Thursday, 31 July 2014

ஊழியர் நல வாரியம் 
STAFF WELFARE BOARD 

BSNL ஊழியர் நலவாரியக்கூட்டம் 22/08/2014 அன்று டெல்லியில் 
CMD தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் சார்பில் சங்கத்திற்கொரு பொறுப்பாளர் கலந்து கொள்ள நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள்  கூட்டத்தில் விவாதிக்கப்படும்.


  • கல்வி உதவித்தொகை SCHOLARSHIP விண்ணப்பிப்பதற்கான அடிப்படைச்சம்பள நிர்ணயத்தை   உயர்த்துதல். REMOVAL OF BASIC PAY LIMIT.
  • பல கல்வி நிலையங்களில் மதிப்பெண்களுக்குப்  பதிலாக GRADE முறை அமுலில் இருப்பதால் புதிய வழிகாட்டுதல் அறிவிக்கப்பட வேண்டும்.
  • தற்போதுள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்துதல்.
  • குறைந்த வட்டியுடனோ, வட்டி இல்லாமலோ கல்விக்கடன் வழங்குதல்.
  • FASHION TECHNOLOGY படிப்பை கல்வி உதவித்தொகை பெற அங்கீகரித்தல்.
  • இறப்பு அன்று வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.25000/= என  உயர்த்துதல்.
  • இறப்பு அடையும் ஊழியர்களுக்கு ரூ.3 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்குதல். இதற்காக மாதந்தோறும் காப்பீட்டுத்தொகை பிடித்தம் செய்தல்.
  • நலவாரிய நிதி ஒதுக்கீட்டை  FUND உயர்த்துதல்.
  • ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான அன்பளிப்பை உயர்த்துதல்.
  •  நலவாரிய நிதி ஒதுக்கீட்டை விரைந்து முடித்தல்.
  • இயற்கை பேரழிவில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.10000/= உதவி அளித்தல்.
  • மனமகிழ் மன்றங்களுக்கான நிதி உதவியை ரூ.10000/= முதல் 30000/= வரை வழங்குதல்.
  •  சுற்றுலா செல்ல வழங்கப்படும் உதவித்தொகை 2002ல் நிர்ணயம் செய்யப்பட்டது. இது உடனடியாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். 90 சத செலவு ஈடுகட்டப்பட வேண்டும். 2000 KM வரை சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
  • ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தை உயர்த்துதல்.
  • கிர் காடுகள்,டாமன் டையு மற்றும் போர்பந்தரில் HOLIDAY HOME விடுமுறை வீடுகளை கட்டுதல்.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களை நலவாரிய உறுப்பினர்களாக அனுமதித்தல்.
  • நலவாரிய உறுப்பினர் காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்துதல்.

Wednesday, 30 July 2014

நாட்டாமை

காரைக்குடி மாவட்டத்தில் JCM என்னும் 
கூட்டு ஆலோசனைக்குழு நடந்து 10 மாதங்கள் ஓடிவிட்டன. 
கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற அக்கறை 
நிர்வாகத்திற்கும் இல்லை.. 
ஊழியர் தரப்பு செயலருக்கும் இல்லை..

NFTE  சார்பில் போராட்ட அறிவிப்பு கொடுத்தபின்
காரைக்குடியை தற்போது கவனித்து வரும்
மதுரை மாவட்ட பொதுமேலாளர் 
25/07/2014 அன்று கூட்டம்  நடத்த அறிவிப்பு செய்தார்.
 கடந்த பத்து மாதங்களாக பிரச்சினைகளை சுமந்து வந்த நாம் தீர்க்கப்படாத, இழுத்தடிக்கப்படும் 24 பிரச்சினைகளை 
JCM ஊழியர் தரப்பு செயலரிடம் அளித்தோம். 
கூட்டம் நடந்த  அன்று முதலில் பழைய பிரச்சினைகளை விவாதித்தோம்.  பல பிரச்சினைகளை  மிக எளிதாக மதுரை மாவட்ட பொதுமேலாளர் தீர்த்து வைத்தார். பழைய பிரச்சினைகள் தீர்வுக்குப்பின்  டீயும், வடையும் கூடவே புதிய பிரச்சினைகள் பட்டியலும் வழங்கப்பட்டது. 
அதில் தேடிப்பார்த்தோம்... 

நாம் கொடுத்த எந்த பிரச்சினையையும் காணோம்...
கக்கூஸ் கழுவுதல், 
கக்கூஸ் கதவுக்கு தாழ்ப்பாள் போடுதல்..
கக்கூசிற்கு பினாயில் போடுதல் என்று
எல்லாப்பிரச்சினைகளும் 
கக்கூசை நோக்கியே இருந்தன...

NFTE  சங்கம் கொடுத்த பிரச்சினைகள் ஓன்று கூட இல்லை...
குறிப்பாக காரைக்குடியில் உள்ள காவேரி மருத்துவமனையை 
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற 
அனைவருக்கும் பொதுவான பிரச்சினையைக்கூட காணவில்லை..

இது பற்றி ஊழியர் தரப்பு செயலரிடம் கேட்டபோது
அவருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகவும்..

அவர்கள் 9 என்றும்..
NFTE 5தான் என்றும்..
எக்காளம்.. எகத்தாளம் செய்தார்..
சரிதான்.. 9.. 5... என்று 
எண்ணிக்கை பிரச்சினை வந்த பின்..
தொடர்ந்து JCMல் பங்கேற்பது 
நமது சுயமரியாதைக்கு இழுக்கு 
என்ற முடிவின் அடிப்படையிலும்...
புதிய பிரச்சினைகள் அனைத்திலும் 
கக்கூஸ் மணமே இருந்ததாலும்...
மனமும்... மணமும்... பொறுக்காமல்...
வெளிநடப்பு செய்து விட்டோம்...

NFTE சங்கம் கொடுக்கும் 
பிரச்சினைகளை முடக்குவதால்...
NFTE சங்கத்தை முடக்க முடியாது..

மதி கெடுக்கும் மந்தாரைகளின் ஆலோசணையால்.. 
ஒற்றுமைக்கு உலை வைக்கும் 
ஓய்வு மணிகளால்.. 
JCMன் சீரான  செயல்பாடு... 
காரைக்குடியில் சீரழிக்கப்பட்டுள்ளது...

