Wednesday, 31 August 2016

செப்டம்பர் - 2 
அகில இந்திய வேலை நிறுத்தம்

மத்திய அரசின்...
தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்த்து...
தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் கொடுமை கண்டித்து...
குறைந்தபட்சக்கூலி 18000 வழங்கக்கோரி...
குறைந்தபட்ச ஓய்வூதியம் 3000 வழங்கக்கோரி...
விஷம் போல் ஏறும் விலையைக் குறைக்கக்கோரி...

செப்டம்பர் -2
அனைத்து மத்திய சங்கங்களின்.. 
20 கோடி தொழிலாளர் பங்கேற்கும்...
இந்திய தேசம் காணப்போகும்...
உலகின் மாபெரும் வேலை நிறுத்தம்

வேலை செய்வது நம் கடமை...
வேலைநிறுத்தம் நம் உரிமை...
கலந்து கொள்வதே நம் பெருமை...
கடமை செய்வோம்... 
உரிமை வெல்வோம்...
செய்திகள்... சில...

22/05/2016 அன்று நடைபெற்ற 
JTO இலாக்காத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
OC பொதுப்பிரிவில் 205 தோழர்களும்... 
SC பிரிவில் 12 தோழர்களும்... 
ST பிரிவில் 2 தோழர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
17/07/2016ல் நடைபெற்ற JAO இலாக்காத்தேர்வு முடிவுகளும் 
விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
===============================================
அக்டோபர் - 2016 முதல் உயரக்கூடிய IDA 
ஜூன்...ஜூலை...ஆகஸ்ட்... ஆகிய மூன்று மாதங்களில் உயரக்கூடிய விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படியில் நிர்ணயம் செய்யப்படும்.
தற்போது விலைவாசிப்புள்ளிகள் ஜூன் மாதம் 2 புள்ளிகளும்... ஜூலையில் 3 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. 
தற்போதைய நிலவரப்படி  அக்டோபர் - 2016  IDA 
6 சதத்திலிருந்து 7 சதம் வரை  உயர வாய்ப்புள்ளது. 
===============================================
செப்டம்பர்...2 நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் நமது நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் கலந்து கொள்கின்றன. BSNL நிர்வாகம் வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு வழக்கம் போல் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகளான போனஸ் விரைவில் பேசித்தீர்க்கப்படும் எனவும்... 3வது ஊதியக்குழு DOTயின் ஒப்புதல் பெற்ற பின்னர் அமைக்கப்படும் எனவும்... ஏனைய கோரிக்கைகள் மீது தங்களுக்கு சம்பந்தம் இல்லையெனவும்... BSNL  நிர்வாகம் கூறியுள்ளது.
===============================================
போனஸ் குழுக்கூட்டம் 05/09/2016 அன்று 
டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
NFTE.... BSNLEU...  சங்கங்கள் போனஸ் பற்றிய  தங்களது 
கருத்துக்களை போனஸ் குழுக்கூட்டத்தில்  சமர்ப்பிக்க வேண்டும். 
===============================================
JTO இலாக்காத்தேர்வு  எழுத 
M.Sc., ELECTRONICS மற்றும் COMPUTER SCIENCE
பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என இலாக்கா உத்தரவிட்டுள்ளது.
===============================================

Tuesday, 30 August 2016

மண்ணின் மைந்தன்..
துணைப்பொதுமேலாளர்  - நிர்வாகம்
திரு.
S.ஜெயச்சந்திரன் - DGM
காரைக்குடி.
வெற்றித்திருமகன்
வெற்றிடத்தை நிரப்பிய தலைமகன்..

வரப்பிலே பிறந்தவன்… 
வரம்பிலே வாழ்பவன்

சேது மண்ணிலே வளர்ந்தவன்… 
செட்டிநாட்டிலே வசிப்பவன்..

