Friday, 29 November 2013

செய்திகள் 

செய்திகளை முந்தித்தரும் இணையற்ற வேலூர் இணையதளம் 
ஜனவரி 2014 முதல்  மொத்த  IDA உயர்வு 90 சதத்தை தொட்டுவிடும்... 
குறைந்தபட்சம் 4.5 சத IDA விலைவாசிப்படி 
உயர்விருக்கும் என்று கூறியுள்ளது. 
வெங்காயவிலை  குறையாமல் விலைவாசிப்படி கூடுவதால் ஏது பயன்?

TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் கோரி நமது மத்திய சங்கம் 
BSNL நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது.

ஓய்வூதிய இலாக்கா சில விளக்கங்களை கேட்டதின் அடிப்படையில் , ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கான 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமான கோப்புகள் பல்வேறு பயணங்களுக்குப்பின் 
மீண்டும் BSNL அலுவலகம் திரும்பியுள்ளது. 

பல்வேறு பிரச்சினைகளுக்காக ஓய்வூதியப்பலன்கள் நிறுத்தப்பட்ட தோழர்களுக்கு உடனடியாக தற்காலிக ஓய்வூதியம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட  BSNL நிர்வாகத்தை DOT  கேட்டுக்கொண்டுள்ளது.

Wednesday, 27 November 2013

சேம நல நிதிக்குழு செய்திகள் 

மத்திய சேமநல நிதிக்குழு 
CENTRAL WELFARE BOARD 
அனைத்து மாநிலங்களுக்கும் தற்காலிக சேமநல நிதி ஒதுக்கீடாக ரூ.4,92,50,000/=ஐ ஒதுக்கியுள்ளது.
தமிழகத்திற்கு ரூ.36,51,000/= ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சேமநல நிதிக்குழு உறுப்பினர் கடலூர் தோழர். ஸ்ரீதர் 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை சேமநல நிதிக்குழுக்கூட்டத்தில் விவாதிப்பதற்கு எழுப்பியுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே முறையான 
கடன் வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.

மகளிருக்கு இரண்டாம் முறை மருத்துவ சோதனை வசதி 
MASTER HEALTH CHECK UP அளிக்கப்பட வேண்டும்.

மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட வேண்டும்.

திருமணக்கடன் 50ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும்.

கடன் பாக்கிகளை HRMSல் பார்த்து தெரிந்து கொள்ள 
வசதி செய்ய வேண்டும்.

நேரடி பட்டுவாடா RTGS முறையில் பட்டுவாடா மாற்றப்பட வேண்டும்.

வங்கிக்கடனாளிகளுக்கு காப்பீடு செய்யும் முறை அமுலாக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் 

இன்று 28/11/2013 நடைபெறும் 
தருமபுரி மாவட்ட
சங்க அலுவலகத் திறப்பு விழா 
சீரோடு சிறப்போடு நடைபெற 
நமது அன்பான வாழ்த்துக்கள்.

சங்க அலுவலகம் 
தொழிற்சங்கப் பாசறையாக 
தோழர்களின் பாச அறையாக
 விளங்கட்டும்..
TTA ஆளெடுப்பு விதிகள் 2013ல் 
திருத்தம் கோருதல் 

TTA ஆளெடுப்பு விதிகள் 2001ல் திருத்தங்கள் செய்து 
TTA ஆளெடுப்பு விதிகள் 2013ஐ  வெளியிட 
BSNL நிர்வாகம் சங்கங்களிடம் கருத்து கேட்டிருந்தது. 
நமது தமிழ் மாநில சங்கத்திலிருந்து கீழ்க்கண்ட திருத்தங்கள் முன்மொழியப்பட்டு மத்திய சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

-: நாம் கோரியுள்ள திருத்தங்கள்:- 

முறையற்ற திருமணம் புரிபவர்களை தகுதி இறக்கம் செய்வது சம்பந்தமான விதிகளில் உள்ள சந்தேகங்களுக்கு 
முறையான விளக்கம் தருதல்.

TTA பயிற்சியை முழுமையாக முடிக்காத இலாக்கா ஊழியர்கள் TTA  பதவியில் அமர்த்தப்பட மாட்டார்கள் 
என்ற நிலை நீக்கப்பட வேண்டும்.

தளர்வு விதிகளில்  (POWER TO RELAX ) 
உள்ள சந்தேகங்களை நீக்க வேண்டும்.

அகில இந்தியா முழுமையும் தேவைப்பட்டால் பணிபுரிய வேண்டுமென்பதை மாநிலம் முழுமையும் என மாற்றிட வேண்டும்.

அதிக பட்ச வயது 27ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
தற்போதுள்ள வேலையின்மையை கணக்கில் கொண்டு 
இது 35 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

டிப்ளோமா படித்த இலாக்கா தோழர்களுக்கு வழங்கப்படும் 
10 சத பதவி உயர்வு நீக்கப்பட்டுள்ளது. 
இது வழக்கம் போல் தொடர்ந்து நீடிக்க வேண்டும். 

 +2 கல்வித்தகுதி இல்லாத  ஊழியர்களுக்கும் 
தகுதித்தேர்வின் மூலம் TTA  வாய்ப்பு வழங்க வேண்டும்.

9020-17430 சம்பள விகிதத்தில் 5 ஆண்டு சேவை உள்ளவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.  அதை 9020-17430 சம்பள விகிதம் மற்றும் அதற்கு மேல் உள்ள சம்பள விகிதத்தில் இணைந்த 5 ஆண்டு சேவை உள்ளவர்கள் என மாற்ற வேண்டும்.

Monday, 25 November 2013

சம்மேளன தின சிறப்புக்கூட்டம் 
மாவட்டச்செயற்குழு 
ஒப்பந்த ஊழியர் பொதுக்குழுக்கூட்டம் 

30/11/2013 - சனிக்கிழமை 
காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் - பரமக்குடி.

சிறப்புரை 
தோழர் .சேது 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

தோழர்களே.. வருக..
இரங்கல் 

காரைக்குடி GM அலுவலகத்தில் 
பணிபுரிந்த தோழர்.

B. பொன்னுச்சாமி 
SDE அவர்கள் 

உடல்நலக்குறைவால் 25/11/2013 
அன்று  இயற்கை எய்தினார்.

கடமை உணர்வும் 
அனைவரிடமும் கனிவும் 
கொண்ட அவரது இளம்வயது இழப்பு 
இலாக்காவிற்கும் தோழர்களுக்கும் 
பெரும் பேரிழப்பாகும்.

நமது இதயங்கசிந்த 
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

Sunday, 24 November 2013

நவம்பர்  24
NFPTE 
சம்மேளன தினம் 

இணைந்த கரங்கள்.... 
பாரத தேசத்திற்காக 
பாவப்பட்ட மஸ்தூருக்காக 
எழுந்து நின்று போராடியது..

இது...
குழைந்த குரலை  குமுற வைத்தது..
வளைந்த முதுகை நிமிர  வைத்தது..

இது ....
சூனியத்திற்கு ஞானத்தை சொல்லித்தந்தது..
வானைத்தை வசப்படுத்த துணிந்து நின்றது..

இது...
காட்டில் மேட்டில் பணி செய்தவனை... 
கணிணியில் பணி செய்ய வைத்தது....

இது...
தொழிலாளர் மானம் காத்தது..
தொழிற்சங்க மானம் மிக்கது.. 

இது...
நீதியை என்றும்   கட்டிக்காக்கும்... 
அநீதியை எங்கும் தட்டிக்கேட்கும்..

இதில்..
அணி திரள்வீ ர்... தோழர்களே..
என்றும் பணி செய்வீ ர்... தோழர்களே..

