Tuesday, 29 June 2021

நெஞ்சை அள்ளிய கிள்ளி நீடு வாழ்க...

 

நஞ்சையும்... புஞ்சையும்...

நிறைந்த தஞ்சையின்...

வாஞ்சைமிகு அடையாளம்...

தஞ்சை மாவட்டச்செயலர்..

தோழர் கிள்ளிவளவன்... அவர்கள்

30/06/2021 அன்று...

இலாக்காப் பணியில் இருந்து

பணிநிறைவு பெறுகின்றார்... 

ஒப்பந்த ஊழியரின் ஒளிவிளக்கு...

ஒப்பற்ற சங்கத்தின் மணிவிளக்கு...

மன்னையின் மைந்தன்...

செம்மண்ணின் தலைவன்....

துவளாத துன்பச்சுமைதாங்கி....

கொள்கை அகலாத அறந்தாங்கி... 

தோழர். கிள்ளிவளவன்

நீடுழி வாழ்க... நிறைந்து வாழ்க...

எளியோருக்காய் நித்தமும் வாழ்க.... 

அன்பு கொண்டு வாழ்த்தும்....

NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்.

 த()ங்கமணி வாழ்க....

உரிமைக்கு குரல் கொடுக்கும் சங்கமணி..

பிறர் உயர்வுக்குத் தோள் கொடுக்கும்  அன்புமணி... 

கலை இலக்கியம் வளர்த்திடும் கலைமணி...

கடின உழைப்பால் உயர்ந்த உத்தமமணி...

கேள்விகள் கேட்டிடும் ஞானமணி...

கேளாதோர் செவிகிழிக்கும் வீரமணி...

பெயரிலும் தங்கமணி...

பேச்சிலும் தங்கமணி... 

30/06/2021 பணிநிறைவு பெறும்

புதுவை மாவட்டச்செயலர்

தோழர். தங்கமணி வாழ்க...

தரணி போற்ற வாழ்க...

எஞ்சிய வாழ்வு...

எளியோருக்காகட்டும்... 

அன்புடன் வாழ்த்தும்

NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்..

Monday, 28 June 2021

 முற்றுகைப் போராட்டம்

A U A B 

BSNL  அனைத்து சங்க கூட்டமைப்பு

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

--------------------------------------------------

BSNLலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு

உரிய தேதியில் சம்பளம் வழங்காத கொடுமை எதிர்த்து... 

உலகமே 5G சேவைக்குப் போய்க்கொண்டிருக்கும்போது

அரசுத்துறையாம் BSNLக்கு 4G சேவை வழங்குவதில்

தொடர்ந்து தாமதம் செய்யும் அரசின்

அலட்சியப் போக்கைக் கண்டித்து...

நாடு தழுவிய

முற்றுகைப் போராட்டம்

 30/06/2021 -  புதன்கிழமை  - காலை 10 மணி

BSNL பொதுமேலாளர் அலுவலகம் – மதுரை.

--------------------------------------------------

தோழர்களே...

அநீதி கண்டு வெகுண்டெழுந்து...

அனைவரும் சேர்ந்து போராடாமல்...

அநீதி களைய முடியாது....

கரம் உயர்த்தாமல் காரியம் இல்லை....

உழைப்பவரை மெலிவடையச் செய்யும்....

மக்கள் சொத்தாம் BSNLஐ நலிவடையச் செய்யும்

ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அணி திரள்வீர்... 

==================================

அனைத்து கிளைப்பொறுப்பாளர்களும்... 

முன்னணித் தோழர்களும்...

அவசியம் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

Saturday, 26 June 2021

 சம்பளம் கோரி ஆர்ப்பாட்டம் 

உழைத்தவன் வியர்வை காயுமுன்னே

அவனது கூலி கொடுக்கப்பட வேண்டும்....

என்றார் நபிகள் நாயகம்...

ஆனால் இன்றோ BSNL நிறுவனத்தில்...

உழைத்தவன் வியர்வை காய்ந்து...

அவனது வயிறும் காய்ந்து...

அவனது கல்லறையும் காய்ந்தாலும்...

கூலிகள் உரிய நேரத்தில் கொடுக்கப்படுவதில்லை.

எனவே இந்த கொடுமைக்கு முடிவுகட்ட AUAB அனைத்து சங்க கூட்டமைப்பின் அறைகூவலுக்கிணங்க நாடுதழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்  மிக எழுச்சியாக நடந்தேறியுள்ளது.

