Wednesday, 30 September 2015

அக்டோபர் -  1
BSNL உதய தினம் 

நம் சிரம் நிமிர.. 
நம் தரம் உயர.. 
நம் குலம் வளர..
நம்மைக் காத்து நிற்கும்.. 
கண்மணியாம் BSNLஐ.. 
கரம் கோர்த்து.. நாம் 
காத்து நிற்போம்...
அனைவருக்கும் 
BSNL உதய தின 
நல்வாழ்த்துக்கள் 
==================================
காரைக்குடி அனைத்து அதிகாரிகள்  
ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக
 
BSNL உதய தின 
சிறப்பு வாயிற்கூட்டம் 

01/10/2015 - வியாழன்  - மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி. 
தோழர்களே... வருக...
அக்டோபர்  2015
IDA  உயர்வு 

01/10/2015 முதல் 
5.3 சத IDA  
உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்தப்புள்ளிகள்  
107.9 ஆகும்.

புதுவை..  
வாகை சூடிய தோழர்களுக்கு 
வாழ்த்துக்கள் 
29/09/2015 அன்று நடைபெற்ற 
புதுவை மாவட்ட மாநாட்டில்  
புதிய நிர்வாகிகள் தேர்வில் 
கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால் 
ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற்றது. 
தோழர். காமராஜ் அவர்களின் தலைமை ஏற்று 
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

மாவட்டத்தலைவர் : தோழர்.தண்டபாணி 
மாவட்டச்செயலர் :  தோழர்.செல்வரங்கன் 
மாவட்டப்பொருளர் : தோழர்.தேவதாஸ் 

ஆகியோர் தலைமையிலான
 புதிய நிர்வாகிகள்  சிறப்புடன் 
செயல்பட  நமது வாழ்த்துக்கள்.
============      =====================      ============

போர் வெறி கொண்ட 
அன்றைய அசோக மன்னன் 
கலிங்க நாட்டில் காட்டாறாய் ஓடிய 
ஆயிரமாயிரம்  வீரர்களின் 
குருதி கண்ட பின்பு 
குற்றம் உணர்ந்தான்..
 போர் வெறி தணிந்தான்..
சங்கம் சரணம் என சரணடைந்தான்.
இது வரலாறு..

அசோக ராஜ்ஜியம் என்பது.. 
எதிர்த்து வாழ்வதல்ல..
எதிரியையும் ஏற்று வாழ்வது...

வரலாற்றிலும்... வாழ்க்கையிலும்...
வாய்மையை....
எதிர்ப்பவர்கள் வீழ்கிறார்கள்..
ஏற்பவர்கள் வாழ்கிறார்கள்...

Tuesday, 29 September 2015

வாழ்க... வளமுடன் 

இன்று 30/09/2015
பணி நிறைவு பெறும் 
NFTE  காரைக்குடி 
புறநகர்க்கிளையின்  தலைவர் 

உயரத்திலே அகத்தியர்..
அகத்திலே உயர்ந்தவர்..
பணியில்.. பண்பில்.. சீர்முகம் 
கொள்கையில்.. கொடியில் ஓர்முகம்...

தோழர். 
வீ . ஆறுமுகம் 

TTA அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
என்றும் ஏறுமுகமாக  விளங்க 
அன்புடன் வாழ்த்துகின்றோம்.
---------------------------------------------------------------------------------
பணி  நிறைவு பாராட்டு விழா  மற்றும் 
தோழர்.ஆறுமுகம் வழங்கும்  நன்றியுரைப்பு விழா 

04/10/2015 - ஞாயிறு - காலை 10 மணி - அமராவதி மகால் - காரைக்குடி. 
தோழர்களே... வருக...

Monday, 28 September 2015

மாமணியை மறுதலிப்போமோ...

பத்தாண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற தோழர் ஒருவர் 
நம்மை அலைபேசியில் அழைத்தார். தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவருக்கு இலாக்கா செலவில் வைத்தியம் செய்வதற்கான  வழிமுறைகள் பற்றியும்  வினவினார். 

இதெல்லாம் ஒரு செய்தியா? என நீங்கள் கேட்கலாம்.
அவர் நம்மை அலைபேசியில் அழைத்துப் பேசியது செய்தியல்ல... 
அவரது அலைபேசி எண்தான் நமக்கு செய்தீ..
ஒரு தனியார் அலைபேசியை அவர் உபயோகிக்கிறார்..
காரணம் கேட்ட போது..
தனது மகன், மகள்  மற்றும் பேரன் பேத்திகள் 
குறிப்பிட்ட தனியார் செல் சேவையைப் பயன்படுத்துவதால் 
தானும் அதைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.

