Saturday, 29 September 2018


நசுக்கப்படும் நகங்களும்… பற்களும்…

சிவகங்கை தொலைபேசிநிலையத்தில்…
முத்துமாரி என்று ஒரு தோழியர்
துப்புரவுப்பணி செய்யும்
ஒப்பந்த ஊழியராய்ப் பணிபுரிகின்றார். 
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்…
ஒரு சாண் வயிற்றுக்காக
ஒப்பந்த ஊழியராய் பணிசெய்கின்றார்…

17/08/2018 அன்று…
சிவகங்கை துணைக்கோட்ட அதிகாரியிடம்
எழுத்து மூலம் ஒரு புகார் அளிக்கின்றார்.
அவரது புகாருக்கு…
சம்பளம் காரணமில்லை…
சண்டாளன் ஒருவனே காரணம்…

அவனோர் மரத்தடி மனிதன்…
மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் நிரந்த ஊழியன்…
ஆனால் சிவகங்கை நிர்வாகம் எந்தவொரு வேலையையும்
அந்த ஊழியருக்கு அளிக்காததால்….
மரத்தடி  நிழலில் சுகமாக…
மதமதப்பு பேச்சுக்களில் இதமாக…
மயக்க நிலையில் வாழ்க்கை கழிகின்றது.

அந்த மரத்தடி மனிதன்…
தோழியர் முத்துமாரியிடம்..
கண்ணியக்குறைவாகப் பேசுவதும்…
தரக்குறைவாக நடந்து கொள்வதும்…
சாதி குறித்துக் கேட்பதும்…
சகலமும் குறித்துக் கேட்பதுவும்…
நித்தமும் வாடிக்கையாகிறது..

பலமுறை வாய்மொழியாக
துணைக்கோட்ட அதிகாரியிடம்
புகார் செய்தும் பலனில்லை..
எனவே 17/08/2018 அன்று
எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கின்றார்.
பிரச்சினை நமது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது…

துணைக்கோட்ட அதிகாரியும் ஒரு பெண் என்பதால்
அவரிடம் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம்…
கோட்ட அதிகாரியும் ஒரு தொழிற்சங்கத்தலைவர் என்பதால்
அவரிடமும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்…
மாவட்ட நிர்வாகத்திடமும் தலையிடுமாறு வேண்டினோம்….

நமது தேசத்தில் இளைத்தவர் குரல் எடுபடாது…
புகார் அளித்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்…
வழக்கம் போலவே நிர்வாகம் மெத்தனம் காட்டி நிற்கின்றது…

நிர்வாகத்திடம் நீதி கேட்டுப் புகார் அளித்தும்..
நீதி கிடைக்கவில்லை எனில்…
அநீதி இழைக்கப்பட்ட  பெண் எங்குதான் செல்வது?
தன் கண்ணியத்தை எப்படிக் காத்துக் கொள்வது?

ஒரு பெண் தன் கண்ணியத்தைக் காத்துக்கொள்ள
நகங்களையும் பற்களையும் பயன்படுத்த வேண்டும்…
தற்காப்புத்தான் பெண்களின் முதல் கடமை என்று…
அண்ணல் காந்தி பெண்விடுதலைக்காக உரக்க குரல் கொடுத்தார்…

அவர் பிறந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டன…
அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஓடிவிட்டன…
அவர் மறைவைப் போலவே…  
அவரது லட்சியங்களும்…
பாரத தேசத்தில் மறைந்து வருகின்றன…

பெண்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக…
அவர்களது பற்கள் உடைக்கப்படுகின்றன….
அவர்களது நகங்கள் பிடுங்கப்படுகின்றன…
நமது நிர்வாகத்திலும் அதுதான் நடந்தேறுகிறது…

அக்டோபர் 2 அன்று அண்ணல் காந்தியின்
150வது அவதார விழா ஆரம்பமாகின்றது…

ஒரு அபலைப்பெண்ணிற்கு…
உரிய நீதி வழங்கப்பட வேண்டும்…
தாமதங்கள் தொடருமானால்…
அகிம்சை வழியில் அக்டோபர் மாதம்…
சிவகங்கையில்… சினமிக்க போராட்டம்
சீற்றத்துடன் நடந்தே தீரும்… வழி வேறில்லை…

Friday, 28 September 2018

ஊதியமாற்றக் கூட்டம்

மூன்றாவது ஊதிய மாற்றக்கூட்டம் 
இன்று 28/09/2018 டெல்லியில் நடைபெற்றது. 
NE-4 மற்றும் NE–5 ஊதிய நிலைகளில் தேக்கநிலை வரும் வாய்ப்புள்ளதாக ஊழியர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. 