இரண்டு சங்கங்கள் இணைந்து 
JCMல் பங்கேற்பதை 
மனதார வரவேற்றவர்கள் நாம் 
என்பதை யாரும் மறக்க.. மறுக்க  முடியாது...

"இணைப்பது இறைவன் வேலை..
பிரிப்பது சாத்தான் வேலை"..
என்று புனித  பைபிள் கூறுகின்றது.

எதிரிகள் பலம் மிகுந்து விட்டனர்.
பொதுவுடைமை போற்றும் தொழிலாளி வர்க்கம்
ஒன்றிணைந்து தங்கள் எதிரிகளை
இணைந்து சந்திக்க வேண்டிய காலமிது...

இப்போதைய தேவை 
இணைப்பா?... பிரிப்பா?..
உரியவர்கள் உரிய கவனம் 
செலுத்துவது  சாலச்சிறந்தது...

இன்று 31/07/2014
பணி நிறைவு பெறும்..

கொள்கையிலும் 
SURRENDER  இல்லாத... 
கொடுத்த தொலைபேசியிலும்... 
SURRENDER இல்லாத 

ஆத்தங்குடி
C.இராஜேந்திரன் - TM

வற்றிய வைகை பாயும் 
இராமநாதபுரத்தில்..
வற்றாத கங்கையாய் 
பணி செய்த 

அருமைத்தோழர்.
V.வையமாணிக்கம் - TM

ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
வளமுடன் அமைந்திட 
வாழ்த்துக்கள்..

Monday, 28 July 2014


பசி உணர்ந்து, பகுத்துண்டு வாழ்ந்து 
பல்லுயிர் காக்கும் பண்பு தந்த 

புனித 
இரமலான்  பெருநாள் 
நல் வாழ்த்துக்கள்..

Thursday, 24 July 2014

JCM தேசியக்குழு கூட்டம் 
எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் 
  • 78.2 சத IDA இணைப்புக்கேற்ப ஊழியர்களின் சம்பள விகிதங்களை மாற்றுதல்.
  • ERP நடைமுறைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை தீர்த்தல்
  • BSNL CDA நன்னடத்தை விதிகளில் திருத்தம்.
  • GPF நிதி ஒதுக்கீட்டை முறைப்படுத்துதல்.
  • MRS மருத்துவத்திட்டத்தில் சகோதர சகோதரிகளை சேர்த்தல்.
  • BSNL  மாற்றல் கொள்கையில் திருத்தம்.
  • மருத்துவப்படியை ஓய்வு பெற்ற தோழர்களுக்கு வழங்குதல்.
  • தொழிற்சங்க பொறுப்பாளர்களுக்கான மாற்றல் சலுகையில் திருத்தம்.
  • ஆயுள் காப்பீட்டுத்தொகையை உயர்த்துதல்.
  • ஓய்வுக்கு ஓராண்டு முன்பாக ஆண்டு உயர்வுத்தொகை தரும் திட்டத்தை உயிர்ப்பித்தல்.
  • கூட்டு ஆலோசனைக்குழுக்களுக்கான விதிமுறைகளை வகுத்தல்.
  • TELECOM FACTORY தயாரிப்புகளுக்கு தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களை தாமதமின்றி தருதல்.
  • இரண்டாவது கேடர் சீரமைப்பு அமுல்படுத்துதல்.
  • மக்கள் தொகைக்கு ஏற்ப வீட்டுவாடகைப்படியை உயர்த்துதல்.
  • தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கேடர் சீரமைப்பு.
  • பல்முனை திறமை கொண்ட ஊழியர்களை உருவாக்குதல்.
  • விடுப்பைக்காசாக்கும் திட்டத்தில் ஆயுள் காப்பீடு உருவாக்குதல்.
  • தேசியமொழி அதிகாரி பணியிடங்களை முறைப்படுத்துதல்.
  • எதிர்மறை மதிப்பெண் திட்டத்தைக் கைவிடுதல்.

Wednesday, 23 July 2014

புதிய போனஸ் வரையறை 

புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட போனஸ் குழுக்கூட்டம் 23/07/2014 அன்று நடைபெற்றது. 

இலாபத்துடன் இணைந்த போனஸ் என்பது இல்லாமல் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்ற நமது கோரிக்கையின் அடிப்படையில் நிர்வாகம் தனது குறிப்பை KPI  அளித்துள்ளது.


  • புதிய தரைவழி தொலைபேசி இணைப்புக்களை கொடுப்பது..
  • தரைவழி இணைப்புக்களை தக்கவைப்பது..
  • புதிய அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களை கொடுப்பது..
  • அகன்ற அலைவரிசை BB   இணைப்புக்களை தக்கவைப்பது..
  • WIMAX மற்றும் CDMA இணைப்புக்களை கொடுப்பது 
என்ற மேற்கண்ட பணிகளுக்காக 
55 மதிப்பெண்கள் நிர்ணயிக்கபட்டுள்ளது.

  • தரைவழி,அகன்ற அலைவரிசை இணைப்புக்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுப்பது..
  • தரைவழி,அகன்ற அலைவரிசை பழுதுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றுவது..
போன்ற பணிகளுக்காக 35 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CM எனப்படும் CONSUMER MOBILITY 
கம்பியில்லா தொலைபேசி பகுதிக்கு 10 மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளது.
விற்பனைப்பிரிவு, புதிய சேவைப்பிரிவு, வணிகப்பிரிவு 
போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மொத்தத்தில்...

  • பழுதுகளை உடனே அகற்றுதல்...
  • இணைப்புக்களை உடனே கொடுத்தல்..

என்ற பணிகளை மட்டும் நாம் செவ்வனே செய்தால்

 போனஸ் கிட்டும்.. என்பது 

நிர்வாகத்தின் தற்போதைய நிலைபாடு...


நமது நிலைபாடு என்ன?
குரல் எழுப்பி போனஸ் பெறப்போகின்றோமா?..
உடல் உழைத்து போனஸ் பெறப்போகின்றோமா?..
என்பதுதான் தற்போதைய கேள்வி..