நீங்கள் உங்கள் குடும்பத்தாரை
நமது BSNL செல்களைப் பயன்படுத்துமாறு கூறலாமே? 
என்று கேட்டதற்கு
தனது பகுதியில் BSNL செல் சேவை 
சரிவர இல்லை என்று நொண்டிச்சாக்கு கூறினார்.

தோழர்களே...
இவரது  கதை... ஒரு சோற்றுப்பதம்தான்..
இவரைப்போலவே..
நமது தோழர்கள் பலர் தனியார் செல்சேவையை
கூச்ச நாச்சமின்றி  பயன்படுத்துகின்றார்கள் என்பதை 
வேதனையோடு நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.  

ஓய்வு பெற்ற இன்னொரு தோழர் தனது பணிக்காலத்தில் 
சங்கத்திற்கு 5 ரூபாய் சந்தா கொடுக்கக்கூட வக்கற்று வாழ்ந்தவர். 
இன்று அவரது மகன், மகள் இருவரும் 
வெளிநாட்டிலே அமோகமாக வாழ்கின்றனர். 
அவர்களுடன் உரையாட 
அவர்களுடன் தொடர்பு கொள்ள  
முழுக்க முழுக்க தனியார் சேவையைத்தான் 
அவர் பயன்படுத்துகின்றார்.  ஏனென்று கேட்ட போது 
"உங்கள் BSNLஐக் கொண்டு போய் குப்பையில் போடுங்கள்" 
என்று திமிருடன் பதில் கூறுகிறார். 

குப்பையாய் இருந்த இவரது வாழ்வு 
கோபுரமாய் உயர்ந்ததற்கு காரணம் BSNL..
அடிப்படைக் கல்வி கூட இல்லாத 
இவருக்கு நிரந்தரப் பணி வழங்கி 
பதவி உயர்வு வழங்கி..
பொதுத்துறையில் ஒய்வு பெற்ற பின்னும் 
மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்கி 
இவரது  வாழ்வைக் காத்து 
இவரது பிள்ளைகள் வாழ்வை வளப்படுத்திய 
இந்த நிறுவனத்தை 
நமது BSNL என்று  சொல்லக்கூட  இவரால் இயலவில்லை.
நம்மைப் பார்த்து உங்கள் BSNL என்று கூறுகிறார்.
இத்தகைய நன்றி மறந்தவர்களை நினைக்கையிலே நமது 
இரத்த நாளங்கள் தானாகவே சூடாகின்றன..

தோழர்களே...
இன்றைய BSNL.. 
நேற்றையத் தொலைத்தொடர்புத்துறை..
ஆயிரமாயிரம் அடிமட்ட ஊழியர்களின்  பசி போக்கிய 
மணிமேகலையின் அட்சயப் பாத்திரம் ...
இலட்சக்கணக்கான குடும்பங்களையும் 
அவர்களது வாரிசுகளையும் 
தலை நிமிர்ந்து வாழ வைத்த 
ஆபுத்திரன் கை அமுத சுரபி...
உழைப்பிற்கும்... தகுதிக்கும்
உரிய மரியாதை தந்த உன்னத அமைப்பு..

இதில் பணி புரிபவர்களும் சரி..
பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களும் சரி..
இதன் சேவையைப் பயன்படுத்தாமல் 
தனியார் சேவையைப் பயன்படுத்துவது..
நன்றி கொன்ற செயலாகும்...
காரணங்கள் ஆயிரம் சொன்னாலும்..
நம் காதுகள் அதற்கு இடம் கொடாது...

நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்..
என்றான் பாரதி..

நாம்.. 
பணியாற்றிய.. பணியாற்றும்
BSNL  நமதென்பதறிவோம்.... 

இதோ.. ஆண்டுகள் 15 ஆகி BSNL 
ஆலமரம் போல் விரிந்து நிற்கிறது..
அதன் நிழலில் சுகம் தேடிய நாம் 
அதன் வேரில் வெந்நீர் ஊற்றாமல் 
விழுதுகளாய் நின்று தாங்கி நிற்போம்..
நம் வாழ்வை  மலரச்செய்த..
மாமணியைக் கண்மணி போல் காத்து நிற்போம்..
வாழ்க.. BSNL.. வளர்க... BSNL..
புதுமை படைக்கட்டும் புதுவை..

இன்று 29/09/2015 நடைபெறும் 
NFTE  
புதுவை மாவட்ட மாநாடு
வெற்றி பெற 
நமது வாழ்த்துக்கள்...

