Thursday, 5 March 2015

  டீக்கடை பெஞ்சு 

பாய்லர் வெந்நீரை விட கொதிப்பாக வந்தார் காதர் பாய். 
"யோவ்! ஏழரை பாய்.. ஏனய்யா டென்சனா இருக்கீர்"
 என்று அவரை வழக்கம்போல் கிண்டலடித்தார் முருகண்ணா. 

"உனக்கென்னயா... ரிடையர் ஆயிட்டு கை நிறைய காசை வாங்கிட்டு வீட்டுக்கு போயிடுவே... நாங்கதான்   கிடந்து அவதிப்பட போறோம்" என்று சலித்துக்கொண்டார் பாய்.

"யோவ்.. நீயும் எங்கூட ரிடையர் ஆகவேண்டிய ஆளுதான்.. 
ஏதோ.. வயசைக்குறைச்சுப் போட்டுட்டு காலத்தை ஓட்டுறே" என்றார் முருகண்ணா..

" யோவ் உங்க சண்டையை விடுங்க.. 
பாய் என்ன பிரச்சினை அதை முதல்லே சொல்லுங்க" என்றார் எஸ்டேட்  பத்மநாதன். 

"இந்த மாதம் PAY  SLIP  பார்த்தீரா ? என்று கேட்டார் பாய்..
"நாங்க எங்க அதப்பார்த்தோம்..
பாய்.. பகல்லே பேய் தெரியாது..  
ERPயிலே பே சிலிப் தெரியாது.. 
பகல்லே பேய் ஸ்லீப்தான்  பண்ணும்" 
என்று நக்கல் சிரிப்பு வந்தது  லால்  பகதூரிடமிருந்து...

"டேய் .. லொள்ளு...  பேச்சைக்குறை... 
முதல்லே.. பே சிலிப்பை பாரு" என்றார் பாய்..
"பாய்.. அது பே சிலிப்பு இல்லே.. பே சலிப்பு" 
என்று மறுபடியும் நக்கல்  சிரிப்பு லால் பகதூரிடமிருந்து...

"இல்லேடா.. நீ.. அடி வாங்கிட்டுத்தான் போவே..
இந்த மாத பேசிலிப்புலே.. 
தொழில் வரி 1300 புடிச்சிருக்கான்..
வழக்கமா..900தான் புடிப்பானுக....
அப்புறம் 5 பிளஸ்.. 5 மைனஸ் போட்டுருக்கான்..
ஒரு நாள் ஸ்டிரைக் பண்ணதுக்கு 
பேசிக்பே.. DAயே.. HRAயே..அலவன்ஸ்னு
எல்லாத்தையும் புடிச்சிருக்கான்..
போற போக்கிலே.. ஒரு நாள் ஸ்டிரைக் பண்ணினா 
ஒரு நாள்  சர்வீசை கட் பண்ணி 
ஒரு நாள் முன்னாடியே ரிட்டையர் ஆக்கிருவான் போல இருக்கே" என்று படபடத்தார் பாய்.

"பாய்... இது மட்டுமில்லே... 
இராமநாதபுரம் ரவிக்கு யூனியன் பேங்க் லோன் முடிஞ்சு 2 மாசமாச்சு.. இன்னும் புடிச்சுகிட்டே இருக்கானுக" என்றார் முருகண்ணா.

"பாய்.. நீங்க நினைக்கிற மாதிரி இல்லே.. 
இது சாப்ட்வேர் விவகாரம்" என்றார் பொறியாளர் இளம்பொறிமாறன்..

"எல்லாத்தையும் பிடிக்கச் சொல்லி சட்டமா இருக்கு?" 
என்று சவுண்ட் விட்டார் சவுண்ட் சவுந்தரராஜன்.

"சட்டம் பெருசா? சாப்ட்வேர் பெருசா?" என்று சத்தமாய் கேட்டார் 
அதுவரை அமைதியாய் இருந்த அமைதி ஆரோக்கியம்.

"பாய்.. இனிமே.. BSNLலில் சாப்ட்வேர்காரன் வச்சதுதான் சட்டம்" 
என்று  கணிப்பு சொன்னார் கணிப்பொறி ராஜந்திரன்..

மெதுவடை தின்னுக்கிட்டு மெதுவாக வந்த
பங்குச்சந்தை பழைய முத்துக்கிருஷ்ணன் 
" அட ஏங்க.. நான் ரிட்டையர் ஆகி ரெண்டு மாசமாச்சு.. 
இன்னும் லீவு சம்பளம் வரலே" என்று சலித்துக்கொண்டார். 
கூடவே சளித்தொந்தரவு வேறே அவருக்கு...

