Friday, 30 April 2021

மேதின நல்வாழ்த்துக்கள்....


கொடிது கொடிது...

கொரோனா கொடிது...

அதனினும் கொடியது...

உழைப்பவனின் வறுமை... 

கொரோனாவை விரட்டு...

வறுமை என்னும்

கொடிய நோயை விரட்டு....

நோய்களைப் போக்காத...

அதிகாரப் பிணிகளை அகற்று...

அனைவருக்கும் புரட்சிகர

மேதின நல்வாழ்த்துக்கள்....

--------------------------------------------------------------

மேதின கொடியேற்றம்

01/05/2021 – சனிக்கிழமை – காலை 10 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

தொலைபேசி நிலையம் – சிவகங்கை

தொலைபேசி நிலையம் – பரமக்குடி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

ஆறாது... மனம்....

NFTE  இயக்கத்தில்

ஒருமுகமாக செயலாற்றிய

மாநில உதவித்தலைவர்

ஆற்றல்மிகு தோழர்

கரூர் ஆறுமுகம் 

அவர்கள் மறைந்து விட்டார்.

திருச்சி மாவட்டச்சங்கத்தின்

கரூர் பகுதி தளபதியாக செயல்பட்டார்.

பணியில் உள்ள தோழர்கள்...

பணிநிறைவு பெற்ற தோழர்கள்...

ஒப்பந்த ஊழியர்கள் என

எல்லாத்தரப்பு தோழர்களுக்கும்

தோள் தந்து உதவினார்.

கரம் உயர்த்தி உரிமை வென்றார்...

தனது கருத்துக்களை

அழுத்தம் திருத்தமாக...

ஆணித்தரமாக சபைகளில் எடுத்துரைப்பார்...

மாநில மாநாட்டுப்பணிகளில்

முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திகொண்டிருந்தார்...

யாருக்கும் அவர் அடிபணிந்ததில்லை...

யாரைக்கண்டும் அவர் அஞ்சியதில்லை...

ஏப்ரல் 30ல் பணிநிறைவு...

ஏப்ரல் 29ல் மறைவு...

கொரோனாவை விடக் கொடிய செய்தி இது...

 

இன்று...

இயக்கங்களில் வெற்றிடங்கள்

வேகமாகப் பரவி வருகின்றன...

தோழர் ஆறுமுகம் நம்மிடையே இல்லை...

ஆனால் அவர் விட்டுச்சென்ற பணிகளும்...

அவரது கனவுகளும்... லட்சியங்களும்....

நம் கண்முன்னே விரிந்து நிற்கின்றன...

அவர் உயர்த்திப்பிடித்த செங்கொடி

உயர... உயரப் பறக்க வேண்டும்...

உழைப்பாளர் தினமாம் மேதினத்தில்

ஒவ்வொரு ஊரிலும் செங்கொடி ஏற்றும்போது...

அருமைத்தோழர் ஆறுமுகத்தை நினைவு கூர்வோம்...

அவருக்கு நம் இதயம் கனத்த அஞ்சலி....

Tuesday, 27 April 2021

 கொரோனா செய்திகள்

 நலம்பெற வாழ்த்துக்கள்

 BSNL CMD திரு.பிரவின்குமார் புர்வார் அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உத்திரப்பிரதேசம் மீரட் நகரில் 26/04/2021 அன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்

அவர் நலம் பெற வாழ்த்துவோம்....

==================================

 கொரோனா சிகிச்சைக்கு முன்பணம் 

கேரள மாநிலத்தில் அதிகமான BSNL ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மருத்துவ முன்பணம் வழங்கிட வேண்டும் என்று கேரள CGM திரு. வினோத் அவர்கள் BSNL மனிதவள இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் இடமில்லைதனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. பாதிக்கப்படும் ஊழியர்கள் பெரும்பாலும் கீழ்நிலைக்கேடர்களாக இருப்பதனால் அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை கட்ட இயலாது. மேலும் BSNL ஊழியர்களுக்கு மாதாமாதம் சம்பளம் ஒழுங்காக பட்டுவாடா செய்யப்படாத காரணத்தால் நிதி நிறுவனங்களோ, வங்கிகளோ கடன் கொடுக்கவும் தயாரில்லை. எனவே கொரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் வரை மருத்துவ முன்பணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்தபட்சம் 2 கோடி அவசர நிதி ஒதுக்க வேண்டும் என்று இன்றைய நிலையைப் படம்பிடித்து தனது கடிதத்தில் காட்டியுள்ளார்.

