Saturday, 14 November 2015

தீபாவளி வலமும்... 
தீராத அவலமும்...

                                  தீபாவளி அன்று தோழர்களை, நண்பர்களை, உறவுகளைச் சந்திப்பது என்பது மிகவும் மகிழ்வு தருவதாகும். அன்று அதிகாலை பெட்ரோல் பங்கில்  பணி புரியும் தோழர்.சுப்பையாவை சந்தித்தோம். போனஸ் வாங்கியாகிவிட்டதா? என்று கேட்ட போது..  "ஆமாம் தோழர். நேற்றுத்தான் 6000 ரூபாய் கொடுத்தார்கள்.. இது INDIAN OIL நடத்தும் பெட்ரோல் பங்க். எனவே ஒரு மாத சம்பளமான 5500 உடன் இனிப்புக்கு 500 சேர்த்து 6000 போனசாக கொடுத்தார்கள்" என்றார்.  பெட்ரோலை விட வேகமாக மகிழ்ச்சி மனதில் பற்றியது.  அதன் பின் டீக்கடைப்பக்கம்  சென்றோம்.

டீக்கடையில் வேலை செய்யும் தோழர்.காளியப்பன்  3000 ரூபாய் போனசும், 1 கிலோ இனிப்பும் கிடைத்ததாக சொன்னார். செய்தியும் இனித்தது.. டீயும் இனித்தது.

மளிகைக்கடையில் பணிபுரியும் தோழர்.இராமுவை  பேருந்து நிலையம் அருகில்  சந்தித்தோம். 3500 போனசோடு புதுத்துணியும் பெற்றுக்கொண்டு ஊருக்கு செல்வதாகக் கூறினார். மளிகை மல்லிகையாய் மணத்தது.  

அந்தவாக்கிலேயே.. சினிமாக்கொட்டகையில் பணி புரியும் தோழர்களை பார்க்க நேரிட்டது. ஒரு மாத சம்பளத்தை அதாவது 5000 போனசாகக் கிடைத்ததாக மகிழ்ந்தார்கள். நல்ல சினிமா பார்த்த மாதிரி இருந்தது.

நகராட்சியில் பணி புரியும் துப்புரவுத்தொழிலாளர்களை சந்தித்து கைகுலுக்கினோம். போனஸ் என்னாச்சு? என்றபோது.. குத்தகைக்காரனுக்கு கமிசன் கட்டுபடியாகவில்லையாம்.. ஆனாலும் ஆளுக்கு 3000 முன்பணம் தந்து விட்டதாகவும்.. அதை மாதாமாதம் 500 வீதம் பிடித்தம் செய்து கொள்வதாகவும் கூறினார்கள்.  நகராட்சி என்றாலே குப்பைதான்.. இருந்தாலும் பரவாயில்லை.. குப்பையிலும் குண்டுமணி...

நகராட்சிக்கு எதிரேதான் நமது அலுவலகமாயிற்றே..  செல்லும் வழியிலேயே காலணி சீர் செய்யும் தோழர்.முத்தப்பனைப்  பார்த்தோம். வாழ்த்து சொல்லி விட்டு  100 ரூபாயை  அன்பின் அடையாளமாய் கொடுத்தோம். வேண்டாம் என்று மறுத்தார். பாக்கெட்டில் வைத்து விட்டு பறந்து சென்றோம் நமது அலுவலகத்திற்கு. 

நமது அலுவலகத்திலே கருத்த உருவமும்.. கசங்கிய உடையுமாய் நமது ஒப்பந்த ஊழியர் நின்றிருந்தார். மத்தாப்பாய் மனசுக்குள் இவ்வளவு நேரம் பொங்கிய மகிழ்ச்சி... அவரைப் பார்த்ததும் புஸ்வாணமாய் போய் விட்டது. 

நமக்கே தெரியும் எந்த குத்தகைக்காரனும் ஒப்பந்த ஊழியருக்காக ஒத்தைப்பைசா கூட இந்த ஆண்டு போனசாக தரவில்லை என்பது.  "என்ன தோழர் குத்தகைக்காரன்தான் போனஸ் தரவில்லை... உங்களிடம் வேலை வாங்குபவர்களாவது ஏதேனும் கொடுத்தார்களா? என்று கேட்டோம். "சார்.. நாயாக நாங்கள் இங்கே வேலை பார்க்கிறோம்.. ஆனால் நாய்க்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இங்கில்லை" என்று வேதனையுடன் சொன்னார்.