அறிவிலே சிறந்தவன்… 
அறிவியலில் பயின்றவன்

உயரத்திற்கு சென்றவன்… 
உள்வேர்களை மறக்காதவன்

நடப்புக்களை அறிந்தவன்… 
நட்புக்களை மதிப்பவன்… 
         
நுட்பத்திலே தேர்ந்தவன்… 
வெப்பத்திலும் வியர்க்காதவன்

நிதானத்தை நிர்வகித்தவன்… 
நிர்வாகத்தில் நிதானித்தவன்

கடமையில் கருத்தானவன்… 
கண்ணியத்தில் நிறைவானவன்

சங்கத்தில் பற்றானவன்… 
சமரசத்தில் உற்றானவன்

சேவையை வளர்த்தவன்… 
தொழிலாளர் தேவையைப் புரிந்தவன்

எல்லோருக்கும் நல்லவன்… 
பொல்லாருக்கும் இனியவன்

நாரை பறக்காத 48 மடைகளின்
நரை பார்க்காத இளைஞன்

நிறைவான பணி செய்து 
நிறைவு பெறும் சகோதரன்

நலமுடன் வாழவளமுடன் வாழ..
வாழ்த்துகின்றோம்நெஞ்சார… 
------------------------------------------------------------------------------------------

இன்று 31/08/2016 பணி நிறைவு பெறும் 
அன்புத்தோழர் - அன்புச்சகோதரர் 
AIBSNLOA  மத்திய சங்க செயற்குழு உறுப்பினர் 
தோழர்.S.ஜெயச்சந்திரன் - DGM
அவர்களின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

அன்பு  வாழ்த்துக்களுடன்...
காரைக்குடி மாவட்டச்சங்கம் 

வாழ்த்துச்சொல்ல - 9486102077
பணி நிறைவு வாழ்த்துக்கள்

இன்று 31/08/2016 
காரைக்குடி மாவட்டத்தில்
பணி நிறைவு செய்யும் அன்புத்தோழர்கள்

துணைப்பொதுமேலாளர் - நிர்வாகம் 
திரு.S.ஜெயச்சந்திரன் 
 காரைக்குடி 

துணைப்பொதுமேலாளர் - CM 
திருமதி. D.இராஜம்மாள்  
காரைக்குடி 

 தொலைபேசி இயக்குநர் - குரலரசி
திருமதி.பாத்திமா ஜீவரெத்தினம்
இராமநாதபுரம் 

 தொழில் நுட்பவியலாளர் -விற்பனை மன்னன்
தோழர்.கல்யாண சுந்தரம்
இளையான்குடி 

ஆகியோரின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

Monday, 29 August 2016

சிரித்து வாழ வேண்டும்...
நகைச்சுவை மருத்துவர் கலைவாணர்
நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் 
1957...
சென்னை அரசு மருத்துவமனை..
NSK இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றார்...
அந்த மருத்துவமனை வளாகத்தில்...ஒருவர்..
அழுத கண்ணீரோடு நிற்கிறார்...
காரணம் என்னவென்று சிலர் விசாரிக்கிறார்கள்...
தனது மகளின் திருமணத்திற்கு உதவி கேட்டு
NSKஐப்பார்க்க வந்ததாகவும்... 
அவரது கெட்ட நேரம்..
NSK உடல் கெட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும்  கூறினார்...

சம்பவம் NSKயின் காதிற்கு எட்டுகிறது...
வீட்டில் தனது கடைசி சொத்தாக உள்ள 
வெள்ளிக்கூஜாவை எடுத்து வரச்சொல்கிறார்...
தன்னிடம் உதவி கேட்டு வந்தவரை அழைத்து வரச்சொல்கிறார்..
வந்தவரிடம் அதைக்கொடுத்து..
"என்னிடம் இப்போதைக்குப் பணமில்லை...
இதை விற்று உங்கள் மகளின் திருமணத்தை முடியுங்கள்"
என்று அன்போடு கொடுக்கிறார்...

செத்தும் கொடுத்தவன் சீதக்காதி...
சாகும் நிலையிலும் கொடுத்தவன் கலைவாணன்...

அவரது வருமான கணக்குகளை 
ஆய்வு செய்ய வந்த அதிகாரி ஒருவர் ... 
செலவுகளில் பெரும்பகுதி தர்மம்... தர்மம்.. என்று 
எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து சந்தேகம் கொண்டார்...
NSKயின் கணக்குப்பிள்ளை 
"தர்மம்" என்ற செலவு கணக்கு உண்மைதான் என்றும் 
நீங்கள் அதைச் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறி விட்டார்..