எனவே கூடுதலாக ஒரு ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டு உச்சவரம்பு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.  நிர்வாகம் பரிசீலிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளது. 

அடுத்த கூட்டம் 09/10/2018 அன்று நடைபெறும். 
ஊதிய நிலைகள் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் 
அடுத்த கூட்டத்தில் ALLOWANCE படிகள் மற்றும்
 இதர பிரச்சினைகள் விவாதிக்கப்படும்.

அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தம்

வேலையில்லாக் கொடுமை…
விஷம் போல் ஏறும் விலைவாசி…
சமூக நலத்திட்டங்களுக்கு வெட்டு…
கொடுமை நிறைந்த குத்தகை முறை…
குறைந்த கால வேலை முறை…
குறைந்தபட்ச ஊதியம் 18000 மறுப்பு…
தொழிலாளர் நலச்சட்டங்கள் அழிப்பு..
தொழிற்சங்க உரிமைகள் பறிப்பு…
பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு தொடர் விற்பனை…
பணமதிப்பிழப்பு என்னும் பைத்தியக்காரத்தனத்தால்
70 லட்சம் வேலை இழப்பு…
2.34 லட்சம் சிறுதொழிற்சாலைகள் மூடல்…
6 கோடி மக்களின் வாழ்வாதாரப்பாதிப்பு…

இன்னும் எண்ணற்ற
தொழிலாளர் விரோத… மக்கள் விரோத…
மத்திய அரசின் தரம் தாழ்ந்த கொள்கைகளைக் கண்டித்து
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து…
28/09/2018 - டெல்லி 
மத்திய தொழிற்சங்கங்களின் கருத்தரங்க முடிவின்படி...

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் முழுக்க
நாடு தழுவிய கருத்தரங்கங்கள்…

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்
வாயில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள்

டிசம்பர் 17 முதல் 22 வரை நாடுமுழுக்க
கண்டன ஆர்ப்பாட்டங்கள்

 08/01/2019 மற்றும் 09/01/2019
நாடு திணறும்
இரண்டு நாள் வேலைநிறுத்தம்

தோழர்களே… தயாராவீர்…
இப்போது இல்லையேல்…
இனி எப்போதுமில்லை…
விஷம் போல் ஏறும் விலைவாசி

12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி…
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும்
2019 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில்…
இரண்டு நாள் நாடு தழுவிய
வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளன.

விஷம் போல் ஏறும்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து என்பது
12 அம்சக்கோரிக்கைகளில் முக்கிய கோரிக்கை…

இதோ…
2018 அக்டோபர் மாத IDA
வரலாறு காணாத அளவிற்கு
7.6 சதம் உயர்ந்துள்ளது.
இத்தோடு மொத்த விலைவாசிப்புள்ளி 
135.6 சதமாகும்.

விலைவாசி உயரும் போது…
ஊழியர்களுக்கு அது ஈடுகட்டப்படுகின்றது…
ஆனால் அடிமட்ட மக்களும்….
அமைப்பு சாரா தொழிலாளர்களும்
விலைவாசி உயர்வை எதிர்கொள்ள இயலாமல் தவிக்கின்றனர்…
எனவே IDA விலைவாசிப்படி உயர்வது நமக்கு மகிழ்வல்ல…
விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் 
என்பதுவே நமது கோரிக்கை…

Thursday, 27 September 2018


புரட்சியும்… அகிம்சையும்… 
 

தோழர் பகத்சிங் 1929ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
சதிவழக்கில் கைதுசெய்யப்பட்டு 
லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் விடுதலைப்போராளிகள் 
கிரிமினல் கைதிகள் போலத்
தரக்குறைவாக நடத்தப்பட்டனர்.

