Wednesday, 9 September 2015

போர்கள்.. முடியலாம்..
போர்க்களங்கள்..  முடிவதில்லை...
ஒரு பதவி..  ஒரே ஓய்வூதியம்.. OROP 
உலகின் உயரமான இடத்தில் OROP
தங்கள் கோரிக்கை சொல்லும் இராணுவ வீரர்கள் 

தேசத்திற்காக  உயிரையும் கொடுக்கும் கூட்டம்..
கோரிக்கைக்காக குரல் கொடுக்கும் அவலம்..

" நான் நறுமணம் கமழும் வாசமலர்..
எனக்கு... 
அழகைப் போற்றும் பெண்களின்  
கூந்தலில்  இடம் வேண்டாம்.. 
உலகைக்காக்கும் கடவுளின்... 
கழுத்திலும் நான் மாலையாக வேண்டாம்...
காலம் முடித்து இறுதிப்பயணம் செல்லும்...
சவத்தோடும்  நான் உடன் செல்ல வேண்டாம்..
அதோ..
இன்னுயிர் கொடுத்தும்.
இந்த தேசம் காக்க.. 
இறுமாப்புடன்  செல்கிறானே.. 
இந்திய தேசத்து இராணுவ வீரன்..
இவனது பூட்ஸ் காலில் 
மிதிபட்டு கசங்கி மடியவே நான் விரும்புகிறேன்"

மேலே கண்டது..
ஒரு மலரின் ஆசை என்ற கவிதையில்
இந்திக்கவிஞர் சரண்குப்தா எழுதியது.
இதை விட சிறப்பாக 
ஒரு இராணுவ வீரனைப் போற்றும் வரிகள் இருக்க முடியாது...


ஆனால் அத்தகைய இராணுவ வீரர்கள்
நாட்டுக்காகப் பாடுபட்ட ஜீவன்கள் 
நாற்பது ஆண்டுகள் தங்களது
"ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்"
" ONE RANK ONE PENSION "
என்ற கோரிக்கைக்காகப் போராடி
அதையும் முழுமையாக அடைய முடியாமல்..
போனதுதான் இந்த தேசத்தின் பெரும் அவலமாகும்.

இராணுவத்தில் பணிபுரிபவர்கள் குறிப்பாக சிப்பாய்கள் 
தங்களது 37 வயதில் இராணுவத்தில் இருந்து
கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பப்படுகின்றார்கள். 
காரணம் அந்த வயதுக்கு மேல் அவர்களுக்கு 
உடல் திறன் உறுதியோடு இருக்காது என்பதால். 
37 வயது வரை அவர்கள் கரும்பாய் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். 
இரும்பான அவர்கள் மேனி இற்றுப்போகும்  நேரம்
அவர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பப்படுகிறார்கள்.
 40 வயதுக்கு மேல்தான் ஒரு மனிதனின் குடும்பச்சுமை கூடுகிறது.. 
அந்த வயதில் ஓய்வுக்குப்பின் அவர்களுக்கு மீண்டும்  
அரசுப்பணி கிடைப்பதென்பது இன்று அரிதாகி விட்டது. 
ஏதேனும் ஒரு அலுவலகத்திலோ.. நிறுவனத்திலோ 
காவல் பணி செய்து 
வருவோர் போவோருக்கு வணக்கம் வைத்து 
வயிறு காக்கும் நிலைதான்  இன்று இந்த தேசத்தில் நிலவுகிறது. 
ஓய்வுக்குப்பின் பணி என்பதுதான் இவர்களுக்கு உத்திரவாதமில்லை. 
இராணுவத்தில் பணி செய்த நாட்களுக்காவது 
உருப்படியான ஓய்வூதியம் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  
இந்த ஓய்வூதியப்பிரச்சினைதான் 
கடந்த 40 ஆண்டுகளாக அவர்களை உலுக்கி வந்தது.

நமது தேசத்தில் குறிப்பாக  பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 
ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் 
இராணுவப்பணி மேற்கொள்ளும் நிலை இருக்கிறது.
உதாரணத்துக்கு..
ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்களும் இராணுவத்தில் 
சிப்பாயாகப் பணி புரிந்தவர்கள் என்று வைத்துக்கொண்டால்...