அதிகாரி அதற்கு முன் NSKஐ சந்தித்ததில்லை...
அவர் தன்னை யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ளாமல் 
சாதாரண உடையில் NSKஐ சந்தித்தார்...
தான் வறுமையில் வாடுவதாகவும்...
தனது மகளின் திருமணத்திற்கு உதவி வேண்டும் எனவும் வேண்டினார்...
உடனே சில பணக்கட்டுக்களை எடுத்து...
அவரிடம் நீட்டி வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்... NSK..

என்னை யாரென்று உங்களுக்குத் தெரியாது...
ஆனாலும் உடனடியாக உதவி செய்து விட்டீர்களே"
என அவர் கேட்டார்...
அறிமுகம் பார்த்து செய்வதில்லை உதவி ...
வாடியமுகம் பார்த்து செய்வதுதான் உதவி" என்று NSK கூறுகிறார்...
அதிகாரி சொன்னார்...

ஐயா...நீங்கள் கிருஷ்ணன் அல்ல.... கர்ணன்" 


சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு 
சொந்தமானது சிரிப்பு...
இது... கலைவாணர் சிரிப்பைப் பற்றி எழுதிய பாடல்...

அவரது நகைச்சுவை மக்களை 
சிரிக்க வைத்தது... சிந்திக்க வைத்தது... 

சிரித்து சிவந்தது மக்கள் முகம்...
கொடுத்துச் சிவந்தது அவரது கரம்...

பணத்துக்கும்...பதவிக்கும் ஆலாய்ப் பறக்கும் காலமிது...
தனது சிரிப்பும் சிந்தனையும் இறுதியாக...அடங்கும் வேளையிலும்..
எளியவருக்கு கொடுத்து உதவிய NSK நினைவைப் போற்றுவோம்..

பொதுவுடமைத்தீ வளர்த்த பட்டுக்கோட்டை 29வயதில் மறைந்தார்..
விடுதலைத்தீ வளர்த்த பாரதி 39ல் மறைந்தார்..
சிரிப்பு வேள்வி வளர்த்த கலைவாணர் 49ல் மறைந்தார்...
கள்ளமற்ற சிரிப்பு கலைவாணரைக் கூடுதல் காலம் வாழ வைத்ததோ..?

இன்று...
30/08/2016...
கலைவாணர் நினைவு நாள்....

Friday, 26 August 2016

தேர்வுகளும்... குழப்பங்களும் 

28/08/2016 அன்று நடக்கவிருந்த JTO இலாக்காத்தேர்வும்.. 
JAO 10 சதக் காலியிடங்களுக்கான தேர்வும் 
24/09/2016 அன்று நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

28/08/2016 தேர்விற்கு   விண்ணப்பிக்க கடைசி நாள்
  13/08/2016 என அறிவிக்கப்பட்டது. அப்போதே தேர்வு தள்ளிப்போகலாம் என்ற செய்தி உலவியது. ஆனால் சங்கங்கள் தேர்வைத் தள்ளி வைக்க கூடாதென்று நிர்வாகத்திடம் வாதிட்டன. தோழர்களும் அதை நம்பி விடுப்பு எடுத்து தேர்வுக்குத் தயாராகி... பல தோழர்கள் சென்னைக்கும் சென்று விட்டனர். தேர்வுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போது தேர்வைத் தள்ளி வைப்பது தோழர்களின் ஆர்வத்தைக் கெடுப்பது போலாகிவிட்டது. 

ஒரு தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியைத் தள்ளி வைக்கும் போதே 
தேர்வு உரிய நேரத்தில் நடக்குமா? இல்லையா ? என்பதை வரும் காலத்திலாவது நிர்வாகம் சரி வர சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நிர்வாகம் என்ன நினைக்கிறதோ... அது மட்டுமே நடக்கிறது...

தோழர்கள்... மனம் தளராமல் தேர்விற்கு மீண்டும் தயாராகவும்...
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

31/08/2016 - பணி நிறைவு பெறும் 
புதுச்சேரி NFTE மாவட்டச்செயலர் 

தோழர். மா.செல்வரங்கம்

அவர்களின் பணி ஓய்வுக்காலம் 
சிறப்புடன் விளங்கவும்...

