மரித்து வரும்
மருத்துவ வசதி
காரைக்குடி SNATTA மாவட்டச்செயலர் தோழர்.செல்லப்பா TTA அவர்களது மனைவியின் பேறுகால மருத்துவபில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கப்பட்டது என்ற காரணம் காட்டி மறுக்கப்பட்டது. மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
தற்போது மருத்துவபில் பட்டுவாடா செய்ய
மாநில நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில சங்கத்திற்கு நமது நன்றிகள்..
தோழர்.செல்லப்பாவின் மருத்துவ பில்கள் போலவே பல்வேறு தோழர்களின் தனியார் மருத்துவமனை சிகிச்சை பில்கள் மாநில நிர்வாகத்தால் மறுதலிக்கப்பட்டுள்ளன. எனவே நாம் நம் தோழர்களிடம் பெரும்பாலும் தனியார் மருத்துவமனை சிகிச்சையைத்தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இந்நிலையில் நமது மாநில இளைஞரணி தோழியர். கார்த்திகா அவர்கள் அவசர நிலையில் தனது பேறுகால சிகிச்சைக்காக எங்கு செல்லலாம் என்று நம்மைக்கேட்டபோது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று ஆலோசனை கூறினோம். அதனடிப்படையில் மதுரை வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிர்வாகமும் அனுமதிக்கடிதம் வழங்கியது.
ஆனாலும் "சோதனைக்கு பணம் கட்டுங்கள்.. நாங்கள் சொல்லும் மருந்துகளை உங்கள் செலவில் வாங்கித்தாருங்கள்" என்று அவரது குடும்பத்தினரை மருத்துவமனை அலைக்கழித்து விட்டது.
ஏன் பணம் கட்ட வேண்டும் என காரணம் கேட்டபோது "BSNL நிர்வாகம் பிரசவ அறுவை சிகிச்சைக்கு 14ஆயிரம் மட்டுமே பணம் தரும். சிகிச்சைக்கு ஏறத்தாழ 60 ஆயிரம் ஆகும். எனவே மீதியை நீங்கள்தான் கட்ட வேண்டும்" என மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
BSNL நிர்வாகமும் அவர்கள் சொல்வது சரிதான் என்று தலையாட்டியது.
ஒய்வு பெற்ற அரசு ஊழியரான தோழியர். கார்த்திகாவின் தந்தையார் கேட்டார் " வெறும் 14 ஆயிரம் சலுகை தந்துவிட்டு ஊழியர்களை
50 ஆயிரம் கையில் இருந்து கட்ட வைத்த, மருந்துக்கு கூட ஊழியர் நலன் கருதாத இந்த திட்டம் உண்மையிலேயே மருத்துவ திட்டம்தானா? என்று கேள்வி எழுப்பினார். அவரது கேள்வியில் நியாயம் இருந்தது.
நமது பதிலில் மௌனம் இருந்தது.
மருத்துவ வசதி என்பது, மருத்துவப்படி என்பது
அருமைத்தோழர் குப்தா நமக்களித்த வரப்பிரசாதம்.
மருத்துவப்படி மரித்தே விட்டது.
தற்போது மருத்துவ வசதியும் படுத்த படுக்கையாய் உள்ளது.
தோழர். குப்தாவின் அருமைத்திட்டங்கள் எட்டாண்டுகளில் வைகுண்ட வைத்தியர்களால் கையாளப்பட்டு இறுதியாக கைவிடப்பட்ட திட்டங்களாகி விட்டன.
தோழியர் கார்த்திகா தொலைபேசியில் கூறினார்..
" சார்.. பிரசவ வேதனையை விட பில்வேதனை அதிகம்" என்று.
நமக்கோ அதைவிட வேதனை.
அந்த வேதனையில் கார்த்திகாவின் பையனை இன்னும்
நாம் போய் பார்க்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
No comments:
Post a Comment