Sunday, 14 August 2016

மலருமா?.. மணிப்பூர் ... மலர்கள்
காங்லா கோட்டை முன் நிர்வாணமாக
அறப்போராட்டம்  நடத்தும் அன்னையர் 

இரோம் ஷர்மிளாவின் படத்தை
வாஞ்சையுடன் துடைக்கும் மணிப்பூர்வாசி 

2016 ஆகஸ்ட் - 9
இரும்பு ஒன்று இளகிய நாள்...
ஆம்... 16 ஆண்டுகள் அண்ணல் வழியில் 
அறப்போராட்டம் செய்த இரோம் ஷர்மிளா என்ற
மணிப்பூரின்  இரும்புப் பெண்மணி..
தனது அறப்போராட்டத்தை ஒரு துளி தேனில்...
முடிவு காணாமலே முடித்துக்கொண்டார்...
ஷர்மிளாவின் 16 ஆண்டு போராட்டத்திற்குப் பின் 
மணிப்பூரின் 70 ஆண்டு கால போராட்ட வரலாறு உண்டு...


மணிப்பூர்...
இந்தியாவின் ஏழு சகோதரிகள் எனப்படும் 
அசாம்... அருணாச்சல பிரதேசம்...மணிப்பூர்... 
மேகாலயா.. மிசோரம்... நாகலாந்து...திரிபுரா...  ஆகிய
வடகிழக்கு மாநிலங்களில் ஓர் சகோதரி...

1947...
இந்திய விடுதலையின் போது மணிப்பூர் 
மன்னராட்சியின் கீழ் இருந்தது...

1949... 
மன்னர் புதசந்திரா மணிப்பூரை இந்தியாவுடன் இணைத்தார்...
ஆனால் மக்கள் தனி நாடாக இருக்கவே ஆசைப்பட்டார்கள்...
அது நடக்காத நிலையில் சுயாட்சி கொண்ட தனி நாடு என்னும் 
கோரிக்கையை  வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்...
அமைதியாக ஆரம்பித்த போராட்டம் 
ஆயுதப் போராட்டமாக மாறியது...

1958...
மணிப்பூர் மக்களை அடக்கி ஒடுக்க நினைத்த மத்திய அரசு..
AFSPA  என்ற ARMED FORCES SPECIAL POWER ACT..
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இயற்றியது...
இந்த சட்டத்தின்படி இராணுவம் சந்தேகப்படும் 
எவரையும் கைது செய்யலாம்..
விசாரணை இல்லாமலேயே தண்டனை கொடுக்கலாம்...

இந்த சட்டம்.. 
1942ல் வெள்ளையனே... வெளியேறு இயக்கத்தை ஒடுக்க 
வெள்ளைக்காரன் இயற்றிய கொடுமைக்கார சட்டத்தின் 
அசல் ஜெராக்ஸ்  என்பதை..
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

இது வரை மணிப்பூரில்... 
1528 பேர் எந்த விசாரணையுமின்றி கொல்லப்பட்டுள்ளார்கள்...
நூற்றுக்கணக்கான இளம்பெண்கள்.. 
இராணுவ வல்லூறுகளால்  வல்லுறவில் அழிக்கப்பட்டுள்ளார்கள்...
ஆறு மாதம் மட்டுமே இந்த சட்டம் அமுலில் இருக்கும் என்று 
அன்றைய மத்திய அரசு கூறியது...
ஆனால் 58 ஆண்டுகளாகியும் சட்டம் விலக்கப்படவில்லை..

1997...
நாகா மக்கள் இயக்கம் இந்த சட்டத்தை விலக்கக்கோரி..
உச்ச நீதிமன்றத்தை நாடினர்...
உச்ச நீதிமன்றமும் இவர்களுக்கு உதவவில்லை..
அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது...

2000...
இம்பால்  பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 
அப்பாவிகள்  பத்துப்பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்...
ஐந்து பேருக்கு மேல் மணிப்பூரில் கூடி நின்றால்..
அவர்களுக்கு இராணுவம் சாவு மணியடிக்கும்...
இதுதான் மணிப்பூரில் இன்றளவும் உள்ள சட்டம்...

இந்த கொடுமைக்கார சட்டத்தை நீக்கக் கோரி...
சமூக அக்கறையுள்ள பெண்ணான இரோம் சானு ஷர்மிளா...
அண்ணல் அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்...
இராணுவ பூட்ஸ் கால்கள் தங்கள் மண்ணை விட்டு செல்லும்வரை 
தனது கரங்கள்   உணவைத்தொடாது  என சூளுரைத்தார்..
ஆண்டுகள் உருண்டோடின...


2004...ஜூலை.. 10..
தங்ஜம் மனோரமா என்ற இளம்பெண்ணை...
அவர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாய் உள்ளார் என்று கூறி 
இராணுவம் விசாரணைக்கு அழைத்துச் சென்றது...
அன்று மாலை அவரது நிர்வாண உடல் அனாதையாய்..
மணிப்பூர் மண்ணில் கிடந்தது...
உடலெங்கும் காயங்கள்...
வல்லுறவு வன்மத்தின் அடையாளங்கள்...
மனோரமாவின் தாய் கதறினார்... கண்ணீர் விட்டார்..
கேட்பதற்கு நாதியில்லை... கேட்டால் உயிரில்லை..
கொடுமை கண்ட தாயுள்ளங்கள் ஒன்று கூடின..
கொடுமை எதிர்க்கத் துணிந்தனர்...

