கொடியவன் கோட்சேக்கு
கோவில் எழுகிறதாம்...
கோட்சேக்கு கோவில்..
காந்திக்கு கல்லறை...
இதுதான் காவி இந்தியா..
இன்றைய காலிகளின் இந்தியா...
காவிகளின் கூட்டங்களை சற்று
காது கொடுத்து கேட்டுப்பாருங்கள்...
தேசத்தை நாசமாக்கியவன் இந்த காந்தி..
தேசத்தை நேசித்தவன் எங்கள் கோட்சே..
இப்படித்தான் காவிகளின் கூட்டங்களில்
புரட்டர்கள் வரலாற்றை புரட்டுவார்கள்....
காந்தியின் மீது கல்லடிகள் பல உண்டு..
இந்து தர்மத்தில் ஈடுபாடு கொண்டவர்..
வருணாச்சிரமத்தை வரித்துக்கொண்டவர்..
தனக்கு மிஞ்சிய தலைவர்களை விரும்பாதவர்..
புரட்சிக்காரர்களை வாழவோ வளரவோ விடாதவர்..
அரிசன முத்திரையிட்டு இந்து மதத்திற்குள் அடைத்தவர்..
இப்படியாக...
காந்தியின் மீது கல்லடிகள் பல உண்டு....
எந்த மகாத்மாவிலும் சில குறை இருக்கும்..
எந்தக் கொடியவனிடமும் ஏதேனும் நிறை இருக்கும்..
குறையொன்றை சுட்டுவதால் மகாத்மாக்கள் குன்றுவதில்லை...
நிறையொன்றை இனங்காட்டினாலும் நீசர்கள் உயருவதில்லை...
அன்று...
பொதுவுடைமைவாதிகள் கோவிலுக்கு எதிரியல்ல....
கோவிலில் நிகழும் கொடுமைக்கு எதிரி என்றார் ஜீவா..
கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என..
பின்னாளில் கலைஞரும் அதனை கதை வசனமாக்கினார்..
இன்று..
ஜனநாயகக்கோவிலிலே கொடியவர்களின் கொடி பறப்பதாலே...
கொடியவர்கள் கோவில்களில் மூலவராகின்றனர்..
இந்த தேசத்தின் மூலவர்கள் தெருக்களிலே வீசப்படுகிறார்கள்..
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட போது
பண்டித நேரு இவ்வாறு சொன்னார்..
"இந்து மத வெறியன் ஒருவனால்
நமது தேசப்பிதா சுட்டுக்கொல்லப்பட்டார்..
இது வரலாறு..
இனி வரலாறு திருத்தி எழுதப்படும்..
"இந்துதர்ம தியாகி கோட்சே..
இந்திய தேச விரோதி காந்தியின் கதை முடித்தார்...
என்று.. வரலாறு திருத்தி எழுதப்படும்..
அன்றைய தேச நிலை நினைத்து..
கண்ணீர் விட்டு வளர்த்தோம்..
கருகத் திருவுளமோ? என்று
கலங்கினான் பாரதி..
இன்றைய
நாட்டு நடப்பை நினைக்கையிலே....
நாம் கலங்கவில்லை.. மயங்கவில்லை..
நெஞ்சம் கொதிக்கின்றோம்..
கொடியவனுக்கு கோவில் எழுப்பும்
கொடுமை எதிர்க்கிறோம்..
பாவிகளின் காவிகளின் கொடுஞ்செயல் கண்டிக்கிறோம்..
தேசம் நேசிப்போரே..மனித நேயம் சுவாசிப்போரே..
ஓன்றுபடுங்கள்.. ஓரணியில் திரளுங்கள்..
என அபாயம் எதிர்க்க அழைக்கின்றோம்...
நம் அன்னையை தந்தையை
அழித்திட ஒருவன் துணியும் போது
பிள்ளைகள் நாம் உறங்கிடலாமா?...
பிணக்குகள் நமக்குள் கொண்டு வாழ்ந்திடலாமா?...
வீழ்ந்தது போதும்...
வீறு கொண்டு எழுவோம்..
வீணர்களின் இழிசெயல் தடுப்போம்...
வீரமுடன் தேசம் காப்போம்...
No comments:
Post a Comment