Tuesday, 20 April 2021

 இது ஒரு தொடர்கதை...

 4668 ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளப்பாக்கித்தொகையான 20 கோடியே 47 லட்சம் ரூபாய்  இன்று 20/04/2021 அவர்களுடைய வங்கிக்கணக்கில் உயர்நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் DY.CLC தொழிலாளர் முதன்மைத் துணை ஆணையரால் வரவு வைக்கப்பட்டுள்ளது.

 இதற்கு முன்பாக 14 கோடியே 50 லட்சம் முதல் தவணையாக பட்டுவாடா செய்யப்பட்டது. ஒப்பந்த ஊழியர்களுக்கான இந்த சட்டரீதியான போராட்டத்தில் வெற்றி பெற்றதாக எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். உண்மைதான். பெரும் வெற்றிதான். ஆனால் வெற்றி பெற்றோம் என்று மகிழ்ச்சியில் நாம் இருந்து விட முடியாது. 

ஒப்பந்த ஊழியர்களின் பல பிரச்சினைகள் நம் முன் பேயாட்டம் ஆடுகின்றன. தமிழகத்தில் ஏறத்தாழ 5000க்கும் அதிகமாக இருந்த ஒப்பந்த ஊழியர்கள் இன்று வெறும் 1500 என்ற அளவில் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைக்கப்பட்டு விட்டனர்.

இந்த எண்ணிக்கை மேலும் குறைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் வேகமாக செய்து வருகின்றது. இதனிடையே பல தோழர்கள் மாற்று வேலை தேடி BSNL நிறுவனத்தை விட்டுச் சென்று விட்டனர். ஒருபகுதி தோழர்கள் OUTSOURCING என்னும் முறைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.  OUTSOURCING முறையில் பணிபுரியும் தோழர்களுக்கும் குறைந்தது 6 மாத சம்பளம் பட்டுவாடா ஆகவில்லை. குறைந்தபட்சக்கூலி வழங்கப்படுவதில்லை. EPF இல்லை. ESI இல்லை. மிகவும் சுரண்டல் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர். 

காரைக்குடி மாவட்டத்தில் மார்ச் 2020 முடிய அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. மதுரையில் செப்டம்பர் வரை அமுலில் இருந்தன. எனவே TEMPORARY ADVANCE என்னும் தற்காலிக முன்பண முறை மூலம் அதிகாரிகள் HOUSE KEEPING மற்றும் காவல் பணி செய்யும் தோழர்களுக்கு பட்டுவாடா செய்து வருகின்றனர்.  TEMPORARY ADVANCE விண்ணப்பங்கள் உடனடியாக ஒப்புதல் ஆவதில்லை. பணப்பட்டுவாடாவும் உடனடியாக ஆவதில்லை. எனவே அந்தப்பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஏழெட்டு மாதங்களாக சம்பளப்பாக்கி உள்ளது.

ஒவ்வொரு SDE...JTOவிற்கும் லட்சக்கணக்கில் TEMPORARY ADVANCE பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது.  இந்த TEMPORARY ADVANCE பட்டுவாடாவில் நடக்கும் ஆகப்பெரும் சுரண்டல்  என்னவென்றால்...

குறைந்தபட்சக்கூலியாக C பிரிவு நகரங்களில் ரூ.427/=ஒரு நாளைக்கு கூலியாகக் கொடுக்கப்பட வேண்டும்.

மதுரை போன்ற B பிரிவு நகரங்களில் ஒரு நாளைக்கு ரூ.534/= கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால் காரைக்குடிக்கு ஒரு நாளைக்கு ரூ.300/=என்றும்

மதுரைக்கு ஒரு நாளைக்கு ரூ.400/=

என்று மட்டுமே பட்டுவாடா செய்யப்படுகின்றது.

EPF இல்லை. ESI இல்லை. வார ஓய்வு இல்லை.

காவல் பணி செய்யும் தோழர்கள் மாதம் 30 நாட்களும் பணிபுரிகின்றனர். ஆனால் 26 நாட்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகின்றது. காரைக்குடி D-TAX தொலைபேசி நிலையத்தில் காவல்பணி செய்த சேவியர் என்ற தோழர் மாரடைப்பால் காலமானார். அவர் TEMPORARY ADVANCE முறையில் பணிசெய்த காரணத்தால் அவருடைய குடும்பத்திற்கு சல்லிக்காசு கூட நிர்வாகம் வழங்கவில்லை.  குத்தகை முறை மோசம் என்கின்றோம். ஆனால் அந்த குத்தகை முறையில் கிடைக்கும் சில சலுகைகளும் கூட இப்போது நிர்வாகத்தால் அமுல்படுத்தப்படும் நடைமுறையில் இல்லை.  ஓராண்டு ஆகியும் கூட  புதிய குத்தகை ஆவணங்களைத் தயார் செய்ய நமது அதிகாரிகளால் இயலவில்லை. நமது லட்சணம் அவ்வளவே. மேலும் HOUSE KEEPING பகுதியில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமே வேலை. மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே வேலை. ஒரு ஆளுக்கு மாதம் 1500 என்ற அளவில் சம்பளம் என்று பல்வேறு கிடுக்கிப்பிடிகள். 

இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய மாபெரும் சங்கத்தலைவர்கள் காண்ட்ராக்ட்காரனிடம் கமிஷன் அடிப்பது... ஒப்பந்த ஊழியரிடம் வசூல் செய்வது... உபரியாக உள்ள கேபிள்களை வெட்டி காசாக்குவது.... ஓய்வு பெற்று ஒன்பது வருடமானாலும் சங்கப் பொறுப்புக்களை விடாமல் வைத்துக்கொண்டு வீட்டில் கவிழ்ந்து படுத்துகொள்வது என்ற கேடுகெட்ட நிலையில் இருப்பது எல்லாவற்றிலும் கொடுமை. 

எனவே தோழர்களே...

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில்

நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.

சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் மிக மிக அதிகம்.

எனவே...

ஏதோ அவர்கள் உழைத்த பணத்தை வாங்கிக்கொடுத்தோம்....

வெற்றி... வெற்றி.. உலகமகா வெற்றி

என்று நாம் கூவுவதில் பலனில்லை... 

ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்வதற்கும்

அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் உயிர் வாழ்வதற்கும்..

நம்மால் ஏதும் செய்ய முடியுமா என்பதுதான்

இன்று எல்லோர் முன்னிலையிலும் உள்ள  கேள்வி.

அந்த திசை வழியில் சிந்திப்போம்... பயணிப்போம்...

1 comment:

  1. but rs 300 or rs 400 fixed by whom everyone knows that that one DE has all the powers to sanction and other executives in Madurai are not able to sustain that DE. everyone knows who he is. why all the unions are blaming each other. everyone has known the reason for it. the last past one month contract employees not available to carry out the works. then how the customers will retain our services. still unions are concentrating only in transfer matter only. if BSNL alive , all unions will be there. if BSNL is not there then there is no hope for union................

    ReplyDelete