அனைவருக்கும் 
சம்மேளன தின 
நல்வாழ்த்துக்கள்..

Saturday, 23 November 2013

தியாகத் தலைவனுக்கு செவ்வணக்கம் 


AITUC இயக்கத்தின் 
மாபெரும் தலைவர் 
தோழர். S.S.தியாகராஜன் 
அவர்கள் 
உடல்நலக்குறைவால் 
23/11/2013 அன்று காலமானார்.
அடிமட்ட தொழிலாளிக்காக  
தன் வாழ்நாளை 
அர்ப்பணித்த தன்னலமற்ற தலைவர்.
NFTE இயக்கத்தோடு இரண்டறக்கலந்த தோழர்.

கண்ணீ ர்... கசிந்து...
செங்கொடி... தாழ்த்தி.. 
அஞ்சலி... செலுத்துகின்றோம்...

(24/11/2013 அன்று காரைக்குடியில்  நடைபெறவிருந்த 
சிறப்புக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.)

Friday, 22 November 2013

செய்திகள் 

JCM தேசியக்குழு கூட்டம் 23/12/2013 அன்று 
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கான 
78.2 சத IDA இணைப்பு வழங்குவது சம்பந்தமாக சில விளக்கங்களை 
ஓய்வூதிய இலாக்கா DOTயிடம் கேட்டுள்ளது.

ITS அதிகாரிகள் BSNLலில் இணைவது சம்பந்தமான
 வழக்கு விசாரணை 17/01/2014க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்க உழியர் தரப்பில் NFTE சார்பில் தோழர். இஸ்லாம் அவர்களும், BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் பிரதிநிதிகளாக  நியமிக்கப்பட்டது தெரிந்ததே. இந்த குழுவில் JCMல் உள்ளது போல் தங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கேட்டு BSNLEU சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. 

TTA கேடருக்கான ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்திட NFTE மற்றும் BSNLEU சங்கங்களிடம் BSNL நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது.

சுங்கம் மற்றும் கலால் வரித்துறையில் கேடர் சீரமைப்பை அமுல்படுத்த நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 
60 சதம் இரண்டாம் பிரிவு GROUP B அதிகாரிகள்
 முதல் பிரிவு GROUP A அதிகாரிகளாக மேல்நிலை பெறுவர்.

வீட்டு வாடகை மூலம் வருமான வரி விலக்கு பெறுபவர்கள் 
ஆண்டு  வாடகை ஒரு  லட்சத்திற்கு மேல் வாடகை கொடுத்தால் 
(மாதம் ரூ.8333/க்கும் அதிகமாய்) வீட்டு உரிமையாளரின் 
வருமான வரிக்கணக்கு எண்ணை PAN சமர்ப்பிக்க வேண்டும் 
என உத்திரவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி....
அமைதிக்கான வாயில்..

சொல்வதை அமைதியாக சொல்வது.. 
கேட்பதை அமைதியாக கேட்பது..
என்ற புரிதலின் அடிப்படையில் 
தமிழ் மாநில செயற்குழு கிருஷ்ணகிரியில் சிறப்புடன் நடைபெற்றது. 

மாநிலத்தலைவர் தோழர்.நூருல்லா தலைமை தாங்க 
அகில இந்திய நிர்வாகிகள் தோழர்கள். ஜெயராமன், கோபாலகிருஷ்ணன் 
மூத்த தோழர்கள் சேது,  ஜெயபால்,தமிழ்மணி  சிறப்புரைக்க 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி சிறப்பான கருத்துரைக்க,
மகளிரணி, இளைஞரணித்தோழர்கள் மனங்கவர் உரையாற்ற 
மாவட்டச்செயலர்கள், மாநிலச்சங்கநிர்வாகிகள் 
பிரச்சினைகள் பலவற்றை எடுத்துரைக்க,
ஒலிக்கதிர் பொன்விழா சிறந்திட ஒவ்வொருவரும் உறுதி பூண்டிட 
சிறிய மாவட்டமே ஆனாலும் 
சிறப்பான ஏற்பாடுகளை தருமபுரி நடத்திட 
கிருஷ்ணகிரி செயற்குழு செம்மையுடன்  நடந்தேறி 
அமைப்பை சீரான பாதை நோக்கி திருப்பியுள்ளது.