மக்களைக் காக்க மடல் வரைந்த மனிதநேயத்திற்கு நன்றி... தஞ்சையில் பொதுமேலாளராக இருந்தபோது ஒப்பந்த ஊழியர்கள் படும் பாட்டை சுட்டிக்காட்டி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 ==================================

கொரோனா நமது ஆலோசனைகள்

 NFTE அகில இந்தியத்தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்கள் கொரோனா தொற்று சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

 மாநில அளவில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.  இந்தக்குழு மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளான ஊழியர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு உதவிட வேண்டும்.

தோராய மருத்துவ செலவு தொகை கேட்கப்பட்டு உரிய முன்பணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

      சற்றும் தாமதமின்றி டெல்லி CORPORATE அலுவலக நிதிப்பிரிவு மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தற்போது கருணை அடிப்படைப் பணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை தருவதால் BSNL நிறுவனத்தின் குடி முழுகப் போவதில்லை.

 ==================================

கொரோனா காலத்தில் அலுவலக வருகை....

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் ஊழியர்களில் பாதிப்பேர் மட்டும் பணிக்கு வரலாம் என்று தமிழ் மாநில நிர்வாகம் மிகுந்த மனிதநேயத்துடன் உத்திரவிட்டுள்ளது. கொரோனா இருந்தாலும் அதிகாரிகள் பணிக்கு வந்தே தீர வேண்டும். இந்த உத்திரவு 27/04/2021 முதல் 01/05/2021 வரை அமுலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 01/05/2021க்குப் பிறகு கொரோனா மறைந்து விடுமா?அல்லது பெரும்பகுதி ஊழியர்கள் மறைந்து விடுவார்களா? என்று தெரியவில்லை. நல்லதுக்கும் கெட்டதுக்கும் தமிழகமே நல்ல உதாரணம்.

==================================

கொரோனா – விடுப்பைக் காசாக்கு...

வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்தைக் கொரோனா சிகிச்சை தற்போது காலி செய்து விடுகின்றது. மாதாமாதம் சம்பளத்திற்கே ஏங்கிப்போயுள்ள BSNL ஊழியர்களால் பல லட்சங்களைச் செலவழித்து தங்கள் உயிரைக் காக்க முடியாத சூழ்நிலை. எனவே நிர்வாகம் ஊழியர்கள் சேர்த்து வைத்துள்ள விடுப்பை LEAVE ENCASHMENT திட்டத்தின் மூலம் காசாக்க அனுமதி தந்தால் பல பேர் வைத்தியம் செய்து உயிர் பிழைக்க முடியும். விடுப்பிற்கான நிதி என்பது தனியாக பாதுகாப்பாக உள்ளதால் நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை என்பது எழாது. விருப்ப ஓய்வில் சென்ற ஆயிரமாயிரம் ஊழியர்களுக்கு விடுப்புச்சம்பளம் தடையேதுமின்றி பட்டுவாடா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே நிர்வாகம் மருத்துவ முன்பணத்தோடு விடுப்பையும் காசாக்கிட அனுமதித்தால் பல உயிர்களைக் காக்க முடியும். இவற்றையெல்லாம் நிர்வாகம் பரிசீலனை செய்யாவிட்டால் இரண்டாவது அலையில் இரண்டாவது விருப்ப ஓய்வாக ஊழியர் எண்ணிக்கை குறைந்தாலும் ஆச்சரியமில்லை.

 பேய்கள் அரசாண்டால்...


இந்தியாவில்...

ஒரே நாளில் 3,32,730 பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகில் இதுவே மிகப்பெரிய சாதனை.....வேதனை...

இன்று வரை 1 கோடியே 60 இலட்சம் பேர் பாதிப்பு....

இதுவும் சாதனை...

இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 2000 பேர் இறந்து கொண்டிருக்கின்றார்கள்...

இதுவும் சாதனைதான்...

இறப்பவர்களை எரிப்பதற்கு கூட இடுகாடு இங்கில்லை...

இதுவும் சாதனைதான்...

உண்ண உணவு...

உடுக்க உடை...

இருக்க இடம்...

எரிக்க சுடுகாடு...