Tuesday, 22 July 2014

செய்திகள் 

GPF இம்மாத இறுதியில்தான் பட்டுவாடா செய்யப்படும் என மத்திய சங்கம் கூறியுள்ளது.  இனிமேல் ஒவ்வொரு  மாதமும் சம்பளத்துடனே GPF என்பது உறுதி செய்யப்பட்டாலே போதுமானது. ஒவ்வொரு நாளும் தேதி கிழித்து விரல் தேய அவசியம்  இருக்காது.
============================================================
BSNLலில் நேரடியாக நியமனம் செய்யப்பட தோழர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்க வேண்டும் என்ற உடன்பாட்டிற்கு இரண்டு வயது ஆகிவிட்டது. இன்னும் நிர்வாகம் உத்திரவிடவில்லை. உரிய காலத்தே உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. ஊழியர்களுக்கு 60 வயது ஆகுமுன் 
உடன்பாட்டிற்கு 60 வயது ஆகாமல் இருந்தால் சரி...
===============================================================
30/09/2000க்கு முன் TSM ஆகப்பணி புரிந்து நிரந்தரம் ஆன தோழர்களின் 
TSM சேவைக்காலத்தில் பாதியளவு ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இதற்கான குறிப்பு சேவைக்குறிப்பேட்டிலும் HRMS PACKAGE லும் இடம் பெற வேண்டும். ஆனால் பெரும்பான்மையான இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. 

காரைக்குடி மாவட்டத்தில் 2013ல் மரணமுற்ற
 தோழர்.ஜேசுதாஸ் என்பவரது குடும்ப ஓய்வூதியம் இத்தகைய குறிப்பு இல்லாத காரணத்தால் ஏறத்தாழ ஓராண்டு தாமதமாகியது 
என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
===============================================================
தேங்கிக்கிடக்கும் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 07/08/2014 அன்று 
நாடு தழுவிய கோரிக்கை நாள் 
கடைப்பிடிக்க அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 
 JAC  அறைகூவல் விடுத்துள்ளது.
===============================================================
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் ஏறத்தாழ 28000க்கும் அதிகமான கூடுதல் செல் கோபுரங்களை இந்த ஆண்டு  நிர்மாணிக்கும் என 
இலாக்கா அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
==============================================================

காணாமல் போன... காரைக்குடி...

டெலாய்ட்டியோ.. டிகால்ட்டியோ.. 
என்ன கருமமோ.. வாயிலேயே.. நுழையவில்லை.
 BSNLஐ நட்டத்திலிருந்து மீட்டு... 
தூக்கி நட்டமாக நிறுத்தப்போகின்றார்களாம்...
 அதற்காக சில பல கோடிகளைக்கொட்டி 
கரீம் நகர் எங்கிருக்கு?.. 
காரைக்குடி எங்கிருக்கு?.. 
என்ற பூகோள அறிவு கூட இல்லாத 
சில சில்லுண்டிகளிடம் இருந்து 
அறிக்கை பெறப்பட்டுள்ளது. 
இந்த அறிக்கையின் மீது 
அனைத்து மாநில தலைமைப் பொதுமேலாளர்கள் 
ஆகஸ்ட் மாதம் விவாதம் நடத்துவார்களாம்.  

சரி.. நடப்பது.. நடக்கட்டும்.. 
நம்ம கதைக்கு வருவோம்.. 
இரண்டு நாள் நாம் ஊரில் இல்லை... 
நமது தோழர்கள் தொலைபேசியில் 
அவசரமாக அழைத்தார்கள்.. 
" அண்ணே.. காரைக்குடியைக் காணவில்லை.." 
என்று பதட்டத்தில் கூறினார்கள். 
அட இப்பத்தானே.. வந்தேன்.. 
அதற்குள் காணாமல் போச்சா? 
என்று நமக்கு தலை சுற்றல்.  

நமது பாட்டன் சொத்து கச்சத்தீவை 
இலங்கைக்கு தாரை வார்த்தது போல...
 காரைக்குடியையும் தாரை வார்த்து விட்டார்களா?
  என்ற கவலை பிறந்தது. 
திருச்சி பேருந்து நிலையம் வந்து  
காரைக்குடி வண்டியை பார்த்தபின்தான் 
நமக்கு நிம்மதியே வந்தது. 

டெலாய்ட்டி அறிக்கையை 
தேடித்தேடி பார்த்தபின்புதான் தெரிந்தது 
கரீம் நகர் தமிழ்நாட்டிலும், 
காரைக்குடி UP-EAST 
 கணக்கிலும்  காட்டப்பட்டுள்ளது. 
கங்கை காவிரி இணைப்புக்கு
இது முன் ஏற்பாடோ என்னவோ..  

இனி கம்பன் விழா 
கரீம் நகரில் ஒலிக்கலாம்.. 
சம்ஸ்கிருத வார விழா 
காரைக்குடியிலும் நடக்கலாம்..
ஏதோ.. இந்தியாவுக்குள் காரைக்குடி உள்ளதே..
என்று நிம்மதி அடைய வேண்டி இருந்தது. 

அதைவிட நமக்கு நிம்மதி.. தஞ்சாவூர்,கும்பகோணம்,விருதுநகர்,நாகர்கோவில்
 மற்றும் தருமபுரிகாரர்களுக்கு கிட்டாத 
AREA OFFICE தகுதி 
காரைக்குடிக்கு UP-EAST ல் வழங்கப்பட்டுள்ளது. 

நமக்கு அசையா  நம்பிக்கை எப்போதுமே உண்டு.. 
இராமேஸ்வரம் இருக்கும்வரை..
இருபத்தோரு தீர்த்தங்களிலும் ஈரம் தட்டும் வரை..
 அமைச்சர்களும்,
அவர் பரிவாரங்களும், 
 CMDகளும் ..CGMகளும்,  
சின்னப்பெரிய  GMகளும்..
இடுப்பில் துண்டு கட்டும்வரை..
காரைக்குடிக்கு மவுசு கடுகளவும் குறையாது..

டெலாய்ட்டி கூறுகிறது.. 
காரைக்குடிக்கு தற்போதுள்ள 
449 ஊழியர்கள் அவசியமில்லையாம்.. 
277 போதுமாம்.. 
அப்புறம் இராமேஸ்வரத்தில் 
இவர்களை யார் குளிப்பாட்டுவது? 
என்ற கவலை எழுகின்றது.. 

மாதந்தோறும்.. மரணங்கள்.... 
மளமளவென்று.. பணி ஓய்வுகள்...

இன்னும் நான்கைந்து ஆண்டுகளில்
நிச்சயம் டெலாய்ட்டியின் 
ஆசை நிறைவேறும்.. 
அதற்குள் என்ன அவசரம்?..

