Friday, 27 February 2015

பணி நிறைவு  வாழ்த்துக்கள்
தோழர்.S.S.கோபாலகிருஷ்ணன்  

இன்று 28/02/2015 
பணி நிறைவு பெறும் 

நிறத்தில் கோவையின் சிவப்பு 
நீண்ட நாள் கொள்கையில் சிவப்பு..
மாசு படியா  மனதில் வெளுப்பு..
சங்கத்தில் மறக்க இயலா உழைப்பு 

நமது சம்மேளனச்செயலர் 

தோழர்.S.S.கோபாலகிருஷ்ணன் 

அவர்களின் பணி நிறைவுக்காலம்  
சிறக்க வாழ்த்துகின்றோம்..

முடிந்தது இலாக்காப்  பணி..
மென்மேலும்...
முனையட்டும் இயக்கப்பணி..
வாழ்க.. பல்லாண்டு 


இன்று 28/02/2015 
பணி நிறைவு பெறும் 
அன்பு ஒளிரும் பண்பு மிளிரும் 
தோழர்.வெ.இராமச்சந்திரன் 
தனிச்செயலர் - PS to GM - காரைக்குடி 

அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
அமைதியுடன் 
விளங்க வாழ்த்துகின்றோம்.
வாழ்க.. வளமுடன்..

இன்று 28/02/2015 பணி நிறைவு பெறும் 
நமது இயக்கத் தளபதி 
காரைக்குடி தலபதி 
நான்காம் பிரிவு சங்கத்தில் 
நாளெல்லாம் பணி செய்த..
தோழர். M.நாகசுந்தரம் TM
அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க 
வாழ்த்துகின்றோம்.

Thursday, 26 February 2015

BSNL விரிவாக்கம் 

BSNL நிறுவனம் தனது விரிவாக்கத்திற்காக
ரூ.11,000/= கோடி முதலீடு செய்யவுள்ளது என்று  
இலாக்கா அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத்
 நாடாளுமன்றத்தில் 25/02/2015 அன்று 
எழுத்து வடிவில் தகவல் அளித்துள்ளார்.

தொலைபேசி நிலையங்களை நவீனப்படுத்துவது...
 வலைப்பின்னல் அமைப்பை NETWORK  மேம்படுத்துவது. 
நக்சலைட்கள் தடம் பதித்த பகுதிகளில்
 செல் கோபுரங்கள் அமைப்பது 
போன்ற பணிகளில் இந்த முதலீடு செய்யப்படும்.

BSNL மற்றும் MTNL  நிறுவனங்கள் 
தங்கள் சேவையை மேம்படுத்துவதற்கும்.. 
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரமான சேவை அளிக்கவும்  உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள தகவல்களின்படி 

  • ரூ.4804 கோடி செலவில் 14421 2G சேவை செல் கோபுரங்களும்...10605 3G சேவை செல் கோபுரங்களும் அமைக்கப்படும்.
  • ரூ.600 கோடி செலவில் தரை வழி சேவை மேம்படுத்தப்படும்,,, மற்றும்  தொலைபேசி நிலையங்கள்  நவீனப்படுத்தப்படும்...
  •  ரூ.350 கோடி செலவில் தொலைபேசி நிலையங்களில் C-DOT  மூலம் பழைய தொழில்நுட்பங்கள் புதிய தொழில் நுட்பங்களாக மாற்றப்படும்...
  •  ரூ.3568 கோடி செலவில் நக்சல் பகுதிகளில் செல் கோபுரங்கள் அமைப்பதற்கான பணி BSNLக்கு வழங்கப்படும்...
  •  ரூ.1976/= கோடி செலவில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் செல் சேவை வழங்கப்படும்.
  • டெல்லியில் 1080 3G கோபுரங்களும்.. 800  2G கோபுரங்களும்..மும்பையில் 566  2G கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளன.
நாடாளுமன்றப் பேரணியை 
நாம் நடத்திய  அதே தினத்தில் அமைச்சர் மேற்கண்ட 
அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆள்வோர்கள்  சொல்லோடு இல்லாமல்...
 செயலிலும் இறங்கினால்..
நிச்சயம் BSNL உயிர்த்தெழும்...

Wednesday, 25 February 2015

நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற நமது பேரணி 
பனி உறங்கும் காஷ்மீர் முதல் அலை உறங்கா குமரி வரை
 பணி செய்யும் தோழர்கள்  தலைநகரில் சங்கமித்த காட்சி 


 இடர்ப்பாடு களைவோம்...
வேறுபாடு மறப்போம்.. என...
  வீதி இறங்கிய தலைவர்கள் கூட்டம் 

BSNL காத்திட...
தேசம் காத்திட..
பொதுத்துறை நாசம் தடுத்திட 
அலைவாய் முதல் மலைவாய் வரை
பணி செய்யும் 5000க்கும் அதிகமான தோழர்கள் 
தலைநகர் டெல்லியில் 25/02/2015 அன்று 
தலைமையிடமாம் நாடாளுமன்றம் நோக்கி 
தலைவர்கள் வழி நடத்திட..
ஓன்று திரண்டு,, ஓரணியாய் சென்று 
பிரதமர் அலுவலகத்தில் லட்சக்கணக்கான கையெழுத்து 
பிரதிகளை சமர்ப்பித்துள்ளனர்...