தோழர்களே..
அமைதிக்கான  வாயிலில்  
அமைதியாகச் செல்வோம்..
அமைதி என்பதே வாயில்தான்..

Monday, 18 November 2013

தமிழ் மாநில செயற்குழு 

20/11/2013 புதன்கிழமை 
காலை 9 மணி 
வெற்றிவேல் மகால் 
கிருஷ்ணகிரி.

தோழர்களே.. வருக..

Sunday, 17 November 2013

நவம்பர் 24
சம்மேளன தின சிறப்புக்கூட்டம் 
மற்றும் 
மாவட்டச்செயற்குழு 

24/11/2013 - ஞாயிறு  - காலை 10 மணி 
சங்க அலுவலகம் - காரைக்குடி 

சிறப்புரை
 மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர்
தோழர். சேது 

மற்றும் முன்னணித் தோழர்கள்..
தோழர்களே.. வருக..

அன்புடன் 
காரைக்குடி மாவட்டச்சங்கம் 
கப்பலோட்டிய தமிழன் 
கப்பம் கட்டி பிழைத்த காலத்தில் 
கப்பலோட்டி உழைத்தவன்..
வெள்ளையனைக் 
கப்பலேற்றத்  துணிந்தவன்..
தேச மானத்தைக்
 கரை சேர்க்கப்பிறந்தவன்..
சொத்தை துறந்தவன்.. 
சுகத்தை மறந்தவன்.. 
செக்கை இழுத்தவன்.. 
செம்மலாய் வாழ்ந்தவன்.. 
தியாகத்திருவுருவம் 
 சிதம்பரம் 
புகழ் பாடுவோம்..
(நவம்பர் 18 செக்கிழுத்த செம்மல் நினைவுநாள்)

Friday, 15 November 2013

விழிப்புணர்வுக் கூட்டம் 

BSNL நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் வளர்ச்சிப்பணிகளில் உள்ள 
தேக்க நிலை குறித்து சமீபத்தில் நடந்த அனைத்து தலைமைப் பொதுமேலாளர்கள் கூட்டத்தில் மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டது. 

BSNLன் புத்துணர்வாக்க செயல்பாடுகளில் ஊழியர்களின் 
பங்கும் விழிப்புணர்வும் மிகவும் அவசியம் என்பதால் 
அனைத்து ஊழியர்கள்  மற்றும் அதிகாரிகள்  சங்கங்களின் 
இணைந்த விழிப்புணர்வுக்  கூட்டத்தை நவம்பர் 30 அன்று 
டெல்லியில் BSNL நிர்வாகம் கூட்டியுள்ளது.

ஊழியர்கள்,அதிகாரிகள் மற்றும் BSNL நிர்வாகம் 
இணைந்து பணி செய்யவேண்டியது இன்றைய அவசரத்தேவையாகும்.

Wednesday, 13 November 2013

நவம்பர் - 14
நேருவை 
நினைவுறுத்துவோம்..


குழந்தைகளை நேசித்தவன்..
பொதுத்துறைகளை 
குழந்தைகளாய் பெற்றெடுத்தவன்.
சோசலிசத்தை சுவாசித்தவன்..
பஞ்சசீலத்தை பரப்பியவன்..

மறைந்தபின்னும் 
சாம்பலாய் நாடெங்கும்
 காற்றிலே கரைந்தவன்..
 கூடவே.. 
அவன் கொள்கைகளும்..

தேசத்தின் மீது நேசமிக்க 
நேருவை நினைவில் கொள்வோம்..
ச்சின்... வாழ்க....