Sunday, 20 July 2014

இரங்கல் 

பள்ளத்தூர் தொலைபேசி நிலையத்தில் 
பணி புரிந்த
 தோழர்.செல்வராஜ் 
TM அவர்கள் 20/07/2014 
மாரடைப்பால் காலமானார். 

கல்வி கற்காத, சமூக மதிப்பில்லாத 
சமுதாயத்தில் பிறந்து 
உடல் உழைப்பை மட்டுமே 
மூலதனமாக கொண்டு 
தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்து 
அனுபவம் என்னும் கல்வி பெற்று 
பொருளாதாரத்தில் உயர்வுற்று 
சமூகத்தில் தலை நிமிர்ந்து 
மேலும் உயர்வு கொள்ளும் நிலையில் 
நிகழ்ந்துள்ள அவரது மரணம் 
நமக்குள் ஆழ்ந்த சோகத்தை 
உண்டாக்கியுள்ளது.

GM அலுவலகத்தில் பணிபுரிந்த 
தோழர்.சுப்பையா TSO இறந்து 
ஒரு வாரத்திற்குள் 
மேலும் ஒரு இறப்பு என்பது 
நமது தோழர்களிடையே 
அதிக துக்கத்தை உருவாக்கியுள்ளது. 

தோழர். செல்வராஜ் மறைவிற்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்...

Thursday, 17 July 2014

ஜூலை 18
மண்டேலா 
பிறந்த நாள் 

இவன்  கருப்பாய் உதித்த கதிரவன்..
வெளுப்பான உலகை கருப்பாக்கியவன்..

கறுப்பை எழ வைத்தவன்..
வெள்ளையை தொழ வைத்தவன்..

கருப்பு வெள்ளையின் கலவையாக 
உலகை உருவாக்கியவன்..

 அந்திமம் இல்லாத  கருப்புச்சூரியன்..
அண்டங்களில் இவன் ஓர் பத்தாம் கிரகம்..
மண்டேலாவின் புகழ் பாடுவோம்..

Wednesday, 16 July 2014

MRS  - மருத்துவத்திட்டம் 
குரங்கு கை பூமாலை 

15/07/2014 அன்று தோழர்.விவேகானந்தன் TM கனத்த பைகளுடன் காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் வந்தார். காரணம் அறிந்த போது  அவரது பையை விட நமது மனம் மிகக்கனத்தது.

24/02/2014  அம்மா பிறந்த நாளன்று  சும்மா  வீட்டில் இருந்த அவரது மனைவிக்கு நேரிட்ட விபத்தால் கால் முறிவு ஏற்பட்டது. 
அந்த சிகிச்சைக்கான பில்களை  காமராஜர் பிறந்த 15/07/2014 அன்று 
GM அலுவலகத்தில் கொடுக்க முடிவாக வந்துள்ளதாக  தோழர்.விவேகானந்தன்  கூறினார். 

இத்தனை நாள் தாமதம் ஏன் என்று விசாரித்தபோது 
 " விபத்தின்போது  எனது  மனைவி மருத்துவமனைக்கு 108ல் சென்றார்.
  நான் 108 தடவை மருத்துவமனைக்கு சென்றேன்.
காரணம்  எனது மருத்துவ பில்லில்  
108 வியாக்கியானங்களை நமது அலுவலகம் சொன்னது. 
இந்நேரம் அந்த 108 திருப்பதிகளையே நான் சுற்றி வந்திருக்கலாம். 
போற காலத்தில் புண்ணியமாவது இருக்கும்" என சலிப்புடன் கூறினார். 

அதெல்லாம் சரி இம்..மாம் பெரிய பை எதற்கு? 
என்று கேட்ட போது   
"எனது மனைவி சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட X-RAY பிரதிகள் அனைத்தையும் GM அலுவலகத்தில் உள்ளவர்கள்  பார்வையிட வேண்டும் என்று கூறிவிட்டார்கள். எனவே 22 X-RAY பிரதிகளோடு
 நான் இங்கு வந்துள்ளேன்".. என்று கூறினார்.


அது சரி கணக்கு அதிகாரிகள் எப்போது எலும்பு  அதிகாரிகளாக ஆனார்கள் என்ற கேள்வியும் ஆத்திரமும் நமக்கு  எழுந்தது. துணைப்பொது மேலாளர் நிதியிடம் இது பற்றி முறையிட்டோம்..விளக்கம் கேட்க குட்டி கணக்கு
அதிகாரியை கூப்பிட்டார். காலை மணி 11. 
சந்திர பிம்பங்கள் பகலில் தெரிவதில்லை. 
அம்மையார் நீடு துயில் நீங்கி பணிக்கு இன்னும் வரவில்லை.
இது நமது நிறுவனத்தின்  நீடு துயர். 
 பின்.. கணக்கு அதிகாரி வந்தார். சென்னை CGM அலுவலகத்தின் உத்திரவின் பேரில்தான் தாங்கள் X-RAYயை  
தங்களது X-RAY கண்களால் பார்வையிட்டு அப்படி பார்வையிட்டதை  சான்றிதழாக அளிப்பதாக கூறினார்.


அது.. சரி.. எலும்பு முறிவிற்கு X-RAYயைப்  பார்வையிடலாம்..  
வேறு வில்லங்க நோய்கள்  இருந்தால் எதைப்பார்வையிடுவது..? 
என்ற சந்தேகமும் கோபமும் நமக்கு ஏற்பட்டது.

விவேகானந்தன் மனைவிக்கு எலும்பு முறிவு.. 
மருத்துவ பில்களில் மாற்றி மாற்றி கையொப்பம் வாங்கி விவேகானந்தனுக்கு மனம் முறிவு.. 
இப்பிரச்சினையை சுட்டிக்காட்டியதால் 
கணக்கு அதிகாரிகளிடம் நமக்கு உறவு முறிவு... 
இத்தனையும் தாண்டி பில் முறிவாகாமல் இருக்க வேண்டும்.. 
அதுவே நமது கவலை..

தோழர்களே..
கணக்கு அதிகாரி X-RAYஐப்பார்வையிட்டு சான்று அளிக்க வேண்டும் என்று எந்த மட மண்டையும் உத்திரவிட்டிருந்தால் 
அந்த மட உத்திரவு கிழித்தெறியப்படவேண்டும்..