நாளொரு ஆடையும்...
பொழுதொரு மேடையுமாக உள்ள 
நம்மை ஆள்வோர்கள் 
நமது கோரிக்கைகளை செவி மடுக்க வேண்டும்...
நம்மைத் திரும்பி பார்க்க கூட நேரமில்லையெனில் 
மார்ச் 17 காலவரையற்ற வேலை நிறுத்தம்,,
கட்டாயம் இவர்கள்
கண்களையும் காதுகளையும் திறக்கும்...

Tuesday, 24 February 2015

அஞ்சலி 
ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில்...
தோழர். இ. மாயாண்டி பாரதி 

கதரால் கவரப்பட்டார்..
காவியால் ஈர்க்கப்பட்டார்..
கடைசி வரை..
பொதுவுடைமையில் இணைக்கப்பட்டார்..
இராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம்...
இவருக்கோ  13 ஆண்டுகள் சிறைவாசம்..

ஏறினால் ரயில்..
இறங்கினால் ஜெயில்..
என்பதே அன்றைய வாழ்க்கை...

தேச விடுதலைக்காக.. இளமையில்..
தேகம் வருத்திப்  போரிட்டார்..
தேச நலனுக்காக.. முதுமையில்.. 
தேகம் இளைத்த போதும் பாடுபட்டார்...

மதுரைப்பகுதியில்..
மலை முழுங்கி மகாதேவன்களை...
கிரானைட் கிங்கரர்களை...
எதிர்த்துக் களம் கண்டார்..

நூறாண்டுக்கு இன்னும் 
ஈராண்டு இருக்கையிலே..
இன்னுயிர் நீத்தார்..

தோழர்.மாயாண்டி பாரதி 
அவர்கள் மறைவிற்கு 
செங்கொடி தாழ்த்திய அஞ்சலி .

Monday, 23 February 2015

சேதி சொல்லும் தேதிகள் 
  • 25/02/2015 - " காப்பாற்று BSNL நிறுவனத்தை" என்னும் முழக்கத்தோடு டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கிய  அனைத்து சங்கப் பேரணி...
  • 27/02/2015 - டெல்லியில் அனைத்து சங்க கூட்டமைப்பின் கூட்டம்.
  • 27/02/2015 - செவியற்ற காரைக்குடி நிர்வாகம் ஊழியர்களின் பிரச்சினைகளை  அறிந்திட, அதன்  செவிப்பறையில் ஊழியர்களின் கோரிக்கைகள்  நுழைந்திட.. அண்ணல் வழியில் அறப்போராட்டம்.
  • 28/02/2015 - சம்மேளனச்செயலர் கோவை தோழர்.SS.கோபாலகிருஷ்ணன் இலாக்காப் பணி நிறைவு.
  • 05/03/2015க்குள் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புக் கூட்டத்தை கூட்டிட தமிழக கூட்டமைப்பு வேண்டுகோள்.
  • 06/03/2015 முதல் 14/03/2015 வரை அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 17 வேலை நிறுத்த விளக்க கூட்டங்களை நடத்திட தமிழக கூட்டமைப்பு முடிவு.
  • 09/03/2015 முதல் துறைமுகத்தொழிலாளர்கள் தனியார் மயம் எதிர்த்து காலவரையற்ற வேலை நிறுத்தம்.
  • 09/04/2015 முதல் 10/04/2015 வரை இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் NFTE அகில இந்திய செயற்குழுக் கூட்டம்.

Sunday, 22 February 2015

25/02/2015 
நாடாளுமன்றம் நோக்கி பேரணி 

நாடாள்வோரின் காதுகள் திறக்கட்டும்..
நாடாளுமன்றத்தின்  கதவுகள் திறக்கட்டும்...
நலிந்து  வரும் BSNL...
நலமாய்  நடை போடட்டும் ...
நாடாளுமன்றம் நோக்கிய
நமது ஒன்றிணைந்த பேரணி வெல்லட்டும்...

Friday, 20 February 2015

பிப்ரவரி - 21
உலகத்  தாய்மொழி தினம் 
காரைக்குடியில் தமிழ்த்தாய் கோவிலில்
வீற்றிருக்கும் அன்னைத்தமிழ் 

பெருந்தமிழே...
உன்னால் பிறந்தோம்...

அருந்தமிழே...
உன்னால் வளர்ந்தோம்..

நறுந்தமிழே..
உன்னால் நடந்தோம்..

இருந்தமிழே...
உன்னால் இருந்தோம்...

உன் பதம் போற்றுவோம்...
உன் பாதம் பற்றுவோம்...

வாழிய நீ...
வானமும் பூமியும் உள்ளவரை..

Thursday, 19 February 2015

வாங்க.. வாங்க..வங்கிக்கடன் 

இக்கட்டில் இருப்போர் கடன்களுக்காக  வங்கிகளின்
படிக்கட்டில்  காத்திருந்த காலம் உண்டு. 
இப்போது வங்கிகள்.. 
கடன் வேண்டுமா? என்று கேட்டு 
நம் வீட்டுப் படிக்கட்டின் முன்  நிற்கின்றன.