இன்று 27/08/2016 நடைபெறும் 
பணி நிறைவு பாராட்டு விழா 
சிறக்கவும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

அன்பு வாழ்த்துக்களுடன்... 
காரைக்குடி மாவட்டச்சங்கம்.

Thursday, 25 August 2016

வாழ்த்துக்கள்... பல...

ஆகஸ்ட் - 26
ஈரோடு மாவட்ட மாநாடு...
அன்புத்தோழர். குமார் பணி நிறைவு பாராட்டு...
சேவைக்கருத்தரங்கம்...
உதவும் உள்ளங்களின் உதவிகள் வழங்கும் விழா...

ஈரோட்டிற்கு....
காரைக்குடி மாவட்டச்செயலராக...
வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டோம்..
அதே தினத்தில்...
தாய் மாமனாக..
தங்கையின் புதல்விக்கு..
வாழ்க்கை உரை எழுதப் பணிக்கப்பட்டோம்...

சங்கமும்.. சங்கடமும்... 
சமமாக கலந்ததுதான் நம்  வாழ்வு...

இந்தாலும்...
இருக்கவே... இருக்கிறது...இணையதளம்...
இருந்த இடத்தில்  இருந்தபடியே  வாழ்த்தி விடலாம்...

ஈரோடு...
பாசறைகளின் உறைவிடம்...
பகுத்தறிவின் பிறப்பிடம்...

ஈரோடு...
வண்ணங்களின் நகரம்...
மங்களம் சொல்லும் மஞ்சள்...
சிந்தனை  சொல்லும் கருப்பு...
மனிதம்  சொல்லும் சிவப்பு...

ஈரோடு..
NFTE.. இயக்கத்தின்  இதயம்..
இதயத்தை  இயக்கிடும்  மூளை...

ஈரோட்டுத்  திசையில்தான்..
இயக்கப்படகு செல்லும்...
ஈரோட்டின்   கையில்தான்
இயக்கத்தின்  சுக்கான் இருக்கும்..

ஈரோட்டுக்கு 
இரண்டு கண்கள்...
இயக்கமும்... நிறுவனமும்...

ஈரோடு...
நெற்றிக்கண் திறந்தாலும்..
குற்றம் கடியும்... 

ஈரோடு...
அரியணையில் சில நாள் தங்கியது..
அரியணைகளைப் பல நாள்  தாங்கியது...

ஈரோடு..
அஞ்சுவதற்கு அஞ்சும்...
கொடுமை கண்டால் மிஞ்சும்..
ஒரிஜினல் அஞ்சா நெஞ்சம்...

அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்..
இது ஈரோட்டுக்காக   எழுதப்பட்ட  குறள்....

ஈரோடு...
விழுதுகளைத் தந்த  ஆலமரம்...
விழுமியங்களைக் கொண்ட போதிமரம்..

ஈரோடு...
மனதிலே தங்கம்...பெயரிலே மகாலிங்கம்...
காவல் தலைவனின்..   
கொள்கைக் காதல்கோட்டை..

தஞ்சையின் காவிரி பொய்க்கலாம்...
மதுரையின் வைகை மரிக்கலாம்...
ஈரோட்டின்... 
மனித ஈரம்... அன்புச்சாரம்...
இயக்கத்தீரம்... கொள்கை வீரம்..
என்றும் மாறாது... மறையாது...

மகாலிங்கம் தலைமையேற்க...
குமா(ர)ர் நிறைவு கொள்ள...
ஜெயராமன் சிறப்புச்செய்ய...
நடராஜ நர்த்தனம்..
நலமுடன் நடந்தேற.. வாழ்த்துகிறோம்...

வாழ்க... இயக்கம் சுமந்த தோள்கள்...
வளர்க... இயக்கம் தாங்கும் கால்கள்...

அன்பு  வாழ்த்துக்களுடன்...
காரைக்குடி மாவட்டச்சங்கம்.

Wednesday, 24 August 2016

ஈரோடு மாவட்ட மாநாடு 

ஆகஸ்ட் - 25 மற்றும் 26 தேதிகளில்...