17/07/2014ல்  CGM அலுவலகத்தில் மருத்துவ வசதி பற்றி ஊழியர் தரப்போடு நிர்வாகம் விவாதிக்க உள்ளதாக அறிகிறோம்.. மேற்கண்ட மடத்தனத்தோடு ஏகப்பட்ட மடத்தனங்கள் மருத்துவ திட்டத்தில்  தென்படுகின்றன.. அவை உடனடியாகக் களையப்பட வேண்டும்.. அவற்றில் ஒரு சில..

பிரசவம் மறு பிறப்பு என்று எங்கள் பாட்டி வாயால் கேட்டுள்ளோம். ஆனால் பிரசவம் அவசர சிகிச்சை அல்ல என்று ஆகப்படித்த  அதிகாரிகள் சொல்வதில் என்ன நியாயம்..? ஒருவேளை இவர்களும் பாட்டி ஆனால்தான் பழமொழி புரியுமா?..

பிரசவம் அறுவை சிகிச்சையாக அமைந்து விட்டால் PACKAGE அடிப்படையில்  12000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது. ரூ. 50,000/=க்கு குறைந்து எந்த மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது..?

பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு பிரச்சினை இருந்து ஏதேனும் சிகிச்சை செய்ய நேரிட்டால் அந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தனியாக கட்ட வேண்டும். PACKAGEல் சேராது. கேட்டால் MRS அட்டையில் குழந்தை பெயர் இல்லையாம். பிறப்புக்கு முன்னே MRSல் இடம் பெறுவது எப்படி?
MRS அட்டையை  எழுதுவது பிரம்மனா?..

ஆபத்துக்காலங்களில்  தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் ஓராயிரம் கேள்விகள் கேட்கப்படும். 
மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆம்புலன்சுக்கு தகவல் சொல்வதா?
அதிகாரிக்கு தகவல் சொல்வதா? என்று நமக்குப்புரியவில்லை. 

அங்கீகாரம் இல்லா மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டால்  சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று ஒரு அதிகாரி விசாரித்து  அறிக்கை  அனுப்புவார்.  இதையும்  தாண்டி உள்நோயாளி பில்களை அனுப்பும்போது MRS அட்டையின் பிரதியில் சம்பந்தப்பட்ட நோயாளியை வட்டமிட்டு வட்ட அச்சுப்பதித்து மருத்துவர் கையொப்பம் பெற வேண்டுமாம். 
வட்ட அச்சு சதுரமாக இருந்தால் பில்கள் நிராகரிக்கப்படுமாம்.

அங்கீகாரம் இல்லா மருத்துவமனைகளில் சிகிச்சை  மேற்கொண்டு பில்களும் பட்டுவாடா செய்யப்பட்ட பின் தொடர் சிகிச்சைக்காக 
FOLLOW UP அதே மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டால் அத்தகைய மருத்துவ பில்களை அனுமதிப்பதில் என்ன கேடு? 
தொடர் சிகிச்சையில் அவசரம் EMERGENCY  என்பது இருக்காது. 
எனவே பில்களை நிராகரிக்கலாமா?

பெருநோய்களான காசம்,புற்று,தொழுநோய் போன்றவற்றிற்கு நீண்ட நாள் புறநோயாளியாக சிகிச்சை பெற வேண்டும். இதற்கு குறிப்பிட்ட அளவு CEILING கிடையாது. ஆனாலும் மற்ற நோய்களைப்போலவே 
MAJOR DISEASEகளும் கருதப்படுவது ஏன்?..

மருத்துவ மனைகளோடு  உடன்பாடு  போடப்பட்டு  அங்கீகரிக்கப்படுகின்றன. அத்தகைய  மருத்துவமனைகள் வெளியாட்களுக்கு வாங்கும் தொகையை விட குறைந்த தொகையில்தான் BSNL ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால்  சிகிச்சை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட வியாதிக்கு BSNL எவ்வளவு பணம் தரும் என்பதை அறிந்து கொண்டு மீதிப்பணத்தை கட்டும்படி வற்புறுத்துகின்றார்கள். 
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் 
கூடுதல் பணம் கட்ட வேண்டிய அவசியமென்ன?..

விபத்து போன்ற நேரங்களில் அருகில் உள்ள மருத்துவமனைகளிலோ, தரமிக்க மருத்துவமனைகளிலோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் கொடுக்கப்படும் தொகை CGHS அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது. உதாரணமாக காரைக்குடி தோழர்.முருகன் அவர்களது மனைவி விபத்துக்குள்ளாகி மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
செலவழித்ததோ  80 ஆயிரம். ஆயிரம் வியாக்கியானங்களுக்குப் பின் கிட்டியது என்னவோ 20ஆயிரம். 
விபத்து போன்ற நிகழ்வுகளில் கூட 
CGHS நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமா?

செயற்கை மூட்டு,இருதய வால்வு போன்றவை மாற்றப்படும் போது வெளிநாட்டு மூட்டு, விலையுயர்ந்த மூட்டு என்று சொல்லி பணம் கறக்கப்படுகின்றது. நாம் எப்போதுமே... LOW  QUOTATION அடிப்படையில் செயல்படுபவர்கள்.. இது போன்ற அரிய வகை சிகிச்சைகளுக்கு 
உரிய தொகை தந்தால் என்ன என்ற கேள்வி எழுகின்றது..

உடல் ஊனமுற்றோர்களுக்கு செயற்கை உறுப்புக்கள்,  காது கேளாதோர்களுக்கு காது கேட்கும் கருவிகள் ஆகியவை வழங்குவதில் நமது சட்ட திட்டங்கள் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்.

இப்படியாக நாம்  அடுக்கிக்கொண்டே போவதற்கு காரணம் 
MRS திட்டத்தில் நம் தோழர்கள் படும் அவதியும் வேதனையும்தான்..

தோழர்.குப்தா வாங்கித்தந்த அற்புதமான  MRS  மருத்துவத்திட்டம் 
இன்று உருக்குலைந்து போனதைப்பார்க்கும் போது 
நெஞ்சம் வேகின்றது...

மனித நேய சமுதாய நோக்குள்ள 
மருத்துவ திட்டம் மீண்டும் செழுமைப்படுத்தப்பட வேண்டும்..
தற்போதுள்ள தேவையற்ற நடைமுறைகள் அகற்றப்பட வேண்டும்..
ஊழியர்களுக்கு வியாதியின் வேதனையே போதும்..
பில்களால் வரும் கொடுமை வேண்டாமே....