காரைக்குடி கனரா வங்கி 
காரைக்குடி  பொது மேலாளர் அலுவலகத்தில் 
கடன் திருவிழாவை நடத்தியது. 
" நாங்கள் ஏற்கனவே உங்கள் வங்கியில் கடன் வாங்கியுள்ளோம். 
பழைய கடனைக் கழித்துக்கொண்டு புதிய கடன் தர முடியுமா? 
என்பதே அனைத்து தோழர்களும் மறக்காமல் கேட்ட கேள்வி..

கனரா வங்கியும் சற்றும் தாமதிக்காமல் சம்மதம் சொல்லி விட்டது. 
தற்போது கனரா வங்கியில் அதிகபட்சமாக 10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே ஏற்கனவே நமது தோழர்கள் வாங்கிய கடனைக் கழித்துக்கொண்டு  புதிய கடனை  
கனரா வங்கி வழங்க ஆரம்பித்து விட்டது. 
நமது தோழர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

கடன் வாங்குவோருக்கு ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கனரா வங்கியிடம் வைத்துள்ளோம். 
தங்களது மேல்மட்ட நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக கனரா வங்கி கூறியுள்ளது. 

கடன் மேல் கடன்  வாங்கி.. 
காலம் சென்ற தோழர்.சுப்பையா TSO அவர்களின்
கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்தோம்.
கனரா வங்கி ஒத்துக்கொண்டது பாராட்டுக்குரியது. 

Wednesday, 18 February 2015

TTA இலாக்காத்தேர்வு 

TTA இலாக்கா போட்டித் தேர்வை நடத்துவதற்கு
 மாநில நிர்வாகங்களை டெல்லி தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.


  • 07/03/2015க்குள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் 
  • 07/06/2015 அன்று நாடு முழுக்க தேர்வு நடைபெறும்.
  • தேர்வு நடந்த 3 மாதங்களுக்குள் 07/09/2015க்குள் முடிவுகள் வெளியிடப்படும்.
 தோழர்கள்..  தயராகவும்..
ERP - பிரச்சினைகள் தீர்வு 

ERP அமுல்படுத்தப்பட்ட பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இவை யாவும் சம்பந்தப்பட்ட  மாநிலங்களால் சுட்டிக்காட்டப்பட்டு தற்போது அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று டெல்லி தலைமை அலுவலகம் 17/02/2015 அன்று வெளியிட்டுள்ள கடிதக்குறிப்பில் கூறியுள்ளது.
அதன்படி...
  • வீட்டு வாடகைப்படி கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி சரி செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு மாதம் முழுமையும் விடுப்பில் சென்றவர்களுக்கு போக்குவரத்துப்படி, தகுதி மேம்பாட்டுப்படி மற்றும் தொழில் மேம்பாட்டுப்படி TRANSPORT ALLOWANCE, PROFESSIONAL UP GRADATION ALLOWANCE மற்றும் SKILL UP GRADATION ALLOWANCE  ஆகியவை கிடையாது. தற்போது மேற்கண்டவை சரி செய்யப்பட்டுள்ளது.
  • மாற்றலில் செல்வோர் TA முன்பணம் பெறுவதற்கும், TA பில் செலுத்துவதற்கும் ERPயில் வசதிகள் இல்லை. தற்போது இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  •  அலைச்சல்படி என்னும் CONVEYANCE ALLOWANCE மற்றும் FURNISHING ALLOWANCE விண்ணப்பிக்கும் வசதி ERPயில் இல்லை. தற்போது தோழர்கள் ERP மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • வருமான வரி கணக்கீட்டில் வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவச்  செலவு ஆகியவற்றை கணக்கிடுவதில் நேர்ந்த தவறு சரி செய்யப்பட்டுள்ளது.
  • 01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு GSLI என்னும் LIC ஆயுள் காப்பீடு கிடையாது. தற்போது இது சரி செய்யப்பட்டுள்ளது.
  • DIES-NON என்னும் பணிக்கு வராத நாட்களுக்கு HRA மற்றும்  போக்குவரத்துப்படி  அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
  • GPFல் வட்டி கணக்கீடு மற்றும் பிடித்தத்தில் உண்டான தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.
  • உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கான குறைந்த பட்ச போக்குவரத்துப்படியான ரூ.1000/- வழங்கவும் அவர்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்கவும் உரிய திருத்தங்கள் ERPயில் செய்யப்பட்டுள்ளன.

எப்படியோ ERP இடியாப்ப சிக்கல்கள்
 இனிதே தீர்ந்தால் சரிதான்...

