ஆகஸ்ட் - 2
நண்பர்கள் தினம்
நட்பை நாளும் சுவாசிக்கும் நல் இதயங்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் |
மனிதனுக்கு சுவாசம் அவசியம்
அதை விட அவசியம் நல்ல நட்பு...
எனவே நட்பின் பெருமையை உயர்த்திச்சொல்ல
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு
உலக நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகின்றது.
தொலைத்தொடர்பு பெருகி விட்ட இந்நாளில்
இணையதளம்.. முகநூல்...குறுந்தகவல்.. WhatsApp என
நன்பர்கள் தினம் வெகு அமர்க்களமாக
வெகு ரசனையாக கொண்டாடப்பட்டுள்ளது.
நண்பர்கள் தினம் இளைஞர்களை மட்டும் ஈர்க்கவில்லை..
நாற்காலியில் நடை பயிலும்
நமது கலைஞரையும் கூட விட்டு வைக்கவில்லை...
கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது முகநூலில்
உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு..
என்ற குறள் கூறி நட்பின் பெருமை கூறியுள்ளார்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு..
என்று நட்புக்கு இலக்கணம் சொன்ன வள்ளுவர்..
நட்பின் பெருமை போற்ற
நட்புக்காக ஒரு தனி அதிகாரமே இயற்றினார்..
நட்பின் பெருமை சொன்ன வள்ளுவர்..
எவரிடத்தும் ஆய்ந்து.. தோய்ந்து.. ஆராய்ந்த பின்னேதான்
நட்புக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் கூறுகிறார்.
மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
என்ற குறளில் தரமற்றவர்களின் நட்பை
விலை கொடுத்தேனும் விலக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்காகவே நட்பாராய்தல் என்று ஒரு அதிகாரம் இயற்றியுள்ளார்.
நட்புக்கு ஒரு அதிகாரம்
நட்பை ஆராய ஒரு அதிகாரம் என
குறள் இயற்றிய வள்ளுவர்
அத்துடன் நின்று விடவில்லை..
கூடா நட்பு என்று ஒரு அதிகாரத்தையும் இயற்றியுள்ளார்.
முகத்தின் இனிய நகா அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
என்ற குறளில்..
சிரித்துப் பேசி சீரழிவு செய்ய நினைக்கும்
வஞ்சகரின் நட்பைக் கண்டு அஞ்சி ஒதுங்கு..
என்று அறிவுரை கூறுகிறார்.
கூடா நட்புக்கு என தனி அதிகாரம் சொன்ன வள்ளுவர்
இதோடு விட்டாரா...
தீ நட்பு என்று ஒரு அதிகாரம் இயற்றி
தீயவர்களின் நட்பை இனங்கண்டு விலக்கி விட
தூண்டுகிறார்.. வேண்டுகிறார்.. நம்மை...
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோர விடல்
என்ற குறளில்..
நல்லதொரு செயலை செய்ய விடாமல்
கெடுக்கும் கெடுமதியாளர் நட்பை
மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
தோழர்களே...வள்ளுவன் சொல்லை..
வாழ்க்கையில் கொள்ள
நண்பர்கள் தினத்தில்... உறுதி ஏற்போம்...
நட்பு - நட்பாராய்தல் - கூடாநட்பு - தீ நட்பு
என நட்புக்கு நாற்பது குறள் தந்த..
வான்புகழ் வள்ளுவன் புகழ் போற்றுவோம்...
No comments:
Post a Comment