நிர்வாகம் சிந்திக்குமா..?

Monday, 14 July 2014

ஜூலை 15
கர்மவீரர் காமராஜர் 
பிறந்த நாள் 

இவன் ஓர் கல்லாதவன்..
அதிகார குணம் கல்லாதவன்..


இவன் ஓர்  செல்லாதவன்...
ஆடம்பரங்கள் பின் செல்லாதவன்..


இவன் ஓர் இல்லாதவன்...
மடியில் கணம் இல்லாதவன்..


இவன் ஓர் பொல்லாதவன்..
கல்லாமை ஒழித்த பொல்லாதவன்..

அறியாமை இருள்நீக்கிய நல் ஆதவன்..

படிக்காத மேதை..
பாமரர்களும் படித்திட
வகுத்திட்டான் பாதை..


கர்மவீரர் காமராஜர்
புகழ் போற்றுவோம்..

Saturday, 12 July 2014

போக்குவரத்துப்படி
நீதி..பாதி.. அநீதி.. பாதி..

மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துப்படி TRANSPORT ALLOWANCE உயர்த்தப்பட்டுள்ளது. JCM  தேசியக்குழுக்கூட்டத்தில் நமது மத்திய சங்கம் இப்பிரச்சினையை எழுப்பியதன் அடிப்படையில் BSNL நிர்வாகம் போக்குவரத்துப்படியை  குறைந்த பட்சம்  ரூ.1000/= என்று  உயர்த்தி உத்திரவிட்டுள்ளது. இந்த உத்திரவு 11/07/2014ல் இருந்து அமுலுக்கு வரும்.


மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்துப்படி உயர்த்தப்பட்டது மகிழ்வுதான். ஆயினும் மகிழ்ச்சி மகிழ்ச்சியாய்  இல்லை.. 

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசில் போக்குவரத்துப்படி ரூ.1000/= அதற்கு உரிய DAவுடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. BSNL நிர்வாகமோ ரூ.1000/= மட்டுமே வழங்கப்படும் என்று உத்திரவிட்டுள்ளது. 

1000 வழங்குவது நீதி.. 
IDAவை மறுப்பது அநீதி..

07/05/2010 ஊதிய உடன்பாட்டில்   மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து BSNL ஊழியர்களுக்கும் போக்குவரத்துப்படி  உயர்வு  01/01/2012 அன்று 
மறு பரிசீலனை செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயர்த்தப்பட்ட போக்குவரத்துப்படி 11/07/2014 முதல் அமுலுக்கு வரும் என்று BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

01/01/2012ல் இருந்து வழங்குவது நீதி. 
11/07/2014ல் இருந்து வழங்குவது அநீதி..

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சலுகையில் கூட கைவைக்கும்
நமது ஏமாற்றுத்திறனாளிகளின் சாதுர்யம் துடைத்தெறியப்பட வேண்டும்.

நீதி பாதி.. அநீதி பாதியாக வெளியிடப்பட்டுள்ள 
நம் BSNL ஆளவந்தார்களின்  உத்திரவு   மாற்றப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் நியாயம் வெல்லப்பட வேண்டும்...

Thursday, 10 July 2014

வருமான வரி 

புதிய அரசு அறிவித்த 
வரவு செலவு அறிக்கையில் 
புதிதாக ஏதும் இல்லை.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு 
2 லட்சத்தில் இருந்து 
2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  

சேமிப்புக்கான வரம்பு
 1 லட்சத்திலிருந்து 
1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

தாடிக்கும் மோடிக்கும் 
வித்தியாசம் 50 ஆயிரம் மட்டுமே..

தாடிகள் ஆண்டாலும்... 
மோடிகள் ஆண்டாலும்..
மந்திரிகள் புரள்வது பணக்கோடிகளில்..
மக்கள் புரள்வது தெருக்கோடிகளில்..

Wednesday, 9 July 2014

செய்திகள் 

01/07/2014 முதல் உயர்ந்துள்ள 2.9 சத IDA உயர்விற்கான 
BSNL  உத்திரவு 09/07/2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஊழியர்கள் நலத்திட்டங்களை முறையாக அமுல்படுத்த வேண்டும் என மீண்டும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்களது மாநிலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படுகின்றன என்று 
மாநில நிர்வாகங்கள் சான்று அளிக்க வேண்டும் எனவும் 
BSNL மத்திய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற தோழர்கள் தங்களது இலவச தொலைபேசி சம்பந்தமாக ஆண்டுதோறும் தாங்கள் உயிருடன் இருப்பதாக நமது அலுவலகங்களுக்கு  உயிருடன் வந்து உயிர்ச்சான்றிதழ் வழங்க வேண்டும். பல தோழர்கள் முதுமையின் காரணமாகவும் உடல் நலக்குறைவு காரணமாகவும் நேரில் வர இயலாத சூழல் நிலவும். அத்தகைய தோழர்கள் நேரில் வர அவசியமில்லை எனவும் நவம்பர் மாதம் அவர்கள் ஓய்வூதியம்  பெற்றதற்கான வங்கி/அஞ்சலகக்குறிப்பின் நகலை சம்பந்தப்பட்ட வணிக அதிகாரிக்கு அனுப்பினால் போதும் 
என தற்போது உத்திரவிடப்பட்டுள்ளது. 

ஓய்வு பெற்ற தோழர்களுக்கான 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவது சம்பந்தமாக ஏராளமான MPக்களை 
நமது ஓய்வு பெற்ற தோழர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 
தற்போது 78.2 இணைப்பு சற்றே அசைவு பெற்றுள்ளது. 
விரைவில் அரசின் இசைவு பெறும்.

Tuesday, 8 July 2014

தறிகெடும்...  தமிழகம்...

அன்றைய தமிழகத்தின் தாழ்ந்த நிலை கண்டு
 அறிஞர் அண்ணா அவர்கள்
 "ஏ!.. தாழ்ந்த தமிழகமே .." 
என்று எழுதுகோலில் தன்  வேதனை சொன்னார். 

இன்று தொலைத்தொடர்பில் தமிழக நிலை காணும்போது வங்கக்கடலோரம் உறங்கும் அறிஞர் அண்ணா வேதனையுடன் கூறிய அந்த வார்த்தைகளே நம் நினைவலைகளில் நிழலாடுகின்றன.