Tuesday, 17 February 2015

குடந்தை மீத்தேன் போராட்டம்..
குவிந்தன.. போராட்டத் தேனீக்கள்...
சொல்லில் உழவு செய்து.. நெஞ்சில் வீரம் விதைக்கும்
தோழர்.சுப்பராயன் - AITUC  மாநிலத்தலைவர் உரையாற்றுகின்றார்

17/02/2015  
கோவில்களின் நகரம் குடந்தையில்..
அண்ணல் காந்தி பூங்காவில்...
அணிவகுத்தனர் தோழர்கள்...அலை அலையாய் 
அரக்கன் மீத்தேன் உருவாக்கத் திட்டம் அழித்திட 

பொங்கும் காவிரியாய் தோழர் ஆர்.கே.,  பொங்கிட..
பசுமை நினைவுகளை.. பாழும் மீத்தேன் அபாயங்களை... 
பட்டாபி அவர்கள் பாங்காய் பகர்ந்திட..
குணக்குன்று குடந்தை ஜெயபால் கொடுமை எதிர்த்துக் குமுறிட..

தோழர்.சுப்பராயன் 
போராடும் நம் இயக்கம் பாராட்டி...
சொல்லால் நெஞ்சில் துளையிட்டு...
மீத்தேன்வாதிகளின் சுரண்டல் கொடுமை சொல்லிட..

தளங்களில் போராடும்  தளபதிகள்...தலைவர்கள்...
தன்மானத்துடன் உரை நிகழ்த்திட...
தோழியர்கள்...தோழர்கள்.. 
போராட்டப்பூங்காவில் 
தேனீக்களாய்  குவிந்திட...

நமக்காக மட்டும் வாழ்ந்திடாது..
நாட்டுக்கான பிரச்சினையிலும்..
முனை நின்ற.. முனை நிற்கும்..
தொழிலாளர் வர்க்கத்தின் கூர்முனையாம்..
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கத்தின்..
பாரம்பரியம்  பாராட்டி... பாங்குடன் முடிந்தது..
மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்....

குழப்பங்களை சீராக்கும்... 
கோணல்களை நேராக்கும்... 
கும்பகோணத்திற்கு நமது வாழ்த்துக்கள்...

Monday, 16 February 2015

மருத நிலம் மயானம்  ஆவதோ ?... 
நஞ்சை நிலம்  நஞ்சாவதோ ?...
 அபாயங்களை அறிவால் தடுப்போம்...
 அவசியமெனில்  
அரிவாளால் தடுப்போ
ம்... 
மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் 
17/02/2015 - செவ்வாய் - குடந்தை 


-;தலைமை;-
 தோழர். ஆர்.கே 
ஒப்பந்த ஊழியர் மாநிலத்தலைவர் 

தோழர். லட்சம் 
NFTE  மாநிலத்தலைவர் 

சிறப்புரை : தோழர்கள் 
R. பட்டாபிராமன் 
NFTE மாநிலச்செயலர் 

TM. மூர்த்தி 
AITUC  தமிழ் மாநில பொதுச்செயலர் 

K. சுப்பராயன் 
AITUC  தமிழ் மாநிலத்தலைவர் 
மற்றும் தலைவர்கள்...

காவிரி நதி  கூவமாவதோ ?
கரிகாலன் பூமி கரியாவதோ?...

வயிற்றுத்தீ  அணைத்த பூமி...
வஞ்சனைத்தீயில் பொசுங்குவதோ?

தோழர்களே... 
அநீதி களைந்திட.. அணி திரள்வீர்...

Sunday, 15 February 2015

NFTE 
காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு முடிவுகள்

காரைக்குடி மாவட்டத்தில் சீரழியும் 
BSNL சேவையை மேம்படுத்தக்கோரி

நீண்ட நாட்கள் தேங்கிக் கிடக்கும் 
ஊழியர் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி 

20/02/2015 - வெள்ளிக்கிழமை 
அனைத்துக்கிளைகளிலும் 
ஆர்ப்பாட்டம் 

27/02/2015 - வெள்ளிக்கிழமை 
பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 
உண்ணாவிரதம்

தோழர்களே.. 
தேக்க நிலை தகர்த்திட...
ஊக்கமுடன் அணி திரள்வீ ர்...
NFTE 
14/02/2015 - பரமக்குடி
மாவட்டச்செயற்குழு தீர்மானங்கள்

