Saturday 29 September 2018


நசுக்கப்படும் நகங்களும்… பற்களும்…

சிவகங்கை தொலைபேசிநிலையத்தில்…
முத்துமாரி என்று ஒரு தோழியர்
துப்புரவுப்பணி செய்யும்
ஒப்பந்த ஊழியராய்ப் பணிபுரிகின்றார். 
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்…
ஒரு சாண் வயிற்றுக்காக
ஒப்பந்த ஊழியராய் பணிசெய்கின்றார்…

17/08/2018 அன்று…
சிவகங்கை துணைக்கோட்ட அதிகாரியிடம்
எழுத்து மூலம் ஒரு புகார் அளிக்கின்றார்.
அவரது புகாருக்கு…
சம்பளம் காரணமில்லை…
சண்டாளன் ஒருவனே காரணம்…

அவனோர் மரத்தடி மனிதன்…
மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் நிரந்த ஊழியன்…
ஆனால் சிவகங்கை நிர்வாகம் எந்தவொரு வேலையையும்
அந்த ஊழியருக்கு அளிக்காததால்….
மரத்தடி  நிழலில் சுகமாக…
மதமதப்பு பேச்சுக்களில் இதமாக…
மயக்க நிலையில் வாழ்க்கை கழிகின்றது.

அந்த மரத்தடி மனிதன்…
தோழியர் முத்துமாரியிடம்..
கண்ணியக்குறைவாகப் பேசுவதும்…
தரக்குறைவாக நடந்து கொள்வதும்…
சாதி குறித்துக் கேட்பதும்…
சகலமும் குறித்துக் கேட்பதுவும்…
நித்தமும் வாடிக்கையாகிறது..

பலமுறை வாய்மொழியாக
துணைக்கோட்ட அதிகாரியிடம்
புகார் செய்தும் பலனில்லை..
எனவே 17/08/2018 அன்று
எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கின்றார்.
பிரச்சினை நமது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது…

துணைக்கோட்ட அதிகாரியும் ஒரு பெண் என்பதால்
அவரிடம் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம்…
கோட்ட அதிகாரியும் ஒரு தொழிற்சங்கத்தலைவர் என்பதால்
அவரிடமும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்…
மாவட்ட நிர்வாகத்திடமும் தலையிடுமாறு வேண்டினோம்….

நமது தேசத்தில் இளைத்தவர் குரல் எடுபடாது…
புகார் அளித்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்…
வழக்கம் போலவே நிர்வாகம் மெத்தனம் காட்டி நிற்கின்றது…

நிர்வாகத்திடம் நீதி கேட்டுப் புகார் அளித்தும்..
நீதி கிடைக்கவில்லை எனில்…
அநீதி இழைக்கப்பட்ட  பெண் எங்குதான் செல்வது?
தன் கண்ணியத்தை எப்படிக் காத்துக் கொள்வது?

ஒரு பெண் தன் கண்ணியத்தைக் காத்துக்கொள்ள
நகங்களையும் பற்களையும் பயன்படுத்த வேண்டும்…
தற்காப்புத்தான் பெண்களின் முதல் கடமை என்று…
அண்ணல் காந்தி பெண்விடுதலைக்காக உரக்க குரல் கொடுத்தார்…

அவர் பிறந்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டன…
அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஓடிவிட்டன…
அவர் மறைவைப் போலவே…  
அவரது லட்சியங்களும்…
பாரத தேசத்தில் மறைந்து வருகின்றன…

பெண்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக…
அவர்களது பற்கள் உடைக்கப்படுகின்றன….
அவர்களது நகங்கள் பிடுங்கப்படுகின்றன…
நமது நிர்வாகத்திலும் அதுதான் நடந்தேறுகிறது…

அக்டோபர் 2 அன்று அண்ணல் காந்தியின்
150வது அவதார விழா ஆரம்பமாகின்றது…

ஒரு அபலைப்பெண்ணிற்கு…
உரிய நீதி வழங்கப்பட வேண்டும்…
தாமதங்கள் தொடருமானால்…
அகிம்சை வழியில் அக்டோபர் மாதம்…
சிவகங்கையில்… சினமிக்க போராட்டம்
சீற்றத்துடன் நடந்தே தீரும்… வழி வேறில்லை…

No comments:

Post a Comment