Sunday, 15 March 2015

மாறினால் மாறட்டும்...


காரைக்குடியில் 14/03/2015 அன்று மாவட்டச்செயற்குழு நடைபெற்றது. 

மாவட்டத்தில் பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் மண்மூடிக்கிடக்கின்றன.  
காரணம் மண்ணின் மைந்தர்களான துணைப்பொதுமேலாளர் (நிர்வாகம்)  மற்றும்  உதவிப்பொதுமேலாளர் (நிர்வாகம்) 
DGM(ADMIN)  & AGM(ADMIN)  ஆகியோரின் அலட்சியப்போக்கே...

மேலும் நிர்வாக அதிகாரிகள் 
மிக நீண்ட காலம் அப்பதவிகளில் இருப்பதால்
தானடித்த மூப்பு தானாகவே வளர்ந்து விட்டது.

அதிலும் உதவிப்பொதுமேலாளர் 
உதவிகரமற்ற மேலாளராக மாறிப்போனது  கண்டும் .. 
பாரபட்சத்துடன் செயல்பட்டு... 
பல்வேறு பிரச்சினைகளை கிடப்பில் போட்ட நிலை கண்டும்...
ஈர நெஞ்சோடு அணுகவேண்டிய பிரச்சினைகளை 
ஈவிரக்கமின்றி கையாளும் கொடுமை  கண்டும்  
மனம் மிக வேதனை கொண்டது மாவட்டச் செயற்குழு.

கேள்விக்குறி போல்  முதுகு வளைந்து பணிவிடை செய்யும் 
ஒப்பந்த ஊழியர்களின் துன்பங்களை துயரங்களை  
துளியளவும் ஏறிட்டுப் பார்க்காத அழுத்தம் கண்டும்   
வருத்தம் கொள்கிறது செயற்குழு.

தோழர்களே...
இனி வருத்தப்பட்டு  பாரம் சுமப்பதில் பலனில்லை. 
மாறாக நிர்வாகத்தை எதிர்த்து நிற்பதே 
பிரச்சினைகள்  தீர்விற்கான வழியாகும்.

மாவட்ட நிர்வாகம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்...
இல்லையேல்.. தீர்வுக்குத்தடையாக இருக்கும் 
அதிகாரிகளை மாற்ற வேண்டும்..

நம்மைப் பொருத்தவரை..
தனி நபர்களை மாற்ற வேண்டும் என்பது நமது கொள்கையல்ல..
மாறாக அவர்கள் தாங்களாகவே மாறிக்கொள்ள வேண்டும்...
தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே நமது நிலை..

ஆனாலும்  மாற்றம் என்பது 
அவர்களது அணுகுமுறையில் இல்லையெனில்..
"மாறினால் மாறட்டும்... இல்லையேல் மாற்றுவோம்"
என்னும் பாடல் வரிகளை நாம் பின்பற்றுவதை தவிர வழியில்லை..

தோழர்களே...
ஏராளமான  பிரச்சினைகள் இங்கே தேங்கிக் கிடக்கின்றன.
ஓரிரண்டை உங்கள் கவனத்திற்கு 
ஒரு சோற்றுப்பதமாய் சுட்டிக்காட்டுகிறோம்...


பாவத்தின் சம்பளம்  மரணம்...என்பார்கள்
அப்படி மரித்த ஊழியர்களின் விடுப்புச்சம்பளமோ..
எட்டு மாதம் ஆகியும் எட்டாக்கனியாய் உள்ள எட்டிக்காய் நிலை..

தோழர்.சங்கர், TM மரித்து மாதம் பத்து ஆகியும்
ஈமக்கிரியை செய்ய  வழங்கப்படும் சேம நல நிதி  உதவித்தொகை
வருடத்திதிக்கு கூட வந்து   சேராத கொடுமை...

தோழர்.பிரான்சிஸ் TM இறந்து ஆண்டு ஒன்று ஆகியும்
அவரது ஆண்டு உயர்வுத்தொகை வெட்டு நீக்கத்திற்கான  APPEAL
அவரைப்போலவே கல்லறையில் உறங்கும் காட்சி...

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தோழர்.ஞானமுத்துவின்
விருப்ப ஓய்வு  விண்ணப்பம்
நாள் பட்ட   வாதங்களினால் (DISCUSSION)
வாதம் வந்து கிடக்கும் அவலம்...

ஓய்வு பெற்ற தோழர்களுக்கும் ...
சிவலோக பதவி அடைந்த  தோழர்களுக்கும்  கூட 
நாலு கட்டப்பதவி இன்னும் வழங்கப்படாத  கொடுமை...

மேலும்..
நாள்பட்ட மாற்றல்கள்
நாற்பதுக்கும்  மேலே தேங்கிக்கிடக்கும் நாலுகட்டப்பதவி உயர்வுகள்...
TTA தோழர்களுக்கு பணி நிரந்தர ஆணை... 
TTA பயிற்சிக்கால உதவித்தொகை நிலுவை..
ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடித்தல்..
தற்காலிகப்பணி நீக்க காலத்தை முறைப்படுத்துதல்..
பதவி இருந்தும் TM பணியில் அமராத நிலைமை...
என பலப்பல பிரச்சினைகள் தேங்கிக்கிடக்கின்றன.

ஊழியர்களையும் அவர்களது  பிரச்சினைகளையும்
நம்மை விட நன்கு தெரிந்த
நமது நிர்வாக அதிகாரிகள்
நமது கூற்றுக்களில் உள்ள உண்மைகளை  உணர்ந்து
அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என நம்புகின்றோம்.

நமது கூற்று  அவர்கள் கண்ணை மறைக்கலாம்...
நம்மை கூற்றுக்கு இரையாக்க அவர்கள்   துடிக்கலாம்..
அதை விட
நமது கூற்றில் உள்ள உண்மைகளை..
அதில் பொதிந்து கிடக்கும் ஊழியர் துன்பங்களை 
ஒரு கணமேனும் சிந்திக்க வேண்டும்..
அதனை தீர்த்திட வேண்டும்..
இதுவே நமது வேண்டுகோள்...

1 comment:

  1. நெற்றி பொட்டில் அடித்தது போல இருந்தது, காது கேளாதவர்களின் செவிப்பறையை கிழிக்கட்டும்

    ReplyDelete