துருப்பிடித்த வாள்
இப்போதெல்லாம் இரவில் ஆழ்ந்த உறக்கம் ஏனோ வருவதில்லை.
மதுரை மாநாட்டில் இருந்தே இதே நிலைதான்.
சரிதான் மருத்துவரை அணுகலாம் என்று சென்றால் அங்கே கொத்தாக நமது தோழர்கள் குவிந்து இருந்தார்கள். அத்தனை பேரைப் பார்த்ததில் நமக்கு அதிர்ச்சி. பத்திரிக்கைகளில் விஷக்காய்ச்சல் என்ற செய்தி வேறு. பதறிப் போய் விசாரித்தால் பதில் தர தயங்கி தோழர்கள் நெளிய ஆரம்பித்தார்கள். நமது தோழர்கள் நெளிவு சுளிவு உள்ளவர்கள்
என்பது தெரியும். ஆனால் அதுவே வியாதியாகி விட்டதா?
என்ற கேள்வி நமக்குள் எழுந்தது.
முன்பெல்லாம் தொழிற்சங்கத்தலைவர்கள் உரமண்டை உடையவர்களாக இருந்தார்கள். எதையும் எளிதில் புரிந்து கொண்டார்கள்.
நமக்குத்தான் வரவர மரமண்டையாகி விட்டதே. எனவே நமது மரமண்டைக்கு பின்புதான் விளங்கியது நமது தோழர்கள் மருத்துவத்திற்கு வரவில்லை..
மருத்துவ சான்றிதழுக்கு வந்துள்ளார்கள் என்பது.
ஜூன் 12 காலவரையற்ற வேலைநிறுத்தத்தை பிணியற்ற வேலைநிறுத்தமாக மாற்றிட நமது தோழர்கள் மருத்துவரை அணுகியதாக நாம் சமாதானப்படுத்திக் கொண்டோம்.
நோய் என்றால் கூட நமது தோழர்கள் மருத்துவரை தேடுவதில்லை. ஆனால் போராட்டம் என்றால் மருத்துவரை தேட ஆரம்பித்து விடுகின்றார்கள். தற்போது இதுவும்
ஒரு வியாதியாக பரவ ஆரம்பித்து விட்டது.
கடந்த காலங்களை நினைத்துப்பார்க்கின்றோம்.
இதே தோழர்கள்தான் எந்த இழப்பையும் பற்றி கவலைப்படாமல் கடுமையாக போராடினார்கள். அன்றைய தலைமையும் அவர்களுக்கு இழப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டது.
ஆனால் இன்றைய நிலை வேறு.
ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், தந்தி,
மனு கொடுத்தல், ஊர்வலம் விடுதல்
போன்றவை மட்டுமே சாத்தியமான போராட்ட வடிவங்களாகி விட்டன.
வேலை நிறுத்தம் என்றால் மருத்துவ விடுப்பில் செல்வது என்பது எட்டாண்டில் வாடிக்கையாகிவிட்டது.
இன்றைய தொழிற்சங்கத்தலைவர்கள்
தோழர்களின் இன்றைய மனநிலையை ஆராய்ந்து அதனை மாற்றிட முயற்சி செய்திடல் வேண்டும்.
"அறிவும் ஆயுதமும் "ஒன்று.
பயன்படுத்தாவிட்டால் துருப்பிடித்து விடும்.
போராட்டக்குணமும் அவ்வாறே..
துருப்பிடித்த நமது போராட்ட வாளை
கூர்ப்படுத்தும் காலம் வந்து விட்டது.
சிந்திப்போம்!!! தோழர்களே!!!
No comments:
Post a Comment