Wednesday, 16 July 2014

MRS  - மருத்துவத்திட்டம் 
குரங்கு கை பூமாலை 

15/07/2014 அன்று தோழர்.விவேகானந்தன் TM கனத்த பைகளுடன் காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் வந்தார். காரணம் அறிந்த போது  அவரது பையை விட நமது மனம் மிகக்கனத்தது.

24/02/2014  அம்மா பிறந்த நாளன்று  சும்மா  வீட்டில் இருந்த அவரது மனைவிக்கு நேரிட்ட விபத்தால் கால் முறிவு ஏற்பட்டது. 
அந்த சிகிச்சைக்கான பில்களை  காமராஜர் பிறந்த 15/07/2014 அன்று 
GM அலுவலகத்தில் கொடுக்க முடிவாக வந்துள்ளதாக  தோழர்.விவேகானந்தன்  கூறினார். 

இத்தனை நாள் தாமதம் ஏன் என்று விசாரித்தபோது 
 " விபத்தின்போது  எனது  மனைவி மருத்துவமனைக்கு 108ல் சென்றார்.
  நான் 108 தடவை மருத்துவமனைக்கு சென்றேன்.
காரணம்  எனது மருத்துவ பில்லில்  
108 வியாக்கியானங்களை நமது அலுவலகம் சொன்னது. 
இந்நேரம் அந்த 108 திருப்பதிகளையே நான் சுற்றி வந்திருக்கலாம். 
போற காலத்தில் புண்ணியமாவது இருக்கும்" என சலிப்புடன் கூறினார். 

அதெல்லாம் சரி இம்..மாம் பெரிய பை எதற்கு? 
என்று கேட்ட போது   
"எனது மனைவி சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட X-RAY பிரதிகள் அனைத்தையும் GM அலுவலகத்தில் உள்ளவர்கள்  பார்வையிட வேண்டும் என்று கூறிவிட்டார்கள். எனவே 22 X-RAY பிரதிகளோடு
 நான் இங்கு வந்துள்ளேன்".. என்று கூறினார்.


அது சரி கணக்கு அதிகாரிகள் எப்போது எலும்பு  அதிகாரிகளாக ஆனார்கள் என்ற கேள்வியும் ஆத்திரமும் நமக்கு  எழுந்தது. துணைப்பொது மேலாளர் நிதியிடம் இது பற்றி முறையிட்டோம்..விளக்கம் கேட்க குட்டி கணக்கு
அதிகாரியை கூப்பிட்டார். காலை மணி 11. 
சந்திர பிம்பங்கள் பகலில் தெரிவதில்லை. 
அம்மையார் நீடு துயில் நீங்கி பணிக்கு இன்னும் வரவில்லை.
இது நமது நிறுவனத்தின்  நீடு துயர். 
 பின்.. கணக்கு அதிகாரி வந்தார். சென்னை CGM அலுவலகத்தின் உத்திரவின் பேரில்தான் தாங்கள் X-RAYயை  
தங்களது X-RAY கண்களால் பார்வையிட்டு அப்படி பார்வையிட்டதை  சான்றிதழாக அளிப்பதாக கூறினார்.


அது.. சரி.. எலும்பு முறிவிற்கு X-RAYயைப்  பார்வையிடலாம்..  
வேறு வில்லங்க நோய்கள்  இருந்தால் எதைப்பார்வையிடுவது..? 
என்ற சந்தேகமும் கோபமும் நமக்கு ஏற்பட்டது.

விவேகானந்தன் மனைவிக்கு எலும்பு முறிவு.. 
மருத்துவ பில்களில் மாற்றி மாற்றி கையொப்பம் வாங்கி விவேகானந்தனுக்கு மனம் முறிவு.. 
இப்பிரச்சினையை சுட்டிக்காட்டியதால் 
கணக்கு அதிகாரிகளிடம் நமக்கு உறவு முறிவு... 
இத்தனையும் தாண்டி பில் முறிவாகாமல் இருக்க வேண்டும்.. 
அதுவே நமது கவலை..