இதனைக் கண்டு கொதித்த தோழர் பகத்சிங்
எதிர்த்துப் போராட முடிவு செய்தார்.
சிறையில்… அதுவும் பரங்கியர் சிறையில்
போராட்டம் என்பது சாத்தியமா?
எந்த ஆயுதத்தைக் கையில் எடுப்பது?
எவ்வாறு தீர்வு காண்பது? என்று புரட்சியாளர்கள்
சிறையில் சிந்தித்தபோது அவர்கள் கையில் எடுத்த
ஆயுதம்தான் அகிம்சை என்னும் அற்புத ஆயுதம்.

அகிம்சை என்னும் போராட்டத்திற்கு
ஆயுதங்கள் தேவையில்லை…
உடல்பலம் தேவையில்லை….
ஆன்மபலம் மட்டுமே வேண்டியிருந்தது.
கட்சியின் மத்தியக்குழு முடிவின்படி
தோழர் பகத்சிங் உள்துறை அமைச்சருக்கு
கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துக் கடிதம் எழுதினார்.

விடுதலைப் போராட்டக் கைதிகள் 
அரசியல் கைதிகளாக நடத்தப்படவேண்டும்…
குளிப்பதற்கு வசதி செய்து தரப்பட வேண்டும்.
சுத்தமான ஆடைகள் வழங்கப்பட வேண்டும்.
தரமான உணவு வழங்கப்பட வேண்டும்..
ஒவ்வொரு கைதிக்கும் செய்தித்தாள் வழங்க வேண்டும்.
படிக்கவும் எழுதவும் தேவையான பொருட்களை வழங்க வேண்டும்..
அரசியல் கைதிகளுக்கென தனிப்பிரிவு
சிறைவளாகத்தில் அமைக்கப்பட வேண்டும்.
கட்டாய உடலுழைப்பு செய்ய
விடுதலைப்போராளிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

பணியுமா? பரங்கியர் அரசு…
மேலும் கைதிகளைக் கொடுமை செய்யத்துணிந்தது.
எனவே தோழர் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள்
தங்களது கோரிக்கைகளுக்காக அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தினர்.
உண்ணாவிரதம் தோழர்களுக்குப் புதிது.
ஆனால் அதே சிறையில் இருந்த
கட்சியின் மூத்த தோழர் ஜதீன்தாஸ் மட்டுமே
உண்ணாவிரதம் இருந்து அனுபவம் பெற்றவர்.
எனவே அவரிடத்தில் தோழர்கள் ஆலோசனை செய்தனர்.

தோழர் ஜதீன்தாஸ் தெளிவுபடக் கூறினார்.
தோழர்களே…
அகிம்சைப் போராட்டம் 
ஆயுதப்போராட்டத்தை விட மிகக்கடினமானது.
போலிசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாவது எளிது.
உயிர் உடனே போய்விடும்.
உண்ணாவிரதம் என்பது அப்படியல்ல.
அணுஅணுவாக சாவை எதிர்கொள்ள வேண்டும்.
தூக்குமேடை ஏறி...
கழுத்தில் கயிற்றை சுருக்குவது எளிது.
ஆனால் வயிற்றை சுருக்குவது மிகக்கொடிது.  
ஆயுதப்போராட்டத்தில் ஆயுதம் தீர்ந்துவிட்டால்
நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும்.
ஆயுதப்போராட்டத்தில் நாம் பதுங்கிப் பாயலாம்.
ஆயுதத்தைக் கீழே போட்டு சரணடையலாம்.
ஆனால் அகிம்சைப் போராட்டத்தில்
பின்வாங்குவது என்பதே கிடையாது.
கோரிக்கைகள் தீரும்வரை சமரசம் என்பதே கிடையாது.
ஆயுதபலத்தை விட ஆயிரமாயிரம் மடங்கு
ஆன்மபலம் வேண்டும் என்று தன் தோழர்களுக்கு
தோழர்.ஜதீன்தாஸ் அறிவுறுத்தினார்.

