Sunday, 21 July 2013

EPF & MISC. PROVISIONS ACT - 1952
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் பல்வகைச்சட்டம் 

சில துளிகள்..
மேற்கண்ட சட்டத்தின் கீழ் 3 திட்டங்கள் உள்ளன.
1. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் - EPF - 1952
2. தொழிலாளர் ஓய்வூதியத்திட்டம் - EPS - 1995
3. தொழிலாளர் ஈட்டுறுதிக்காப்பீட்டுதிட்டம் - EDLI 1976

1. வருங்கால வைப்புநிதி திட்டம் - EPF - 1952
ஒவ்வொரு தொழிலாளியும் தனது அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதம் மாத சந்தாவாக செலுத்த வேண்டும். நிர்வாகம் அதே அளவு தனது பங்காக செலுத்தும்.
உடல் ஊனமுற்ற ஊழியருக்கான நிர்வாகப்பங்கை 
முதல் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசே செலுத்தி விடும்.
வீட்டு மனை,வீடு  வாங்க, பிள்ளைகளின் திருமணம் மற்றும் படிப்புச்செலவு மற்றும் மருத்துவசெலவுகளுக்காக 
முன்பணம் பெற்றுக்கொள்ளலாம்.
ஊழியர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு பணம் வழங்கப்படும்.
ஓவ்வொரு ஆண்டின் கணக்கை அடுத்த ஆண்டின் செப்டம்பருக்குள் ஊழியர்கள் தங்களது நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. ஓய்வூதியத்திட்டம் - EPS - 1995
இதற்கென ஊழியர்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை. நிறுவனங்கள் செலுத்தும் பங்கில் 8.33 சதம் இந்த நிதிக்கு அளிக்கப்படும்.
நிறுவனங்கள் ஓய்வூதிய பங்களிப்பை செலுத்தாத போதிலும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
10 வருட பணிக்காலத்திற்குப் பின் ஓய்வூதியம் பெறும் தகுதி உண்டு.
58 வயதுக்குப்பின் ஓய்வூதியம் வழங்கப்படும்.
பணியில் இருந்து முன்கூட்டியே விலகினால் 
50 வயதுக்குப்பின் வழங்கப்படும்.
தொழிலாளி ஊனமடைந்து விலகினால் ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஊழியர்கள் பணியில் இருக்கும் போதோ அல்லது ஓய்வு பெற்ற பின்னரோ இறக்க நேரிட்டால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். 
கணவன் மற்றும் மனைவி இருவரும் இறந்து விட்டால் 25 வயது வரை குழந்தைகளுக்கு வழங்கப்படும். 
உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இறுதி வரை வழங்கப்படும்.
கணவனோ மனைவியோ மறுமணம் செய்து கொண்டால் குழந்தைகளுக்கு அநாதை ஓய்வூதியம் வழங்கப்படும்.
தொழிலாளி மணம் முடிக்காதவராக இருந்தால்
அவரது தந்தை அல்லது தாய்க்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வு பெறும்போது மூன்றில் ஒரு பங்கு தொகையை 
முன்கூட்டியே பெறலாம். (COMMUTATION)
ஓய்வூதியம் கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகின்றது.

கடைசி 12 மாதங்களில் பெற்ற சம்பளம்  X  உறுப்பினர் பணிக்காலம் 
-----------------------------------------------------------------------------------------------
70

3. ஈட்டுறுதிக்காப்பீட்டுதிட்டம் - EDLI 1976
இத்திட்டத்திற்கு ஊழியர்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை. நிறுவனங்கள் தொழிலாளியின் மொத்த ஊதியத்தில் 
0.5 சதத்தை தங்களது பங்காக செலுத்தும்.
தொழிலாளர் பணியில் இருக்கும் போது மரணமடைந்தால் அவரது வாரிசுகளுக்கு ரூ. 60,000 வரை ஈட்டுத்தொகை வழங்கப்படும்.

தோழர்களே..
மேற்கண்ட திட்டங்கள் 
BSNLலில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் 
இங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்.
நிரந்த ஊழியர்களுக்கு BSNL தன் பங்கை செலுத்துகின்றது.  
ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு குத்தகைக்காரர்கள் EPF பணத்தை செலுத்துவதில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கின்றார்கள். 
மேற்கண்ட சலுகைகள் எல்லாம் 
தொழிலாளி வர்க்கம் போராடிப் போராடி பெற்றவை. 
அது உரியவருக்கு கிடைக்க 
நமது முன்னணித் தோழர்கள் பாடுபட வேண்டும்.

No comments:

Post a Comment