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாகவும், இராமநாதபுரம் தொலைபேசி நிலையம் முன்பாகவும் 25/06/2021 அன்று மதிய உணவு வேளையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடியில் NFTE சார்பாக தோழர்.மாரி தலைமையில்

BSNLEU தோழர்.பூமிநாதன் முன்னிலை வகிக்க...

கண்டன ஆர்ப்பாட்டத்தை...

FNTO  மாவட்டச்செயலர் தோழர். முத்துக்குமரன் துவக்கி வைத்தார்.

SNEA சங்கத்தின் சார்பாக தோழர்.கிருஷ்ணசாமி

AIBSNLEA சங்கத்தின் சார்பாக தோழர். மோகன்தாஸ்...

AIGETOA சங்கத்தின் சார்பாக தோழர்.ராமநாதன்

SEWA BSNL சங்கத்தின் சார்பாக தோழர். சேகர்

BDPA ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தோழர். மனோகரன்

AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தோழர். சுந்தர்ராஜன்

TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பாக தோழர். முருகன்

ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

NFTE கிளைச்செயலர் தோழர். ஆரோக்கியம் கோரிக்கை முழக்கங்கள் எழுப்ப தோழர்.சுரேஷ் நன்றி நவில ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

இராமநாதபுரத்தில்...

NFTE கிளைத்தலைவர் தோழர். தமிழரசன் தலைமையேற்க...

AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தோழர் இராமமூர்த்தி...

NFTE  முன்னாள் கிளைச்செயலர் தோழர். இராமமூர்த்தி..

SNEA சங்கத்தின் சார்பாக தோழர்கள் தவசிமணி,

சரவணன், பாலகிருஷ்ணமீனாள் ஆகியோரும்...

கருத்துரை வழங்கினர்.

தோழர். சின்னவீரன் நன்றியுரைக்க ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

Wednesday, 23 June 2021

கண்டன ஆர்ப்பாட்டம்

 

A U A B

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 

காரைக்குடி

  ------------------------------------

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக

BSNL அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும்

உரிய தேதியில் சம்பளம் வழங்காததைக் கண்டித்து.... 

விருப்ப ஓய்வில் ஏராளமான தோழர்கள் வெளியேறி

சம்பளச்செலவு வெகுவாக குறைந்த போதும்.... 

உழைக்கின்ற ஊழியர்களுக்கு...

உரிய தேதியில் சம்பளம் வழங்காமல் வேதனை செய்யும்

BSNL நிர்வாகத்தின் மனிதநேயமற்ற போக்கைக் கண்டித்து...

ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் சம்பளம் வழங்கக்கோரி... 

அனைத்து அதிகாரிகள் மற்றும்

ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பாக

நாடு தழுவிய

கண்டன ஆர்ப்பாட்டம்

  ------------------------------------

25/06/2021 – வெள்ளி – பகல் 11.00 மணி 

 ------------------------------------

BSNL DGM அலுவலகம் -  காரைக்குடி.

 ------------------------------------

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்.

  ------------------------------------

தோழர்களே....

ஊதியம் என்பது இலவசம் அல்ல...

உழைத்தவனின் உரிமை...

உழைத்தவனின் உரிமை மறுக்கும்...

BSNL நிர்வாகத்தின் கொடுமை முடிக்க...

ஒன்று திரள்வீர்... உணர்வு கொள்வீர்...

Tuesday, 22 June 2021

 AUAB - அனைத்து சங்க கூட்ட முடிவுகள் 

21/06/2021 அன்று காணொளிக்காட்சி வாயிலாக

BSNL  AUAB அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது.

கீழ்க்கண்ட சங்கங்கள் கலந்து கொண்டன. 

NFTE , BSNLEU, SNEA , AIGETOA, AIBSNLEA,

SEWA BSNL, FNTO, BSNLMS, BSNLATM, TEPU & BSNLOA

இம்முறை AIGETOA மற்றும் SEWA BSNL

சங்கங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------- 

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன... 

4G சேவை அனுமதிப்பதில் தொடரும் தாமதம்

ஊழியர்கள் சம்பளப்பட்டுவாடாவில் தொடரும் தாமதம்.

DOTயில் இருந்து BSNLக்கு வரவேண்டிய ஏராளமான   பாக்கித்தொகை.

CLUSTER என்னும் மோசமான முறையினால் சீரழிந்த தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்புக்கள்.

நில விற்பனை  மற்றும் கடன்களை அடைப்பதில் தொடரும் மந்த நிலை.

TRANSMISSION பகுதியை சீரழிப்பதால்... புறக்கணிப்பதால் FTTH இணைப்புக்கள் SURRENDER ஆகும் அவலம்..