மேலும்.." போனஸ் தான் கொடுக்கவில்லை...இந்த மாதம் சம்பளத்தையும் குறைத்து விட்டார்கள்.. சார்.. காந்தி பிறந்த நாளுக்கு கூட சம்பளம் தரவில்லை. இந்த மாதம் உயர்ந்துள்ள DA கூடப்போடவில்லை.  இருபது நாள் சம்பளம்தான் தந்துள்ளார்கள். ஒப்பந்தக்காரரிடம் கேட்டால் எங்களிடம் எதுவும் கேட்காதே.. கணக்கு அதிகாரிகளைப் போய்க்கேள்.. அவர்கள் என்ன சொல்கிறார்களோ... அதைத்தான் நாங்கள் போட முடியும். இல்லையென்றால் எங்கள் பில்லை சுழித்து விடுவார்கள்" என்று சலிப்புடன் கூறுகிறார். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை".. என்று கண் கலங்கினார்.

"ஆத்திரமும்..ஆங்காரமும் அணுகுண்டாய் நம் மனசுக்குள் வெடித்தது. " 
"கவலைப்படாதீர்கள்..காலம் இப்படியே போகாது.. நிச்சயம் மாறும்.. மாற்றுவோம்"  என்று சொல்லி விட்டு இருநூறு ரூபாயை அவரிடம் கொடுத்து விட்டு.. கறி வாங்க மறந்து விட்டு.. கனத்த மனதுடன்  வீடு சென்றோம்.

தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கச்சொல்லி...
அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி தரச்சொல்லி...
EPF...ESI.. நலத்திட்டங்களை அமுல்படுத்தச்சொல்லி...  
துணைப்பொதுமேலாளர் நிர்வாகத்தைப் பலப்பல முறை 
BSNLEU மற்றும் NFTE   மாவட்டச்செயலர்கள் 
கூட்டாகச்  சென்று விவாதித்தோம்... தோம்..தோம்..

காளை மாட்டில் பால் கறக்கவும்...
கல்லில் நார் உரிக்கவும்....
எங்களால் முடியவில்லை...

இம்முறை கணக்கு அதிகாரிகளிடம் விவாதிக்க மனமில்லை...
காரணம்.. அவர்கள் கணக்குப் போட்டு... கணக்காய்ப் போட்டு.. 
காரியத்தைக் கச்சிதமாக திசைதிருப்பிக் கவிழ்த்து   விடுவார்கள்...

வேறு என்னதான் செய்வது?
கண்ணிருந்தும்.. கொடுமையைக் கண்டிருந்தும்..
உயர்த்தக்கரம் இருந்தும்... உரிமை கேட்க  குரல் இருந்தும்.. 
நாம் வாளா இருப்போமா?
சட்டங்களும்.. விதிகளும் 
உழைப்பாளிகளுக்கு சாதகமாக இருந்தும்.. 
அதை சட்டை செய்யாமல் இருப்பதுதான் நிர்வாகமா?
ஒப்பந்த ஊழியர்கள் ..
ஆகப்பெரும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தாலும்..
அன்றாட வாழ்வுக்கே அல்லல்பட்டு... துன்பப்பட வேண்டுமா?
அதிகாரிகளின் அலட்சியத்தால்... அவர்கள் வாழ்வு அழியவேண்டுமா

இல்லை... தோழர்களே.. இல்லை...
மாபெரும் தலைவர்கள் உயர்த்திப்பிடித்த 
செங்கொடியோடு.. இதோ.. போர்க்கொடியையும்..
இன்று நாம்  உயர்த்தி விட்டோம்..


விழியற்றவர்களுக்கு... ஒளியேற்றிய...
NFTE சம்மேளன தினத்தன்று 
24/11/2015..  காரைக்குடியில்...
அருமைத்தோழர்.
ஆர்.கே.,
அவர்கள் தலைமையில் 
உறிஞ்சப்படும் தொழிலாளரின்
 உரிமை மீட்பு உண்ணாவிரதம்...

அடிமட்ட ஊழியரின்.. இன்னல் களைந்திட..
அண்ணல் வழியில்.. அறவழியில்.. போராடுவோம்...
கோப வெள்ளமாய்ப் பொங்கி வாரீர்.. தோழர்களே...

1 comment:

  1. நல்ல முடிவை நாள் பார்த்து எடுத்தீர். வெல்லட்டும் போராட்டம்.
    அநீதிகள் அழியட்டும்.
    வாழ்த்துக்கள்.
    குமார் ஈரோடு

    ReplyDelete