Monday, 28 September 2015

மாமணியை மறுதலிப்போமோ...

பத்தாண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற தோழர் ஒருவர் 
நம்மை அலைபேசியில் அழைத்தார். தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவருக்கு இலாக்கா செலவில் வைத்தியம் செய்வதற்கான  வழிமுறைகள் பற்றியும்  வினவினார். 

இதெல்லாம் ஒரு செய்தியா? என நீங்கள் கேட்கலாம்.
அவர் நம்மை அலைபேசியில் அழைத்துப் பேசியது செய்தியல்ல... 
அவரது அலைபேசி எண்தான் நமக்கு செய்தீ..
ஒரு தனியார் அலைபேசியை அவர் உபயோகிக்கிறார்..
காரணம் கேட்ட போது..
தனது மகன், மகள்  மற்றும் பேரன் பேத்திகள் 
குறிப்பிட்ட தனியார் செல் சேவையைப் பயன்படுத்துவதால் 
தானும் அதைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.

நீங்கள் உங்கள் குடும்பத்தாரை
நமது BSNL செல்களைப் பயன்படுத்துமாறு கூறலாமே? 
என்று கேட்டதற்கு
தனது பகுதியில் BSNL செல் சேவை 
சரிவர இல்லை என்று நொண்டிச்சாக்கு கூறினார்.

தோழர்களே...
இவரது  கதை... ஒரு சோற்றுப்பதம்தான்..
இவரைப்போலவே..
நமது தோழர்கள் பலர் தனியார் செல்சேவையை
கூச்ச நாச்சமின்றி  பயன்படுத்துகின்றார்கள் என்பதை 
வேதனையோடு நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.  

ஓய்வு பெற்ற இன்னொரு தோழர் தனது பணிக்காலத்தில் 
சங்கத்திற்கு 5 ரூபாய் சந்தா கொடுக்கக்கூட வக்கற்று வாழ்ந்தவர். 
இன்று அவரது மகன், மகள் இருவரும் 
வெளிநாட்டிலே அமோகமாக வாழ்கின்றனர். 
அவர்களுடன் உரையாட 
அவர்களுடன் தொடர்பு கொள்ள  
முழுக்க முழுக்க தனியார் சேவையைத்தான் 
அவர் பயன்படுத்துகின்றார்.  ஏனென்று கேட்ட போது 
"உங்கள் BSNLஐக் கொண்டு போய் குப்பையில் போடுங்கள்" 
என்று திமிருடன் பதில் கூறுகிறார். 

குப்பையாய் இருந்த இவரது வாழ்வு 
கோபுரமாய் உயர்ந்ததற்கு காரணம் BSNL..
அடிப்படைக் கல்வி கூட இல்லாத 
இவருக்கு நிரந்தரப் பணி வழங்கி 
பதவி உயர்வு வழங்கி..
பொதுத்துறையில் ஒய்வு பெற்ற பின்னும் 
மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்கி 
இவரது  வாழ்வைக் காத்து 
இவரது பிள்ளைகள் வாழ்வை வளப்படுத்திய 
இந்த நிறுவனத்தை 
நமது BSNL என்று  சொல்லக்கூட  இவரால் இயலவில்லை.
நம்மைப் பார்த்து உங்கள் BSNL என்று கூறுகிறார்.
இத்தகைய நன்றி மறந்தவர்களை நினைக்கையிலே நமது 
இரத்த நாளங்கள் தானாகவே சூடாகின்றன..

தோழர்களே...
இன்றைய BSNL.. 
நேற்றையத் தொலைத்தொடர்புத்துறை..
ஆயிரமாயிரம் அடிமட்ட ஊழியர்களின்  பசி போக்கிய 
மணிமேகலையின் அட்சயப் பாத்திரம் ...
இலட்சக்கணக்கான குடும்பங்களையும் 
அவர்களது வாரிசுகளையும் 
தலை நிமிர்ந்து வாழ வைத்த 
ஆபுத்திரன் கை அமுத சுரபி...
உழைப்பிற்கும்... தகுதிக்கும்
உரிய மரியாதை தந்த உன்னத அமைப்பு..

இதில் பணி புரிபவர்களும் சரி..
பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களும் சரி..
இதன் சேவையைப் பயன்படுத்தாமல் 
தனியார் சேவையைப் பயன்படுத்துவது..
நன்றி கொன்ற செயலாகும்...
காரணங்கள் ஆயிரம் சொன்னாலும்..
நம் காதுகள் அதற்கு இடம் கொடாது...

நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்..
என்றான் பாரதி..

நாம்.. 
பணியாற்றிய.. பணியாற்றும்
BSNL  நமதென்பதறிவோம்.... 

