Thursday 26 September 2013

அவதி தரப்போகும் 
அலைக்கற்றை கட்டணம் 
( BWA - BROADBAND WIRELESS ACCESS CHARGES  REFUND)

12/09/2013 அன்று கூடிய  மந்திரிகள் சீரமைப்புக்குழு 
BWA அலைக்கற்றைக்கட்டணமாக BSNL/MTNL நிறுவனங்கள் செலுத்திய 11000 கோடியை திருப்பி அளிப்பது என முடிவு எடுத்தது அறிந்ததே. 
இதில் BSNL  பங்காக 6725 கோடி கிடைக்கும். இந்த 6725 கோடி பண வரவால் போனஸ்,மெடிக்கல், LTC திரும்ப கிடைக்கும் என தோழர்கள் கனவில் உள்ளனர்.  ஆனால் நமது கவலை வேறாக உள்ளது.

நமது BSNL நிறுவனம்  மக்களுக்கு புதிய சேவைகளை அளிப்பதற்காக DOTயிடம் 2007/2008ம் ஆண்டுகளில் 20MHZ/2.5 GHZ அலைவரிசை வேண்டும் என விண்ணப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் 2008ம் ஆண்டு  2.5/2.69 அலைவரிசை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நமக்கு வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் எடுத்த அதிக பட்ச விலைக்கே நமக்கும் BWA அலைவரிசை ஒதுக்கப்பட்டது.  இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு நமது நிறுவனத்திற்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. போட்ட முதலீட்டை எடுக்கவே ஆண்டுகள் பல ஆகும் என்று கூறப்பட்டது. அதிக தொகையை செலுத்தியதால் BSNL நிறுவனம் மேலும் நட்டத்தில் செல்ல ஆரம்பித்தது.  

நமக்கே உரித்தான அலட்சியத்தால் அலைக்கற்றை அசைவற்று உறங்க ஆரம்பித்தது. எனவே நமது நிறுவனம் 2012ல் BWA அலைக்கற்றைக் கட்டணத்தை திருப்பித்தர கோரிக்கை விடுத்தது. 
ஆனால் பரமார்த்த குரு சீடர்களான நமது அதிகாரிகள் முன்யோசனை இன்றி புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி 2012ல் புதிய WIMAX இணைப்புக்களை கொடுக்க ஆரம்பித்தனர். 

23/08/2013 வரை  அதிகபட்சமாக கேரளத்தில் 22394  இணைப்புகளும்தமிழகத்தில்  15625 WIMAX இணைப்புகளும், 
154 கல்லூரிகளில் சுமார் 1000 இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. காரைக்குடி பகுதியில் புதிய, புதிய வாடகை கார்களை நியமித்து 
அவசரம் அவசரமாக இணைப்புக்கள் கொடுக்கப்பட்டன. 
இந்நிலையில் மந்திரிகள் குழு அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தர முடிவெடுத்துள்ளது. இதனால் அலைக்கற்றை வசதி திரும்ப பெறப்படும்.  எனவே  நமது நிர்வாகம்   மேற்கண்ட இணைப்புக்களுக்கு மாற்றாக  மாற்று தொழில் நுட்பம் ஏதும் பயன்படுத்த 
வாய்ப்பு உள்ளதா?.. என கேட்க ஆரம்பித்துள்ளது. 

நமது கவலை  இதுதான் ..
அலைக்கற்றை கட்டணம் திரும்ப கிடைக்கலாம்..
தமிழகத்தில் உள்ள  15000 வாடிக்கையாளர்கள் நிலை என்ன?..
கேரளத்தில் உள்ள 22000 வாடிக்கையாளர்கள் கதி  என்ன?..

"எண்ணித்துணிக கருமம்"  என்றார் வள்ளுவர்....
"துணிந்த பின் நிர்வாகம் எண்ணுவதை"   எண்ணி 
கர்மம்.. கர்மம்.. என்று 
தலையில் அடித்துக்கொள்வதை தவிர நமக்கு வேறு வழியில்லை..

N. பாலமுருகன், TTA, 
NFTE கிளைச்செயலர், தேவகோட்டை. 

No comments:

Post a Comment