தோழரின் அறிவுரையை பகத்சிங் நெஞ்சில் நிறுத்தினார்.
ஜூன் 15ம்தேதி உண்ணாவிரதம் ஆரம்பமானது.
ஜூலை 10ம்தேதி லாகூர் சதிவழக்கு விசாரணை ஆரம்பமானது.
விசாரணையின்போதும் 
உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்தார் தோழர் பகத்சிங்.
பலவழிகளிலும் உண்ணாவிரதத்தை முறியடிக்க
பரங்கியர்கள் முயற்சி செய்து தோல்வியுற்றனர்.
கைதிகளுக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது.
பாலகர்கள் மயங்கிவிடுவார்கள் என நினைத்து
தண்ணீர்க்குடத்தில் பால் வைக்கப்பட்டது.
தோழர்கள் பால்குடத்தை உடைத்து எறிந்தார்கள்..
பழங்களும்… இனிப்புகளும் சிறைக்குள் அனுப்பப்பட்டன.
அனைத்தையும் ஆன்மபலத்தோடு ஒதுக்கித்தள்ளினர் தோழர்கள்.
மருத்துவர்களை அனுப்பி வாயில் குழாய் செருகி
உணவை வலுக்கட்டாயமாக செலுத்தினர்.
பற்களால் குழாயைக் கடித்து…
மனபலத்தோடு மருத்துவரோடும் 
மரணத்தோடும் போராடினர் தோழர்கள்..

தோழர்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்ட
தோழர் ஜதீன்தாஸ் மருத்துவர்களின்
மனிதாபிமானமற்ற செயலால்
நுரையீரலில் உணவு செலுத்தப்பட்டு 
செப்டம்பர் 13 அன்று உயிர் துறந்தார்.
ஜதீன்தாஸின் மரணம் உண்ணாவிரதத்தை மேலும் உரமேற்றியது.
முடிவாக 1929 அக்டோபர் 4ந்தேதி உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
பகத்சிங், சுகதேவ், மற்றும் பி.கே.சின்ஹா 
ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசியல் கைதிகளுக்கான உரிமைகளைப் பெற்றார்கள்.

இந்திய வரலாற்றில்…
அண்ணல் காந்தியும்.. புரட்சியாளர் பகத்சிங்கும்..
நேரெதிர் துருவங்களாகப் பார்க்கப்படுகின்றார்கள்.

அகிம்சையைக் கடைப்பிடித்த அண்ணல் காந்தி
ஆயுதத்தை ஏந்தவில்லை…
ஆனால் ஆயுதத்தை ஏந்திய பகத்சிங்
அகிம்சையை அண்ணல் காந்தியை விட
ஆன்மபலத்தோடு மிக உறுதியாகப் பின்பற்றியுள்ளார் என்பது வரலாறு.

இன்று செப்டம்பர் 28
புரட்சியாளர் பகத்சிங் பிறந்த நாள்…

2018 அண்ணல் காந்தி அவர்களின்
150வது அவதார ஆண்டாகும்.

புரட்சியும்… அகிம்சையும்…
மனிதகுலத்தின் இருகண்கள் எனப்போற்றுவோம்..

Saturday, 22 September 2018


மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் 


ஒரிசா மாநிலம் பூரி நகரில்
செப்டம்பர் 22 மற்றும் 23 தேதிகளில் நடைபெறும்
AIBSNLPWA ஓய்வூதியர் நலச்சசங்கத்தின்
அகிலஇந்திய மாநாடு சிறக்க வாழ்த்துகின்றோம்..

AIBSNLPWA சங்கம் அல்ல….
வண்ணங்களின் சங்கமம்…
எண்ணங்களின் சங்கமம்…
ஊதியம் வேறு… ஓய்வூதியம் வேறு…
என்னும் தன் உறுதியான நிலைபாட்டில்…
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்….

Friday, 21 September 2018


அஞ்சலி
AITUC இயக்கத்தின் மூத்த தலைவரும்
துப்புரவுத்தொழிலாளர் மேம்பாட்டிற்காக
தன் இறுதி மூச்சு வரை உழைத்தவரும்
மைய மின்வேதியியல் மையத்தில் பணிபுரியும்
ஒப்பந்த ஊழியர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து
அவர்களது உரிமைகளை மீட்டெடுத்தவரும்
பொதுவுடைமை இயக்கத்தின் நீண்டநாள் தலைவரும்
CTS என அன்பாக அழைக்கப்படும் அருமைத்தோழர்..
C.T.சேதுராமன்
அவர்கள் உடல்நலக்குறைவால் 
நேற்று 21/09/2018 இயற்கை எய்தினார்
அடிமட்ட ஊழியர்களின் மேம்பாட்டிற்காக
அயராது  பாடுபட்ட அருமைத்தோழர் 
சேதுராமன் மறைவிற்கு நமது ஆழ்ந்த அஞ்சலி….