இலாக்கா செயல்திறனிலும்,
ஊழியர் பிரச்சினை தீர்விலும், 

அகில இந்தியாவிற்கே வழிகாட்டியாய் 
விளங்கிய தமிழகம் 
இன்று  சீரற்று கேடுற்று நிற்கும் 
நிலை காண்கின்றோம். 

இன்றும் மனசாட்சியுடன், 
மனம் நிறைந்த நேர்மையுடன் 
பணி செய்யும் தோழர்கள் 
இருக்கத்தான் செய்கின்றார்கள். 
இருப்பினும் நிறைகளை விட குறைகளே.. 
தமிழகத்தில் விஞ்சி நிற்கின்றன. 

  • நட்டத்தில் இயங்கும் பல மாவட்டங்கள்..
  • காத்திருக்கும் கன்னியாய் புதிய இணைப்புக்கள்.. 
  • இடமிருந்தும் மறுதலிக்கப்படும்  BB இணைப்புக்கள்..
  • சிரஞ்சீவியாய் வாழும் பழுதுகள்... 
  • உதார் விடும் உதான் குழுக்கள்...
  • கொள்வாரில்லா விற்பனைக்குழுக்கள் ..
  •  சாய்ந்து கிடக்கும் கோபுர பராமரிப்புக்குழுக்கள் ..
  • எரிந்த வீட்டில் பிடுங்கி வாழும் அதிகாரிகள்...
  • ஆண்டிகளின் மடங்களாய்  ஆகிவிட்ட அலுவலகங்கள்...
  • அரசத்தனம், அரசித்தனம் கொண்ட ITS அதிகாரிகள்...
  • வேதாளங்களைச் சுமக்கும் தொழிற்சங்க விக்கிரமாதித்தியர்கள்...
  • மாடாய் உழைத்தாலும்  சம்பளத்திற்கும், சலுகைகளுக்கும் ஏங்கிப்போன ஒப்பந்த ஊழியர்கள்..
இப்படி நாம் அடுக்கி கொண்டே போகலாம்.. 
இதில்  மிகக்கொடுமை...
துயரப்படும்  தொழிலாளர் பிரச்சினையை
காது கொடுத்துக்  கேட்க கூட 
தமிழகத்தில்  நாதியற்றுப் போனதுதான்..

எனவேதான் இரண்டு மாநிலச்சங்கங்களும் 
ஒரே தொனியில் புதிய மாநில நிர்வாகத்திடம் 
குறை கேட்கும் முறையை உயிர்ப்பிக்க கோரின. 
புதன்கிழமை உத்திரவும் வந்தது. 
இன்று... முதல்புதனும் வந்து விட்டது..

காரைக்குடி மாவட்டத்திற்கு நிரந்தர அதிகாரி இல்லை. 
மதுரை,தஞ்சாவூர்,விருதுநகர் என்று பல மகுடங்களைச்  சுமப்பவருக்கு பாவப்பட்ட காரைக்குடியை கவனிக்க நேரமிருக்காது. 

துணைப்பொது மேலாளரும்  இன்று 
வெளியூர் பயணம் சென்று விட்டார். 
8 மணி இரயிலை 6 மணிக்கே பிடித்து விட்டார்..

இன்று குறை கேட்க நாதியில்லை..
இது முதல் கோணல் அல்ல... 
முற்றிய கோணல்..

சரி.. தொழிலாளர்கள் யாரிடம் துயர் சொல்வது?
பிள்ளையார்பட்டிக்கோ.. 
குன்றக்குடிக்கோ...  செல்லலாம்..

அதுவும்  இராமேஸ்வரத்திலிருந்தோ.. 
முதுகுளத்தூரிலிருந்தோ.. வந்து சேருவதற்குள்.. 
அங்கும் நடை சாத்தி விடுவார்கள்...

தோழர்களே.. 
இது வேடிக்கை அல்ல.. வேதனை...

தமிழகம்.. 
இன்று தறி கெட்டு நிற்கின்றது...
தலை நிமிருமா?
கவலையே.. மிஞ்சுகிறது..
போனஸ் குழுக்கூட்டம் 

போனஸ் பற்றி முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழு 23/07/2014 அன்று கூடி விவாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் தரப்பு சார்பில் தோழர்கள்.இஸ்லாம் அகமது, அபிமன்யு ஆகியோர் கலந்து கொள்வர்.
=====================================================
பதவி பெயர் மாற்றக்குழு 

பதவிகளின் பெயர் மாற்றுவதற்காக அமைக்கப்பட்ட குழு 23/07/2014 அன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் தரப்பில் 
NFTE சார்பில் தோழர்கள்.C.சிங், மகாவீர்சிங் மற்றும் 
BSNLEU சார்பில் தோழர்கள்.அபிமன்யு,நம்பூதிரி,
அனிமேஷ் சந்திர மித்ரா ஆகியோர் கலந்து கொள்வர்.
===================================================
JTO தேர்வு குளறுபடிகள் 

23/04/2014ல் நடைபெற்ற JCM  தேசியக்குழுக் கூட்டத்தில் JTO இலாக்காத்தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் சுட்டிக்காட்டப்பட்டன. தற்போது அத்தகைய குளறுபடிகள் இருந்தால் அதை சரி செய்யுமாறு மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Monday, 7 July 2014

செய்திகள் 

IDA உத்திரவு
01/07/2014 முதல் 2.9 சதம் உயர்ந்துள்ள IDA உயர்விற்கான உத்திரவு DPE இலாக்காவால் 03/07/2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
BSNL உத்திரவு விரைவில் வெளிவரும்.

தர்ம தரிசனம் 
ஊழியர்கள் பிரச்சினை தீர்விற்காக வாரந்தோறும் புதன்கிழமை  
02.30 முதல் 04.30 வரை மாநிலம் மற்றும் மாவட்ட மட்டங்களில்  தொழிற்சங்கப்பிரதிநிதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்திக்க வேண்டும் என மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. காலம் காலமாக நடந்து வந்த ஒரு நடைமுறையைக்கூட அதிகாரிகளுக்கு 
தற்போது நினைவு படுத்த வேண்டியுள்ளது. 

ஒப்பந்த ஊழியர்கள் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தினத்தில் சம்பளப்பட்டுவாடா மற்றும் உரிய சலுகைகளை தவறாமல் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு வழக்கம்போல் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்களும் வழக்கம் போல் இல்லாமல் இருந்தால் சரி.

