஏற்பாடு செய்தால் சற்றுக் கூடுதலான கவனம்
BSNL நோயாளிகள் மீது செலுத்தப்படும்.
மாநில மாவட்ட நிர்வாகங்களுக்கு
வேண்டுகோளாக இதை வைக்கின்றோம்.

நம்முடைய கவலை எல்லாம்...
BSNLஐப் பிடித்திருக்கும் நோய்க்கு
அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்...

BSNL நோயாளிகளுக்கும் அவர்களது உயிர் காக்க
உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
அதற்கான மாற்று வழிகள் செய்யப்பட வேண்டும்.

நிதிநிலை என்பதைக் காட்டி உயிர்களை அழிப்பது நியாயமல்ல...
நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்....

No comments:

Post a Comment