"கிருஷ்ணன்னே.. நீங்க பரவாயில்லே.. 
அக்டோபர் 2014லே சக்கரை வியாதியிலே செத்த நம்ம அழகன்குளம் சீனி.. 
ஆகஸ்ட் 2014லே  பல பல வியாதி வந்து செத்த முதுகுளத்தூர் பாஸ்கரன்.
இவுக யாருக்குமே இன்னும் லீவு சம்பளம் வரலே..
கேட்டா ERP.. ERPனே சொல்றானுக ".. என்றார் முருகண்ணா...

"இவனுகளை யாரு ERP நேரத்திலே சாகச்சொன்னது... 
இவனுகளுக்கு நல்லா வேணும்"
என்று வழக்கமான லொள்ளு வந்தது லாலிடமிருந்து..

" அட.. போங்கப்பா.. 
CSCயிலே கவுண்டர்லே  பணமே இல்லே..
முன்னாடி கலெக்சன் காசை  பேக் நிறையா  வச்சு பேங்க்லே போட்டேன்.. 
இப்போ பர்சிலேயே  வச்சு கொண்டு போயிரலாம் போல இருக்கு" 
என்று கலெக்சன் கதையைக் கூறி கவலைப்பட்டார் கலெக்சன் கான்பாய்.

"அதெல்லாம் கிடக்கட்டும்.. 
ஜெயராமா.. TTA அப்ளிகேசன் போட்டாச்சா? என்று கேட்டார் முருகண்ணா. 

"அட போங்கண்ணே.. 
பிளஸ் டூ படிக்கச் சொல்றான்.. 
போன்மெக்கானிக்லே 5 வருசமுனு சொல்றான்.. 
நெகட்டிவ் மார்க்னு சொல்றான்.. 
தமிழ்நாடு பூரா போகச்சொல்றான்.. 
நமக்கு முடியாதண்ணே.. 
ஏற்கனவே 2013லே டிப்ளமா முடிச்ச நம்ம ஜூலிக்கே
நம்ம அதிகாரிக தாக்கல் சொல்றான்..
மறுபடியும் பரிச்சைதான் எழுதனுமுன்னு சொல்றான்..  என்று 
அரியக்குடி  ஜெயராமனிடமிருந்து எரிச்சல் வந்தது..

"ஜெயராமா.. 
உன் பேர் ராசிக்கு ஜெயமே கிடைக்காது.. 
நீ.. ராமா.. ராமானு போக வேண்டியதான்.
உனக்கு புரமோசனெல்லாம் கிடைக்காது.. 
வழக்கம்போல உனக்கு அரியகுடி நாமம்தான்" 
என்று  லால்  பகதூர் கிண்டலடிக்க..

அங்கு வந்த நெட் நெப்போலியன்
"ஏம்ப்பா... நாகசுந்தரம் பார்ட்டியிலே.. 
நம்ம GM மணப்பாறை மாடு கட்டி.. 
மாயவரம் ஏரு பூட்டி..
பாட்டை பாடி அசத்திட்டாரு பாத்தியா" என்று கேக்க..

" ஆமாம்.. இதச்சொல்ல நீ.. வந்திட்டியா?..
இப்ப மணப்பாறை இருக்கு.. மாடுதான் இல்லே..
மாயவரம் இருக்கு ஏருதான் இல்லே...
சம்பாவும் இல்லே.. சாணியும் இல்லே..
போயி.. ஒழுங்கா ப்ராட்பேண்ட் ரிப்பேரை பாரு" 
என்ற லால்  பகதூரை  நெட் நெப்போலியன் அடிக்கப்பாய 
டீக்கடை பெஞ்சு குப்புற கவிழ்ந்தது. 

"வர்றானுக..கதையை பேசுறானுக.. 
காசை மட்டும் தர மாட்டுறானுக"
கேட்டா.. சம்பளம் வரலே.. சம்பளம் வரலேனு 
காண்ட்ராக்ட் லேபர்  சொல்றான்.
GPF வரலே.. GPF வரலேனு 
ரெகுலர் எம்ப்ளாயி  சொல்றான்..
எப்படித்தான் கடையை நடத்துறது... 
BSNLஐ மூடுறதுக்கு முன்னாடி 
நாம டீக்கடையை மூட வேண்டியதுதான்" 
என எல்லாத்தையும் பார்த்துகொண்டிருந்த
டீக்கடை அலெக்ஸ் புலம்பினான்.

எதையும் கண்டுகொள்ளாமல்..
எக்சிகியூட்டிவ் எழுவக்கா.. 
எதையோ பிரிச்சு தின்னுகிட்டே..
இலாக்கா தந்த  இலவச அலைபேசியில் 
இன்பமாக பேசிக்கொண்டிருக்க..
இனிதே நடந்தது BSNL சேவை...

1 comment:

  1. இடுக்கண் வருங்கால் நகுக ... ERP பற்றி அன்றே வள்ளுவன் சொன்னது ... படித்தேன் ... சிரித்தேன் .....விஜய் குடந்தை

    ReplyDelete