பகுத்தறிவின் பிறப்பிடம்..  
ஈரோட்டில் நடைபெறும்

NFTE
ஈரோடு  மாவட்ட மாநாடு 
வெற்றி பெறவும்..

அன்புத்தோழர்.குமார் 
அவர்களின் பணி நிறைவு விழா 
சிறக்கவும்  வாழ்த்துகிறோம்...
ஓய்வின்றி உழைக்கும்...
ஓய்வுகளுக்கு வாழ்த்துக்கள் 
AIBSNLPWA
மாநிலச்செயலர்
தோழர்.முத்தியாலு 

AIBSNLPWA
மாநில உதவிச்செயலர்
தோழர். நாகேஸ்வரன் 

கோவையில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்ற 
AIBSNLPWA  ஓய்வூதியர் நலச்சங்கத்தின் மாநில மாநாட்டில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 
புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.

மாநிலத்தலைவர் : தோழர். இராமாராவ்
மாநிலச்செயலர் : தோழர்.முத்தியாலு 
மாநிலப்பொருளர் : தோழர்.கௌஸ் பாஷா

காரைக்குடி NFTE முன்னாள் மாவட்டச்செயலர் 
தோழர்.நாகேஸ்வரன் அவர்கள் 
மாநில உதவிச்செயலராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மிக நீண்ட தொழிற்சங்க அனுபவமும், 
மாறாத கொள்கைப்பிடிப்பும், 
நெஞ்சம் நிமிர்ந்த நேர்மையும், 
கேட்போர் தகைக்கும் நாநயமும்,
 மாசற்ற நாணயமும் கொண்டவர்
அருமைத்தோழர் நாகேஸ்வரன் அவர்கள்.
  
 தோழர்.ஜெகன் அவர்களுக்குப்பின்  
தமிழகத்தில் முழக்கங்கள் எழுப்புவதில் 
முத்திரை பதித்தவர் தோழர்.நாகேஸ்வரன். 

இத்தனை சிறப்புகள் இருந்தும் 
NFTE இயக்கத்தில் ஒரு முறை கூட 
மாநிலச்சங்கப் பொறுப்பிற்குஅவர் 
தேர்வு செய்யப்படாதது விந்தையான ஒன்று. 

ஆனால்  ஓய்வூதியர் சங்கம் அவருக்கு உரிய இடமளித்து அவரை மாநிலச்சங்க நிர்வாகியாகத் தேர்வு செய்தமைக்கு  காரைக்குடி மாவட்டச்சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

Tuesday, 23 August 2016

கல்கத்தா...காலிகள்...
அடித்து உடைக்கப்பட்ட மேற்கு வங்க மாநில  BSNLEU சங்க அலுவலகம் 

கல்கத்தாவில் உள்ள  மேற்கு வங்க மாநில 
BSNLEU சங்க அலுவலகம் 19/08/2016 அன்று
 திரிணமுல் குண்டர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. 

கேடு கெட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தை 
நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 
 ஆட்களை அடிப்பதாலோ... அலுவலகத்தை நொறுக்குவதாலோ..
ஒரு இயக்கத்தை யாரும் முடக்கி விட முடியாது. 
மாறாக அது முன்னிலும் வீறு கொண்டுதான் எழும். 
இதுதான் காலம் காலமாக நாம் காணும் வரலாறு. 

கல்கத்தா என்பது கோபம் கொண்ட  காளியின் இருப்பிடம்
தற்போது குரோதம் கொண்ட  காலிகளின் இருப்பிடமாக மாறி வருகிறது.
இந்தக் கோழைத்தனத்தை எதிர்த்து இன்று 24/08/2016 நாடு முழுவதும் BSNLEU  சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. 

சக சங்கம் என்ற முறையில்.. சகோதரச்சங்கம் என்ற முறையில் 
நமது தார்மீக ஆதரவை வெளிப்படுத்துவது நமது கடமையாகும். 
காரைக்குடியில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 
நாமும் பங்கு பெறுகிறோம்...

தொழிற்சங்கங்கள் தொண்டர்களால் வளர்க்கப்படுவது...
குண்டர்களால் அல்ல... 
தீ விபத்து...

