Wednesday, 11 February 2015

என்ன சொல்லி எழுதிட....

" என்ன தோழர்... 
செயற்குழுவைப்பற்றி எதுவும் எழுதவில்லையா? "
நேற்று பல்வேறு பகுதிகளிலும் இருந்து
நமது தோழர்கள் நம்மிடம் எழுப்பிய கேள்வி இது.

வேலூர் விளக்கமாக எழுதி விட்டது. 
வழக்கம்போல் வாய்மையைப்புதைத்து 
கோவையும் குளறி விட்டது... 
இதில் நாம்  எழுதுவதற்கு.. என்ன இருக்கிறது...

எதை நாம் சொல்வது...?
என்னவென்று எழுதுவது? 

அஞ்சலி உரையில் மட்டுமே நிலவிய  
ஒரு நிமிட அமைதியைச் சொல்வதா?

காலை முதல் கடைசி வரை  கரைச்சல் செய்த 
சென்னை இரைச்சலைச்  சொல்வதா?

பங்காளிகள் பாணியில் POINT OF ORDER  கேட்டுத்
தோழர்கள் படுத்திய பாட்டைச்சொல்வதா?

அமைதி.. அமைதி.. என்று அவையில்  அமைதி வேண்டி அமைதியற்றுப் போன தலைமையைச் சொல்வதா?

ஜீவன ஜோதி அரங்கில் சோமபானங்கள்  சுரபானங்கள் தந்த  வேகத்தில் 
ஜீவனைப் போக்கிய  ம(தி )து வாரிசுகளின்  அடாவடி சொல்வதா?

அன்பே சிவம்.. அன்பே தவம் என்றார்கள்.. 
அந்த அன்பை வெளியேற்று என்று 
அட்டைப்பிடித்த  சென்னைத் தோழர்கள் 
அடம் பிடித்ததை சொல்வதா?

மனுக்கொடுக்க..வந்த கூட்டம் 
தடியோடு வந்து தடுமாறி நின்று.. 
தரம் தாழ்ந்த நிலை சொல்வதா?

நிறுவனத்தின் இன்றைய அவல நிலை சொல்ல வந்த 
தலைமைப் பொதுமேலாளர் 
அலுங்கிக் குலுங்கிப் போன அவலம் சொல்வதா?

அதிகாரிகளை ஐந்து நிமிடம் பேச விடுங்கள்...
அப்புறம் உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள் என்று 
தலைவர் முதல் தொண்டர் வரை 
கெஞ்சு.. கெஞ்சு  என்று கெஞ்சிய 
நமது பொறுமையின் உச்சம்  சொல்வதா?

அரங்கத்தைக்கொடுத்து விட்டோம்... 
கூவத்தில் குதித்து விட்டோம் என்று 
நம்மிடம் கோபத்தில் கொதித்து விட்டு.. 
அரங்கத்து விளக்குகளை அணைத்து விட்ட  
ஆரணங்குகளின் அதிகப்பிரசங்கித்தனம்  சொல்வதா?

பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து 
குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?

இரும்பை விட இறுக்கமாய் இருந்து...
துரும்பைக்கூட அசைக்காத...
வாடிய பயிரைக்கண்டு வாடிய 
வள்ளலாரின்  வாரிசு...
சம்மேளனச்செயலரின் சாதனை சொல்வதா?

செத்த கல்லூரி உத்திரவு.... 
ஜீவன ஜோதியை அணைத்த 
வேதனை சொல்வதா?

எதை நாம் சொல்வது...? என்னவென்று எழுதுவது? 

தோழர்களே...
மேலே... நீங்கள் கண்டது...
வேடிக்கையாய் எழுதப்பட்டதல்ல...
NFTEன் மரபும் மாண்பும்... 
மண்ணோடு மண்ணாகும்.. நிலை கண்டு...
மனம் நொந்த வேதனையில் எழுதப்பட்டது..

தொழிற்சங்கத்தலைவர்கள் 
கடமை உணர்வு மிக்கவர்களாக 
கண்ணியம்... நேர்மை மிக்கவர்களாக 
தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் 
என்றார் மாபெரும் தலைவர் தோழர்.டாங்கே...

என்ன கொடுத்தும்.. ஒற்றுமை 
என்னைக்கொடுத்தும் ஒற்றுமை 
என்று தன் வாழ்நாள் முழுக்க 
ஒற்றுமை வளர்த்தார்..
அருமைத்தோழர்.குப்தா 

ஒரு கன்னத்தில் அறைந்தால் 
மறு கன்னத்தைக்காட்டி 
அறைந்தவன் கையை 
அன்போடு தடவிக்கொடுத்தார்...
NFTEன் ஏசு பிரான் தோழர்.ஜெகன்...