ஆறு தாண்டாத அழகர்…
அழகிய மதுரையின் அன்புத்தெய்வம் அழகர்…
ஆண்டுதோறும் வைகை ஆற்றில் இறங்குவார்…
ஆனால் பாதிவழியிலேயே பயணத்தை முடித்துக்கொண்டு
ஆற்றைத் தாண்டாமலேயே அழகர்மலை திரும்பி விடுவார்….

நம்மிடமும் ஒரு அழகர் இருக்கின்றார்…
அவர் U.அழகர்… அடிமட்டத்து அழகர்….
U என்பதே அழகரின் நாம அடையாளம்…
U. அழகர் சிவகங்கையில் GROUP ‘D’யாகப் பணிபுரிகின்றார்…

கள்ளழகர்.. கடவுள் அவதாரம்…
ஆறு தாண்டாவிட்டாலும்… ஆண்டுதோறும்
மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம் அளித்து விட்டு
அழகர் மலைக்கு ஆரவாரமாகத் திரும்பிவிடுவார்…

நமது அழகர்…
கள்ளழகர் அல்ல… கடைநிலை அழகர்…
கல்வி கற்காத அழகர்…
பத்தாம் வகுப்பு கூடப் படிக்காத
பாமர மண்டூகத் தொழிலாளி…
எனவே பதவி உயர்வுக்கு தகுதியற்று…
சாபம் கொண்டவராய் விமோச்சனமே இல்லாமல்….
GROUP ‘D’யாகவே வாழ்க்கையை விசனத்துடன் ஓட்டுகின்றார்… 


கள்ளழகர் உச்சம் பெற்றவர்…
காரைக்குடி அழகரும் உச்சம் பெற்றவர்..
வாழ்க்கையில் அல்ல… வாங்கும் சம்பளத்தில்…
MAXIMUM என்னும் உச்சம் பெற்றவர்…
STAGNATION என்னும்…
தேக்கநிலைக்கு ஆளாகி..
ஏக்கநிலைக்குத் தள்ளப்பட்டவர்….

GROUP ‘D’ தோழர்களின் நிலையைக் கண்டால்…
மனம் நொந்து நூலாகும்…
அழகர் நிலையும் அதுவேதான்..

அழகர் 1991ல் பணிநிரந்தரம் பெற்றவர்…
அவரது DOT காலத்தை விட்டுவிடுவோம்…
BSNLலில் அவர் பட்டபாடுகளை…
கிட்டாத பலன்களை சற்றே உற்றுப்பார்ப்போம்…

01/10/2000ல் முதல் ஊதிய மாற்றத்தில்…
ரூ.4060 - 125 – 5935 என்ற சம்பள விகிதம் பெற்றார்…
மூன்று ஆண்டுகள் ஆண்டு உயர்வுத்தொகை அடைந்தார்…

01/10/2003ல் அவருக்கு ACP என்னும் பதவி உயர்வு
ரூ.4100 – 125 – 5975 என்ற சம்பள விகிதத்தில் அளிக்கப்பட்டது..
தனது ஆண்டு உயர்வுத்தேதியான
01/02/2004க்கு விருப்பம் தெரிவித்தார்…
01/02/2004ல் பழைய சம்பளத்தில் ரூ.5810/= பெற்றிருந்தார்…
புதிய பதவி உயர்வில் ரூ.5975/= அளிக்கப்பட்டது…
மகிழ்ச்சிதான்… ஆனால் மகிழ்ச்சியல்ல…
ரூ.5975/= என்ற அடிப்படைச்சம்பளத்தை அடைந்த அன்றே
அழகர் STAGNATION என்னும் உச்சம் பெற்றார்.
புதிய சம்பளத்தின் உச்சம் ரூ.5975/=

2004ல் உச்சத்தை அடைந்ததால்…
2005ல் ஆண்டு உயர்வுத்தொகை மறுக்கப்பட்டது….
2006ல் தேக்க நிலை ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டது…
2007 வந்தது… அழகருக்கு ஆண்டு உயர்வுத்தொகை கிடையாது…
ஆனால் 2007ல் இரண்டாவது ஊதியமாற்றம் வந்தது…

2007 இரண்டாவது ஊதியமாற்றம்…
ஏதேனும் மாற்றத்தைக் கொண்டுவருமென…
சற்றே ஆனந்தப்பட்டார் நமது அடிமட்டத்து அழகர்…..