நேற்று 23/08/2016 மதியம் இராமநாதபுரத்தில் 
மின்னல் தாக்கியதால் MBM  தொலைபேசி நிலையம்   
தீப்பற்றி எரிந்து கருவிகள் முற்றிலுமாக   சேதமாகின. 
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயணைத்தனர். 
நமது சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இடி... மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகளை
  நம்மால் தடுத்து நிறுத்த இயலாது. 
அதே நேரம் பாதுகாப்பு வழிமுறைகள் உரிய
 கவனத்துடன் பின்பற்றப்படவில்லை என்பதுவும், 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அசட்டைத்தனமும் காரணம்  
என்பதுவும்   இராமநாதபுரம் தோழர்களின் வருத்தமாகும். 

ஒரு சிறிய மாவட்டத்தில் 
மிகப்பெரிய பொருள் இழப்பும்... 
வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது 
நமக்கு மிகப்பெரிய கவலையாகும். 

முன்னை இட்ட தீ முப்புரத்திலே...
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே..
என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகள்  போல்...
நமக்கு  உணவளிக்கும் அன்னை போன்ற 
இந்த நிறுவனத்தில் மூண்ட தீயை  
நம் அடிவயிற்றில் மூண்ட தீயாகவே உணர்கிறோம்.

வருங்காலங்களிலாவது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
 பின்பற்றப்பட வேண்டும் என்பதுவே நமது வேண்டுகோள்.

Monday, 22 August 2016

வாழ்த்துக்கள் 

78.2 உரிமையை  வென்ற... 
60:40 கொடுமையைக்கொன்ற..
 மூத்தோர்களின்... 
ஓய்வூதியத்தைக் காத்தோர்களின்..

AIBSNLPWA 
ஓய்வூதியர் நலச்சங்கத்தின்...
தமிழ் மாநில மாநாடு 

ஆகஸ்ட் - 23 & 24 - கோவை 

சீரோடும்...சிறப்போடும்..
  நடைபெற வாழ்த்துகிறோம்...
BSNL... பெருவிற்பனைத் திருவிழா 

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம் 
ஆகஸ்ட்  - 24
50 இடங்களில்.. 
பெருவிற்பனைத் திருவிழா 

இலவச சிம்கள் 
இனிய சலுகைகள் 

 தரை வழித்தொலைபேசி  
வெறும் 49 ரூபாய் வாடகையில்...

துண்டிக்கப்பட்ட தொலைபேசி 
மறுப்பில்லாமல் மறுஇணைப்பு 
பொறுப்போடு குறைகள் தீர்ப்பு... 

விற்பனைத் திருவிழா..
வெற்றித்திருவிழாவாகட்டும்..
தோழர்களே...உரமுடன் செயல்படுவீர்... 

Sunday, 21 August 2016

ஆறிலே... ஒன்றும்... ஆயிரத்திலே.. ஒன்றும்..
பிரதமர் மோடிக்கு கைப்பந்து வீராங்கனை பூஜா  கடைசியாக எழுதிய கடிதம்


உலகில் ஆறில் ஒருவன் இந்தியன்...
ஒலிம்பிக்கில் ஆயிரத்தில் ஒருவன் இந்தியன்...

உலக மக்கள் தொகை 735 கோடி...
இந்திய மக்கள் தொகை 130 கோடி...

ஒலிம்பிக்கில் மொத்தப் பதக்கங்கள்  2102...
இந்தியா பெற்ற பதக்..கங்கள்  வெறும்  2...
கடைசி இலக்கத்தை எப்படியோ.. 
கணக்காய்ப் பெற்று விட்டோம்...

140 கோடிப் பேரைப்  பெற்றெடுத்த  சீனா பெற்றது 70...
130 கோடிப் பேரைப் பெற்றெடுத்த  இந்தியா பெற்றது 2..

2016 போனால் போகட்டும்...  
2020 ஒலிம்பிக்கில்... 
சத்தியமாக சீனாவை முந்திவிடுவோம்...
பதக்க வீரர்களாக அல்ல... பாலூட்டிகளாக...

சிந்துவிற்கும்... சாக்ஷிக்கும்  கோடிகள் குவிகிறது...
ஏதோ ஒரு கோடியில்... 
பஞ்சாபில் வாழ்ந்த கைப்பந்து வீராங்கனை.. 
பூஜா உடலில் வெள்ளைக்கோடி இறுதியாக வீழ்கிறது...