இரண்டாவது ஊதியமாற்றத்தில்  இன்னும் தீர்க்கப்படாத சம்பளப்பிரச்சினைகள்

மூன்றாவது ஊதியமாற்றம் அமுல்படுத்துதல்...

கூடுதலாக செலுத்தப்பட்ட ஓய்வூதியப் பங்களிப்பை BSNLக்கு திருப்பித் தருதல்.

----------------------------------------------------- 

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன... 

25/06/2021 அன்று 

அனைத்து மட்டங்களிலும்

நாடு தழுவிய 

கண்டன ஆர்ப்பாட்டம்.

 

30/06/2021 அன்று...

டெல்லியில் CMD...

மாநிலத் தலைநகரங்களில் CGM..

மாவட்டத்தலைநகரங்களில் GM...

ஆகியோரை அனைத்து சங்க 

கூட்டமைப்பின் சார்பாக அவர்களது 

அறைகளில் சந்தித்து...

கோரிக்கை மனு அளித்தல். 

01/07/2021 அன்று

டெல்லியில் அனைத்து சங்கத்தலைவர்கள் நேரடியாகக் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானித்தல். 

தோழர்களே...

ஒன்றுபடுவோம்... போராடுவோம்..

அனைத்து சங்க கூட்டமைப்பின் முடிவுகளை வெற்றிகரமாக்குவோம்....

Thursday, 17 June 2021

 குடும்ப ஓய்வூதியம்

 விருப்ப ஓய்வில் பணிநிறைவு பெற்ற விருதுநகர் தோழர். கனகராஜ் என்பவர் 09/02/2021 அன்று மரணமுற்றார். அவரது மரணத்திற்கு முன்பே அவரது மனைவியும் இயற்கை எய்தி விட்டார். அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன்கள் இருவருக்கும் 25 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. எனவே குடும்ப ஓய்வூதியம்  FAMILY PENSION யாருக்கும் இல்லை என்று தூத்துக்குடி BSNL அலுவலகத்தில் கூறிவிட்டனர். மேலும் கனகராஜ் அவர்களுக்கு  சேரவேண்டிய GRATUITY – பணிக்கொடைக்கு மட்டும் அவரது மகன்கள் இருவரையும் விண்ணப்பிக்கச் சொல்லிவிட்டனர். இதனிடையே விருதுநகர் மதுரையுடன் இணைக்கப்பட்டு விட்டது.

 மதுரைக்கு பணிக்கொடைக்கு விண்ணப்பிக்க வந்த அவரது புதல்வர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் கொண்டுவந்திருந்த சான்றிதழ்களைப் பார்வையிட்ட போது வாரிசு சான்றிதழில் கனகராஜ் அவர்களின் தாயாரும், தந்தையாரும் உயிருடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் MRS மருத்துவ அட்டையிலும் அவர்களது பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. எனவே மரணமுற்ற கனகராஜ் அவர்களின் தாயாருக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி உள்ளது என்பதை சுட்டிக்காட்டி குடும்ப ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க சொல்லியுள்ளோம்.

இனி  ஓய்வூதிய விதி 1972 

என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

குடும்ப ஓய்வூதியம் கீழ்க்கண்ட வரிசை அடிப்படையில் வழங்கப்படும்.

கணவன் அல்லது மனைவி

குழந்தைகள்

பெற்றோர்

ஊனமுற்ற சகோதரர்கள்

மேற்கண்ட பிரிவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே குடும்ப ஓய்வூதியம்  வழங்கப்படும்.

கணவன் அல்லது மனைவிக்கு அவர்களது கடைசிக்காலம் வரையிலும் அல்லது அவர்கள் மறுமணம் செய்யும் வரையிலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஏனைய வருமானங்கள் கணக்கில் கொள்ளப்படாது.

கணவர் இறந்து குழந்தைப்பேறு இல்லாத விதவை மனைவிக்கு அவர் மறுமணம் செய்தாலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால் அவரது ஏனைய வருமானம் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியத்தை விடக்கூடுதலாக இருக்கக் கூடாது. 

(MINIMUM PENSION + DA). தற்போது குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.11520/=ஆகும்.

குழந்தைகளுக்கு அவர்களது வயது மூப்பின் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

மகனாக இருந்தால் 25 வயது வரையிலும் அல்லது அவர் திருமணம் செய்யும் வரையிலும் அல்லது அவர் வருமானம் ஈட்டும் வரையிலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

மகளாக இருந்தால் அவரது திருமணம் வரையிலும் (வயது தடையில்லை) அல்லது அவர் சொந்த வருமானம் ஈட்டும் வரையிலும் வழங்கப்படும்.