இது எதுவுமே இல்லாத தேசமாக

மாறிப்போனது வக்கற்ற இந்திய தேசம்...

கைதட்டி கொரோனாவை விரட்டினார்கள்...

இன்று உலகமே...

கைகொட்டி சிரிக்கின்றது....

விளக்கேற்றி கொரோனாவை விரட்டினார்கள்...

இன்று இடுகாட்டில்...

விறகேற்றி பிணங்களை எரிக்கின்றார்கள்...

கொரோனா மருந்து ரெம்டெசிவிர்

நாலாயிரத்தில் இருந்து நாற்பதாயிரமாக உயர்வு...

பேய்கள் அரசாண்டால்...

பணம் தின்னும் தனியார்கள்...

பேய்கள் அரசாண்டால்..

பிணம் தின்னும் இடுகாடுகள்...

Saturday, 24 April 2021

 காற்றுக்கும் வந்ததிங்கே... பஞ்சம்...

சோற்றுக்குப் பஞ்சம் 

சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்...       

என்று வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட  

இந்திய தேசத்தில் இன்று

காற்றுக்கும் பஞ்சம்...

 

வடமாநிலங்களில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 

டெல்லி ரோஹினி பகுதியில் இருக்கும் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 20 பேர் பலி... 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மருத்துவமனையில் 

6 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக செய்தி... 

டெல்லி கங்காராம் மருத்துவமனையில்

ஆக்சிஜன் கிடைக்காமல் 25 நோயாளிகள் இறப்பு...

 

வளமான இந்தியா...

வல்லரசு இந்தியா...

மின்னனு இந்தியா...

மினுமினுக்கும் இந்தியா...

ஒளிமயமான இந்தியா...

ஒரே இந்தியா...

அடச்சீ.... போங்கடா... 


சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்..

வெறும்....

காற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்? 

பாரதி இருந்திருந்தால்...

ஆளுகின்ற அசிங்கங்களை....

அறம்பாடி அழித்திருப்பான்....

பேடிகளாய்..

நாங்கள் பிறந்து விட்டோம்...

என் செய்வோம்?... ஏது உரைப்போம்?...

Tuesday, 20 April 2021

 இது ஒரு தொடர்கதை...

 4668 ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளப்பாக்கித்தொகையான 20 கோடியே 47 லட்சம் ரூபாய்  இன்று 20/04/2021 அவர்களுடைய வங்கிக்கணக்கில் உயர்நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் DY.CLC தொழிலாளர் முதன்மைத் துணை ஆணையரால் வரவு வைக்கப்பட்டுள்ளது.

 இதற்கு முன்பாக 14 கோடியே 50 லட்சம் முதல் தவணையாக பட்டுவாடா செய்யப்பட்டது. ஒப்பந்த ஊழியர்களுக்கான இந்த சட்டரீதியான போராட்டத்தில் வெற்றி பெற்றதாக எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். உண்மைதான். பெரும் வெற்றிதான். ஆனால் வெற்றி பெற்றோம் என்று மகிழ்ச்சியில் நாம் இருந்து விட முடியாது. 

ஒப்பந்த ஊழியர்களின் பல பிரச்சினைகள் நம் முன் பேயாட்டம் ஆடுகின்றன. தமிழகத்தில் ஏறத்தாழ 5000க்கும் அதிகமாக இருந்த ஒப்பந்த ஊழியர்கள் இன்று வெறும் 1500 என்ற அளவில் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைக்கப்பட்டு விட்டனர்.

இந்த எண்ணிக்கை மேலும் குறைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் வேகமாக செய்து வருகின்றது. இதனிடையே பல தோழர்கள் மாற்று வேலை தேடி BSNL நிறுவனத்தை விட்டுச் சென்று விட்டனர். ஒருபகுதி தோழர்கள் OUTSOURCING என்னும் முறைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.  OUTSOURCING முறையில் பணிபுரியும் தோழர்களுக்கும் குறைந்தது 6 மாத சம்பளம் பட்டுவாடா ஆகவில்லை. குறைந்தபட்சக்கூலி வழங்கப்படுவதில்லை. EPF இல்லை. ESI இல்லை. மிகவும் சுரண்டல் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர். 