மட்டையடித்து 
மக்கள் மனதைக் கொள்ளையடித்தவன்..
பவுண்டரிகளால் தேச எல்லைகளைக் கடந்தவன்.. 
சிக்ஸர்களால் வானம் அளந்த வாமனன்.. 

கிராமத்து வீதியை கிரிக்கெட் வீதியாக்கியவன்..
கிரிக்கெட்டால் பலரை கிறுக்கு HEAD ஆக்கியவன்..

மட்டை உள்ளளவும் 
மக்கள் மனங்கவர்ந்த 
சச்சின்...  வாழ்க... வாழ்க ..

Tuesday, 12 November 2013

மரித்து வரும்
மருத்துவ வசதி

காரைக்குடி SNATTA மாவட்டச்செயலர் தோழர்.செல்லப்பா TTA அவர்களது மனைவியின் பேறுகால மருத்துவபில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கப்பட்டது என்ற காரணம் காட்டி மறுக்கப்பட்டது. மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். 
தற்போது மருத்துவபில் பட்டுவாடா செய்ய 
மாநில நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
மாநில சங்கத்திற்கு நமது நன்றிகள்..

நிற்க..
தோழர்.செல்லப்பாவின் மருத்துவ பில்கள் போலவே பல்வேறு தோழர்களின் தனியார் மருத்துவமனை சிகிச்சை பில்கள் மாநில நிர்வாகத்தால் மறுதலிக்கப்பட்டுள்ளன. எனவே நாம் நம் தோழர்களிடம் பெரும்பாலும் தனியார் மருத்துவமனை சிகிச்சையைத்தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். 

இந்நிலையில் நமது மாநில இளைஞரணி தோழியர். கார்த்திகா அவர்கள் அவசர நிலையில் தனது பேறுகால சிகிச்சைக்காக எங்கு செல்லலாம் என்று நம்மைக்கேட்டபோது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று ஆலோசனை கூறினோம். அதனடிப்படையில் மதுரை வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
நிர்வாகமும் அனுமதிக்கடிதம் வழங்கியது.  

ஆனாலும் "சோதனைக்கு பணம் கட்டுங்கள்.. நாங்கள் சொல்லும் மருந்துகளை உங்கள் செலவில் வாங்கித்தாருங்கள்"  என்று அவரது குடும்பத்தினரை மருத்துவமனை அலைக்கழித்து விட்டது. 
ஏன் பணம் கட்ட வேண்டும் என காரணம் கேட்டபோது "BSNL நிர்வாகம் பிரசவ அறுவை சிகிச்சைக்கு 14ஆயிரம் மட்டுமே பணம் தரும். சிகிச்சைக்கு ஏறத்தாழ 60 ஆயிரம் ஆகும். எனவே மீதியை நீங்கள்தான் கட்ட வேண்டும்" என மருத்துவமனை நிர்வாகம் கூறியது. 
BSNL நிர்வாகமும் அவர்கள் சொல்வது சரிதான் என்று தலையாட்டியது. 

ஒய்வு பெற்ற அரசு ஊழியரான தோழியர். கார்த்திகாவின் தந்தையார் கேட்டார் " வெறும் 14 ஆயிரம் சலுகை தந்துவிட்டு   ஊழியர்களை 
50 ஆயிரம்  கையில் இருந்து கட்ட வைத்த, மருந்துக்கு கூட ஊழியர் நலன் கருதாத  இந்த திட்டம் உண்மையிலேயே மருத்துவ திட்டம்தானா? என்று  கேள்வி எழுப்பினார். அவரது கேள்வியில் நியாயம் இருந்தது. 
நமது பதிலில் மௌனம் இருந்தது.