மூத்தவர் 17 ஆண்டுகள் பணி முடித்து
2005ல் ஓய்வு பெறுகிறார்..
அவருக்கு இன்று கிடைக்கக் கூடிய ஓய்வூதியம் மாதம் ரூ.11,000/=

இரண்டாவது சகோதரர் 17 ஆண்டுகள் பணி முடித்து
2010ல் பணி ஓய்வு பெறுகிறார்.
அவருக்கு இன்று கிடைக்கக் கூடிய ஓய்வூதியம் மாதம் ரூ.13,700/=

மூன்றாவது சகோதரர் 17 ஆண்டுகள் பணி முடித்து
2015ல் பணி ஓய்வு பெறுகிறார்.
அவருக்கு இன்று கிடைக்கக் கூடிய ஓய்வூதியம் மாதம் ரூ.15,400/=

மூத்தவருக்கும் இளையவருக்கும் ஓய்வூதிய வேறுபாடு  ரூ.4,400/=
மூத்தவருக்கும் நடுவருக்கும்  ஓய்வூதிய வேறுபாடு ரூ.2,700/=
நடுவருக்கும் இளையவருக்கும் ஓய்வூதிய வேறுபாடு ரூ.1700/=

மூன்று சகோதரர்களும்..
ஒரே பதவியில்.. ஒரே கால அளவில் 
இராணுவத்தில்  பணி புரிந்து ஓய்வு பெற்றாலும்..
அவர்கள் வாங்கக்கூடிய ஓய்வூதியம்
ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டதாக உள்ளது.

இதுவே மூன்று சகோதரர்களும்  MAJOR GENERAL எனப்படும்
இராணுவ  அதிகாரிகளாகப் பணிபுரிந்து  ஓய்வு பெற்றிருந்தால்
மூத்தவருக்கும் இளையவருக்கும் உள்ள
ஓய்வூதிய வேறுபாடு மாதம் ரூ.18,000/= ஆகும்.

இந்த வேறுபாட்டைக் களைய வேண்டித்தான்
ஒரு பதவிக்கு ஒரே சமமான ஓய்வூதியம் 
என்ற கோரிக்கையை முன்னிறுத்தி
நமது முன்னாள் இராணுவவீரர்கள் 
போர்க்களத்தை விட வேகமாகப் போராடினார்கள்.

அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற
அப்போதிருந்த நம்மூர் ப.சிதம்பரம் அவர்கள் 
500 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கினார்.
ஆனால் அது 
பசித்த யானைக்குப் பாப்கார்ன் 
கொடுத்த கதையாகி  விட்டது.

தற்போதைய அரசின் கணக்குப்படி 
ஏறத்தாழ 25 இலட்சம் ஓய்வூதியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 
சுமார் 10000 கோடிக்கும் மேலாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
எனவேதான் தேர்தல் நேரத்தில் வாக்கு கொடுத்தும்
"மன் கி பாத்" நிகழ்ச்சியில் உறுதி அளித்தும்...
அவர்களது கோரிக்கையை முழுமையாக  நிறைவேற்ற
நமது பிரதமரால் முடியவில்லை.
நிதியைப்பற்றி  அரசு கவலைப்பட்டதால்..
தன் உயிரைப்பற்றிக் கவலை கொள்ளாமல்
பணி புரிந்த இராணுவ வீரர்களின் கோரிக்கை நீர்த்துப் போனது.

குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 
ஓய்வூதியம் திருத்தப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
ஆனால் அரசு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் 
 ஓய்வூதியம்  திருத்தப்படும் என கூறியுள்ளது.

01/04/2014  முதல் நிலுவை என்பது வீரர்களின் கோரிக்கை...
01/07/2014 முதல் நிலுவை என்பது அரசின் உத்திரவாதம்..
சம்பளத்தின் அதிகபட்சத்தில் MAXIMUM
ஓய்வூதியம் கணக்கிடப்பட வேண்டும் என்பது கோரிக்கை..
குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்சம் இவற்றின் சராசரியில் 
ஓய்வூதியம் கணக்கிடப்படும் என்பது அரசின் நிலை..
இதற்காக.. தனிநபர் குழு ஒன்றும் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே அரசின் கோரிக்கையையும், நிர்ப்பந்தத்தையும் ஏற்று 
தங்களது போராட்டத்தை முடித்துள்ளனர் முன்னாள் இராணுவ வீரர்கள்.

நமது முன்னாள் இராணுவத்தோழர்களின் ..
நாற்பது ஆண்டுகால போர் தற்போது முடிந்துள்ளது..
ஆனால் போராட்டக்களம் இன்னும் முடியவில்லை...

உழைக்கும் வர்க்கத்தின் போர்கள் முடிவடைகின்றன..
ஆனால்... உழைப்பாளிகளின் போர்க்களங்கள் 
ஒரு போதும் இந்தப் பூவுலகில் முடிவதில்லை..
===============================================

நமது துறையில்..
நமது மூத்த தோழர்கள் தங்களுடைய
78.2 IDA இணைப்பிற்காக 
தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
BSNL நிர்வாகமும் DOTயும் விளக்கங்கள் 
கேட்டே காலத்தை வீணாக்குகின்றன..
மூத்த தோழர்கள் இன்னும் 
போர்க்கோலம் கொள்ளவில்லை 
போராட்டக்களம் காணவில்லை...
போராடியே  வராத உரிமைகள்...
நிச்சயம் வாதாடி வரப்போவதில்லை...
முன்னாள் இராணுவ வீரர்கள் நமது 
மூத்த தோழர்களுக்கு 
முன்மாதிரியாக விளங்கட்டும்...

No comments:

Post a Comment