காரைக்குடி மாவட்டத்தில் மார்ச் 2020 முடிய அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. மதுரையில் செப்டம்பர் வரை அமுலில் இருந்தன. எனவே TEMPORARY ADVANCE என்னும் தற்காலிக முன்பண முறை மூலம் அதிகாரிகள் HOUSE KEEPING மற்றும் காவல் பணி செய்யும் தோழர்களுக்கு பட்டுவாடா செய்து வருகின்றனர்.  TEMPORARY ADVANCE விண்ணப்பங்கள் உடனடியாக ஒப்புதல் ஆவதில்லை. பணப்பட்டுவாடாவும் உடனடியாக ஆவதில்லை. எனவே அந்தப்பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஏழெட்டு மாதங்களாக சம்பளப்பாக்கி உள்ளது.

ஒவ்வொரு SDE...JTOவிற்கும் லட்சக்கணக்கில் TEMPORARY ADVANCE பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது.  இந்த TEMPORARY ADVANCE பட்டுவாடாவில் நடக்கும் ஆகப்பெரும் சுரண்டல்  என்னவென்றால்...

குறைந்தபட்சக்கூலியாக C பிரிவு நகரங்களில் ரூ.427/=ஒரு நாளைக்கு கூலியாகக் கொடுக்கப்பட வேண்டும்.

மதுரை போன்ற B பிரிவு நகரங்களில் ஒரு நாளைக்கு ரூ.534/= கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால் காரைக்குடிக்கு ஒரு நாளைக்கு ரூ.300/=என்றும்

மதுரைக்கு ஒரு நாளைக்கு ரூ.400/=

என்று மட்டுமே பட்டுவாடா செய்யப்படுகின்றது.

EPF இல்லை. ESI இல்லை. வார ஓய்வு இல்லை.

காவல் பணி செய்யும் தோழர்கள் மாதம் 30 நாட்களும் பணிபுரிகின்றனர். ஆனால் 26 நாட்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகின்றது. காரைக்குடி D-TAX தொலைபேசி நிலையத்தில் காவல்பணி செய்த சேவியர் என்ற தோழர் மாரடைப்பால் காலமானார். அவர் TEMPORARY ADVANCE முறையில் பணிசெய்த காரணத்தால் அவருடைய குடும்பத்திற்கு சல்லிக்காசு கூட நிர்வாகம் வழங்கவில்லை.  குத்தகை முறை மோசம் என்கின்றோம். ஆனால் அந்த குத்தகை முறையில் கிடைக்கும் சில சலுகைகளும் கூட இப்போது நிர்வாகத்தால் அமுல்படுத்தப்படும் நடைமுறையில் இல்லை.  ஓராண்டு ஆகியும் கூட  புதிய குத்தகை ஆவணங்களைத் தயார் செய்ய நமது அதிகாரிகளால் இயலவில்லை. நமது லட்சணம் அவ்வளவே. மேலும் HOUSE KEEPING பகுதியில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமே வேலை. மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே வேலை. ஒரு ஆளுக்கு மாதம் 1500 என்ற அளவில் சம்பளம் என்று பல்வேறு கிடுக்கிப்பிடிகள். 

இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய மாபெரும் சங்கத்தலைவர்கள் காண்ட்ராக்ட்காரனிடம் கமிஷன் அடிப்பது... ஒப்பந்த ஊழியரிடம் வசூல் செய்வது... உபரியாக உள்ள கேபிள்களை வெட்டி காசாக்குவது.... ஓய்வு பெற்று ஒன்பது வருடமானாலும் சங்கப் பொறுப்புக்களை விடாமல் வைத்துக்கொண்டு வீட்டில் கவிழ்ந்து படுத்துகொள்வது என்ற கேடுகெட்ட நிலையில் இருப்பது எல்லாவற்றிலும் கொடுமை. 

எனவே தோழர்களே...

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில்

நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.

சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் மிக மிக அதிகம்.

எனவே...

ஏதோ அவர்கள் உழைத்த பணத்தை வாங்கிக்கொடுத்தோம்....

வெற்றி... வெற்றி.. உலகமகா வெற்றி

என்று நாம் கூவுவதில் பலனில்லை... 

ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்வதற்கும்

அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் உயிர் வாழ்வதற்கும்..

நம்மால் ஏதும் செய்ய முடியுமா என்பதுதான்

இன்று எல்லோர் முன்னிலையிலும் உள்ள  கேள்வி.