இரண்டாவது ஊதியமாற்றத்தில் அழகருக்கு…
ரூ.7900 – 14880 என்ற ஊதியவிகிதம் அளிக்கப்பட்டது…
01/01/2007ல் ஊதியமாற்றம் பெற்றார்… அடுத்த ஆண்டு…
01/02/2008ல் ஆண்டு உயர்வுத்தொகை பெற்றார்….
ரூ.14880/= என்ற நிலையில் ஆண்டு உயர்வுத்தொகை பெற்று
ஒரே ஆண்டு உயர்வுத்தொகையோடு உச்சம் பெற்றார்..
மச்சமில்லாத… மிச்சமில்லாத நமது அழகர்…

2008ல் STAGNATION தேக்கநிலை அடைந்ததால்…
2009ல் அழகருக்கு ஆண்டு உயர்வுத்தொகை கிடைக்கவில்லை…
2010 வந்தது…
இப்போது நாலுகட்டப்பதவி உயர்வு வந்தது…
நாலுகட்டப்பதவி உயர்விலாவது
நல்லது நடக்காதா என
நப்பாசை கொண்டார் நமது அழகர்….
ஆனால் நாலுகட்டப்பதவி உயர்வும்
அழகரை நட்டாற்றில் தள்ளியது..

நாலுகட்டப்பதவி உயர்வுத்தேதியான
01/10/2010ல் அழகர் பழைய சம்பள விகிதத்தில்
ரூ.15330/= என்ற அடிப்படைச்சம்பளம் பெற்றிருந்தார்…
அவருக்கு ரூ.8150 – 15340/= 
என்ற புதிய சம்பள விகிதம் அளிக்கப்பட்டு..
ரூ.15340/= என்ற அடிப்படைச்சம்பளம் அளிக்கப்பட்டது…
அந்தோ பரிதாபம் அழகர்…
வெறும் 10 ரூபாய் மட்டுமே பதவி உயர்வில் பணப்பலன் அடைந்து
பதவி உயர்வு பெற்ற அன்றே உச்சம் பெற்றார்… பாவப்பட்ட அழகர்…

2010ல் STAGNATION தேக்கநிலை அடைந்ததால்…
2011ல் அவருக்கு ஆண்டு உயர்வுத் தொகை கிடைக்கவில்லை…
2012ல் முதலாவது 
தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டது…
2013ல் அவருக்கு ஆண்டு உயர்வுத் தொகை கிடைக்கவில்லை…
2014ல் இரண்டாவது 
தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டது…
2015ல் அவருக்கு ஆண்டு உயர்வுத் தொகை கிடையாது….
2016ல் மூன்றாவது 
தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டது…
இதோடு தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகையும் 
தேக்கம் பெற்றது…
மூன்று தேக்கநிலை உயர்வுத்தொகைக்கு மேல் 
ஆண்டு உயர்வுத்தொகை எதுவும் கிடைக்காது….

இனி 2017 வந்துவிட்டது…
இரண்டு ஊதியமாற்றங்கள் 
அழகருக்கு ஏமாற்றங்களாகவேப் போயின…
மூன்றாவது ஊதியமாற்றமாவது 
அழகருக்கு ஆறுதலைத் தருமா?
என்பதுதான் அழகரின் தற்போதைய  ஏக்கமும்… 
நமது எதிர்பார்ப்பும்…

ரூ.8150 – 15340/= என்ற ஊதியவிகிதத்திற்கு  
ரூ.19900 – 56200/= என்ற புதிய ஊதியவிகிதம்
பேச்சுவார்த்தையில் முன்மொழியப்பட்டுள்ளது…