மாவட்ட நிர்வாகமே...
  • காரைக்குடி மாவட்டத்தில் சீரழிந்து வரும் BSNL சேவையை செம்மைப்படுத்து...
  • மாநில அளவில் விவாதித்த பின்னும் தொடர்ந்து பின்னுக்குச்  செல்லும் இராமேஸ்வரம் BSNL சேவையை முறைப்படுத்து...
  • பணிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளை விவாதத்தோடு விட்டு விடாமல் உடனடியாகத் தீர்த்து வை...
  • ஊழியர் சேம நலக்குழுக் கூட்ட முடிவுகளை உடனடியாக அமுல்படுத்து...
  • இராமநாதபுரம்,பரமக்குடி மற்றும் தேவகோட்டை பகுதிகளுக்கு கோட்ட அதிகாரிகளை நியமனம் செய்...
  • இலாக்காப்பணியை இரண்டாம் கட்டப்பணியாக்கி                            SIDE BUSINESS  என்னும் பக்கவாட்டுத் தொழில்களில் தங்கள் கவனத்தைச்செலுத்தும் அதிகாரிகள் மீது நிர்வாகமே உரிய நடவடிக்கை எடு...
  • SENSITIVE  POST  என்னும் முக்கியமான பதவிகளில் தொடர்ந்து நீடிக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை உடனடியாக மாற்றல் செய்...
  • வாடிக்கையாளர் சேவை மையங்களில் உரிய கவனம் செலுத்து.. அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் விளம்பரப்படுத்து...
  • TTA தோழர்கள் CDRல் அதிகாரிகளின் கணக்கில் பணி செய்வதை நிறுத்து... அவர்களுக்கு தனியாக USER NAME உபயோகப்பெயர் வழங்கு...
  • நீண்ட நாள் காத்திருக்கும் ஊழியர்களுக்கு விருப்ப மாற்றல் வழங்கு..
  • நாலு கட்டப்பதவி உயர்வு உத்திரவுகளை உடனடியாக வெளியிடு...
  • அனைத்து ஊழியர்களுக்கும் CR  வேலைத்திறனாய்வு குறிப்பு எழுதும் பணிகளை முடித்து வை..
  • இராமேஸ்வரம் MICROWAVE கட்டிடத்தில் உள்ள பழைய IQ  ஆய்வு இல்லம் தனியார் தங்கும் விடுதியாக செயல்படும் நிலை மாற்று...
  • OUT DOOR  புறநிலைப்பகுதிகளில் உள்ள பழுதடைந்த DP தூண்களை உரிய முறையில் பராமரிப்பு செய்... 
  • SERVICE SIM - சேவைக்காக வழங்கப்பட்டிருக்கும் செல்லில் தனியார் செல்களை தொடர்பு கொள்ள வசதி செய்...
  • மறுக்கப்பட்ட தேக்கப்பட்ட மருத்துவ பில்களை மனிதாபிமான அடிப்படையில் பட்டுவாடா செய்...
  • புதிய கணிணிகளை  அதிகாரிகளே  வைத்துக்கொண்டு  பழைய சாமான்களை  ஊழியர்கள் தலையில் சுமத்தும் நிலை மாற்று...
  • வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணிபுரியும் காசாளர்களுக்கு அலைச்சல் படியை உடனடியாக வழங்கு...
  • CM, CFA பகுதிகளில்  பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சுழற்சி மாற்றல் செய்...
  • மரணமுற்ற ஊழியர்களின் மீது சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்..
  • நீண்ட நாட்கள் தேங்கிக்கிடக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை தீர்த்து வை...
  • ERP ஊழியர் சேவைக்குறிப்பில் ESSல்  ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்.. சரியான முறையான ஊழியர் விவரங்களை பதிவு செய்...
  • TTA தோழர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கு... 2000க்குப்பின் பயிற்சிக்குச் சென்ற தோழர்களின் பயிற்சிக்கால உதவித்தொகை நிலுவையை வழங்கு..

Saturday, 14 February 2015

அஞ்சலி 
தோழர்S.K.வியாஸ் 
மத்திய அரசு ஊழியர் 
மகா சம்மேளனத்தின் 
மாற்ற முடியாத 
மறக்க முடியாத தலைவரும் 
ஓய்வூதியர்கள் சங்கத்தில் 
தன் கடைசி மூச்சு வரை
 உழைத்தவருமான 

தோழர். S.K.வியாஸ் 

அவர்களின் மறைவிற்கு 
நமது செங்கொடி தாழ்த்திய 
அஞ்சலி உரித்தாகுக.

Friday, 13 February 2015

குப்பைகள் ஒழியட்டும்... 
குடிமக்கள் நிமிரட்டும்... 


குப்பைகள் நிறைந்த தேசத்தில்...
துடைப்பங்கள் நிமிரட்டும்...
துயரங்கள் குறையட்டும்...

செருப்புகள் ஆண்ட தேசத்தில்..
செருக்குகள் ஆண்ட தேசத்தில்.
துடைப்பங்களும் ஆளட்டும்...
துன்பங்கள் மாளட்டும்,,,

Thursday, 12 February 2015

கொள்ளிவாய்ப்பிசாசு 

டேய்... பேராண்டி.. சாயங்கால நேரம்
வயக்காட்டுப் பக்கம் போகாதே...
அங்கே... கொள்ளிவாய்ப்பிசாசு இருக்கு...

சிறுவயதில் எங்கள் பாட்டி
இப்படித்தான் எங்களை மிரட்டுவதுண்டு

இரவு நேரங்களில்
சாணக்கழிவு உள்ள  இடங்களில்
திடீரென தீப்பிடிக்கும்...
குலசாமி பேரை உச்சரித்துக்  கொண்டு
தைரியமாக எட்டிப்பார்ப்பதுண்டு...
அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்..
சில நேரங்களில் அங்கே எங்கள் தாத்தா
சுருட்டுப்பிடித்துக் கொண்டிருப்பதைப்  பார்த்ததுண்டு..