அண்ணல் காந்தி 
அவதார தினத்தன்று 
NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
வேதனையுடன் வழங்கும்

சிறப்பு சிந்தனைப் பட்டிமன்றம் 
--------------------------------------------------------------------------------------------------------------------
02/10/2015 - வெள்ளிக்கிழமை - மாலை 5 மணி 
தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றம் 
தேவகோட்டை. 
-----------------------------------------------------------------------------------------------------------------

தேவகோட்டை பகுதியில் 
BSNL சேவை சீரழிவுக்கு 
யார்... காரணம்?

தலமட்ட நிர்வாகமா ?  
மாவட்ட  நிர்வாகமா ?

 -: நடுவர் :- 
தோழர். சி. முருகன் 

தலமட்ட நிர்வாகமே...  என்ற அணியில் 

தோழர். நாகநாதன் TM - அணித்தலைவர் 
தோழர். பாலமுருகன் TTA 
தோழர். மாரி AO 

மாவட்ட நிர்வாகமே... என்ற அணியில் 

தோழர். லால் பகதூர் TM  - அணித்தலைவர் 
தோழர். தமிழ்மாறன் TTA 
தோழர். சுபேதார் அலிகான் SR.TOA 


தோழர்களே... வாரீர்.. வாரீர்...

Sunday, 27 September 2015

செப்டம்பர் - 27
பகத்சிங் பிறந்த நாள் 

இன்று மறைந்து 
நாளை பிறப்பேன்...
இன்குலாப் முழக்கமிட்டு...
இந்தியத்தாயின் மடியில்...
இந்திய இளைஞர்களின் வடிவில்...

Saturday, 26 September 2015

NFTE 
 தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
மத்திய செயற்குழு 
============================================================
01/11/2015 முதல் 03/11/2015 வரை 
அவுரங்கபாத் - மகராஷ்டிரா மாநிலம் 

- : தலைமை :- 
தோழர்.இஸ்லாம் அகமது 
அகில இந்தியத்தலைவர் 

- : ஆய்படு பொருள் :- 

  • அமைப்பு நிலை 
  • ஊழியர் பிரச்சினைகள் 
  • DELOITTEE குழு பரிந்துரை 
  • BSNL புத்தாக்கம் 
  • MTNL - BSNL  இணைப்பு 
  • செல் கோபுரங்கள் தனி நிறுவனம் 
  • போனஸ் 
  • ஏனைய பிரச்சினைகள் 

Friday, 25 September 2015

NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
அறந்தாங்கி 
==============================
கிளை மாநாடு 
==============================
27/09/2015 - ஞாயிறு  - காலை 09.00 மணி 
மேனா அரங்கம்  - தொலைபேசி நிலையம் அருகில் 
அறந்தாங்கி.
==============================

-: தலைமை :- 
தோழர்.விஜயன் - கிளைத்தலைவர் 

 -: வரவேற்புரை :- 
தோழர்.பவுல்ராஜ் - கிளைச்செயலர் 

 -: சிறப்புரை :- 
தோழர்.பட்டாபிராமன் 
மாநிலச்செயலர் - NFTE 

பங்கேற்பு : தோழர்கள் 
தண்டாயுதபாணி - AIYF 
செங்கோடன் - AITUC 
பெரியசாமி - AITUC 
மாதவன் - AIKS 
பழனியப்பன் - NFTE
நடராஜன் - NFTE  
சண்முகம் - NFTE 
சுந்தரம் - NFTE 
மாரி - NFTE 
மற்றும் முன்னணித் தோழர்கள்... 

தோழர்களே... வருக...
NFTE அறந்தைக்கிளை.
தமிழ் மாநில செயற்குழு 
மயிலாடுதுறை 

நமது தமிழ் மாநில செயற்குழு 23/09/2015 அன்று 
மயிலாடுதுறையில் மாநிலத்தலைவர்
 தோழர்.இலட்சம் அவர்கள்
தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 

பணி நிறைவு  பெற்ற 
மாநிலத்தலைவர்.இலட்சம் 
அகில இந்தியச்செயலர். தோழர்.கோபால கிருஷ்ணன் 
சிறப்பு அழைப்பாளர். தோழர். கிருஷ்ணகிரி முனியன் 
மாநில உதவித்தலைவர். தோழர். திருச்சி மனோகரன் 
ஆகியோரின் சங்கப்பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது.

