Wednesday 9 June 2021

 ஏட்டுச்சுரைக்காய் 

01/01/2020க்குப் பின் கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் மரணமுற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அவர்களது குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதியப் பலன்களை ஒருமாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஒன்றிய ஓய்வூதிய இலாக்கா அனைத்து துறைகளுக்கும் 29/07/2020 அன்று உத்திரவிட்டிருந்தது. 

அவர்களது குடும்ப ஓய்வூதியப்பலன்கள் தாமதமாகும் சூழலில்,  அவர்களது குடும்ப ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த உடனே  குடும்ப ஓய்வூதிய விதி 

80-Aன்படி தற்காலிகப் பணிக்கொடை மற்றும் தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். (PROVISIONAL GRATUITY and PROVISIONAL FAMILY PENSION)

ஒரு மாத காலத்திற்குள் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஓய்வூதிய அமைச்சக அலுவலகத்திற்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று ஓய்வூதிய இலாக்கா விரிவாக உத்திரவிட்டிருந்தது. தற்போது கொரோனா கொடுமையான முறையில் மக்களைப் பலிவாங்கும் நிலையில் BSNL நிர்வாகமும் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தி உத்திரவிட்டிருந்தது. மேலும் 30/04/2021க்கு முன்பாக இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியப்பலன்கள் 15/06/2021க்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்று DIRECTOR(HR) மனிதவள இயக்குநர் 03/06/2021 அன்று உத்திரவிட்டுள்ளார். 

இவ்வாறு மரணமுற்ற ஊழியர்களின் குடும்ப நலன் காக்கும் பொருட்டு அவ்வப்போது பல்வேறு உத்திரவுகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் முறையாக அமுல்படுத்தப்படுகின்றதா? என்ற கேள்வி விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்ட கேள்விக்கு ஒப்பானதாகும். 

இராமநாதபுரத்தில் தோழர் P.சந்திரசேகர் 23/01/2020 அன்று மரணமுற்றார். இன்றுவரை அவரது குடும்பத்திற்கு எந்தவிதப் பணப்பலனும் வழங்கப்படவில்லை. ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டன. தற்காலிக பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உத்திரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதிக்கவில்லை என்பது புலனாகிறது.

மதுரையில் தோழர் இராஜசேகர் 10/02/2020 அன்று மரணமுற்றார். அவரது குடும்பத்திற்கும் இதே நிலைதான். தற்காலிக பணிக்கொடையோ ஓய்வூதியமோ இன்றுவரை வழங்கப்படவில்லை. இவ்வாறாக இறந்த ஊழியர் குடும்ப நலன் காக்கப் பல்வேறு உத்திரவுகள் அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டாலும் அவை யாவும் நடைமுறையில் ஏட்டுச்சுரைக்காயாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது.

சில பொறுப்புள்ள மனிதர்களின் தூக்கத்தினால் 

பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா...

என்ற பட்டுக்கோட்டையின் 

பாடல்வரிகள் காதில் ஒலிக்கின்றன...

மனதில் ரணத்தை விதைக்கின்றன. 

No comments:

Post a Comment