Friday 2 August 2019


உ ண வே   ம த ம்... 

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்...
என பாரதி பாடி ஆண்டுகள் பல ஆகிவிட்டன...
ஆயினும் நிலை கெட்ட மனிதர்கள் குறைந்தபாடில்லை..
மனிதர்கள் நிலை கெட்டு... ஆள்பவர்கள் நிலைகெட்டு...
தேசமும் நிலைகெட்ட கொடுமையே இன்று நிலவுகிறது.

அத்தகைய நிலைகெட்ட நிகழ்வுதான்
மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் நகரில் நடந்தேறியுள்ளது.

உணவுகளை இருப்பிடம் வரவழைத்து 
உண்பது இன்றைய நாகரிகம்.
ஜபல்பூர் நகரில் அமித் சுக்லா என்பவர் 
ZOMATO என்னும் உணவு நிலையத்தில் 
உணவு கேட்டு இணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

உணவை வீடு தேடி வந்து கொடுக்க வந்த ஊழியர் 
இந்து அல்லாதவர் என்ற காரணத்தால் 
உணவை வாங்க மறுத்த அமித் சுக்லா உணவை இந்துப்பணியாளர்களிடம் கொடுத்து விட
ZOMATO நிறுவனத்தைக் கேட்டுள்ளார். 

ஆனால் அமித்சுக்லாவின் 
இந்த மனிதநேயமற்ற வேண்டுகோளை 
ZOMATO நிறுவனம் அடியோடு மறுத்துவிட்டது. 

தனது Twitter பக்கத்தில்...
Food doesn’t have a religion.
It is a religion.
உணவுக்கு மதமில்லை...
உணவே மதம்.... 
என்று அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய CORPORATE உலகில் வாடிக்கையாளர்கள் 
கேட்பதைக் கொடுப்பதே தொழில் உத்தியாகும். 
ஆனால் இந்த தேசத்தின் ஆன்மாவாகிய 
எம்மதமும் சம்மதம் என்னும் 
நல்லிணக்க உணர்வின் அடிப்படையில் செயல்பட்ட 
ZOMATO நிறுவனத்தைப் பாராட்டுவோம். 
இன்று ZOMATO நிறுவனம் 
இந்த ஒரு நிகழ்வால் மிகப்பிரபலம் அடைந்து விட்டது. 
இது கூட ஒரு வணிக உத்தியாக இருக்கலாம். ஆனாலும் நாம் பாராட்டியே தீர வேண்டும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என வள்ளுவர்
சமத்துவத்தின் குறியீடாக உணவைக் குறிப்பிட்டார். 
ஆனால் உணவைக் கொண்டு வருபவனிடம் கூட 
மதத்தைப் பார்க்கும்...
மதம் பிடித்த நிலை மிக்க வருத்தத்திற்குரியது.
  
உணவை கொண்டு வந்தவன் யார்...
உணவைத் தயாரித்தவன் யார்...
உணவை உற்பத்தி செய்தவன் யார்..
என தேடுதல் நடத்தினால் 
இந்துக்கள் மட்டுமே 
இதில் பங்குதாரர்களாக இருக்க முடியுமா?
அப்படிப் பார்த்தால்...
உணவை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும்
வாகனத்தில் போடப்படும் பெட்ரோல்
இராமர் பிறந்த அயோத்தியில் எடுக்கப்பட்டதா?
அது இந்துக்கள் அல்லாத 
அரபுநாட்டில் இருந்து வருவதல்லவா?

எங்கே போகிறது நம் தேசம்...
இது தொடர்ந்தால் தேசம் முழு நாசம்...

No comments:

Post a Comment