இதோ.. ஆண்டுகள் 15 ஆகி BSNL 
ஆலமரம் போல் விரிந்து நிற்கிறது..
அதன் நிழலில் சுகம் தேடிய நாம் 
அதன் வேரில் வெந்நீர் ஊற்றாமல் 
விழுதுகளாய் நின்று தாங்கி நிற்போம்..
நம் வாழ்வை  மலரச்செய்த..
மாமணியைக் கண்மணி போல் காத்து நிற்போம்..
வாழ்க.. BSNL.. வளர்க... BSNL..

9 comments:

  1. arumaiyana pathivu..idhai parthavadhu sila janmangal thirunthinal sari...

    ReplyDelete
  2. நன்றி. மிக மிக அருமையான தேவையான பதிவு. ஒவ்வொரு கிளையிலும் அச்சிட்டு தகவல் பலகையிலே இடவேண்டும். தவிர, இந்த மாதிரி துரோகிகளை நம் நண்பர்கள் வட்டத்திலிருந்து ஒதுக்கியும் வைக்கவேண்டும். தனியார் சிம்களை மட்டுமா பயன்படுத்துகிறார்கள்? நம்மில் பலர் தனியார் நிறுவனங்களுக்கு சற்றேனும் கூச்சமில்லாமல் பணியும் அல்லவா செய்கிறார்கள்? இராமநாதபுரத்தில் ஒரு ஊழியரின் கைங்கர்யத்தினால் ஒரே நாளில் நம் தரைவழி இணைப்புகள் பல சரண்டர் ஆகி, அவர்கள் எல்லாரும் ஏர்டெல்லுக்கு மாறிய கதையும் நடந்தது!

    ReplyDelete
  3. இதில் இன்னுமொரு வேதனை தோழர், தற்பொழுது பணியில் இருக்கும் சில தோழர்கள் கூட தனியார் அலை பேசியை தான் பயன் படுத்துகின்றனர். சொல்லும் பதில் என் மகன் அல்லது மகள் கேட்க மறுக்கின்றார்கள் என்று சொல்கின்றனர். அந்த மாமணியின் பெயரையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிடவும். நறுக் என்று 4 வார்த்தை கேட்க வேண்டும் போல தோன்றுகின்றது . நன்றி

    ReplyDelete
  4. அதை விட கொடுமை நமது தொலைபேசி எண்ணை மாற்றாமல் அப்படியே தனியார் நிறுவனத்திற்கு மாற்றி இருக்கின்றனர். மேற்கூறியதை விட இது மிக கொடுமை,,,,,,,,,,

    ReplyDelete
  5. நன்றி கொன்றவருக்கு இதுவொரு சாட்டையடியான செய்தி. ஆனால், நீங்கள் சொல்லியது போன்ற நபர்கள் நமது துறையில் நிறையப் பேர் இருக்கிறார்கள். பலருக்கு இது தவறான செயலாகவே படவில்லை என்பதே உண்மை. உங்களின் சுட்டிக்காட்டல் நிச்சயம் பலரையும் மாற்றும். TOWER, சிக்னல் சரியில்லை என்பது எல்லா நிறுவனத்துக்கும் பொருத்தமான ஒன்று. அப்படியே இருந்தாலும் DUAL SIM வைத்துக்கொண்டு, நமது சிக்னல் கிடைக்காதபோது மற்ற NET WORK ஐப் பயன்படுத்தலாமே! நமது நெட்வொர்க்கில் மட்டுமே உள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம் - இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை எந்த கம்பெனி செல்லுக்கும் இலவசமாகப் பேசிடலாம் என்பதும், நாடு முழுவதும் ரோமிங் இலவசம் என்பதும், அதோடு வரும் 01-10-2015 முதல் இன்டர்நெட் வேகம் 4 மடங்காக அதிகரிக்கப் போகிறது அதே கட்டணத்தில் என்பதும் எப்பேர்ப்பட்ட செய்தி. அதுவும் நமக்கு 60% தள்ளுபடி விலையில்.

    மாறாத தோழர் மாரி, கோபத்தில் எதையும் வாரி வீசாமல், பாரியைப் போல் வாரி வழங்கிய சேதி நமது BSNL ஐ ஒளிரவைக்கும் ஜோதி. வாழ்த்துக்கள் தலைவா!
    அன்புடன், எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

    ReplyDelete
  6. In fact our speed is superior than any network,but due to false propaganda by private networks and cell shops we are loosing lots of customers

    ReplyDelete
  7. நிச்சயம் அவர்களின் கன்னத்தில் ஐந்து விரல் பதிந்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ...சொக்கன் முதுகில் பட்ட பிரம்படி என விழட்டும் bsnl மறந்தோர் முதுகில் - குடந்தை விஜய்

    ReplyDelete