குழந்தைகள் இரட்டையர்களாக இருந்தால் ஓய்வூதியம் இருவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படும்.

தந்தை தாய் இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து மரணமுற்றால் வாரிசுகளுக்கு இரண்டு குடும்ப ஓய்வூதியங்கள் வழங்கப்படும். ஒரு ஓய்வூதியம் வருமானமாக எடுத்துக்கொள்ளப்படாது.

கணவர் இறந்த பின்பு மனைவி குழந்தையை தத்து எடுத்து இருந்தால் மனைவியின் மரணத்திற்குப் பின்பு தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடையாது.

குழந்தைகள் மாற்றுத்திறனாளி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியரின் தாய் தந்தைகள் உயிருடன் இருந்து அவரது பராமரிப்பில் வாழ்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

முதலில் தாய்க்கு வழங்கப்படும். தாய் மரணமுற்றால் பின்பு தந்தைக்கு வழங்கப்படும். தாய் தந்தையர்களுக்கு அவர்களது வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இரண்டாவது மனைவியை சட்டப்பூர்வமாக திருமணப் பதிவு சட்டத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். முதல் மனைவியின் குழந்தைகள் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் இரண்டாவது மனைவிக்கு சமமாகப் பிரித்து அளிக்கப்படும்.

இரண்டாவது மனைவி இறந்த பின்பு,  அவரது குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற வாய்ப்பு இல்லாத நிலையில் விவாகரத்து பெற்ற முதல் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் அவரது மறுமணம் வரையிலும் வழங்கப்படும்.

ஏனைய வாரிசுகள் இல்லாத நிலையில்....

விதவை மகளுக்கும், விவாகரத்து ஆன மகளுக்கும் அவர்கள் மறுமணம் புரியும் வரை குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இவர்களது மாத வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால் தந்தை உயிருடன் இருக்கும்போதே மகள் விதவையாக இருக்க வேண்டும். விவாகரத்து வழக்குத் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தந்தையின் மரணத்திற்குப் பின்பு விவாகரத்து பெற்றால் விவாகரத்து கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.(அர்த்தமற்ற இந்த விதிகள் மாற்றப்பட வேண்டும்)

மேற்கண்ட யாரும் இல்லாத நிலையில்....

உடல்ஊனமுற்ற சகோதர... சகோதரிகளுக்கு வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

பணியில் உள்ள ஊழியர் இறந்தால் முதல் பத்து ஆண்டுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் அடிப்படைச்சம்பளத்தில் 50 சதமும், அதன் பின்பு 30 சதமும் வழங்கப்படும்.

பணி நிறைவு  பெற்ற ஊழியர் இறந்தால் அவரது 67வயது வரையிலும்... விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால் முதல் 7 ஆண்டுகளும் ஓய்வூதியம் அடிப்படைச்சம்பளத்தில் 50 சதமும், அதன் பின்பு 30 சதமும் வழங்கப்படும்.

ஓய்வூதியர் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வந்தால்  ஓய்வூதியம் நிறுத்தப்படும். அவரது மரணத்திற்குப் பின்பு அவரது வாரிசுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

தோழர்களே...

ஆயிரக்கணக்கான தோழர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார்கள். நூற்றுக்கணக்கான தோழர்கள் கொடிய கொரோனா நோயால் மரணத்தைத் தழுவிக்கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது பணிபுரிபவர்கள் ஓய்வூதிய விதிகளைப் புரிந்தவர்களாக... அறிந்தவர்களாக இல்லை.

எனவே முன்னணித்தோழர்கள் ஓய்வூதிய விதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விதிகளின் அடிப்படையில் உதவி புரிந்திட வேண்டும்.

Monday, 14 June 2021

 BSNL பணத்தை DOTயே திருப்பிக்கொடு...

 BSNL நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த 20 மாதங்களாக உரிய நேரத்தில் சம்பளம் வழங்காததைச் சுட்டிக்காட்டியும் BSNL நிறுவனத்திற்கு DOT பல்வேறு காரணங்களுக்காக தரவேண்டிய ரூ.29,540/= கோடி ரூபாயை உடனடியாக வழங்கிடக்கோரியும் AIBSNLEA அதிகாரிகள் சங்கப் பொதுச்செயலர் தோழர்.சிவக்குமார் அவர்கள் DOTக்கு 14/06/2021 அன்று கடிதம் எழுதியுள்ளார். 

