Saturday 22 December 2018


என்றும் அவரே பெரியார்…

டிசம்பர் - 24

தந்தைப் பெரியார் நினைவு நாள்


1938 நவம்பர்...
சென்னைப் பெரம்பூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும்
ஒரு சேரிப்பகுதியில் சீர்திருத்த திருமணம் நடைபெறுகின்றது.
ஈவெரா... திருமதி. மீனாம்பாள் சிவராஜ் 
ஆகிய இருவரும் கூட்டுத்தலைமை…

திருமணம் முடிந்தது. 
சோறும் குழம்பும் மணத்தது.
ஆனால் சேரிப்பகுதியோ 
சேறும் சகதியுமாக முகம் சுழித்தது.
ஈவெரா பார்த்தார்...
ஒரு வீட்டின் மேல் கூரையில் இருந்த
ஓலை ஒன்றை இழுத்துக் கீழே போட்டார்.
அதிலே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
அந்தக் காட்சியைத் தோழர்கள் கண்ணுற்றனர்.
குறிப்பாகப் பெண்களை 
அந்தக்காட்சி மிகவும் ஈர்த்தது.

இவ்வளவு எளிமையான ஒரு தலைவரை நாம்
இதுவரை கண்டதில்லை.
இவரை விட எளிமையிலும் மக்கள் உரிமை காப்பதிலும்
பெரியவர் யாருமில்லை எனப் பேசிக்கொண்டார்கள்.

காந்தியார் மகாத்மா என புகழப்படுகின்றார்…
காஞ்சி சங்கராச்சாரியார் பெரியவர் என அழைக்கப்படுகிறார்…
ஈவெரா ஏன் பெரியார் என அழைக்கப்படக்கூடாது? 
என்று பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்…
பேசியதோடு நிற்கவில்லை…

1938 நவம்பர் 13ம்தேதி
சென்னை ஒற்றைவாடை நாடகக்கொட்டகையில்
தமிழகப் பெண்கள் மாநாட்டைக் கூட்டினர்...
5000க்கும் அதிகமான பெண்கள் கூடினர்…
திருவரங்க நீலாம்பிகை அம்மையார்...
மீனாம்பாள் சிவராஜ் அம்மையார்...
தாமரைக்கண்ணி அம்மையார்...
நாராயணி அம்மையார்...
டாக்டர் தருமாம்பாள் அம்மையார்...
மலர்முகத்தம்மையார்...
இராமாமிர்தம் அம்மையார்...
பார்வதி அம்மையார்...
கலைமகள் அம்மையார்...
என்ற  பெண்கள்  தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்தனர்….

இந்திய நாட்டிலே...
ஈவெராவைப் போலப் 
பெண்கள் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும்
உளமாரப் பாடுபட்டவர் யாருமில்லை.
சீர்திருத்தவாதிகளிலே...  
இவரை விடப்பெரியவர் யாருமில்லை….
எனவே ஈவெரா அவர்களை 
இனிமேல் பெரியார் என்றே அழைப்போம்.. 
எனப் பெண்கள் மாநாடு 
உற்சாகமுடன் தீர்மானம் இயற்றியது….

அன்றிலிருந்து... 
ஈ.வெ.ராமசாமி நாயக்கர்...
என்றழைக்கப்பட்ட ஈவெரா
தந்தைப்பெரியார் என 
தரணி முழுக்க அழைக்கப்படுகின்றார்…

பெரியார் என்று அவர் அழைக்கப்பட்டு
80 ஆண்டுகள் ஆகிவிட்டன…
800 ஆண்டுகள் ஆனாலும்…
8000 ஆண்டுகள் ஆனாலும்…
80000 ஆண்டுகள் ஆனாலும்...

என்றும் அவரே..
பெரியார் பெரியார்.. பெரியார்…

No comments:

Post a Comment