தோழர்களே..
கணக்கு அதிகாரி X-RAYஐப்பார்வையிட்டு சான்று அளிக்க வேண்டும் என்று எந்த மட மண்டையும் உத்திரவிட்டிருந்தால் 
அந்த மட உத்திரவு கிழித்தெறியப்படவேண்டும்..

17/07/2014ல்  CGM அலுவலகத்தில் மருத்துவ வசதி பற்றி ஊழியர் தரப்போடு நிர்வாகம் விவாதிக்க உள்ளதாக அறிகிறோம்.. மேற்கண்ட மடத்தனத்தோடு ஏகப்பட்ட மடத்தனங்கள் மருத்துவ திட்டத்தில்  தென்படுகின்றன.. அவை உடனடியாகக் களையப்பட வேண்டும்.. அவற்றில் ஒரு சில..

பிரசவம் மறு பிறப்பு என்று எங்கள் பாட்டி வாயால் கேட்டுள்ளோம். ஆனால் பிரசவம் அவசர சிகிச்சை அல்ல என்று ஆகப்படித்த  அதிகாரிகள் சொல்வதில் என்ன நியாயம்..? ஒருவேளை இவர்களும் பாட்டி ஆனால்தான் பழமொழி புரியுமா?..

பிரசவம் அறுவை சிகிச்சையாக அமைந்து விட்டால் PACKAGE அடிப்படையில்  12000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது. ரூ. 50,000/=க்கு குறைந்து எந்த மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது..?

பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு பிரச்சினை இருந்து ஏதேனும் சிகிச்சை செய்ய நேரிட்டால் அந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தனியாக கட்ட வேண்டும். PACKAGEல் சேராது. கேட்டால் MRS அட்டையில் குழந்தை பெயர் இல்லையாம். பிறப்புக்கு முன்னே MRSல் இடம் பெறுவது எப்படி?
MRS அட்டையை  எழுதுவது பிரம்மனா?..

ஆபத்துக்காலங்களில்  தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் ஓராயிரம் கேள்விகள் கேட்கப்படும். 
மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆம்புலன்சுக்கு தகவல் சொல்வதா?
அதிகாரிக்கு தகவல் சொல்வதா? என்று நமக்குப்புரியவில்லை. 

அங்கீகாரம் இல்லா மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டால்  சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று ஒரு அதிகாரி விசாரித்து  அறிக்கை  அனுப்புவார்.  இதையும்  தாண்டி உள்நோயாளி பில்களை அனுப்பும்போது MRS அட்டையின் பிரதியில் சம்பந்தப்பட்ட நோயாளியை வட்டமிட்டு வட்ட அச்சுப்பதித்து மருத்துவர் கையொப்பம் பெற வேண்டுமாம். 
வட்ட அச்சு சதுரமாக இருந்தால் பில்கள் நிராகரிக்கப்படுமாம்.

அங்கீகாரம் இல்லா மருத்துவமனைகளில் சிகிச்சை  மேற்கொண்டு பில்களும் பட்டுவாடா செய்யப்பட்ட பின் தொடர் சிகிச்சைக்காக 
FOLLOW UP அதே மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டால் அத்தகைய மருத்துவ பில்களை அனுமதிப்பதில் என்ன கேடு? 
தொடர் சிகிச்சையில் அவசரம் EMERGENCY  என்பது இருக்காது. 
எனவே பில்களை நிராகரிக்கலாமா?

பெருநோய்களான காசம்,புற்று,தொழுநோய் போன்றவற்றிற்கு நீண்ட நாள் புறநோயாளியாக சிகிச்சை பெற வேண்டும். இதற்கு குறிப்பிட்ட அளவு CEILING கிடையாது. ஆனாலும் மற்ற நோய்களைப்போலவே 
MAJOR DISEASEகளும் கருதப்படுவது ஏன்?..

