தொடருது... தூவானம்
மழை விட்டாலும்... தூவானம் விடவில்லை...
என கிராமப்புறப் பகுதிகளில்
நமது பெரியவர்கள் சலித்துக்கொள்வார்கள்.
ERP பிரச்சினையில் அதே சலிப்புத்தான்
தற்போது நமக்கும் தோன்றுகிறது.
ERP என்னும் எவருக்கும் பயன்படாத
பேய்மழை... பெருமழை பெய்து ஓய்ந்த பின்னும்...
தூவானங்கள் இன்னும் தொடரவே செய்கின்றன.
ஒரு சில தூவானத்துளிகள்...
நவம்பர் மாதம் JTO பயிற்சி வகுப்பு துவங்குகிறது. பயிற்சிக்கு செல்லும் தோழர்கள் TA முன்பணம் விண்ணப்பிக்க முடியாதாம். ஒரு மாதம் கழித்து TA பில்லைக்கொடுத்து மறுமாதம் பணம் பெற்றுக்கொள்ள வேண்டுமாம். முன்பணம் என்பது ஆண்டாண்டு கால நடைமுறை.
இதை நிறுத்துவது என்ன நியாயம்?
பல காலம் பணி செய்த நமது தோழர்கள் ஓய்வு பெறப்போகும் காலத்தில் LTC செல்ல ஆசைப்பட்டால் அவர்களும் LTC முன்பணம் விண்ணப்பிக்க முடியாது. LTC சென்றுவிட்டு ஒருவேளை திரும்பி வந்தால்
LTC BILL விண்ணப்பிக்கலாமாம்.
வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் மாவட்ட அலுவலகங்களிலும் காசாளர் பணி செய்யும் தோழர்கள் வசூலாகும் பணத்தை வங்கியில் தங்கள் சொந்தப் பொறுப்பில் கொண்டு போய் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு CONVEYANCE ALLOWANCE அலைச்சல் படி கொடுக்கப்படவில்லை. ஓராண்டு காலமாக இப்பிரச்சினை தேங்கிக்கிடக்கிறது. அலைஞ்சு திரிஞ்சாலும் அலைச்சல் படி கிடைக்காதாம்...
பணி நிறைவு பெறும் தோழர்களின் விடுமுறைச்சம்பளம் அவர்கள் பணி நிறைவு பெறும் நாளன்று வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதிலும் மண் விழுந்து விட்டது. ஒய்வு பெற்ற தோழர்களும், இறந்து போன தோழர்களின் பாவப்பட்டக் குடும்பங்களும் விடுமுறைச் சம்பளத்திற்கு வீங்கி நிற்கும்... ஏங்கி நிற்கும் காலமே தற்போது நடைபெறுகிறது.
ஓய்வு பெற்ற மற்றும் மரணமுற்ற தோழர்களின் வங்கிக்கடன் பாக்கி மற்றும் கூட்டுறவு சங்கப்பாக்கி ஆகியவை அவர்களது ஓய்வூதியப் பலன்களில் கழிக்கப்பட்டு DOT CELL மூலம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு வரைவோலையாக அனுப்பப்படுகிறது. ஆனால் இந்த பாக்கித்தொகை வங்கிகளுக்கும், கூட்டுறவுச்சங்கங்களுக்கும் உரிய காலத்தில் போய்ச்சேர மறுக்கிறது. பாக்கித்தொகை போய்ச்சேருவதற்குள் இறந்தவருக்கு ஆண்டுத்திதியும்,
இருப்பவருக்கு ஆண்டு விழாவும் வந்து விடுகிறது.
இப்படி எத்தனையோ...
தொடரும் தூவானத் துன்பங்கள்...
இன்னும் ERPயில் இருக்கத்தான் செய்கின்றன...
உரியவர்கள் உரிய நடவடிக்கை.. உரிய காலத்தில் எடுப்பது
ஊழியருக்கு உபயோகமாக இருக்கும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்...
என்பது வள்ளுவர் வாக்கு..
No comments:
Post a Comment