Sunday 18 September 2016

68.. போராட்டமல்ல... போர்க்களம்...

68... நினைவலைகள்...

2016 செப்டம்பர் 2 உலகின் மாபெரும் வேலை நிறுத்தத்தை 
இந்தியத் தொழிலாளி வர்க்கம் நிகழ்த்திக் காட்டியது. 
அமைப்புச்சார்ந்த துறைகளில் NO WORK NO PAY  என்பதின் 
அடிப்படையில் ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பள வெட்டு. 
நாடு முழுவதும் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 
கைது செய்யப்பட்டு மாலையில்  விடுவிக்கப்பட்டனர். 
நாட்டின் பிரதம மந்திரியோ வழக்கம் போல் சூட்கேசுடன் வியட்நாம் சென்று விட்டார். மத்திய அரசோ... மாநில அரசுகளோ  
ஊழியர்களின் போராட்டம் பற்றி  அலட்டிக்கொள்ளவில்லை. 
மேற்கு வங்கத்தில் மட்டும் மம்தா எதிர் நிலை எடுத்தார். 
இதுதான் இன்றைய வேலை நிறுத்தக் காட்சி.

ஆனால் 48 ஆண்டுகளுக்கு முன்...
1968ல் நிலைமை இதற்கு நேர்மாறாக இருந்தது. 
குறைந்த பட்ச சம்பளம், பஞ்சப்படி கணக்கீடு, பஞ்சப்படி இணைப்பு 
என்ற  முக்கிய கோரிக்கைகளை ஊழியர் தரப்பு JCMல் எழுப்பியது. 
இந்த கோரிக்கைகளை அரசு மறுத்ததால் 
ஊழியர் தரப்பு போராட்டத்திற்கு தள்ளப்பட்டது.  

அன்றைய காங்கிரஸ் அரசு இதை அரசியல் பிரச்சினையாகப் பார்த்தது. தொழிற்சங்கங்கள் இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இந்தப்போராட்டம் அரசின் மேல் தொடுக்கப்பட்ட இடதுசாரிகளின் தாக்குதலாகவே அரசு கருதியது. அனைத்து அடக்குமுறை சட்டங்களும் அவிழ்த்து விடப்பட்டன.  சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மத்திய அரசின் ரிசர்வ் போலிஸ் படை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.  அப்போதைய கேரள மற்றும் மேற்கு வங்க அரசுகள் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. 

கேரளாவில் சட்டம் ஒழுங்கு அமைதியாக உள்ளதாக அன்றைய முதலமைச்சர் தோழர். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அறிவித்தார். ஆனாலும் அன்றைய உள்துறை அமைச்சர் சவான் இந்தக் கருத்தை ஏற்காமல் படைகளை அனுப்பி வைத்தார்.  போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து  இந்திய தேசத்தின் 
அனைத்து மொழிகளிலும் நோட்டீஸ் அடிக்கப்பட்டு 
ஊழியர்களின் கைகளில் வழங்கப்பட்டது. 

வேலை நிறுத்தத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய செயல்கள் வேலை நிறுத்தத்தை வீறு கொண்டு எழச்செய்தது. ஊழியர்களின் வீடு தேடி போலிஸ் சென்றது. எனவே  போராட்டத்திற்கு முதல் நாள் 
திருமண மண்டபங்களில் ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டனர். 

செப்டம்பர் 19 அன்று டெல்லியில் மட்டும் 
20000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் இன்னுயிர் நீத்தனர். 
 8000 பேர் கைது செய்து அடைக்கப்பட்டனர். 
3000 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 
பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 
CASUAL ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 
ஆயிரக்கணக்கான தோழர்களுக்கு சேவை முறிவு வழங்கப்பட்டது. 
பலர் தொலைதூரங்களுக்கு மாற்றி அடிக்கப்பட்டனர். 
சிலர் பதவி இறக்கம் செய்யப்பட்டனர்.  
தோழர் ஜெகன் பணி நீக்கம் செய்யப்பட்டார். 
அவர்தான் பணி  நீக்கம் செய்யப்பட்ட ஒரே மாநிலச்செயலர்.
தோழர்கள் ஞானையா, குப்தா மற்றும் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிற்சங்க அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

இத்தனை அடக்கு முறை இருந்தும் 68ல்... 
மத்திய அரசு ஊழியர்கள்  வீரமுடன் தீரமுடன் போராடினர்.

1968 போராட்டமல்ல... 
மத்திய அரசு ஊழியர்களின் போர்க்களம்...
அந்த தியாகிகளுக்கு நமது வணக்கத்தைச் செலுத்துவோம்...

தோழர்.மாலி... ஈரோடு...

No comments:

Post a Comment