அந்த திசை வழியில் சிந்திப்போம்... பயணிப்போம்...

Monday, 19 April 2021

 அஞ்சலி

 
NFTE 

கர்நாடகா மாநிலச்செயலர்

 தோழர்.கிருஷ்ணா ரெட்டி 

அவர்களின் மறைவிற்கு நமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலி. அமைதியும் இனிமையும் கொண்ட தோழர் கிருஷ்ணா ரெட்டி அவர்களின் மறைவு NFTE இயக்கத்திற்கு பேரிழப்பாகும். 

இது தலையுதிர் காலம்....

Tuesday, 13 April 2021

 ஒடுக்கப்பட்டோரின் ஒளிவிளக்கு



அண்ணல் அம்பேத்கார்...

இருள் சூழ்ந்த இந்திய தேசத்தின்...

வழிகாட்டிய ஒளிவிளக்கானார்...

இதோ...

இன்று இந்திய தேசத்தில்...

மோசமாய்... இன்னும் மோசமாய்...

இருள் சூழ்கிறது...

அம்பேத்கார் என்னும் ஒளிவிளக்கை...

உயர்த்திப் பிடிப்போம்...

சூழும் இருளை சுட்டெரிப்போம்....

அண்ணல் அம்பேத்கார் வழிநடப்போம்...

இருளில் மூழ்கும் இந்திய தேசம் மீட்டெடுப்போம்...

================================

தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம்

NFTE - தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

இணைந்து கொண்டாடும்....

அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழா

14/04/2021 – புதன் – காலை 10 மணி

NFTE – சங்க அலுவலகம் – காரைக்குடி

தோழர்களே... வாரீர்...

Sunday, 11 April 2021

எழுந்தது... இளமை... 

தானைத்தலைவர் குப்தா நூற்றாண்டு தொடக்க நாளான 08/04/2021 அன்று பரமக்குடியில் மாவட்டத்தலைவர் தோழர். லால்பகதூர் அவர்கள் தலைமையில் NFTE காரைக்குடி மாவட்டச்சங்க செயற்குழு சிறப்பாக நடைபெற்றது.

தோழர் குப்தா நூற்றாண்டு தொடக்க விழா...

பரமக்குடி தோழர் சங்கரன் பணிநிறைவு விழா....

மாவட்டச்செயற்குழு....

என்று மூன்று முத்தான விழாக்கள் நடைபெற்றன.

அஞ்சல் பகுதியின் அருமைத்தோழர் செல்வராஜ் அவர்கள் தோழர் குப்தா பற்றி சீரிய சிறப்புரையாற்றினார்.

தோழர் குப்தா பற்றிய கருத்தரங்கத்தில் அற்புத சாட்சியாகத் தங்கள் வாழ்வில் தோழர் குப்தா நிகழ்த்திய அற்புதங்கள் பற்றி தோழர்கள் உணர்வுப் பூர்வமாக எடுத்துரைத்தனர்.

பங்கு கொண்ட தோழர்களுக்கு கடலூர் தோழர் ஜெயராமன் எழுதிய தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூரார் பற்றிய புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. 

விருப்ப ஓய்வுக்குப்பின் மாவட்டச்சங்க நிர்வாகிகள் பலர் ஓய்வு பெற்றதால்....புதிய மாவட்டச்செயற்குழு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 

மாவட்டத்தலைவர் 

தோழர். சுப்பிரமணியன், TT/இராமநாதபுரம்

மாவட்டச்செயலர் 

தோழர். சுபேதார் அலிகான், OS/காரைக்குடி

மாவட்டப்பொருளர் 

தோழர். பங்கஜ்குமார், JE/முதுகுளத்தூர்

ஆகியோரைக் கொண்ட புதிய இளைய மாவட்டச்செயற்குழு முழுக்க முழுக்கப் பணியில் உள்ள தோழர்களைக் கொண்ட மாவட்டசெயற்குழு தோழர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு... உற்சாகத்தோடு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

தோழர் சுப்பிரமணியின் வழிகாட்டுதலில்....

தோழர் சுபேதார் செயல்பாட்டில்.....

காரைக்குடி மாவட்டச்சங்கம்

தனது பாரம்பரிய பாதையில்

புதிய தடம் பதிக்க.... வரலாறு படைக்க வாழ்த்துக்கள்....