மேலே சொன்ன கொள்ளிவாய்ப்பிசாசு
மீத்தேன் என்னும் பெயருடைய.. 
CH4 என்னும் மூலக்கூறு வாய்ப்பாடுடைய..
HYDRO CARBON வகையைச்சேர்ந்த...
மூலக்கூறு என்பதும்...
இது ஒரு நிறமற்ற,மனமற்ற வாயு என்பதும்...
உடனடியாக தீப்பற்றக்கூடியது என்பதும்
இதற்கு தமிழில் கொள்ளிவாயு ,சாணவாயு
என்ற பெயர்களும் உண்டு என்பதும்
கல்லூரியில் வேதியியல் படிப்பு படிக்கும்போது
நமக்குப் புரிந்த விவரங்களாகும்...

உலகம் பிறந்தது எனக்காக...
ஓடும் நதிகளும் எனக்காக..
மலர்கள் மலர்ந்தது எனக்காக..
அன்னை மடியை விரித்தாள்  எனக்காக..
இந்த அற்புத வரிகள்...
இயற்கையின் படைப்பு 
மனிதனுக்கே என்னும் மகத்துவம் சொல்கின்றது.

இந்த இயற்கையின் படைப்பில் ஒன்றுதான்
நிலக்கரியும் மீத்தேனும்...

உலகின் இன்றைய பெரும் தேவை
உணவல்ல... பணமல்ல..
எரிபொருள்..எரிபொருள்...எரிபொருள்.
நிலக்கரியும் மீத்தேனும் 
எரிபொருளாகப்  பயன்படுவதால்
ஆள்வோர்களின் கவனம் முழுக்க அதன் மேல்தான்..

மீத்தேனை எடுத்த பின்னேதான் 
நிலக்கரியை எடுக்க முடியும்..
எனவே இவர்களின் முதல் குறி மீத்தேன்..

இந்த மீத்தேன்..
நஞ்சையும் புஞ்சையும் நிறைந்த தஞ்சை பூமியில் 
நிறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சோழ நாடு சோறுடைத்து என்பது
இன்றும் நம் காதுகளில் கம்பீரமாக விழும் பழமொழி.
ஏறத்தாழ 24லட்சம் ஏக்கரில் 
தஞ்சை மண்ணில் விவசாயம் செய்யப்படுகின்றது. 

நஞ்சை நிறைந்த நெஞ்சை நிறைத்த 
தஞ்சை பூமியை நஞ்சாக்கி விட்டு..
மீத்தேன் எடுக்க துடிக்கின்றன 
பாழும் அரசுகளும்...பண முதலைகளும்..

இங்கே மீத்தேன் கிணறுகளில்
500 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.
நிலத்தடி நீர் மணிக்கு 100 காலன் அளவில் வெளியேற்றப்படும்.
ஆண்டுக்கு 20 டன் உப்பு வெளியேறும்..
உப்பும் சோடியமும் சேர்வதால்..
நெஞ்சு குளிரும்  தஞ்சை நீர் நஞ்சாக மாறும்...
மீத்தேனும் ஓசோனும் எதிரிகள் இந்தியா பாக்கிஸ்தான் போல..
மீத்தேன் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும்...
தஞ்சை மண்ணின் நிலத்தடி நீரின் அளவு 4.77 டிஎம் சி...
ஆண்டுக்கு இத்திட்டத்தில்
2.03 டிஎம் சி தண்ணீர் வெளியேற்றப்படும்..
5 ஆண்டுகளில் தஞ்சையின் ஒட்டு மொத்த  ஈரமும்
ஈவிரக்கமின்றி வெளியேற்றப்படும்..
கால்நடைகள் தண்ணீருக்கு தவிக்கும்..
பச்சை வயல்கள் பாழாய்ப்போகும்...
காவிரி கடல் தேடிச்சென்று கலந்த காலம் போக 
கடல் காவிரியைத் தேடி தஞ்சை மண்ணுக்கு வரும்.. 
சோறுடைத்த சோழ நாடு
சோகமுடைத்த நாடாக மாறும்..
மீத்தேன் வெளி வந்தால்..
அடுப்பிலே தொடர்ந்து  
நெருப்பெரியும்... நெருப்பு மட்டுமே எரியும்..
ஆனால் அதை விட வேகமாய்
மக்களின் மனமும் வயிறும்  எரியும்...

உலை வைக்க நெருப்பிருக்கும்...
உலையில் போட அரிசி இருக்காது..
உண்டு வாழ உழவனும்.. ஒருவனும்  இருக்க மாட்டான்...

எனவேதான்..
தன் இறுதி மூச்சு வரை இதனை எதிர்த்தார் 
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்..

இன்று..
சமூக உழைப்பாளி  மேதாபட்கர்.. 
இடதுசாரிகள்.. சமூக ஆர்வலர்கள்..
மனிதனை, இயற்கையை  நேசிப்பவர்கள்..
மாணவர்கள்.. ஆசிரியர்கள்.. விவசாயிகள்...
என எல்லோரும் இன்று தஞ்சை மண்ணில் 
தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்..

கரிகால் சோழன் காலத்தில் கட்டப்பட்ட பாசன வசதிகள்
காலத்தால் மறையாத வரலாற்று சின்னங்கள்..
கலையம்சம் நிறைந்த  கோவில்கள் என்ற
நெஞ்சை அள்ளும் பாரம்பரியம் மிக்கது தஞ்சை மண்..