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி 
நடந்து முடிந்த வேலை நிறுத்தங்கள் 
BSNL புத்தாக்கப்பணிகள் 
செல்கோபுரங்கள் பிரிப்பு 
அகன்ற அலைவரிசைப் பழுது நீக்கத்திற்கு தனியார்  அனுமதிப்பு..
பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் 
மற்றும் வரவிருக்கும் ஊழியர் சரிபார்ப்பு 
ஆகியன பற்றி தமது கருத்துக்களை 
தெளிவுபட, திறம்பட  எடுத்துரைத்தார்.

மாவட்டச்செயலர்கள், மாநிலச்சங்க நிர்வாகிகள் 
மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள்.ஜெயபால்,சேது 
ஆகியோரும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன...

வரும் 01/10/2015 - BSNL தினத்தை 
கிளைகள் தோறும் கொண்டாடுவது.

பகுதிவாரிக் கிளைச்செயலர்கள் கூட்டத்தை
 அக்டோபருக்குள்  நடத்துவது.

இந்த ஆண்டு தற்காலிகப் போனஸ் பெற 
முழு முயற்சிகள் மேற்கொள்வது..

TTA மற்றும் TM இலாக்காத்தேர்வு எழுத 
நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை தளர்த்துவது.

JAO காலியிடங்களில் தேர்வு பெற்ற தோழர்களுக்கு
 தற்காலிகப் பதவி உயர்வு வழங்குவது...

மாநில மாநாட்டை வேலூர்,சேலம் அல்லது 
கடலூர் மாவட்டங்களில் நடத்துவது..

வாழ்த்துக்களும்... பாராட்டுக்களும்..

செப்டம்பர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட
 அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

TTA தோழர்களுக்கு ஒரு ஆண்டு உயர்வுத்தொகை கிடைக்க 
வகை செய்த மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள்... 
இது மற்ற கேடர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்...

பதவிப்பெயர் மாற்றம் செய்ததில் நமது மத்திய சங்கத்தின் 
பங்கு பாராட்டுக்குரியது. அதே நேரத்தில்
 எழுத்தர் கேடருக்கு உரிய பெயர் மாற்றம் செய்திடல் வேண்டும்.. 

பயிற்சிக்கால உதவித்தொகையை உயர்த்த பாடுபட்ட 
மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள்.. 

பல்வேறு வழக்குகளால் பின்னடைவு பெற்ற   JTO தேர்வு முடிவுகளை இறுதியில் வெளியிட வைத்த
 மத்திய சங்கத்திற்கு நன்றிகள்...

நீண்ட நாட்களாக JTO பதவியில் தற்காலிகப் பதவி உயர்வு வகிக்கும் 
TTA  தோழர்களுக்கு நிரந்தரப் பதவி உயர்வுக்கு வழி செய்த 
மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள்...

தோழர்களே...
இடைவிடாத செவிக்குணவு... 
இன்சுவை மாறாத  அறுசுவையுணவு...
என நமது மாநில செயற்குழு 
பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து 
பாங்குடன்.. பயனுடன்   முடிவுற்றது....
மயிலாடுதுறைக்கு வந்தோர்.. 
மனம் நிறை பேறு பெற்றோர்...
செப்டம்பர் - 25
உடுமலை நாராயணகவி 
பிறந்தநாள் 
பகுத்தறிவுக் கவிஞர்
உடுமலை நாராயணகவி
 

உடுமலை நாராயணகவி 
பகுத்தறிவு வளர..
பாமரர் தெளிவு பெற..
பாட்டெழுதிய கவிஞன்...

ஏற்றுக்கொள்ளாது எவரது பகுத்தறிவும்..
நான்காம் வகுப்பு படித்துவிட்டு 
நாட்டு மக்களுக்காக நாராயணகவி..
பத்தாயிரம் பகுத்தறிவு பாடல்கள் 
எழுதிய கதை கேட்டால்...

இச்சை சொல்பவனும் 
நச்சை விதைப்பவனுமே 
இன்றைய கவிஞர்கள்..  

சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்.. 
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்.. 
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது  ஏது?
ஒன்னுலேயிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... 

காலத்தால் அழியாத.. 
காவியப்பாடல்கள் தந்த.. 
நாராயணகவி புகழ் போற்றுவோம்...