மருத்துவ வசதி என்பது, மருத்துவப்படி என்பது 
அருமைத்தோழர் குப்தா நமக்களித்த வரப்பிரசாதம்.
மருத்துவப்படி மரித்தே விட்டது. 
தற்போது மருத்துவ வசதியும் படுத்த படுக்கையாய் உள்ளது. 
தோழர். குப்தாவின் அருமைத்திட்டங்கள் எட்டாண்டுகளில் வைகுண்ட வைத்தியர்களால் கையாளப்பட்டு இறுதியாக கைவிடப்பட்ட திட்டங்களாகி விட்டன.  

தோழியர் கார்த்திகா தொலைபேசியில் கூறினார்..
" சார்.. பிரசவ வேதனையை விட பில்வேதனை அதிகம்" என்று.
நமக்கோ அதைவிட வேதனை.
அந்த வேதனையில் கார்த்திகாவின் பையனை இன்னும் 
நாம் போய் பார்க்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
முகரம் விடுமுறை 

15/11/2013 அன்று 
முகரம் விடுமுறையாக 
BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

Monday, 11 November 2013

செய்திகள்

சந்திர நாட்காட்டியையொட்டி 
(ISLAMIC CALENDER BASED ON LUNAR CALENDER ) 
 முகரம் விடுமுறை 
14/11/2013ல் இருந்து 15/11/2013ஆக மாற்றப்பட்டுள்ளது. 
இதற்கான உத்திரவை DOPT இலாக்காவும், 
தமிழ்நாடு அரசும் வெளியிட்டுள்ளன. 
BSNL உத்திரவு விரைவில் வெளியிடப்படலாம்.

சேலம்,மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் TTA தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு முடிவுகளும், JAO 10 சத பதவி உயர்விற்கான தேர்வு முடிவுகளும் (Sr. Accountant) வெளியிடப்பட்டுள்ளன. 
தேர்ச்சி பெற்றோருக்கு நமது வாழ்த்துக்கள்.

4 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற BSNL ஊழியரின் சம்பளம் கூடுதலாக நிச்சயிக்கப்பட்டு விட்டது என்று சொல்லி பிடித்தத்திற்கு உத்திரவிட்ட BSNLன் உத்திரவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

SAIL உருக்காலை நிறுவனத்தில் ஊதிய உடன்பாட்டு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. குறைந்தபட்சம் 18சத ஊதிய  உயர்வு கேட்டு தொழிற்சங்கங்கள் கோரிக்கை எழுப்பியுள்ளன.
வாழ்த்துக்கள்

தமிழ் மாநில ஊழியர் சேமநலநிதிக்குழுவில்
(TAMILNADU CIRCLE  STAFF WELFARE BOARD) 
 NFTE சார்பில் ஊழியர் பிரதிநிதியாக 
நியமனம் செய்யப்பட்டுள்ள 
கடலூர் மாவட்டச்செயலர் 

அருமைத்தோழர்.
 R . ஸ்ரீதர் 
அவர்களின் பணி சிறக்க 
வாழ்த்துகின்றோம்.

Sunday, 10 November 2013

பாரதியின் பாதம் பட்ட 
பெருமை சொல்வோம்..

1919 நவம்பர் 9,10,11 
செட்டிநாடு சிலிர்த்தது..
காரைக்குடி களித்தது...
கம்பன் உறங்கும் மண்ணில்..
அந்த மூன்று திருநாட்கள்..
காலடி பதித்தான் பாரதி..

இந்து மதாபிமான சங்கத்தில் தங்கி 
தேசாபிமான உரைநிகழ்த்தி..
கவி பாடி சங்கத்தின் புகழ் பாடி 
பாரதி வந்து சென்ற  நாட்களை 
வாழ்நாளெல்லாம் கொண்டாடும் 
செட்டிநாட்டவர் இவ்வாண்டும் 
சிறப்புடனே கொண்டாடி மகிழ்ந்தனர்..

பாரதியின் எள்ளுப்பேரன் 
நிரஞ்சன் பாரதியைக்கண்டு.. 
நிஜத்தில் பாரதியைக்கண்டது போல்..
நீங்கா மகிழ்வு கொண்டனர்.. 
தமிழ்மேல் 
நீங்காப்பற்று கொண்ட 
தமிழ் மேன்மக்கள்..

