Thursday, 17 June 2021

 குடும்ப ஓய்வூதியம்

 விருப்ப ஓய்வில் பணிநிறைவு பெற்ற விருதுநகர் தோழர். கனகராஜ் என்பவர் 09/02/2021 அன்று மரணமுற்றார். அவரது மரணத்திற்கு முன்பே அவரது மனைவியும் இயற்கை எய்தி விட்டார். அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன்கள் இருவருக்கும் 25 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. எனவே குடும்ப ஓய்வூதியம்  FAMILY PENSION யாருக்கும் இல்லை என்று தூத்துக்குடி BSNL அலுவலகத்தில் கூறிவிட்டனர். மேலும் கனகராஜ் அவர்களுக்கு  சேரவேண்டிய GRATUITY – பணிக்கொடைக்கு மட்டும் அவரது மகன்கள் இருவரையும் விண்ணப்பிக்கச் சொல்லிவிட்டனர். இதனிடையே விருதுநகர் மதுரையுடன் இணைக்கப்பட்டு விட்டது.

 மதுரைக்கு பணிக்கொடைக்கு விண்ணப்பிக்க வந்த அவரது புதல்வர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் கொண்டுவந்திருந்த சான்றிதழ்களைப் பார்வையிட்ட போது வாரிசு சான்றிதழில் கனகராஜ் அவர்களின் தாயாரும், தந்தையாரும் உயிருடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் MRS மருத்துவ அட்டையிலும் அவர்களது பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. எனவே மரணமுற்ற கனகராஜ் அவர்களின் தாயாருக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி உள்ளது என்பதை சுட்டிக்காட்டி குடும்ப ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க சொல்லியுள்ளோம்.

இனி  ஓய்வூதிய விதி 1972 

என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

குடும்ப ஓய்வூதியம் கீழ்க்கண்ட வரிசை அடிப்படையில் வழங்கப்படும்.

கணவன் அல்லது மனைவி

குழந்தைகள்

பெற்றோர்

ஊனமுற்ற சகோதரர்கள்

மேற்கண்ட பிரிவில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே குடும்ப ஓய்வூதியம்  வழங்கப்படும்.

கணவன் அல்லது மனைவிக்கு அவர்களது கடைசிக்காலம் வரையிலும் அல்லது அவர்கள் மறுமணம் செய்யும் வரையிலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஏனைய வருமானங்கள் கணக்கில் கொள்ளப்படாது.

கணவர் இறந்து குழந்தைப்பேறு இல்லாத விதவை மனைவிக்கு அவர் மறுமணம் செய்தாலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால் அவரது ஏனைய வருமானம் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியத்தை விடக்கூடுதலாக இருக்கக் கூடாது. 

(MINIMUM PENSION + DA). தற்போது குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.11520/=ஆகும்.

குழந்தைகளுக்கு அவர்களது வயது மூப்பின் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

மகனாக இருந்தால் 25 வயது வரையிலும் அல்லது அவர் திருமணம் செய்யும் வரையிலும் அல்லது அவர் வருமானம் ஈட்டும் வரையிலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

மகளாக இருந்தால் அவரது திருமணம் வரையிலும் (வயது தடையில்லை) அல்லது அவர் சொந்த வருமானம் ஈட்டும் வரையிலும் வழங்கப்படும்.

குழந்தைகள் இரட்டையர்களாக இருந்தால் ஓய்வூதியம் இருவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படும்.

தந்தை தாய் இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து மரணமுற்றால் வாரிசுகளுக்கு இரண்டு குடும்ப ஓய்வூதியங்கள் வழங்கப்படும். ஒரு ஓய்வூதியம் வருமானமாக எடுத்துக்கொள்ளப்படாது.

கணவர் இறந்த பின்பு மனைவி குழந்தையை தத்து எடுத்து இருந்தால் மனைவியின் மரணத்திற்குப் பின்பு தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடையாது.

குழந்தைகள் மாற்றுத்திறனாளி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியரின் தாய் தந்தைகள் உயிருடன் இருந்து அவரது பராமரிப்பில் வாழ்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

முதலில் தாய்க்கு வழங்கப்படும். தாய் மரணமுற்றால் பின்பு தந்தைக்கு வழங்கப்படும். தாய் தந்தையர்களுக்கு அவர்களது வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இரண்டாவது மனைவியை சட்டப்பூர்வமாக திருமணப் பதிவு சட்டத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். முதல் மனைவியின் குழந்தைகள் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் இரண்டாவது மனைவிக்கு சமமாகப் பிரித்து அளிக்கப்படும்.

இரண்டாவது மனைவி இறந்த பின்பு,  அவரது குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற வாய்ப்பு இல்லாத நிலையில் விவாகரத்து பெற்ற முதல் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் அவரது மறுமணம் வரையிலும் வழங்கப்படும்.

ஏனைய வாரிசுகள் இல்லாத நிலையில்....

விதவை மகளுக்கும், விவாகரத்து ஆன மகளுக்கும் அவர்கள் மறுமணம் புரியும் வரை குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இவர்களது மாத வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால் தந்தை உயிருடன் இருக்கும்போதே மகள் விதவையாக இருக்க வேண்டும். விவாகரத்து வழக்குத் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தந்தையின் மரணத்திற்குப் பின்பு விவாகரத்து பெற்றால் விவாகரத்து கொடுக்கப்பட்ட தேதியில் இருந்து குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.(அர்த்தமற்ற இந்த விதிகள் மாற்றப்பட வேண்டும்)

மேற்கண்ட யாரும் இல்லாத நிலையில்....

உடல்ஊனமுற்ற சகோதர... சகோதரிகளுக்கு வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

பணியில் உள்ள ஊழியர் இறந்தால் முதல் பத்து ஆண்டுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் அடிப்படைச்சம்பளத்தில் 50 சதமும், அதன் பின்பு 30 சதமும் வழங்கப்படும்.

பணி நிறைவு  பெற்ற ஊழியர் இறந்தால் அவரது 67வயது வரையிலும்... விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால் முதல் 7 ஆண்டுகளும் ஓய்வூதியம் அடிப்படைச்சம்பளத்தில் 50 சதமும், அதன் பின்பு 30 சதமும் வழங்கப்படும்.

ஓய்வூதியர் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வந்தால்  ஓய்வூதியம் நிறுத்தப்படும். அவரது மரணத்திற்குப் பின்பு அவரது வாரிசுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

தோழர்களே...

ஆயிரக்கணக்கான தோழர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார்கள். நூற்றுக்கணக்கான தோழர்கள் கொடிய கொரோனா நோயால் மரணத்தைத் தழுவிக்கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது பணிபுரிபவர்கள் ஓய்வூதிய விதிகளைப் புரிந்தவர்களாக... அறிந்தவர்களாக இல்லை.

எனவே முன்னணித்தோழர்கள் ஓய்வூதிய விதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விதிகளின் அடிப்படையில் உதவி புரிந்திட வேண்டும்.

No comments:

Post a Comment