பூஜா தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை...
விடுதிக்கட்டணம் கட்ட முடியாமல் 
விடை பெற்றுச் சென்று விட்டார்...

இது கூஜாக்களின் தேசம்...
பூஜாக்களுக்கான தேசமல்ல...

தனது நிலை யாருக்கும் வேண்டாம் என...
பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு...
பூஜா எமனிடம் போய்ச் சேர்ந்து விட்டார்...

பெற்ற  இரண்டு பதக்கங்களை விட..
பிரிந்து விட்ட ஒரு உயிர்...
நம் நெஞ்சை வதைக்கிறது...

இந்த தேசம் வெற்றி பெற்றவனை மட்டுமே 
தலையில் வைத்துக் கூத்தாடும்...

திறமை இருந்தாலும்... நேர்மை இருந்தாலும்..
எளியவனைத்  தரையில் போட்டுப் பந்தாடும்...

அரசியல் விளையாட்டாகிப்போன தேசமிது...
விளையாட்டும் அரசியலாகிப்போன நாசமிது...

நேர்மையும்... திறமையும்.. என்று மதிக்கப்படுகிறதோ...
அன்றுதான் இந்த தேசத்தின் தலை நிமிரும்...
பாதகங்கள் அகலும்... பதக்கங்கள் குவியும்...
அதுவரை பூஜாக்கள் கதை தொடரும்...
நேர்மையின் இமயம்..
தோழர்.ஜீவா 

மதுரையிலே மாநாடு...
சிறப்பாக நடத்தி முடிக்கிறார் ஜீவா...
மறுநாள் தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே 
மயங்கி விழுகிறார்... காரணம் பட்டினி...
தோழர்கள் மயக்கத்தைத் தெளிவிக்கின்றனர்...
அப்போது... மாநாட்டுக்குப் பந்தல் போட்டவர் வந்து நிற்கிறார்...
தன் அரைக்கால் சட்டைப்பையிலிருந்து...
பணத்தை எடுத்து பந்தல் போட்ட தோழரிடம் நீட்டுகிறார்... ஜீவா...

" இந்தப் பணத்தில் நீங்கள் சாப்பிட்டிருக்கலாமே?
பணத்தை வைத்துக்கொண்டே  பட்டினி கிடந்தது சரியா?
என தோழர்கள் கோபம் கலந்த பாசத்துடன் கேட்கின்றனர்...

"இது... என் பணம் அல்ல... கட்சியின் பணம்...
இது சாப்பிடுவதற்கு அல்ல... சரியான இடத்தில் சேர்ப்பதற்கு"...
என்று ஜீவா அமைதியாகச் சொல்கிறார்...

இதுதான் ஜீவா...

இன்றும் இயக்கங்கள் உள்ளன...
மாநாடுகளும் ஆடம்பரமாக  நடக்கின்றன...
தலைவர்களும் மயக்கத்திற்கு ஆளாகின்றனர்... 
ஆனால் பசி  மயக்கத்தால்  அல்ல...
உண்ட மயக்கத்தால்...

இன்று  ஜீவா...  இல்லை... 
தலைவர்களிடம்... 
நேர்மை என்னும் ஜீவன் இல்லை...

நேர்மையின் அகரமாய்...
நேர்மையின்  சிகரமாய்...
இன்றும்.. என்றும்.. 
நேர்மையாளர்கள் நெஞ்சில் வாழும்.. 
தோழர்  ஜீவாவின் புகழ் போற்றுவோம்.... 

ஆகஸ்ட்..21...
தோழர்.ஜீவா பிறந்த நாள்...

Saturday, 20 August 2016

வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் 

18/08/2016 அன்று காரைக்குடி 
ஐந்து விளக்குப் பகுதியில் 
AITUC மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட
தொழிற்சங்கங்களின் சார்பாக 
செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்த
 விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

 AITUC மாநிலக்குழு உறுப்பினர் 
தோழர். பழ. இராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். 
ஒப்பந்த ஊழியர்கள்   சங்க மாவட்டச்செயலர் 
தோழர். முருகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.