தோழர். முருகன் தலைமையில் 
தோழர்கள் பங்கேற்க..
பாரதியின் 
வருகை நாள் கொண்டாட்டம்...
வழக்கத்தினும் சிறப்பாய்..நடந்தேறியது..
பாரதியின் பாதம் பட்ட பெருமை சொல்வோம்..
பெருமைமிக்க அவர் பாதம் பதித்த வழி செல்வோம்..

(மேலே கண்ட பாரதியின் உண்மை நிழற்படம் 
காரைக்குடியில்  11/11/1919ல் எடுக்கப்பட்டது)

Thursday, 7 November 2013

சொல்லக் கொதிக்குதடா..

சுரண்டலை ஒழித்து பொதுவுடைமை சுதந்திரம் தந்த 
நவம்பர் 7 நவயுகப்புரட்சியை எல்லோரும் பெருமிதத்துடன் நினைவு கொள்கின்றோம். ஆனால் இன்றோ  சுரண்டல் நாளும் வளர்ந்து வருகின்றது... பொதுவுடைமை தளர்ந்து வருகின்றது. 

ஒப்பந்த ஊழியர்கள் என்று நாமம் இடப்பட்ட மனிதர்கள் உரிய சம்பளம்,சேமநலநிதி,மருத்துவ வசதி, போனஸ் என்ற  
அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு 
நாமம் இடப்பட்டு ஒரங்கட்டப்படுகின்றார்கள். 

காரைக்குடி மாவட்டத்தில் நிரந்தர ஊழியர்களை விட எண்ணிக்கையிலும் வேலைத்திறனிலும் ஒப்பந்த ஊழியர்கள் விஞ்சி நிற்கின்றார்கள்.
 ஏறத்தாழ பத்து ஆண்டுகளாகப் பணி புரிந்து வரும் தோழர்கள் அதிகம்.  இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு உரிய சம்பளம் உரிய தேதியில் கொடுக்கப்படுவதில்லை. அவர்களது சேமநலநிதி கணக்கு EPF இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. மருத்துவ வசதி என்னும் ESI வழங்கப்படவில்லை. போனஸ் கொடுக்கப்படவில்லை. ஏதேனும் விபத்து நடந்து விட்டால் இழப்பீடு  வழங்க வழியில்லை.. நாதியில்லை.

  இந்நிலையில்  இந்த ஆண்டு போனஸ் கொடுக்க வேண்டும் என நாம் கோரிக்கை எழுப்பினோம். AC பராமரிப்பு மற்றும்  கேபிள் பராமரிப்பில் பணிபுரிபவர்களுக்கும், GM அலுவலகத்தில் பணிபுரியும் தோழர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டது. உடனே சில  வறட்டு  அதிகாரிகள் கொதித்து எழுந்து விட்டனர். அதிகாரிகள் மட்டுமல்ல சில புரட்டுத்தொழிற்சங்கத்தலைவ்ர்களும் கூட.. இதை எதிர்க்க முற்பட்டனர். கொடுத்த போனசை சம்பளத்தில் பிடிப்போம் என கொக்கரிக்க ஆரம்பித்து விட்டனர். மாவட்ட பொது மேலாளரோ,  நிதிநிலை, சட்டம்,விதிகள் என்று மழுப்பி ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் 
மெய்ப்பொருள் காண மறுக்கின்றார்.

இந்நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. 
உலகம் முழுமையும் சுரண்டலை ஒழிப்பது ஒரு புறம் இருக்கட்டும். 
உள்ளூரில் நம் உடன் இருப்பவன் சுரண்டப்படுவதை முதலில் தடுப்போம். ஒப்பந்த ஊழியருக்கு உரிய உரிமைகள் கிடைத்திட 
விரைவில் களம் அமைப்போம். 
அதுவே நவம்பர் புரட்சியை நாம் நினைவு கொள்ளும் முறையாகும்.  

