காற்றினில்... கலந்தான்... கார்த்தி...
ஊண் எரிந்து.. உயிர் பிரிந்து..
காற்றினிலே கலந்து விட்டான்..
ஜெகன் இல்லத்துச் செல்லப்பிள்ளை..
நம் அன்புத்தோழன் கார்த்தி...
தேவகோட்டை கண்ணங்குடியில்..
ஒப்பந்த ஊழியனாய்ப் பணி செய்தான்..
ஒண்ட இடமின்றி...ஒதுங்க வழியின்றி...
கண்ணங்குடி தொலைபேசி நிலையத்தில் கண்ணயர்வான்...
அன்பு செய்தால்..அடங்கி நடப்பான்..
அநியாயம் கண்டால்..அடங்க மறுப்பான்..
ஆதலின்...
ஈரமற்ற ஒரு அதிகாரியால்.. சூடு பட்டான்...
அலுவலகத்தில் உறங்க விடாமல்...
தெருவிலே நிறுத்தப்பட்டான்...
கண்ணங்குடி...
மேல்குடிகளுக்கு மட்டுமே இடம் தரும்..
கீழ்குடிகளுக்கு...
உள்ளத்திலும் இடம் தராது...
இல்லத்திலும் இடம் தராது...
கண்ணங்குடியிலே கண்ணுறங்க வழியின்றி...
கண்ணீர் சிந்தியவனை..
கரம் நீட்டி அழைத்துக்கொண்டது...
சிந்தாதிரிப்பேட்டை ஜெகன் இல்லம்...
ஜெகன் இல்லத்திலே....
காவல் பணியை கருத்துடன் செய்தான்..
ஏவல் பணியை இன்முகத்துடன் ஏற்றான்..
ஓரிரவு உறங்கிட இடமின்றி தவித்தவன்...
ஓராயிரம் இரவுகள் நம் தோழர்கள்...
நிம்மதியாய் உறங்கிடப் பணி செய்தான்...
ஜெகன் இல்லத்தில்...
பணிவை விதைத்தான்...
அன்பை வளர்த்தான்...
ஐயா என்னும் அடிமைச்சொல் மறந்தான்...
தோழா என்னும் உரிமைச்சொல் பகன்றான்..
தலைவர்களின் அன்புக்கு ஆளானான்..
தோழர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானான்...
தனிமையில் கார்த்தி தவிக்கலாகாது...
வள்ளியோ.. தெய்வானையோ...
வாகாய் ஒருத்தியை இவன் வசப்படுத்துவோம்...
வாழ்வை வளப்படுத்துவோம்...என்றெண்ணி
இருந்த வேளையிலே....
இதயத்தில் செய்தியும்...
இடியாய் விழுந்தது...
நேற்றிருப்பார்... இன்றில்லை..
என்னும் நிலையாமை சொல்லி...
உறங்குவது போலும் சாக்காட்டில்...
உறங்கி விட்டான் நிரந்தரமாய்...
கார்த்தி...
காற்றிலே கலந்து விட்டான்...
நம் மூச்சிலே நுழைந்து விட்டான்...
மூச்சிலே அவன் நுழைந்து விட்டதனால்..
நம் மூச்சு வரை அவன் பேச்சிருக்கும்...
நம் பேச்சில் என்றும் அவன் நினைவிருக்கும்...
No comments:
Post a Comment