அதன்  பாரம்பரியம் அழிய நாம் பார்த்துக்கொண்டிருக்கலாமா ?
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும்  கயவர்களை விடலாமா?
சுடும் நெருப்புக்கு இடம் கொடுத்து..
குளிரும்  நீர் வளம்  இழக்கலாமா?
மனிதனை மனிதன் அழித்து.. மனிதன் வாழலாமா?

மீத்தேன்.. 
பசுமையை பாலைவனமாக்குவது..
குடிநீரை கொடும் நீராக மாற்றுவது..
வயல் வெளிகளை பொட்டல் வெளிகளாக புரட்டுவது...
வாழும் மனிதனை அகதியாய்  ஆக்குவது...

பண முதலைகள்... உச்சரிக்கும் பெயர் மீத்தேன்..
வாழும் மக்களை எச்சரிக்கும் பெயர் மீத்தேன்..

மீண்டும் மீத்தேனைப்  பற்றி 
எண்ணிப்பார்க்கின்றோம்..
இன்று.. மீத்தேனை பற்றிய.. 
நமது அறிவியல் அறிவு 
நமக்கு நினைவில்லை..
அன்று.. நம் பாட்டி சொன்ன 
கொள்ளிவாய்ப்பிசாசு 
என்பது மட்டுமே நினைவில் உள்ளது.

தோழர்களே...
கொள்ளிவாய்ப்பிசாசை விரட்டிடுவோம்...
குடைந்தையில் கூடிடுவோம்...

Wednesday, 11 February 2015

என்ன சொல்லி எழுதிட....

" என்ன தோழர்... 
செயற்குழுவைப்பற்றி எதுவும் எழுதவில்லையா? "
நேற்று பல்வேறு பகுதிகளிலும் இருந்து
நமது தோழர்கள் நம்மிடம் எழுப்பிய கேள்வி இது.

வேலூர் விளக்கமாக எழுதி விட்டது. 
வழக்கம்போல் வாய்மையைப்புதைத்து 
கோவையும் குளறி விட்டது... 
இதில் நாம்  எழுதுவதற்கு.. என்ன இருக்கிறது...

எதை நாம் சொல்வது...?
என்னவென்று எழுதுவது? 

அஞ்சலி உரையில் மட்டுமே நிலவிய  
ஒரு நிமிட அமைதியைச் சொல்வதா?

காலை முதல் கடைசி வரை  கரைச்சல் செய்த 
சென்னை இரைச்சலைச்  சொல்வதா?

பங்காளிகள் பாணியில் POINT OF ORDER  கேட்டுத்
தோழர்கள் படுத்திய பாட்டைச்சொல்வதா?

அமைதி.. அமைதி.. என்று அவையில்  அமைதி வேண்டி அமைதியற்றுப் போன தலைமையைச் சொல்வதா?

ஜீவன ஜோதி அரங்கில் சோமபானங்கள்  சுரபானங்கள் தந்த  வேகத்தில் 
ஜீவனைப் போக்கிய  ம(தி )து வாரிசுகளின்  அடாவடி சொல்வதா?

அன்பே சிவம்.. அன்பே தவம் என்றார்கள்.. 
அந்த அன்பை வெளியேற்று என்று 
அட்டைப்பிடித்த  சென்னைத் தோழர்கள் 
அடம் பிடித்ததை சொல்வதா?

மனுக்கொடுக்க..வந்த கூட்டம் 
தடியோடு வந்து தடுமாறி நின்று.. 
தரம் தாழ்ந்த நிலை சொல்வதா?

நிறுவனத்தின் இன்றைய அவல நிலை சொல்ல வந்த 
தலைமைப் பொதுமேலாளர் 
அலுங்கிக் குலுங்கிப் போன அவலம் சொல்வதா?

அதிகாரிகளை ஐந்து நிமிடம் பேச விடுங்கள்...
அப்புறம் உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள் என்று 
தலைவர் முதல் தொண்டர் வரை 
கெஞ்சு.. கெஞ்சு  என்று கெஞ்சிய 
நமது பொறுமையின் உச்சம்  சொல்வதா?

அரங்கத்தைக்கொடுத்து விட்டோம்... 
கூவத்தில் குதித்து விட்டோம் என்று 
நம்மிடம் கோபத்தில் கொதித்து விட்டு.. 
அரங்கத்து விளக்குகளை அணைத்து விட்ட  
ஆரணங்குகளின் அதிகப்பிரசங்கித்தனம்  சொல்வதா?

பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து 
குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?

இரும்பை விட இறுக்கமாய் இருந்து...
துரும்பைக்கூட அசைக்காத...
வாடிய பயிரைக்கண்டு வாடிய 
வள்ளலாரின்  வாரிசு...
சம்மேளனச்செயலரின் சாதனை சொல்வதா?

செத்த கல்லூரி உத்திரவு.... 
ஜீவன ஜோதியை அணைத்த 
வேதனை சொல்வதா?

எதை நாம் சொல்வது...? என்னவென்று எழுதுவது? 