அன்று 
தோழர்.குப்தாவை.. 
சொற்களால் சிலையாக்கி...
இன்று... 
கற்களால் சிலையாக்கியவர்கள்...   
அன்று...
தலைவர்களை வசைபாடியவர்கள்...
இன்று.. 
அவர்களின் புகழ் பாடுபவர்கள்..

நம்மை வழிநடத்துபவர்கள்... 
நமக்குத்தலைவர்கள் என்று 
சொல்லிக்கொள்பவர்கள்...

நமது முன்னோர்கள்  சொன்ன 
வழியில் செல்கிறார்களா?

நிலைக்கண்ணாடி முன் நின்று 
இந்த கேள்வியை 
அவர்களே.. கேட்டுக்கொள்ளட்டும்...

3 comments:

  1. சென்னையில் நடந்த நிகழ்வுகள் கண்டனத்துக்குரியவை , வருத்தமளிக்கின்றது. மதுரைக்கு பிறகு, நடந்த இச்சம்பவம் சங்கத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது., இதில் மத்திய தலைமை உடனடியாக தலையிட்டு சம்பவத்திற்கு காரணத்தை அறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே எங்களை போன்றோரின் ஆசை. நன்றி தோழரே

    ReplyDelete
  2. அன்புத் தோழனே
    எழுத்துக்களில் தர்மத்தின் தாக்கத்த்தை உருவாக்கும் உங்களிடமிருந்து உண்மை வெளிவரும் என எதிர்பார்த்தேன். ஏமாந்தேன்.
    உங்களின் ஆதங்கங்க்களச் சொற்களால் வடித்தது எனக்குப் பிடித்தது.
    ஆனால் சம்மேளனத் தலைமை என்ற சொல்லைப் பயன்படுத்தி நீங்கள் எழுதியது “இரும்பை விட இறுக்கமாய் இருந்து... துரும்பைக்கூட அசைக்காத சம்மேளனத் தலைவரின் சாதனை சொல்வதா?”
    இந்த வரிகள் என்னைச் சிந்திக்க வைத்தன. அவர் சம்மேளனச் செயலர் மட்டுமல்ல. நாம் எல்லோரும்
    ஒன்றாய் இருந்து போற்றி வளர்த்த ஒரு அமைப்பின் இன்றைய பொறுப்பாளர் அவர் என்ற நினைவும் வருகிறது.
    அந்த அமைப்பில் எல்லோரும் மீண்டும் ஒன்றாக இணைவோம் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு மலையளவு இருக்கிறது.
    உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை.
    நீங்கள் குறிப்பிட்ட சம்மேளனத் தலைவர் 08.02.2015அன்று மாநிலச் செயலரிடம் சொன்ன ஆலோசனைகள் சிந்திக்கப்பட்டிருந்தால் நிகழ்வுகள் சுபமாக அமைந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை.
    என்ன சொல்லி எழுதிட.... என்ற நிலையும் உங்களுக்கு ஏற்பட்டிடருகாது.
    எனக்கு ஒரு வருத்தம். “குப்பை” என்று எழுதி “பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து
    குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?”
    என்று எழுதியுள்ளீர்கள்”குப்பைகள்” என்று யாரைக் குறிப்பிட்டு எழுதினீர்கள் என்பது தங்களுக்கு மட்டுமே தெரியும்.
    அன்போடு உங்க்களிடம் ஒரு கேள்வி.
    “பொறுத்தது போதும். பொங்க்கி எழு மனோகரா” என்று தாய் ஆணையிட மனோகரன் சங்கிலி அறுத்து பொங்கி எழுந்த காட்சியை திரையில் பார்த்தோம்.
    பொங்கி எழுந்து குப்பைகளை வெளியில் தள்ளச் சொன்னது யார்? அந்தத் துடைப்பத்தின் உரிமையாளர் யார்? என்பதை அறிய இயலுமா?
    எல்லாவற்றையும் தாண்டி நமக்கு முன்னால் ஏராளமான சவால்கள் இருக்கிறது. அவற்றை
    நாம் ஒன்று சேர்ந்து சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் நமது பயணத்தைத் தொடர்வோம். அல்லது துவங்குவோம்.

    ReplyDelete
  3. எல்லாவற்றையும் தாண்டி நமக்கு முன்னால் ஏராளமான சவால்கள் இருக்கிறது. அவற்றை
    நாம் ஒன்று சேர்ந்து சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் நமது பயணத்தைத் தொடர்வோம். அல்லது துவங்குவோம். என்ற வரிகள் நம்பிக்கை ஊற்றாக இருக்கின்றது தோழரே

    ReplyDelete