அஞ்சலி 
திருச்சி மாவட்டத்தின் மூத்த தோழர்.வெங்கடேசன் அவர்கள் மறைவிற்கு நமது இதயங்கசிந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம். 
தல விருட்சங்கள் தலை சாயும் காலமிது.. 
நாம் வேர்களாய்.. விழுதுகளாய் நின்று இயக்கம் காப்போம்..

Sunday, 6 July 2014

எல்லோருக்கும்  இலவச SIM

அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு JAC எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து BSNL ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்க BSNL நிர்வாகம் 01/07/2014 அன்று உத்திரவிட்டுள்ளது. அதன்படி 

  • மாதந்தோறும் ரூ.200/= அளவிற்கு TALK TIME பேசலாம்.
  • SSA அளவில் CUG வசதி அளிக்கப்படும்.
  • STD வசதி கிடையாது.
  • தனியார் தொலைபேசிகளை தொடர்பு கொள்ள முடியாது.
  • SIM CARD விலையை ஊழியர்களே செலுத்த வேண்டும்.
  • இந்த வசதி BSNL சேவை தரும் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். MTNL சேவை தரும் பகுதிகளில் கிட்டாது.

Thursday, 3 July 2014

JCM தேசியக்குழு
NFTE எழுப்பியுள்ள பிரச்சினைகள்

ஆகஸ்ட் 2014ல் நடைபெறவுள்ள 
JCM தேசியக்குழுவில் விவாதிப்பதற்காக 
NFTE சார்பில் கீழ்க்கண்ட பிரச்சினைகள் 
JCM செயலரிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

  • சிரமமிக்க பகுதிகளுக்கு மாற்றல் செய்யப்பட்ட தோழர்கள் ஓராண்டு அல்லது ஈராண்டு சேவை முடித்தவுடன் தங்களது சொந்தப்பகுதிக்கு மாற்றல் செய்யப்படவேண்டும்" என மாற்றல் கொள்கை TRANSFER POLICY திருத்தப்பட வேண்டும்.
  • BSNL நன்னடத்தை விதிகள் 55(I ) மற்றும் 55(II)(b) ஆகியவை DOTயில் இருந்து BSNLலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தோழர்களுக்குப் பொருந்தாது என்ற விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
  • 2007லில் இருந்து ஊதியம் உயர்த்தப்பட்டதால் தற்போது பிடிக்கப்படும் ஆயுள் காப்பீட்டுச்சந்தா உயர்த்தப்பட்டு ஆயுள் காப்பீட்டுத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும். 
  • தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியைக்கணக்கில் கொண்டு TM/TTA/SR.TOA பதவிகளில் இரண்டாம் சீரமைப்பு SECOND RESTRUCTURING அமுல்படுத்தப்பட வேண்டும்.
  • இன்றைய தேவைகளைக் கணக்கில் கொண்டு சகல கலா திறமை கொண்ட பதவிகள் MULTI TASKING STAFF உருவாக்கப்பட வேண்டும். 
  • விடுப்பை காசாக்கும் LEAVE ENCASHMENT திட்டம் LICக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் ஆயுள் காப்பீடு இணைந்ததாக மற்ற பொதுத்துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. எனவே BSNL ஊழியர்களுக்கும் ரூ.1 லட்சத்திற்கும் குறையாத அளவில் ஆயுள் காப்பீடு இணைந்த திட்டமாக மாற்றப்படவேண்டும்.
  • தேசிய மொழி அதிகாரிகள் தேவையின் அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படவேண்டும்.
  • TM/TTA/JTO/JAO போன்ற பதவிகளுக்கான இலாக்காத்தேர்வில் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் NEGATIVE MARKS வழங்கப்படுகின்றன. இத்தகைய எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கும் முறை நீக்கப்பட வேண்டும்.
ஜூலை 4
சுவாமி விவேகானந்தர் 
நினைவு தினம் 
ஆன்மீகம் என்பது 
மக்களை இணைப்பதற்கானது..
பிரிப்பதற்கானதல்ல..

இந்திய இளைஞர்களின்..
இலட்சிய வழிகாட்டி..
சுவாமி விவேகானந்தர்
 புகழ் போற்றுவோம்..

Tuesday, 1 July 2014

மாறுமா.. 
விலைவாசிப்புள்ளி கணக்கீடு?

தற்போது IDA விலைவாசி குறியீட்டெண் என்பது 
இதய நோயாளிகளின் ECG போல 
ஏற்ற இறக்கமுடன் வெளிப்படுகின்றது. 
ஜனவரி 2014ல் 90.5 சதம் இருந்த IDA 
ஏப்ரலில் நம்மை உண்மையிலேயே முட்டாளாக்கி 
2.1 சதம் குறைந்து 88.4 சதம் ஆனது. 

தற்போது மீண்டும் விலைவாசி குறியீட்டெண் 
உயர்வினால் 2.9 சதம் உயர்ந்து 
மொத்தம் 91.3 சதம் ஆகியுள்ளது. 

அதே நேரம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 
கிடைக்க வேண்டிய CDA கடந்த ஆறு மாதங்களுக்கு 
7 சதம் உயர்வதற்கான வாய்ப்புள்ளது. 
தற்போதைய CDA 100 சதம். 
இது 107 சதமாக உயர்வதாக செய்திகள் கூறுகின்றன.  

பொதுத்துறை ஊழியர்களுக்கு 
ஜனவரி 2014க்குப்பின் ஜூன்  2014 வரை 
0.8 சதமே கூடியுள்ள விலைவாசிப்படி 
மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் 
7 சதம் கூடுவதின் மர்மம் மட்டும் நமக்கு விளங்கவில்லை. 

வரவு செலவு அறிக்கை சம்பந்தமாக 
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் 
புதிய நிதியமைச்சரை சந்தித்தபோது 
அளித்த கோரிக்கைகளில் 
விலைவாசிக் குறியீட்டெண் 
கணக்கீட்டை மாற்ற வேண்டும் 
என்பதும் முக்கியமான கோரிக்கையாகும்.
 அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான 
விலைவாசிப்படி உயர்வு இருக்கும் வகையில்
 புதிய கணக்கீட்டு முறை இருக்க வேண்டும். 
இதற்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

மாறாக விலைவாசிப்படி கூடினால் குதூகலிப்பதும்
குறைந்தால் கூச்சலிடுவதும் எந்த பலனையும் தராது.