புதிய ஊதியவிகிதத்தில் 15 சத ஊதிய உயர்வில்..
அழகர் ரூ.42460/= என்ற அடிப்படைச்சம்பளத்தில்
01/01/2017 முதல் பொருத்தப்படுவார்…
01/10/2017ல் புதிய ஆண்டு உயர்வுத்தொகை பெறுவார்…
01/10/2018ல் அடுத்த
ஆண்டு உயர்வுத்தொகையும் தடையின்றி கிடைக்கும்…
01/10/2018ல் அடுத்த 
நாலுகட்டப்பதவி உயர்வு அளிக்கப்படவேண்டும்…
நாலுகட்டப்பதவி உயர்வு
NE-5 என்னும் ரூ.21300 – 59600/= 
ஊதிய விகிதத்தில் அளிக்கப்படும்…

அழகருக்கு 01/10/2018ல் 
நாலுகட்டப்பதவி உயர்வுப்பலன் நன்றாகவே கிடைக்கும்…
2019ல் அடுத்த ஆண்டு உயர்வுத்தொகை 
அமோகமாகக் கிடைக்கும்…
2020ல் ஆண்டு உயர்வுத்தொகை தங்கு தடையின்றி கிடைக்கும்…
2021ல் ஆண்டு உயர்வுத்தொகை 
தானாகக் கிடைக்கும் தடுப்பார் யாருமில்லை…
2022ல் ஆண்டு உயர்வுத்தொகை 
தேக்கமின்றி ஊக்கமாகக் கிடைக்கும்…
2023ல் ஆண்டு உயர்வுத்தொகையைப் பெற்று
ஒரு பாதிப்புமின்றி அழகர் ஓய்வும் அடைந்து விடுவார்….

இரண்டு ஊதியமாற்றங்களில் ஆறு தாண்டாத அழகர்…
இதோ மூன்றாவது ஊதியமாற்றத்தில்
ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து 
ஆண்டு உயர்வுத்தொகை அடைந்து..
ஆறு தாண்டி விடுவார்…. ஆறுதலை அடைந்து விடுவார்..

ஆனாலும்….
அழகர்கள் ஆறு தாண்டுவது மரபல்ல… வழக்கமல்ல போலும்…
2023ல் பணிநிறைவு பெறும் அழகர்
2027 வரைப் பணியில் இருந்தால்…
2025க்குபின் மீண்டும் உச்சம் பெற்று தேக்கநிலை அடைவார்..
நல்லவேளை நமது அழகர் மூன்று ஆண்டுகள் முந்திப் பிறந்தார்…

ஆனாலும் நாடுமுழுவதும்... 
பின்பிறந்த அழகர்கள் இருக்கவே செய்வார்கள்…
அழகர்கள் 2017ல் இருந்து 2026 வரை
ஆண்டு உயர்வுத்தொகை தடையின்றிப் பெற்றால்தான்
ஊழியர் தரப்பு சரியான பொருத்தமான
சம்பள விகிதங்களைப் பெற்றுள்ளது
என்று நாம் பெருமிதமாகக் கூற முடியும்…

எனவே தற்போது உத்தேசம் செய்யப்பட்டுள்ள
NE-4 என்னும் சம்பள விகிதத்திலும்….
NE-5 சம்பள விகிதத்திலும்…
தேக்கநிலை வரத்தான் செய்யும்…

எனவே உச்சநிலை ஊதியம்
இன்னும் உயர்த்தப்பட வேண்டும்…
அடிமட்ட ஊழியர்களின் பதவி உயர்வு மேம்படுத்தப்பட்டு
அடுத்த ஊதியநிலைக்கு விரைந்து செல்ல வழிவகுக்கப்பட வேண்டும்…
என்பதுவே அழகர் போன்ற அடிமட்ட ஊழியர்களின்
இன்றைய கோரிக்கையும்… எதிர்பார்ப்புமாகும்…

அழகர்கள்…
வாழ்வில் உச்சம் பெறவேண்டும்…
வாங்கும் சம்பளத்தில் உச்சம் பெறலாகாது…

அழகர்கள் தடை தாண்ட வேண்டும்…
2027 வரை ஆறு தாண்டவேண்டும்…
என்பதுவே அடிமட்ட ஊழியர்களின் ஏக்கமாகும்….
அதுவே நமது நோக்கமாகும்….

இது அழகர் புராணமல்ல…
அடிமட்ட ஊழியர்களின் பலகால வேதனையாகும்…
பாதிப்பின் அளவு கூடுதலாக இருந்ததனால்…
பதிப்பின் அளவும் கூடுதலாகி விட்டது…
தோழர்கள் பொறுத்தருள்க… படித்துணர்க…