Sunday 21 December 2014

தனியொருவனுக்கு...
 உணவில்லையெனில்...
அரக்கச்செயல் தடுக்க...
ஆர்ப்பாட்டம்... 
தோழர். ஞானமுத்து சிவகங்கை அருகில் 
ஒக்கூர் தொலைபேசி நிலையத்தில் TM ஆகப்பணி புரிந்து வந்தார்.
உழைப்பவனுக்கு இயற்கை தந்த பரிசு உடல் நலிவு.
பாடு பட்டு உழைத்தவனுக்கு பக்கவாதம் வந்தது.
பேச்சு போனது... மூச்சு மட்டுமே.. மிஞ்சியது..
இலாக்காவில் அவன் ஒரு அடிமட்ட தொழிலாளி...
சமூகத்தில் அவன் ஒரு அடித்தட்டுத்  தோழன்...
தனியொருவன் உழைப்பில் வாழும் ஆதி தமிழ்க்குடும்பம்...

வாயும்  வயிறும் வேறு வேறு என்பார்கள்.. உண்மைதான்..
வாயைக்கட்டிய நோய்,, அவன் வயிற்றைக்கட்ட மறந்தது..  
வாய் அவனுக்கு ஊமையானது... வயிறு அவனுக்கு சுமையானது..
விடுப்பு கரைந்தது... அடுப்பு அணைந்தது...

முடங்கிக்கிடப்பது.. முடிவல்ல,, என்று முடிவெடுத்தான்..
தவழ்ந்து சென்றான்.. தன் அலுவலகம் நோக்கி...
அன்பு கொண்ட  அதிகாரிகள்  அவனை அரவணைத்தனர்..
பக்கவாதம் வந்தவனுக்கு..
பக்கத்துணையாய் அவன் துணைவி நின்றார்..
அலுவலக காரியங்கள் யாவினும் கை கொடுத்தார்...
சம்பளப்பட்டியல்... பணமானது... 
அணைந்த அடுப்பு எரிந்தது.. 
எரிந்த வயிறு அணைந்தது..
வயிறு இதமானதால்.. வாழ்வும்  சற்றே எளிதானது..

இந்நிலையில்...
"அவன் வேலைக்குப்போவதில்லை... 
அவன் மனைவியை வைத்து வேலை செய்து சம்பாதிக்கின்றான்" என..
கொடியவன் ஒருவன் கொளுத்திப் போட்டான்...

துப்புக்கேட்டவுடன்...துப்பறியும் அதிகாரி..
துரிதமாக துப்பு துலக்க..
தூங்கிய பல்லும் துலக்காமல்..
மதுரையில் இருந்து பறந்து வந்தார்...
மோப்ப நாய்  மட்டுமே உடன் இல்லை...
வேட்டை நாயை விட... வேகமாக ஞானமுத்துவை விரட்டினார்...
வீட்டுக்கு உன்னை அனுப்பி விடுவேன் என  மிரட்டினார்..
இரவு 11 மணிக்கு அவனது மனைவி விசாரணை என்ற பெயரில்
தொலைபேசியில் அழைத்து துன்புறுத்தப்பட்டார்...
விருப்ப ஓய்வில் செல்வதற்கு  கட்டாயப்படுத்தினார்கள்..
"எந்த கொம்பனும்.. 
எந்த சங்கமும் உன்னைக் காப்பாற்ற முடியாது" என
துப்பறியும் அதிகாரி முழங்கினார்..
ஞானமுத்து மீண்டும் வீட்டிலேயே முடங்கினான்...
இரண்டு  மாதமாக அவனுக்கு சம்பளம் இல்லை..
எழுதிக்கொடுத்த விருப்ப ஓய்வும்.. வரவில்லை..
இந்நிலையில்.. 
மீண்டும் வீட்டிற்கு சென்று VIGILANCEன் வக்கிர விசாரணை..
உன்னை ஓய்க்காமல் விடமாட்டேன் என VIGILANCE கொக்கரிப்பு..

தோழர்களே... 
இதுவரை நாம் பொறுத்தோம்...
இனியும்.. பொறுப்பதற்கில்லை...

நாம் கேட்கின்றோம்..
ஞானமுத்துவும்.. அவன் மனைவியும்..
இலாக்கா சொத்துக்களை கொள்ளையடித்தார்களா?.
இலாக்காவிற்கு விரோதமாக செயல்பட்டார்களா..?
இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டை சிதைத்தார்களா...?
  
BSNLலில்...பெருக்கோடும் லஞ்சத்தையும் ஊழலையும்..
கட்டுப்படுத்த கையாலாகாத கண்காணிப்பு  அதிகாரிகள்..
பாவப்பட்ட ஞானமுத்துக்களிடம்தான்...
தங்கள்  சட்ட ஞானத்தைக் காட்ட வேண்டுமா?

ஆகப்பெரிய அதிகாரிகளிடம் குவிந்துள்ள அதிகாரம்..
அடிமட்ட ஊழியனின் வயிற்றில் அடிக்க மட்டும்தானா?

தோழர்களே.. சிந்திப்பீர்...
தனியொருவனுக்கு உணவில்லையெனில் 
ஜெகத்தினை அழித்திடுவோம்...என்றான் பாரதி..
இதோ.. நமது கண்முன்னே... 
தனி மனிதனும் அவனது குடும்பமும் ..
அதிகாரிகளின் அரக்கச்செயலால் 
சோற்றுக்கு வகையின்றி.. சொல்லவும் வழியின்றி..
தாங்க முடியா வேதனையில் தவிக்கின்றனர்...

இந்த அநியாயம் கண்டு நாம் சகித்திடுவோமா?
அநீதி கண்டு வெகுண்டெழுந்து...
ஆர்ப்பரித்து போராடாமல்..
அநீதி களைய முடியாது...
இதுவே நமது தாரக மந்திரம்...

வெகுண்டெழுவோம்...
24/12/2014 - புதன்  மாலை 5 மணிக்கு 
காரைக்குடி  
பொதுமேலாளர் அலுவலகம்  முன்பாக
 ஆர்ப்பரிப்போம்....
அநீதி களைவோம்... 
 தோழர்களே..வாரீர்...

No comments:

Post a Comment