தீராப் பிரச்சினைகள் தீருமா..?
இன்று 23/06/2015 சென்னையில் JCM மாநிலக்குழுக்கூட்டம் நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் பல்வேறு பிரச்சினைகள் மாநில மட்டத்தில் தேங்கிக்கிடக்கின்றன.
மருத்துவபில்கள் மனிதாபிமானமின்றி மறுக்கப்படுகின்றன.
குறிப்பாக அவசர காலங்களில் தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட சிகிச்சைக்கான பில்கள் கண்மூடித்தனமாக மறுக்கப்படுகின்றது. விபத்து நேரங்களில் 108 போன்ற அவசர சிகிச்சை ஊர்தியைப்பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிகிச்சைக்கான பில்கள் கூட மறுக்கப்படுவது மிகவும் வேதனையானது.
ஓய்வு பெறும் தோழர்களுக்கு வழங்கப்படும் விடுப்புச்சம்பளம்
விடுபட்ட சம்பளமாக மாறிவிட்டது. ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றவர்
ஜூன் மாதத்தில்தான் விடுப்புச்சம்பளம் பெறும் நிலை. மரணமுற்ற தோழர்களுக்கு அவர்களின் ஆண்டு நினைவஞ்சலியையொட்டித்தான் விடுப்புச்சம்பளம் வழங்கப்படுகிறது.
SUPPLEMENTARY BILLS இடைப்பட்ட காலங்களில் பில்கள் பட்டுவாடா என்பது தற்போது செய்யப்படுவதில்லை. மாதக்கடைசியில் ஒரேயொரு பில் என்பது மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றது.
முன்பணம் என்பது தற்போது மறுக்கப்படுகின்றது. LTCக்கும் முன்பணம் கிடையாது. LTC பில்களை எப்படி ESS சேவையில் ஏற்றுவது என்பது கூட நமது அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பிடிபடவில்லை.
காசாளர் பணி செய்யும் தோழர்களுக்கு CONVEYANCE ALLOWANCE அலைச்சல்படியை எப்படி வழங்குவது என்பது அதிகாரிகளுக்குப் புரியவில்லை. ESS சேவையில் இதற்கான வழிமுறைகளும் இல்லை.
எல்லாம் கணிணிமயம் என்று கூறிவிட்டு விழாக்கால முன்பணம் எப்போதும் போல காகிதத்திலேயே கொண்டாடப்படுகின்றது.
GPF கணக்கில் எப்போதும் குளறுபடிதான். GPF முன்பணம் பெற்றவர்கள் அதை முன்கூட்டியே திருப்பிச்செலுத்த தயவு செய்து முயற்சி செய்ய வேண்டாம். காசாளரிடம் நீங்கள் கட்டிய பணம் ERP கணக்கில் உங்களின் அடுத்த பிறவியில்தான் ஏற்றப்படும். அதுவரை உங்களது பிடித்தமும் தொடரும். சேவை முடிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு
அவர்கள் ஓய்வு பெறும் அன்று உரிய வட்டியுடன் கூடிய GPF மொத்தத்தொகை காட்டப்படுவதில்லை.
ERP யில் தனிநபர் விவரங்கள் தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளன.
மனைவி பெயர் மாற்றம், குழந்தைகள் காணாமல் போவது,
தந்தைக்கு முன் பிள்ளைகள் பிறந்திருப்பது, குழந்தைகளுக்கு நாம் ஒரு பெயர் வைத்தால் இவர்கள் தனியாக ஒரு பெயர் வைப்பது, நாம் இதுவரை பணி புரிந்த இடங்கள், அடைந்த பதவி உயர்வுகள், பணி புரிந்த பதவிகள் என எதுவுமே உருப்படியாய் இல்லை. இருக்கின்ற விவரங்களும்
2099ம் ஆண்டு வரை என்று உள்ளது. அதற்குப்பின் உலகம் இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிவிட்டார்கள் போலும்.
விடுப்பு விவரங்கள் இன்னும் மோசம். பலருக்கு அரைச்சம்பள விடுப்பு கணக்கு விவரங்கள் இல்லை. சிலருக்கு விடுப்பு விவரங்களே இல்லை. LTC எடுத்த காலங்களில் அனுபவித்த LEAVE ENCASHMENT விவரங்கள் ERPயில் இல்லை. அவர்கள் பணி ஓய்வு பெறும்போது இது கழிக்கப்படுமா.. இல்லையா என்ற விவரங்களும் இல்லை.
எல்லாமே இங்கே குருட்டாம்போக்குத்தான்.
ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்ட தோழர்களின் நிலை மோசமோ மோசம். அவர்களது ஒழுங்கு நடவடிக்கை உரிய காலத்தில் தீர்க்கப்படாது. அவர்களின் ERP சேவைக்குறிப்பில் எந்த விவரங்களும் இருக்காது. தற்காலிகப் பணி நீக்க காலம் முறைப்படுத்தப்படாது.
அவர்களின் பதவி உயர்வுகள் அதோ கதிதான்.
ஓய்வு பெறும்போது பெரும் துயரந்தான்.
ஊழியர்கள் சேவை மோசம் என்றால் இலாக்கா சேவை இன்னும் மோசம். பல இடங்களில் நமது செல்சேவை மிக மிக மோசம்.
குறிப்பாக நமது பொதுமேலாளர் அலுவலகங்களில் நமது செல் தொடர்ந்து வேலை செய்வதில்லை நம்மைப்போலவே...
மக்கள் திரளாக கூடும் இடங்கள்.. அரசு அலுவலகங்கள்,
கல்லூரி வளாகங்கள்,சுற்றுலாத்தலங்கள்
ஆகிய இடங்களில் நாம் நமது தரம் குறைந்த சேவையால்
கடுமையாக விமர்சிக்கப்படுகின்றோம்.
இலவச இரவு நேர அழைப்புக்களை பற்றி பொதுமக்களிடம் கொண்டு செல்ல நமது கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. பொதுமக்களும் புதிய இணைப்பு பெற தயாராக உள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கும் இடங்களில் நம்மால் புதிய இணைப்பு கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இன்னும் காசு வாங்கிக்கொண்டு CONNECTION கொடுக்கும் கயமை பல இடங்களில் காணப்படுகின்றது.
இவையெல்லாம் ஒரு சில துளிகள்தான்..
மாவட்டந்தோறும் எத்தனையோ பிரச்சினைகள்
மானாவாரியாக தலைவிரித்து ஆடுகின்றன..
இவையெல்லாம் தீராத.. பிரச்சினைகள்...
தீருமா? தேறுமா? என்பதுதான் நமது எதிர்பார்ப்பு....
JCM குழுக்கூட்டங்களில்..
NFTE, BSNLEU இரண்டு சங்கங்களும்
இணைந்து பங்கு பெறுவதால்
பிரச்சினைகள் தீர்வு பெருமளவு இருக்கும்..
இருக்க வேண்டும்...
என்பதுவே ஊழியர் எதிர்பார்ப்பு.