Tuesday, 17 September 2013

கடன் பட்டார் நெஞ்சம்

பாரத வங்கியுடன் BSNL ஊழியர்களுக்கு கடன் வழங்குவதற்கான
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்ற செய்தியைப் படித்தவுடன் மனதில் பல்வேறு கவலைப்படிவங்கள் தோன்றிவிட்டன.

நேற்றிருந்தார் இன்று இல்லை..
இன்றிருப்பார் நாளை இல்லை..
என உலக நிலையாமையை பெரியோர் படம் பிடிப்பர்.

நிரந்தரமற்ற உலகில் நமது நிகழ்ச்சி நிரலில்
அஞ்சலிக்கு  நிரந்தர இடம் எப்போதும் உண்டு.
பல தோழர்கள் பணியில் இருக்கும்போதே
உடல் நலிந்து உயிர் துறக்கின்றனர்.
சிலர் சோமபான சுரபான வசப்பட்டு
இறுதியில் எமதர்மன் வசம் படுகின்றனர்.

பிரச்சினை என்னவெனில்
வாழ்வை பாதியிலே முடித்துகொள்ளும் பல தோழர்கள்
முழு கடனாளியாகவே மறைந்து விடுகின்றனர்.
வங்கியில் கடன்    
சொசைட்டியில் கடன்    
இலாக்காவில் பல்வேறு கடன் என கடன்காரன்களாகவே  
இவர்களது  வாழ்வு இங்கு முடிந்து விடுகின்றது.

தோழர். ஜேசுதாஸ் TM ஆக 
காரைக்குடி GM அலுவலகத்தில் பணி புரிந்தான்.
சொந்தமாக வீட்டை எழுப்பினான்.  வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவருக்குப்பதிலாக கடன் சுவரையே கட்டினான்.
கடன்காரர்கள் காலமெல்லாம் அவனை துரத்தினார்கள்.
கடைசியில் காலன் கையில்  அவன் மாட்டிக்கொண்டான்.

மறைந்த தோழர். ஜேசுதாசுக்கு கல்லூரியில் படிக்கும் 2 பெண் பிள்ளைகள்.
இலாக்காவில் கடன் வாங்கி கட்டிய வீடு. இன்னும் 2 லட்சம் பாக்கி.
சென்னை சொசைட்டியில் 4 லட்சம் கடன்..
வங்கியில் 3 லட்சம்  கடன்...
கந்து வட்டிகாரர்களிடம் ஏறத்தாழ 4 லட்சம் கடன்..
குடும்ப  ஓய்வூதிய பலன்கள் 
அனைத்தையும் கொடுத்தாலும் கூட கடன் அடைபடாத சூழல்..

இங்குதான் நமது கோரிக்கை எழுகின்றது..
வங்கியில் 50 ஆயிரத்துக்கு மேல் கடன் பெறுவோர் INSURANCE காப்பீடு செய்ய வழிவகை உண்டு. கடன் பெற்றவர் இறந்து விட்டால் காப்பீட்டுத்தொகையிலிருந்து அவரது கடன் பட்டுவாடா செய்யப்படும். ஏறத்தாழ ஒருலட்ச ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவிலேயே காப்பீட்டு தொகை உள்ளது. வங்கிகளுடன் புரிந்துணர்வு போடும்போது கட்டாயமாக காப்பீட்டையும் செய்து விட்டால் ஊழியர்கள் அகால மரணமடையும் போது வங்கிக்கடன் எளிதாக அடைபட்டு விடும். ஆனால் நாம் இந்த காப்பீட்டை செய்வதில்லை என்பதுதான் வருத்தமான செய்தி.

தற்போது 
அதிகாரிகளுக்கு 3 லட்சம், 
தொழிலாளருக்கு 1 லட்சம் என்ற அளவில் 
LIC மூலம் காப்பீட்டு திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இன்றைய நிலையில் சராசரியாக மொத்த சம்பளம் 30 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது. வெறும் 105 ரூபாய் பிடித்தம் செய்து ஒரு லட்சம் காப்பீடு தருவதை விட 315 ரூபாய் பிடித்தம் செய்து ஊழியருக்கும் 3 லட்சம் இழப்பீடு தரலாம். மொத்த சம்பளத்தில் ஒரு சதம் காப்பீட்டு தொகையாக தாரளமாக ஊழியர்கள் செலுத்தலாம்.

சென்னை கூட்டுறவு சங்கத்தில் 
தற்போது 4 லட்சம் கடனும் அதற்கு 3 லட்சம் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது. மற்ற சொசைட்டிகளில் இது குறைவு.
கூட்டுறவு சங்கங்கள் தாங்கள் வழங்கும் கடன் தொகைக்கு ஏற்ப காப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கடன் தொகை காப்பீட்டு தொகையிலேயே சரிசெய்யப்படும்.

நமது இலாக்காவில் தற்போது வீட்டுக்கடன் வழங்குவதில்லை. 
ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியோர் இறந்து விட்டால் அவர்களது ஓய்வூதிய பலனிலேயே கடன் பிடித்தம் செய்யப்படுகின்றது. இறுதியில் கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி என்ற கதையாய் 
இறந்தவன் குடும்பத்திற்கு கையில் ஏதும் கிடைக்காது.. 
இலாக்கா வீட்டு கடனுக்காக காப்பீடு செய்திருந்தால் அந்த கடனும் அடைபட ஏதுவாகும். 

வங்கிக்கடனும் அடைபட்டு 
கூட்டுறவுக்கடனும் அடைபட்டு 
இலாக்கா கடனும் அடைபட்டால் தான் 
இறந்தவர் குடும்பம் கந்து வட்டியையும் 
அதன்பின் பிள்ளைகுட்டியையும்  கவனிக்க முடியும்..

மேலை நாடுகளில் உச்சி முதல் உள்ளங்கால் வரை காப்பீடு உண்டு. 
இங்கோ காப்பீட்டறிவு கம்மியாகவே உள்ளது.
ஒரு தொழிலாளி திடிரென மரணம் அடையும் போது அவன் பட்ட கடனை அடைப்பதற்கே அந்த குடும்பம் திண்டாடி போகின்றது.
எனவே நமது கோரிக்கை...
தொழிற்சங்க தலைவர்கள் 
காப்பீடு என்னும் அவசியத்தை  கணக்கில் எடுக்க வேண்டும். 
கடனுக்கு புரிந்துணர்வு போடுவதற்கு முன் தோழர்களின் சூழ்நிலையை புரிந்து உணர்வுடன் செயல்பட வேண்டும். இறந்தவர்களின் குடும்பம் பொருளாதார இன்னலில் இருந்து மீள வகை செய்ய வேண்டும்...

அப்போதுதான் ஜேசுதாஸ் போன்ற தோழர்களின் ஆன்மா அமைதியடையும்.

1 comment:

  1. உரத்த சிந்தனை .... நிச்சயம் நிறைய பேரை சுடும் ..!விஜய்-குடந்தை

    ReplyDelete