தோழர்களே...
மேலே... நீங்கள் கண்டது...
வேடிக்கையாய் எழுதப்பட்டதல்ல...
NFTEன் மரபும் மாண்பும்... 
மண்ணோடு மண்ணாகும்.. நிலை கண்டு...
மனம் நொந்த வேதனையில் எழுதப்பட்டது..

தொழிற்சங்கத்தலைவர்கள் 
கடமை உணர்வு மிக்கவர்களாக 
கண்ணியம்... நேர்மை மிக்கவர்களாக 
தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் 
என்றார் மாபெரும் தலைவர் தோழர்.டாங்கே...

என்ன கொடுத்தும்.. ஒற்றுமை 
என்னைக்கொடுத்தும் ஒற்றுமை 
என்று தன் வாழ்நாள் முழுக்க 
ஒற்றுமை வளர்த்தார்..
அருமைத்தோழர்.குப்தா 

ஒரு கன்னத்தில் அறைந்தால் 
மறு கன்னத்தைக்காட்டி 
அறைந்தவன் கையை 
அன்போடு தடவிக்கொடுத்தார்...
NFTEன் ஏசு பிரான் தோழர்.ஜெகன்...

அன்று 
தோழர்.குப்தாவை.. 
சொற்களால் சிலையாக்கி...
இன்று... 
கற்களால் சிலையாக்கியவர்கள்...   
அன்று...
தலைவர்களை வசைபாடியவர்கள்...
இன்று.. 
அவர்களின் புகழ் பாடுபவர்கள்..

நம்மை வழிநடத்துபவர்கள்... 
நமக்குத்தலைவர்கள் என்று 
சொல்லிக்கொள்பவர்கள்...

நமது முன்னோர்கள்  சொன்ன 
வழியில் செல்கிறார்களா?

நிலைக்கண்ணாடி முன் நின்று 
இந்த கேள்வியை 
அவர்களே.. கேட்டுக்கொள்ளட்டும்...

Sunday, 8 February 2015

NFTE

காரைக்குடி மாவட்டச்செயற்குழு
மற்றும்
தோழர்.வெங்கிடு - TM 
பணி நிறைவு பாராட்டு விழா

14/02/2015 - சனிக்கிழமை - காலை 10 மணி
தொலைபேசி நிலையம் - பரமக்குடி

தலைமை
தோழர் .சி.முருகன்
மாவட்டத்தலைவர்

வரவேற்புரை
தோழர். தமிழரசன்
கிளைச்செயலர்

சிறப்புரை
தோழர்.சேது
========================================
மதியம் 03.00 மணி 

TMTCLU
ஒப்பந்த ஊழியர் 
மாவட்டச்செயற்குழு 

பங்கேற்பு 
தோழர்.இராமசாமி
TMTCLU மாவட்டச்செயலர் 
மற்றும் தோழர்கள் 


தோழர்களே... வருக...


அன்புடன் 
சி.முருகன்                                                                  வெ.மாரி 
மாவட்டத்தலைவர்                              மாவட்டச்செயலர்.
NFTE
தமிழ் மாநில செயற்குழு 

10/02/2015 - செவ்வாய் 
காலை 10 மணி 
 ஜீவஜோதி ஹால்
எழும்பூர் - சென்னை 

பங்கேற்பு : தோழர்கள் 
TM.மூர்த்தி 
AITUC - தமிழ் மாநிலப்பொதுச்செயலர்

GV.ரெட்டி 
முதன்மைப்பொதுமேலாளர் 

SS.கோபாலகிருஷ்ணன் 
சம்மேளனச்செயலர் 

G .ஜெயராமன் 
சம்மேளனச்செயலர் 

P .காமராஜ் 
சம்மேளன சிறப்பு அழைப்பாளர் 

நிறைவாக
தோழர். ஆர்.கே.,

Friday, 6 February 2015

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் 

பசுமையை பாழாக்கும் 
மக்கள் வாழ்வை வீணாக்கும் 
மீத்தேன் எரிவாயுத்திட்டத்தை  எதிர்த்து 

NFTE - TMTCLU 
சார்பாக  
17/02/2015 செவ்வாய்க்கிழமை  அன்று 
கோவில்களின் நகரம் குடைந்தையில் 
தோழர்.ஆர்.கே., 
தலைமையில் 
ஒரு நாள் அடையாள 
எதிர்ப்பு தர்ணா 

சிறப்புரை 
தோழர். மூர்த்தி 
AITUC தமிழ்மாநில பொதுச்செயலர்

தோழர். சுப்பராயன் 
AITUC தமிழ்மாநிலத்தலைவர் 

மற்றும் தலைவர்கள்...

தோழர்களே...
சோறுடைத்த சோழ மண்டலம் 
பாழடைந்து போகலாமா?

காவிரியில் குளித்த உழவன் 
கண்ணீரில் குளிக்கலாமா?

ஆள்வோரின் கண்மூடித்தனத்தால் 
வயல்வெளிகள்  மண்மூடிப் போகலாமா?

போராடும் மக்களுக்கு நாம் 
பேராதரவு தர வேண்டாமா?

கொடுமைகள் கண்டு கொதித்திடுவோம்..
குடைந்தையில் உணர்வாய் கூடிடுவோம்..

வாரீர்.. தோழர்களே...