கம்பன் கலகம்
பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க..
இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்...
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்...
அடடா...
சூர்ப்பநகை நடந்து வரும் சூப்பர் அழகை
கம்பன் கவிதை ரசம் சொட்ட விளக்கும்
வார்த்தைகளுக்கு ஈடில்லை... இணையில்லை...
எனவேதான்...
பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளி வைத்த
சத்தான கம்பனுக்கு
ஈடு இன்னும்
வித்தாகவில்லை என்று பாடு
என்று கம்பன் புகழ் பாடினான் கண்ணதாசன்...
அந்த கம்பனின் புகழ் பாடும் பூமி காரைக்குடி...
78 ஆண்டுகளாக காரைக்குடி கம்பன் கழகம்..
கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்த்து வருகின்றது...
தமிழக இலக்கிய மேடைகளில்...
காரைக்குடி கம்பன் கழகத்திற்கு தனியிடமுண்டு...
ஒவ்வொரு வருடமும்
பங்குனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று
தொடங்கும் கம்பன் விழா
மகம்,பூரம்,உத்திரம் என்று 3 நாட்கள்
காரைக்குடியிலும்...
கம்பர் மறைந்த அத்த நட்சத்திரத்தில்
கம்பன் சமாதி அமைந்திருக்கும் நாட்டரசன்கோட்டையில்
நான்காம் நாள் அத்தத்திருவிழாவாகவும் நடைபெறும்...
77 ஆண்டுகள் இடையறாமல்
கம்பன் கழகத்தால் நடத்தப்பட்ட கம்பன் விழா
78ம் ஆண்டான இந்தாண்டு இரண்டாகிப் போனது...
காரணம் காரைக்குடியில் கம்பன் கழகத்தில் கலகம்...
சோறுடைத்த சோழ நாட்டுக் கம்பன்
சோத்துக்கு வழியற்று..
செட்டிநாட்டுக்கு வந்து செத்தான் என்பது வரலாறு..
ஆனால் கம்பன் பெயர் தாங்கிய கழகங்களுக்கு
கோடிக்கணக்கில் சொத்து...
எனவே கழகத்தில் கலகம் பிறந்து விட்டது...
கழகங்களில் கலகம் என்பதுதானே
தமிழக கழக வரலாறு...
இந்தாண்டு
மார்ச் 21 முதல் 24 வரை நான்கு நாட்கள்
கம்பன் விழா - இரண்டு விழாக்களாக..
கம்பன் மணிமண்டபத்திலும்
கிருஷ்ணா மணிமண்டபத்திலும்
ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது...
சகாயம்
கனிமொழி
வைரமுத்து
அப்துல் காதர்
த.ச.இராஜாராம்
சாலமன் பாப்பையா
தா.கு.சுப்பிரமணியன்
கோவிலூர் மடாதிபதி
குன்றக்குடி அடிகளார்
சிலம்பொலி செல்லப்பனார்
மேகாலயா ஆளுநர் சண்முகநாதன்
என இரண்டு கழகத்திலும்
தமிழ் பேச தாராளமாய் அறிஞர்கள்
காரைக்குடி வருகிறார்கள்..
நமக்கென்ன?
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
இலக்கியக் கூத்தாடிகள்
இரண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம்...
காரைக்குடியில்..
கம்பன் கலகக்கொண்டாட்டம்...
ஒரு கல்லில் இரண்டு கனிகள்...
கண்டு களிக்க.. வாருங்கள்..தோழர்களே...
No comments:
Post a Comment