Thursday, 24 September 2015

போனஸ்... போராட்டம் 

BSNL அதிகாரிகள் 
மற்றும் ஊழியர்களுக்கு 
தற்காலிக   போனஸ் வழங்கக்கோரி 

BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் 
ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பாக 

06/10/2015 - செவ்வாய் 
நாடு தழுவிய  ஆர்ப்பாட்டம் 

போனஸ்.. போராடிப் பெற்ற நமது உரிமை...
மீண்டும் போராடிப்பெறுவது..  நமது.. கடமை...
போராடுவோம்... போனஸ் பெறுவோம்..
தயாராவீர்... தோழர்களே...
எழுக... வெல்க...
புதிய தலைமுறை...
குடந்தை மாவட்டத்தலைவர் தோழர்.கணேசன்
மாவட்டச்செயலர் தோழர்.விஜய் ஆரோக்கிய ராஜ் 

ஆறுபடை கொண்ட குடந்தையின் ..
NFTE  மாவட்ட மாநாடு...
ஆரவார ஏற்பாடுகளோடு... 
ஆறுவேளை அறுசுவை உணவோடு...
22/09/2015 அன்று மயிலாடுதுறையில்...
சீரோடும்.. சிறப்போடும்.. நடந்து முடிந்துள்ளது..

மாவட்ட மாநாட்டில் 
ஒரு மனதாய்.. முழுமனதாய்... இளமனதாய்.. 
தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்டத்தலைவர்கணேசன் 
மாவட்டச்செயலர்.  விஜய் ஆரோக்கிய ராஜ் 
மாவட்டப்பொருளர். பாலமுருகன் 
ஆகியோரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
================================================

தொலைபேசியில்...
பேசிப் பேசி...
சங்கம் வளர்த்து அந்தக்காலம்.. 
facebookல்.. 
சங்கம்  வளர்ப்பது இந்தக்காலம்..

இன்றைய தொழிலாளிக்கு... 
அரிவாளும் சுத்தியலும் வேண்டும்..
அறிவால் அறிவியலால் இணைந்திடும்.. 
முகநூலும்... இணையதளமும்... வேண்டும்...

பாரம்பரியமிக்க குடந்தையின்..
புதிய தலைமுறையாய்..
பொறுப்பேற்றுள்ள தோழர்.விஜய் அவர்களை 
பாரதியின் வரிகளால் வாழ்த்துகிறோம்...
வாழ்க... வளர்க... வெல்க...

ஒளிபடைத்த கண்ணினாய்       வா... வா... வா...
உறுதி கொண்ட நெஞ்சினாய்    வா... வா... வா...
களிபடைத்த மொழியினாய்      வா... வா... வா...
கடுமை கொண்ட தோளினாய்  வா... வா... வா...
தெளிவு பெற்ற மதியினாய்        வா... வா... வா...
சிறுமை கண்டு பொங்குவாய்    வா... வா... வா...
எளிமை கண்டு இறங்குவாய்    வா... வா... வா...
ஏறு போல் நடையினாய்             வா... வா... வா...
இளைய பாரதத்தினாய்               வா... வா... வா...

அன்பு வாழ்த்துக்களுடன் 
NFTE  காரைக்குடி மாவட்டச்சங்கம்.
புனித 
ஹஜ் பெருநாள் 
நல்வாழ்த்துக்கள் 

அனைவருக்கும் 
பக்ரீத் 
தியாகத்திருநாள் 
நல்வாழ்த்துக்கள்..

Monday, 21 September 2015

          பெரியாரும்...            பிள்ளையாரும்...

2015 செப்டம்பர் 17 
வினை தீர்க்கும் விநாயகருக்கும் 
விலங்கொடித்த  பெரியாருக்கும் 
விருப்பமான நாளாக அமைந்து விட்டது.
கூடவே..
உலகின்  கவர்ச்சித்தலைவர் என்று புகழப்படும் 
நமது பாரதப்பிரதமர் திரு.மோடி அவர்களுக்கும் 
செப்டம்பர் 17 பிறந்த நாளாக அமைந்து விட்டது.

செப்டம்பர் 17 அன்று...

பிள்ளையார்பட்டி தொட்டு... 
பட்டி தொட்டி எங்கும்.. 
பிள்ளையார் மணம்  கமழ்ந்தது...
பாவம் நம் பெரியார்... 
ஓரிரு சுவரொட்டிகளில் மட்டுமே 
தெருவிலே  தென்பட்டார்...
பாரதப்பிரதமரோ.. 
பலவித கவர்ச்சி வண்ணங்களில்... 
தெருவெல்லாம் கண்பட்டார்...
இதுவெல்லாம் நமக்கு 
அதிர்ச்சியோ.. ஆச்சரியமோ.. தரவில்லை..

நாம் நமது சொந்த ஊரைச்சுற்றி ஊர் வலம் வந்தபோது 
குருவிகளை வேட்டையாடிப்பிழைக்கும் 
குருவிக்காரத்தோழர்கள்..
வசிக்கும் பகுதிகளில் கண்ட காட்சி...
சுள்ளென்று நமது  மண்டையில்.. 
காட்டுத்தீயாகக்  கடுமையாகப் பற்றியது...

