Thursday 10 November 2016

செல்லா நோட்டு 

75 வயதைத் தாண்டிய பெரியவர் அவர்...
எங்கேனும் பார்த்தால் புன்னகைத்துக்கொள்வோம்...

நடக்க முடியாத... கண்பார்வை சரியில்லாத 
தன் மனைவியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்...
பெற்ற பிள்ளைகள் உற்ற பிள்ளைகளாக இல்லாததால்...
மற்ற.. மற்ற.. மனிதர்களை நம்பி வாழ்நாளைக் கடத்துகிறார்...

அன்று... நாடே அல்லோகலம்...
500 செல்லாது... 1000மும் செல்லாது...
அன்றைய அந்தி மயங்கும் வேளை...
கடைத்தெருவில் பெரியவர் தென்பட்டார்...
நமது கைகளைப் பற்றிக்கொண்டு 
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றார்...
அவரது கைகளில் நடுக்கம் இருந்தது... இறுக்கமும் இருந்தது...

தேநீர் அருந்துவோம் என்றேன்...
உடனடியாகத் தலையாட்டினார்...
நல்லவேளை... 
எனது கடைசி  100 ரூபாயில் காந்திமகான்...
தான் செல்லாமல் போன விவரம் தெரியாமல் 
வழக்கம் போல் சிரித்துக்கொண்டிருந்தார்...

தேநீர் அருந்தியபின் பெரியவர் சொன்னார்...
ரொம்ப நன்றி தம்பி...
காலையில் இருந்து நானும் என் மனைவியும் பட்டினி...
கண் பார்வை சரியாக இல்லாததால் அவளால் சமைக்க முடியாது...
ஓட்டல்களில் அவ்வப்போது ஏதேனும் வாங்கி உண்போம்...
இன்றைக்கு 500... 1000 செல்லாது என்று கேள்விப்பட்டேன் 
என்று சொல்லும் போதே அவர் கண்ணில் இருந்து 
கண்ணீர் அந்தக்காலத்துக் காவிரியாய்க் கொட்டியது...

எங்கள்  இருவரின் ஈமக்கிரியைக்காக...
நாற்பதாயிரம் ரூபாய் 500... 1000 நோட்டுகளாக வைத்துள்ளேன்...
அவையெல்லாம் செல்லாது என்று கேள்விப்பட்டவுடன் 
என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை...என்று விம்மினார்...
ஓட்டலில் உணவு வாங்கக் கூட பணமில்லை என்று புலம்பினார்...

அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு 
உங்களது பணத்தை நான் 100 ரூபாய் நோட்டுக்களாக 
மாற்றித் தருகிறேன்... கலக்கம் வேண்டாம் என்று கூறியபின்தான்...
அவரது முகத்தில் கவலை மேகம் சற்றே விலகியது...
மறுநாள் பத்து 100 ரூபாய் தாள்களை அவரிடம் நீட்டியபோது...
உலகத்தை வென்ற நிம்மதி அவரிடம் தெரிந்தது....

அவரிடம் இருந்து விடை பெறும்போது...
அவர் கேட்டார் " தம்பி... இதெல்லாம் நியாயமா?'
இதைச் செய்தவங்க நல்லா இருப்பாங்களா?
முதலையைப் பிடிக்கப் போறோம் என்று சொல்லி 
எங்களைைப் போன்ற தவளைகளைக்  கொல்வதா?

அதே கேள்வியைத்தான்...
இந்த நாட்டுப்பிரதமரிடம் நாமும் கேட்கிறோம்...

SURGICAL... 
வயித்துவலியைத் தீர்க்கலாம்...
வயித்துப்பசியை...?

1 comment:

  1. தங்களது கனிவான நற்செயலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete