Tuesday 21 January 2014

கவலை நீங்கா 
கருணை அடிப்படை வேலை 

"விடாது புகைப்பிடிப்போரை 
விரைந்து கூற்றுவன் கைபிடிப்பான்"...
என்பது காரைக்குடியில் நுண்ணலைப்பிரிவில் பணியாற்றிய தோழர்.இராபின்சன், TM வாழ்க்கையில் நடந்தேறியது.

நூறு சதம் புகை  விட்டான்...
வாழ்வில் அரை சதம் கடப்பதற்கு முன்னே 
அப்போலோ மருத்துவமனையில் உயிர் விட்டான்.

நாற்பது வயதில் மனைவி..
நாலும் புரியா வயதில் குழந்தைகள்..
நாம் அவர்களிடம் துக்கம் கேட்க... 
துக்கம் தொண்டையை அடைக்க.. 
நம்மிடம் அவர்கள் கேட்டது..
"அண்ணே..
என்  பிள்ளைகளுக்கு 
கருணை அடிப்படையில் வேலை கிடைக்குமா ?
இது மில்லியன் சோக கேள்வி..

தொண்டையை அடைத்த துக்கம் 
இப்போது நம் நெஞ்சை அடைத்தது..

இது இங்கு மட்டுமல்ல..
மரண வீடுகள் அனைத்திலும்  மறக்காமல் கேட்கப்படும் கேள்வி இது..

மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் தவிக்கவிட்டு சென்ற 
இராபின்சன் வாரிசுக்கு 
கருணை அடிப்படையில் BSNLலில் வேலை கிடைக்குமா?
நம்மால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை..
"பார்ப்போம்" என்பதுதான் நமது பதிலாக இருந்தது..

பாவிமகன் இராபின்சன் 
ஊரெல்லாம் கடன் வாங்கி 
கழுத்தில் காதில் கிடந்ததை பணமாக்கி 
போன வருடம்  
யாரும் போகாத பக்கம் இடம் வாங்கி வீட்டைக்கட்டினானே..

இராபின்சன் மனைவி உலை வைத்த வீடு ... 
அவன் பிள்ளைகளின் வேலைக்கு உலை வைக்குமே..

வீடு பேற்றை அடைந்து விட்ட
இராபின்சன்  கட்டிய வீடு 
அவன் வீட்டு நிம்மதியைக் கெடுத்து விட்டதே..
என்ற கவலை நம் நெஞ்சைக்கவ்வியது..

கருணை அடிப்படை வேலைக்கான தகுதிகளில் 
புதிய திருத்தங்கள் உருவாக்கப்பட்டு 
BSNL நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக 
தற்போதைய  செய்திகள் கூறுகின்றன..

காரைக்குடி மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 
நாற்பது குடும்பங்களில் 
கருணை அடிப்படை வேலைக்கு  விண்ணப்பித்து 
வற்றாத அழுகையுடன் அகலிகையாக காத்துக்கிடக்கின்றனர்..
இது போல்.. நாடு முழுக்க நாலாயிரம் பேர் காத்துக்கிடக்கலாம்..

இவர்களுக்கு விடிவு என்ன..?
சமுதாயச்சிந்தனை மிக்க 
நம் தொழிற்சங்கங்களின் முடிவு என்ன..?

இதுதான்..
இராபின்சன் மரணத்தையும் மீறி 
நம் நெஞ்சைத்துளைத்த கேள்வி..

"எந்த கேள்விக்கும் பதில் உண்டு" என 
தத்துவமேதை சாக்ரடீஸ் சொன்னான்..
இந்த கேள்விக்கு உண்டா?..

4 comments:

  1. உண்மை ... ஏதாவது செய்து ஆகவேண்டும் ! விஜய் குடந்தை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Dear comrade certainly there will be an answer. The rule laid by the BSNL management on CGA will soon be withdrawn by the efforts of NFTE BSNL. T.S. Murali, RGM TTC, Meenambakkam.Chennai

    ReplyDelete
  4. U have expressed the feelings of many BSNL families
    We have to impress our all India Union to find relaxations in New Compassionate Ground Policy
    sankar nellai

    ReplyDelete