குருவிக்கார மக்களின் குடியிருப்பில் அவர்கள் 
குடியிருப்புக்களை விட உயரமாக 
குத்துக்காலிட்டு குதூகலமாக 
PLASTER OF PARIS என்னும் 
சுண்ணாம்புக்கலவையில் 
விண்ணுயர விளங்கி நின்றார் விநாயகர்...
விநாயகரின் காலடியில்..
அமைப்பு இந்து முன்னணி என்று 
அமர்க்களமாக எழுதப்பட்டிருந்தது..

அதைப்பார்த்தவுடன்.. 

நமது சிந்தனை பின்னோக்கி சிறகடித்தது..
நாங்கள் மாணவர்களாக அரசுப்பள்ளியில் பயின்றபோது 
நமது குருவிக்கார மக்கள் குடியிருக்கும் வழியாகத்தான் செல்வோம்..
அப்போதெல்லாம் அவர்களுக்கு குடியிருப்பு என்று ஒன்றும் இல்லை..
குருவிகளுக்கும் கூடு உண்டு..
குருவி பிடிக்கும் இவர்களுக்கு ஒரு கூடு கிடையாது..
நான்கைந்து புளிய மரங்கள்.. இடையிடையே கருவை மரங்கள்..
கோடையிலும்.. மழையிலும் அதுவே அவர்களின் குடியிருப்பு...

தமிழகத்தில் மாற்றம் பிறந்தது...

எம்.ஜி.ஆர் ஆட்சி மலர்ந்தது...
எங்கள் பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்த எம்.ஜி.ஆர் 
குருவிக்கார மக்கள் குடியிருக்க 
குடியிருப்பு இல்லாத நிலை கண்டார்...
உடனடியாக அவர்களுக்கு அரசு செலவில் 
உறைவிடம் கட்டித்தர உத்தரவிட்டார்...

புளியமரங்கள் வீழ்ந்தன.. 

புண்ணியவான் உதவியால் 
புதிய குடியிருப்பு எழுந்தது..

குருவிக்கார மக்களுக்கு இரண்டு குல தெய்வங்கள்..
இருவருமே மதுரை வீரன்கள்தான்...
ஓன்று ஒரிஜினல் குலசாமி  மதுரை வீரன்..
அடுத்தது ஒளிவிளக்கு நாயகன் எம்.ஜி.ஆர்...

இந்த இருவரைத் தவிர..
எவரையும் இவர்கள் வணங்குவதில்லை 
வணங்கி நாங்கள்  பார்த்ததில்லை...

குடியிருக்க வழி பிறந்த பின்புதான்...
பள்ளி செல்ல இவர்களில்  சிலருக்கு வழி  பிறந்தது...
குருவிகளை குறி வைப்பதை குறைத்தார்கள்..
பல்தொழில் கற்றார்கள்..
பகலெல்லாம் உழைத்தார்கள்...
பகட்டில்லா வாழ்வு கொண்டார்கள்...
இதுதான் நம் குருவிக்கார மக்களைப் பற்றிய சிறு குறிப்பு..

மண்ணின் சாமி மதுரை வீரனை 
மட்டுமே வணங்கிய இவர்கள்..
இன்று...
வடநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 
வல்லப  விநாயகரை வணங்குவது  
வாடிக்கையாகவும் தெரியவில்லை..
வேடிக்கையாகவும் தெரியவில்லை..
அவர்களிடமே கேட்டோம்..
அவர்கள் சொன்னார்கள்...

எங்களிடம் இந்த ஆண்டு வந்த 
இந்து முன்னணியினர்...
"ஏராளமான பிள்ளையார் சிலைகளை  
இங்கே வரவழைத்துள்ளோம்...
உங்களது குடியிருப்பிலும்..
ஒரு  பிள்ளையாரை வைக்க வேண்டும்...
பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்.. 
நாங்கள்  உங்களுக்குப் பண உதவி செய்கிறோம்... 
என்று அழுத்தமாக சொன்னபோது 
மனமில்லாமலும்... மறுக்க இயலாமலும்.. 
ஏற்றுக்கொண்டோம்...என்று சொன்னார்கள்...

வலை விரித்துக் குருவி பிடிக்கும்
வஞ்சனையில்லா  மக்களை..
வலை வீசிப்பிடித்து விட்டது   வஞ்சகக்கூட்டம்...