2004 ஜூலை 15...
உலகம் இந்திய தேசத்தை இழிவாகப் பார்த்தது...
மனசாட்சி கொண்ட மனிதன் வெட்கித்தலை குனிந்தான்..

இராணுவத்தலைமையிடமான.. 
காங்லா இரும்புக் கோட்டை முன்...
காளியாய்.. நீலியாய்... நிர்வாணமாய்...  
துணிவு கொண்ட தாய்மார்கள் தங்கள் 
துணிகளைக் களைந்தனர்...

"ஏ... இந்திய இராணுவமே.. 
உனக்குத் தேவை சதைதானே...
இதோ எடுத்துக்கொள்... 
ஆனால் எங்கள் மகள்களை மட்டும் விட்டு விடு.."
என்று ஆவேசக் குரலெப்பினர்...
மனசாட்சி உள்ள மனிதர்கள்  வெட்கித்தலை குனிந்தனர்...

தொடந்து நான்கு ஆண்டுகளாய் உண்ணாவிரதம் இருந்த 
ஷர்மிளாவின் மனம் மேற்கண்ட கொடுமை கண்டு...
இன்னும் உறுதியானது...
ஆயினும் கொடுமைக்கார சட்டம் 
மணிப்பூர் மண்ணை விட்டு அகலவில்லை...

இந்தியா ஒரு கற்பழிப்பு தேசம் - என்ற
ஆவணப்படம் மணிப்பூர் மங்கையர்களின் சோகம் சொன்னது...
உலகம் முழுவதும் மணிப்பூரின் உண்மை நிலை தெரிந்தது...

2013...
ஐ.நா., சபையின் பிரதிநிதி 
ரஷீதா மன்ச்சூ மணிப்பூர் வந்தார்.. 
மனோரமாவின் தாயை சந்தித்தார்...
மனோரமாவின் வீட்டை விட்டு வெளியே வந்த அவரை 
ஊடகங்கள் சந்தித்தன... கேள்விகள் எழுப்பின...
அவரோ.. கேவிக்கேவி அழுதார்...
மனோரமாவிற்கு நேர்ந்த கொடுமை 
அவரை வெகுவாக வதைத்தது..
ஒரு ஐநா சபையின் பிரதிநிதி வாய் விட்டு அழுதது...
மணிப்பூரின் மானங்கெட்ட நிலையை பறை சாற்றியது...

இன்று... 2016
இந்திய தேசம் தனது 70வது விடுதலையைக் கொண்டாடுகிறது...
செங்கோட்டையில் பிரதமர்களும்...
ஜார்ஜ் கோட்டையில் முதல்வர்களும் 
கூண்டுக்குள் நின்று கொடியேற்றுவார்கள்...
டில்லி ராஜவீதியில் அணிவகுப்பு நடைபெறும்...
அதில் மணிப்பூரின் பழங்குடியினரும்.. 
ஆடல் பாடலோடு அணிவகுத்து செல்வர்...

ஆளும் தலைவர்கள் மணிப்பூர் சென்றால்..
மணிப்பூர் தொப்பிகளை  அணிந்து கொள்வர்...
மணிப்பூர் மக்களோடு நடனமாடுவர்...
ஆனால் யாரும்
மணிப்பூர் மக்களின் மனதில் உறங்கும்
உண்மையை தொட்டுப் பார்க்க மாட்டார்கள்...
அங்கே கனன்று கொண்டிருக்கும் 
கோபக்கனலை அணைக்க முயல மாட்டார்கள்...

பாவம்... மணிப்பூர் ஷர்மிளா...
மணிப்பூரின் மக்கள் மனதில் நிறைந்த அவருக்கு..
இந்த தேசத்தில்.. 
அகிம்சைக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை 
அவர் உணர்ந்து கொள்ள பதினாறு ஆண்டுகள் ஆனது..

நான் மணிப்பூரின் முதல்வர் ஆவேன்...
மணிப்பூரின் உரிமைகளை வென்றெடுப்பேன்..
என்று அவர் உறுதிபடக்கூறுகிறார்...

மணிப்பூரில் மாற்றம் வருமா? 
என்பதுவே இன்றைய கேள்வி...
மணிப்பூரிலும் மாற்றம் வந்துள்ளது..
அது.. 2004ம் ஆண்டு தாய்மார்கள் 
எந்த காங்லா கோட்டை முன்பு நிர்வாணமாய் 
இராணுவத்திற்கு எதிராய் போராடினார்களோ...
அந்த காங்லா கோட்டை காலி செய்யப்பட்டு..
காங்லா பூங்காவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

காங்லா இராணுவக் கோட்டை..  
காங்லா பூங்காவாக மாற்றம் பெற்றது போல்.. 
மணிப்பூர் அமைதிப் பூங்காவாக மாறுமா?
என்பதுதான் இன்றைய மணிப்பூர் மக்களின் கேள்வி..

மணிப்பூரின் லெஹோய் மலர்கள்.. 
அழகியவை... ஆனந்தம் தருபவை...
லெஹோய் மலர்கள்.. 
மீண்டும் மணிப்பூரில் மலருமா?
மலர்ந்து மனம் வீசுமா?
இதுவே 
விடுதலைத் திருநாளில் 
இந்தியன்  என்ற முறையில் நமது கேள்வி...

காங்லா  பூங்கா முன்பு அன்று
நிர்வாணப் போராட்டம் நடத்திய தாய்மார்கள் இன்று...

No comments:

Post a Comment