BSNL வங்கிகளிடம் கடன்பட்ட தொகை 24,000 கோடி என்றும் CAPEX, OPEX ,மற்றும் பல்வேறு செலவினங்களுக்காக BSNL ஏறத்தாழ 12,800/= கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது எனவும் தோழர் சிவக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

மாதம் 400 கோடி அளவில் தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலையில் உள்ள BSNL நிறுவனத்திற்கு DOT எந்தவித உதவியும் செய்யாமல்  பல ஆயிரம் கோடி நிலுவைகளை திருப்பித்தராமல் இழுத்தடிப்பது கண்டனத்திற்குரியது. அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இதற்காக ஒன்றுபட்ட இயக்கத்தை உடனடியாக நடத்திட வேண்டும். உரிய நேரத்தில் எடுத்துரைத்த ... DOTஐ இடித்துரைத்த AIBSNLEA பொதுச்செயலர் தோழர் சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Wednesday, 9 June 2021

 ஏட்டுச்சுரைக்காய் 

01/01/2020க்குப் பின் கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் மரணமுற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அவர்களது குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதியப் பலன்களை ஒருமாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஒன்றிய ஓய்வூதிய இலாக்கா அனைத்து துறைகளுக்கும் 29/07/2020 அன்று உத்திரவிட்டிருந்தது. 

அவர்களது குடும்ப ஓய்வூதியப்பலன்கள் தாமதமாகும் சூழலில்,  அவர்களது குடும்ப ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த உடனே  குடும்ப ஓய்வூதிய விதி 

80-Aன்படி தற்காலிகப் பணிக்கொடை மற்றும் தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். (PROVISIONAL GRATUITY and PROVISIONAL FAMILY PENSION)

ஒரு மாத காலத்திற்குள் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஓய்வூதிய அமைச்சக அலுவலகத்திற்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று ஓய்வூதிய இலாக்கா விரிவாக உத்திரவிட்டிருந்தது. தற்போது கொரோனா கொடுமையான முறையில் மக்களைப் பலிவாங்கும் நிலையில் BSNL நிர்வாகமும் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தி உத்திரவிட்டிருந்தது. மேலும் 30/04/2021க்கு முன்பாக இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியப்பலன்கள் 15/06/2021க்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்று DIRECTOR(HR) மனிதவள இயக்குநர் 03/06/2021 அன்று உத்திரவிட்டுள்ளார். 

இவ்வாறு மரணமுற்ற ஊழியர்களின் குடும்ப நலன் காக்கும் பொருட்டு அவ்வப்போது பல்வேறு உத்திரவுகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் முறையாக அமுல்படுத்தப்படுகின்றதா? என்ற கேள்வி விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்ட கேள்விக்கு ஒப்பானதாகும். 

இராமநாதபுரத்தில் தோழர் P.சந்திரசேகர் 23/01/2020 அன்று மரணமுற்றார். இன்றுவரை அவரது குடும்பத்திற்கு எந்தவிதப் பணப்பலனும் வழங்கப்படவில்லை. ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டன. தற்காலிக பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உத்திரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதிக்கவில்லை என்பது புலனாகிறது.

மதுரையில் தோழர் இராஜசேகர் 10/02/2020 அன்று மரணமுற்றார். அவரது குடும்பத்திற்கும் இதே நிலைதான். தற்காலிக பணிக்கொடையோ ஓய்வூதியமோ இன்றுவரை வழங்கப்படவில்லை. இவ்வாறாக இறந்த ஊழியர் குடும்ப நலன் காக்கப் பல்வேறு உத்திரவுகள் அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டாலும் அவை யாவும் நடைமுறையில் ஏட்டுச்சுரைக்காயாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது.

சில பொறுப்புள்ள மனிதர்களின் தூக்கத்தினால் 

பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா...

என்ற பட்டுக்கோட்டையின் 

பாடல்வரிகள் காதில் ஒலிக்கின்றன...

மனதில் ரணத்தை விதைக்கின்றன. 

Tuesday, 8 June 2021

 நினைவஞ்சலிக் கூடுகை...

 தமிழ்நாடு  முழுவதும் கொரோனா கொடுநோய்க்கு ஆளாகி

இன்னுயிர் நீத்த NFTE இயக்க முன்னோடிகளுக்கு

தமிழ்மாநிலச் சங்கத்தின் சார்பாக

காணொளிக் காட்சி நினைவஞ்சலிக் கூடுகை...

10/06/2021 – வியாழன் – மாலை 07.00 மணி...

தோழர்களே... இணைந்திடுவீர்...