Wednesday, 6 November 2013

செய்திகள்
உரிய கருவிகள் மற்றும் பொருட்கள் இல்லாத நிலை BSNL வளர்ச்சியையும் சேவைத்தரத்தையும் வெகுவாக பாதிப்பதால் உடனடியாக தலையிட்டு ஆவண செய்திட இலாக்கா அமைச்சரிடம்  
நமது மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊழியர்களின் பதவி பெயர் மாற்றம் (CHANGE OF  DESIGNATION) 
செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு ஆறு மாதம் ஆகியும் அசைவற்று இருப்பதால் உடனடியாக குழுவைக்கூட்டிட நமது மத்திய சங்கம் 
BSNL நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.


 செப்டம்பர் மாத விலைவாசிக்குறியீட்டெண்   ஒரேயொரு புள்ளி மட்டும் உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
வெங்காய விலை உயர்வு கேட்டால் ஒரு கண்ணில் கண்ணீ ர்..
விலைவாசிப்புள்ளி உயர்வு கேட்டால் மறுகண்ணில் கண்ணீ ர்..

ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கான 78.2 சத IDA இணைப்பு மற்றும்  ஜூலை 2001க்கு முன் ஓய்வு பெற்ற தோழர்களின் (PENSION ANOMALY)
ஓய்வூதிய வேறுபாடு களைதல் ஆகிய பிரச்சினைகள்  
ஓய்வூதிய இலாக்காவின் பரிசீலனையில் உள்ளன. 
நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையில் 
மூத்த தோழர்கள் காத்திருக்கின்றனர்.

Monday, 4 November 2013

JCM தமிழ் மாநிலக்குழு 
AGENDA - விவாதப்பொருள் 
  • பரிவு அடிப்படை பணிக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்தல்.
  • ஒய்வூதியப்பலன்களை விரைவாக பட்டுவாடா செய்தல்.
  • தனியார் மருத்துவ சிகிச்சை பில்களை  முறையாக  பட்டுவாடா செய்தல்.
  • GPF பட்டுவாடா பிரதிமாதம் 10ந்தேதிக்குள் முறைப்படுத்துதல்.
  • வங்கிக்கடன் சம்பந்தமான  பிரச்சினைகளை சரி செய்தல்.
  • BSNL வருமானம் பெருக்கும் வழி அறிதல்.
  • BSNL அடையாளம் தாங்கிய தோள்(ல்)பைகளை ஊழியருக்கு அளித்தல்.
  • விடுமுறை  வீடுகளை - HOLIDAY HOME சென்னையில் கட்டுதல்.
  • சேவைக்குறிப்பேடு நகல் பிரதியை ஓய்வு பெறும் ஊழியருக்கு அளித்தல்.
  • CSC மற்றும் MARKETING பிரிவு ஊழியருக்கு உரிய பயிற்சி அளித்தல்.
  • EPF சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்தல்.
  • HBA பத்திரங்களை பத்திரமாக திருப்பித்தருதல்.
  • விடுபட்ட தோழர்களுக்கு SR. TOA பயிற்சி அளித்தல்.
  • சம்பள முரண்பாடு சம்பந்தபட்ட விவரங்களை விரைந்து அனுப்புதல்.
  • ஆய்வு இல்லங்களை அழகுறப் பராமரித்தல்.

Friday, 1 November 2013

தீபாளித்திருநாள்
நல்  வாழ்த்துக்கள்


நல் ஒளி பரவட்டும் ...
நன்மக்கள் சிறக்கட்டும்..
புது வழி பிறக்கட்டும்..
புத்துணர்வு பரவட்டும்...
அனைவருக்கும் 
இனிய 
தீபாவளித்திருநாள் 
வாழ்த்துக்கள்