பிள்ளையாரைக் கும்பிடப்பணம் தருபவர்கள் 
மதுரை வீரனைக் கும்பிட பணம் தருவதுண்டா ?
என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டோம்...
காலம் முழுக்க கடன் வாங்கித்தான்.. 
எங்கள் மதுரை வீரனைக்  கும்பிட்டோம்... 
என்று சொன்னார்கள்... நமது தோழர்கள்..


பிறப்பால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு..
பிள்ளையார் பிரதானமாகி விட்டாரா?
வீச்சரிவாள் பிடித்த வீரத்தின் அடையாளம்.. 
மதுரை வீரன்  மறக்கடிக்கப்படுகிறானா?
என்ற கேள்வி நம்முன்  எழுந்தது...

குருவி பிடிக்கும் தொழிலைக் கொண்ட  நமது தோழர்கள்...
அன்று  ஆடு மாடுகளைப் போல் நடத்தப்பட்டவர்கள்
மனிதர்களாலேயே மறுக்கப்பட்டவர்கள்...
மரங்களின் கீழே மனம் நொந்து வாழ்ந்தவர்கள்...

இன்று... இவர்கள்.. 
உண்மையாய் உழைப்பவர்கள்.. 
ஓரடி முன்னேறியவர்கள்..
சிறிதேனும் சிந்திக்கத் தெரிந்தவர்கள்..

இவர்களின் இந்த முன்னேற்றத்திற்கு 
மூலகாரணம் யார்?

முதுகு  வளைந்தவனை..
கூனல் விழுந்தவனை ...
நிமிர வைத்தது யார்?
மூலப்பொருள் பிள்ளையாரா?
மூத்திரப்பை சுமந்த பெரியாரா?

புழுதியில் கிடந்தவனை..

புத்திக்கூர்மை  இல்லாதவனை.. 
புத்தகத்தை தொட வைத்தது.. யார்? 
வினைதீர்க்கும் பிள்ளையாரா?  
அடிமை... 
விலங்கொடித்த  பெரியாரா?

உறைவிடம் இல்லாதவனை.. 
உண்டிக்கு வழி தெரியாதவனை.. 
உத்தியோகம் பார்க்க வைத்தது யார்?
உலகைச் சுற்றமுடியாத பிள்ளையாரா?
உயிருள்ளவரை  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 
ஊரும் உலகமும் சுற்றிய பெரியாரா?

பெரியாரை வணங்க வேண்டிய கரங்கள்.. 
பிள்ளையாரை வணங்கும் காரணங்கள்  என்ன?
மதவெறிகளின் மயக்க மையில்.. 
மதவெறிகளின் கோரக் கையில்..
மக்கள் மாட்டிக்கொள்ளும் மர்மம் என்ன?

திலகர் அன்று...

தேசத்தின் அடிமை விலங்கொடிக்க..
சுதந்திர உணர்ச்சியை மக்களுக்கு ஊட்ட... 
பிரிட்டிஷ் கண்ணில் மண்ணைத்தூவப் பிள்ளையாரை... 
தேசத்தின் தேவைக்காக தோளில் சுமந்தார்..

கடவுள் என்பது கற்பனை..
கடவுளை வணங்குவது.. 
காட்டுமிராண்டித்தனம்.. என 
கடுமையாகப்  பிரச்சாரம் செய்தார்.. 
பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார்.. 
1953ல்.. பிள்ளையார் சிலையை உடைத்து.. 
கல்லுக்குள்ளே கடவுள் இல்லை என்று கற்பித்தார்..

இன்றோ..

விநாயகர் விற்பனைப்பொருளாகி விட்டார்..
அருமையான லாபம் தரும்..
வியாபாரப்பொருளாகி விட்டார்...

கையடக்க களிமண் பிள்ளையார் 
காணாமல் போய்விட்டார்...
சுண்ணாம்பு பிள்ளையாரோ.. 
அண்ணாந்து பார்க்கும்.. 
அளவில் வந்துவிட்டார்...

PLASTER OF PARIS BUSINESS என்னும் 
சுண்ணாம்பு வியாபாரம்... 
கடவுள் புண்ணியத்தால்..
சூடு பிடித்து நிற்கிறது...

அடிமட்ட மக்களும் கூட..
மதமயக்கத்தில்... மதவாதிகள்  நெருக்கடியில் 
சுண்ணாம்புப்பிள்ளையாரை...   
வாங்க வேண்டிய சூழல் இங்கே நிலவுகிறது...

தோழர்களே...
பாரத நாடு பழம்பெரும் நாடு 
நீரதன் புதல்வர்.. நினைவகற்றாதீர்..
என்று பாடினான் பாரதி...

