Thursday, 30 October 2014

கண்ணீ ர்...
அலைகள் ஓய்வதில்லை.. 
எல்லை தாண்டி மீன் பிடித்த ஐவருக்கு தூக்கு..  
இலங்கை இனவெறி அரசின் திமிர்த்தன போக்கு..
தமிழக மீனவன்...
தண்ணீரில் பிறந்தான்...
கண்ணீரில் கரைந்தான்...

உயிரை விற்று..

வயிறை நிரப்பும் மீனவர்கள்..
வறுமை வலையில்... 

வாழ்நாள் முழுக்க சிக்கியவர்கள்...

கருவாட்டு முள்ளெடுத்து..

குழந்தைக்கு...
காது குத்தும் கடையர்கள்..

மன்னார் வளைகுடாவிலே 

இன்று மீன்கள் சிக்குவதில்லை..
தமிழக மீனவனே சிக்குகிறான்...

இந்தியனுக்கு மச்சம் இல்லை..

இந்தியப்பகுதியிலும் மச்சம் இல்லை..
இலங்கைக்குத்தான் மொத்த மச்சமும்..

மச்சத்திற்கு ஏனோ.. 

இங்கு  வர அச்சம்..
சீர் கெட்ட சிங்களன் அதையும் 
சிறை வைத்தானோ..?

வலை வீசி செல்லும் மீனவன்..

சிங்கள வலையில் வீழ்கிறான்..

வறுமைச்சிறையிலே வாடிய  மீனவன் 

கொடுமைச்சிறையிலே தவிக்கிறான்...

சிறையிலே மீனவன் துடிக்க.. 

கரையிலே குடும்பம் துடிக்கும்..

அரசியல்வாதிகள் அறிக்கை வலையை 

அள்ளி வீசுவார்கள்..
வாக்கு மீன்களை வளைக்க...

இந்தப்பாவிகளால்தான்...

கச்சத்தீவு பறிபோனது..
கூடவே எங்கள் 
தாய்மார்களின் தாலியும்..
சேர்ந்தே போனது...

அனுமன் இன்றிருந்தால்..

அறுபட்ட தாலிக்கயிறு கொண்டு 
சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைத்திருப்பான்..

நாம் சிறுநீரை..
பொழிந்து விட்டால்.. 
அமிழ்ந்து விடும் இலங்கையென..
அங்கேயே பிறந்த எங்கள் 
தாத்தா எகத்தாளம் சொல்ல கேட்டதுண்டு..

இன்றோ..

சிறுமதி   இலங்கையால்..
நம் சகோதரர்கள்..
பெருந்துயர் படும்  அவலம்..
கேட்பதற்கோ.. நாதியில்லை..

இங்கே...

கன்னடத்து அம்மாவின்.. 
சிறைவாசம் நீங்க..
கண்மூடி உயிர்விட்டான் தமிழன்...

இன்று...

சொந்தச் சகோதரன் சாதல் கண்டும்..
சிந்தை மரத்து...
செம்மை மறந்து வாழ்கிறான்..

இம் என்ற இந்தியாவின் 

ஒரு சொல்லில்..
இடிந்து விடும்  இலங்கை..
சொல்வார்களா? என்பதுதான் கேள்வி..

இங்கே...
கங்கையை தூய்மைப்படுத்துகிறார்கள்..
கங்கை மைந்தர்களை 
துயரப்படுத்துகிறார்கள்..

இந்த..

தேசத்தைக்கண்ணுறும்போது...
"தாயைக்கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்..
வாயைத்திறந்து சும்மா.. கிளியே... 
வந்தே மாதரமென்பார்.."
என்னும் பாரதியின் வரிகளே 
நினைவுக்கு வருகின்றன....

No comments:

Post a Comment