மருத்துவ மனைகளோடு  உடன்பாடு  போடப்பட்டு  அங்கீகரிக்கப்படுகின்றன. அத்தகைய  மருத்துவமனைகள் வெளியாட்களுக்கு வாங்கும் தொகையை விட குறைந்த தொகையில்தான் BSNL ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால்  சிகிச்சை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட வியாதிக்கு BSNL எவ்வளவு பணம் தரும் என்பதை அறிந்து கொண்டு மீதிப்பணத்தை கட்டும்படி வற்புறுத்துகின்றார்கள். 
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் 
கூடுதல் பணம் கட்ட வேண்டிய அவசியமென்ன?..

விபத்து போன்ற நேரங்களில் அருகில் உள்ள மருத்துவமனைகளிலோ, தரமிக்க மருத்துவமனைகளிலோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் கொடுக்கப்படும் தொகை CGHS அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது. உதாரணமாக காரைக்குடி தோழர்.முருகன் அவர்களது மனைவி விபத்துக்குள்ளாகி மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
செலவழித்ததோ  80 ஆயிரம். ஆயிரம் வியாக்கியானங்களுக்குப் பின் கிட்டியது என்னவோ 20ஆயிரம். 
விபத்து போன்ற நிகழ்வுகளில் கூட 
CGHS நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமா?

செயற்கை மூட்டு,இருதய வால்வு போன்றவை மாற்றப்படும் போது வெளிநாட்டு மூட்டு, விலையுயர்ந்த மூட்டு என்று சொல்லி பணம் கறக்கப்படுகின்றது. நாம் எப்போதுமே... LOW  QUOTATION அடிப்படையில் செயல்படுபவர்கள்.. இது போன்ற அரிய வகை சிகிச்சைகளுக்கு 
உரிய தொகை தந்தால் என்ன என்ற கேள்வி எழுகின்றது..

உடல் ஊனமுற்றோர்களுக்கு செயற்கை உறுப்புக்கள்,  காது கேளாதோர்களுக்கு காது கேட்கும் கருவிகள் ஆகியவை வழங்குவதில் நமது சட்ட திட்டங்கள் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்.

இப்படியாக நாம்  அடுக்கிக்கொண்டே போவதற்கு காரணம் 
MRS திட்டத்தில் நம் தோழர்கள் படும் அவதியும் வேதனையும்தான்..

தோழர்.குப்தா வாங்கித்தந்த அற்புதமான  MRS  மருத்துவத்திட்டம் 
இன்று உருக்குலைந்து போனதைப்பார்க்கும் போது 
நெஞ்சம் வேகின்றது...

மனித நேய சமுதாய நோக்குள்ள 
மருத்துவ திட்டம் மீண்டும் செழுமைப்படுத்தப்பட வேண்டும்..
தற்போதுள்ள தேவையற்ற நடைமுறைகள் அகற்றப்பட வேண்டும்..
ஊழியர்களுக்கு வியாதியின் வேதனையே போதும்..
பில்களால் வரும் கொடுமை வேண்டாமே....

நிர்வாகம் சிந்திக்குமா..?

2 comments:

  1. வன்முறையில்யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் சம்பவங்கள் அனைத்தும் வன்முறையை நோக்கி கொண்டுசெல்கின்றது. ஆனால்குறிப்பிட்ட சிலரின் மருத்துவ செலவுகள் வஞ்சகமின்றி தரப்படுகின்றது. நமது சங்கத்தால் எதுவும் செய்ய முடியாதா தோழரே.அதனால்தான் தோழரே நான் அறுவை சிகிச்சையை என் சொந்த செலவிலேயே ப்ண்ணிக்கொண்டேன்.

    ReplyDelete
  2. வேதனைகளை ... நகைச்சுவையாய் தந்த laughping therophy வைத்தியம் நன்று ! விஜய் குடந்தை

    ReplyDelete