பழம்பெரும் பாரத தேசத்தின்...
தொன்று தொட்ட நம் மக்களின் 
தொன்மங்கள்...  
இன்று.. மதங்களின் பெயரால் 
இங்கே அழிக்கப்படுகின்றன...

இந்த தேசம் எங்கே செல்கிறது?
ஆண்டாண்டு காலம் நாடாண்டவர்களும்..
சுமரியாதைக்காரர்களும்...
பகுத்தறிவுவாதிகளும்...
சமுதாயச்சிந்தனையாளர்களும்...
பொதுவுடைமைவாதிகளும்.. 
முற்போக்கு வாதிகளும்...
எங்கே சென்று விட்டார்கள்?

பெரியாரை மறந்து விட்டார்களா?
அல்லது...
பிடித்து வைத்த பிள்ளையார் போல்..
எல்லோரும் ஆகிவிட்டார்களா?
23/09/2015     
தமிழ் மாநில செயற்குழு 

தமிழ் மாநில செயற்குழு 

23/09/2015 - புதன்கிழமை 
காலை 9.30 மணி 
இராஜேஸ்வரி திருமண மண்டபம் 
மயிலாடுதுறை.
------------------------------------------------------------------------
தோழர்.வெ.மாரி - மாநில அமைப்புச்செயலராகவும் 
தோழர். பா.லால் பகதூர் -  மாவட்டச்செயலராகவும் 
மாநிலச்செயற்குழுவில்  கலந்து கொள்வர்.
பக்ரீத் பண்டிகை 
விடுமுறைத் தேதி  மாற்றம் 

25/09/2015 அன்று   
அறிவிக்கப்பட்டிருந்த 
பக்ரீத் பண்டிகை விடுமுறை

24/09/2015 
அன்று விடுமுறையென  
 BSNL  நிர்வாகத்தால் 
தேதி மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரங்கல் 
தோழர். D.J.J.பெத்தேல் ராஜ் 
ஒன்றுபட்ட NFTE  இயக்க 
முன்னணித் தோழராகப் பணியாற்றியவரும் 
KG போஸ் அணியின் தலைவர்களில்
ஒருவருமாக விளங்கிய 

அருமைத்தோழர்.
 D.J.J.பெத்தேல் ராஜ் 

அவர்களின் மறைவிற்கு
 நமது ஆழ்ந்த இரங்கலை
 உரித்தாகுகின்றோம்.

Sunday, 20 September 2015

வெல்க... வெல்க..

ஜெயம்  கொண்டது குடந்தை...
எதிலும் விஜய் கண்டது குடந்தை...
குளம் கண்ட கும்பகோணத்தில் 
தொழிலாளருக்காக..
களம் கண்ட
NFTE இயக்கத்தின் 
மாவட்ட மாநாடு...
வென்றிட நமது வாழ்த்துக்கள்...

தலைமுறை வளரட்டும்...
தரமிக  தொடரட்டும்...

அன்பு வாழ்த்துக்களுடன்...
NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்.
இரங்கல் 

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
கணக்கு அதிகாரியாகப் பணிபுரியும் 
தோழியர்.தேன்மொழி முருகேசன் அவர்களின் 

அன்புக்கணவர் - தோழர்
சுப.முருகேசன் 

அவர்கள் 20/09/2015 - ஞாயிறு அன்று 
திடீர் உடல் நலக்குறைவால் 
உறங்கும்போதே  இயற்கை எய்தினார்.

நமது ஆழ்ந்த வேதனையையும் 
இரங்கலையும்  உரித்தாகுகின்றோம்.

தோழர்.முருகேசன் அவர்கள்
 அமைதியும்.. அன்பும் 
ஒருங்கே அமையப்பெற்ற பண்பாளர்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளாக 
தனது துணைவியாரை 
நாள்தோறும் காலையும் மாலையும் 
அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் 
 கொண்டு வந்து விட்டு..
 மீண்டும் அழைத்துச்செல்லும்..
பணியை தவறாமல் செய்து வந்தார்.

அதனாலேயே நமது தோழர்கள் 
 அனைவருக்கும்  அன்பானவராகவும் 
நெருக்கமானவராகவும் விளங்கினார்...

 ஈடில்லா இழப்பிற்கும், 
அதிர்ச்சிக்கும்  ஆளான..
 தோழியர்.தேன்மொழி அவர்களின் 
துயரத்தில் பங்கு கொள்கிறோம்... 
நாமும்  துயரம் கொள்கிறோம்...
---------------------------------------------------------------------------------
நல்லடக்கம் 21/09/2015  
மாலை காரைக்குடியில் நடைபெறும்.