ஆண்டவரே... மன்னியும்..
ஆண்டவரே மன்னியும்...
இது அன்றாடம் தேவாலயங்களில்
திருப்பலிகளில் கேட்கப்படும் வார்த்தை அல்ல...
துறவு கொண்ட ஒரு தூய உள்ளத்தின்
துன்பம் பொறுத்த வார்த்தைகள்...
வங்கம்...
ஆன்மீகத்தின் அடையாள பூமி...
பெண்களை காளியின் அடையாளமாய் கண்ட...
மனைவியையும் அன்னையாய் பார்த்த...
இராமகிருஷ்ண பரமஹம்சர்...
சகோதர.. சகோதரிகளே...
இந்த இரட்டைச்சொல்லால்..
இந்திய தேசத்தின் ஆன்மாவை
உலகுக்கு அடையாளம் காட்டிய
வீரத்துறவி விவேகானந்தர்..
வெள்ளையனை விரட்டியடிக்க
வளைக்கரங்களை வாளேந்த வைத்த
வீரத்தலைவர் நேதாஜி..
தாகூர்... அரவிந்தர்...என
வணக்கத்திற்குரிய மகான்கள் பலர்
வந்துதித்த பூமி வங்க பூமி...
இன்றோ..
வரலாற்றில்... மறையாத பங்கம்
வந்து சேர்ந்துள்ளது வங்கத்திற்கு...
அன்புணர்வு கொண்ட ஒரு அன்னையை..
வன்புணர்வு செய்துள்ளது..
வன்முறைக்கும்பல்...
மனமும் உடலும் காயப்பட்ட நிலையிலும்
மருத்துவமனையில்...
தன்னை மானபங்கம் செய்தவர்களை
ஆண்டவரே... மன்னித்தருளும்
என மன்றாடியுள்ளார்...
மக்களைப்பெறாவிட்டாலும்.. துறவு கொண்ட..
மணிமேகலையையும்... கவுந்தியடிகளையும்..
மாதா என அழைத்த மாண்பு நமக்குண்டு...
மகளை அம்மா என அழைக்கும் பண்பு நமக்குண்டு..
ஆனால் இன்றோ..
ஆறறிவு மறந்த மனித மிருகங்கள்
ஆறையும் விடுவதில்லை...
அறுபதையும் விடுவதில்லை...
ஒரு துறவியை துன்புறுத்திய செயல்..
எழுபதைக் கடந்த ஒரு பெண்மணியை
வன்புணர்வு செய்த செயல்
இனவெறியை மிஞ்சிய
ஈனவெறியாகும்...
ஒட்டு மொத்த உலகமும்
நம் மேல் உமிழ்ந்துவிட்டது...
ஒட்டு மொத்த தேசமும்..
தலை கவிழ்ந்து நிற்கிறது...
காயப்பட்ட அன்னையோடு
கரம் கோர்த்து நாமும் மன்றாடுகிறோம்..
"ஆண்டவரே.. இவர்களை.. மன்னியும்"