Monday 21 September 2015

          பெரியாரும்...            பிள்ளையாரும்...

2015 செப்டம்பர் 17 
வினை தீர்க்கும் விநாயகருக்கும் 
விலங்கொடித்த  பெரியாருக்கும் 
விருப்பமான நாளாக அமைந்து விட்டது.
கூடவே..
உலகின்  கவர்ச்சித்தலைவர் என்று புகழப்படும் 
நமது பாரதப்பிரதமர் திரு.மோடி அவர்களுக்கும் 
செப்டம்பர் 17 பிறந்த நாளாக அமைந்து விட்டது.

செப்டம்பர் 17 அன்று...

பிள்ளையார்பட்டி தொட்டு... 
பட்டி தொட்டி எங்கும்.. 
பிள்ளையார் மணம்  கமழ்ந்தது...
பாவம் நம் பெரியார்... 
ஓரிரு சுவரொட்டிகளில் மட்டுமே 
தெருவிலே  தென்பட்டார்...
பாரதப்பிரதமரோ.. 
பலவித கவர்ச்சி வண்ணங்களில்... 
தெருவெல்லாம் கண்பட்டார்...
இதுவெல்லாம் நமக்கு 
அதிர்ச்சியோ.. ஆச்சரியமோ.. தரவில்லை..

நாம் நமது சொந்த ஊரைச்சுற்றி ஊர் வலம் வந்தபோது 
குருவிகளை வேட்டையாடிப்பிழைக்கும் 
குருவிக்காரத்தோழர்கள்..
வசிக்கும் பகுதிகளில் கண்ட காட்சி...
சுள்ளென்று நமது  மண்டையில்.. 
காட்டுத்தீயாகக்  கடுமையாகப் பற்றியது...

குருவிக்கார மக்களின் குடியிருப்பில் அவர்கள் 
குடியிருப்புக்களை விட உயரமாக 
குத்துக்காலிட்டு குதூகலமாக 
PLASTER OF PARIS என்னும் 
சுண்ணாம்புக்கலவையில் 
விண்ணுயர விளங்கி நின்றார் விநாயகர்...
விநாயகரின் காலடியில்..
அமைப்பு இந்து முன்னணி என்று 
அமர்க்களமாக எழுதப்பட்டிருந்தது..

அதைப்பார்த்தவுடன்.. 

நமது சிந்தனை பின்னோக்கி சிறகடித்தது..
நாங்கள் மாணவர்களாக அரசுப்பள்ளியில் பயின்றபோது 
நமது குருவிக்கார மக்கள் குடியிருக்கும் வழியாகத்தான் செல்வோம்..
அப்போதெல்லாம் அவர்களுக்கு குடியிருப்பு என்று ஒன்றும் இல்லை..
குருவிகளுக்கும் கூடு உண்டு..
குருவி பிடிக்கும் இவர்களுக்கு ஒரு கூடு கிடையாது..
நான்கைந்து புளிய மரங்கள்.. இடையிடையே கருவை மரங்கள்..
கோடையிலும்.. மழையிலும் அதுவே அவர்களின் குடியிருப்பு...

தமிழகத்தில் மாற்றம் பிறந்தது...

எம்.ஜி.ஆர் ஆட்சி மலர்ந்தது...
எங்கள் பகுதிக்கு சுற்றுப்பயணம் வந்த எம்.ஜி.ஆர் 
குருவிக்கார மக்கள் குடியிருக்க 
குடியிருப்பு இல்லாத நிலை கண்டார்...
உடனடியாக அவர்களுக்கு அரசு செலவில் 
உறைவிடம் கட்டித்தர உத்தரவிட்டார்...

புளியமரங்கள் வீழ்ந்தன.. 

புண்ணியவான் உதவியால் 
புதிய குடியிருப்பு எழுந்தது..

குருவிக்கார மக்களுக்கு இரண்டு குல தெய்வங்கள்..
இருவருமே மதுரை வீரன்கள்தான்...
ஓன்று ஒரிஜினல் குலசாமி  மதுரை வீரன்..
அடுத்தது ஒளிவிளக்கு நாயகன் எம்.ஜி.ஆர்...

இந்த இருவரைத் தவிர..
எவரையும் இவர்கள் வணங்குவதில்லை 
வணங்கி நாங்கள்  பார்த்ததில்லை...

குடியிருக்க வழி பிறந்த பின்புதான்...
பள்ளி செல்ல இவர்களில்  சிலருக்கு வழி  பிறந்தது...
குருவிகளை குறி வைப்பதை குறைத்தார்கள்..
பல்தொழில் கற்றார்கள்..
பகலெல்லாம் உழைத்தார்கள்...
பகட்டில்லா வாழ்வு கொண்டார்கள்...
இதுதான் நம் குருவிக்கார மக்களைப் பற்றிய சிறு குறிப்பு..

மண்ணின் சாமி மதுரை வீரனை 
மட்டுமே வணங்கிய இவர்கள்..
இன்று...
வடநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 
வல்லப  விநாயகரை வணங்குவது  
வாடிக்கையாகவும் தெரியவில்லை..
வேடிக்கையாகவும் தெரியவில்லை..
அவர்களிடமே கேட்டோம்..
அவர்கள் சொன்னார்கள்...

எங்களிடம் இந்த ஆண்டு வந்த 
இந்து முன்னணியினர்...
"ஏராளமான பிள்ளையார் சிலைகளை  
இங்கே வரவழைத்துள்ளோம்...
உங்களது குடியிருப்பிலும்..
ஒரு  பிள்ளையாரை வைக்க வேண்டும்...
பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்.. 
நாங்கள்  உங்களுக்குப் பண உதவி செய்கிறோம்... 
என்று அழுத்தமாக சொன்னபோது 
மனமில்லாமலும்... மறுக்க இயலாமலும்.. 
ஏற்றுக்கொண்டோம்...என்று சொன்னார்கள்...

வலை விரித்துக் குருவி பிடிக்கும்
வஞ்சனையில்லா  மக்களை..
வலை வீசிப்பிடித்து விட்டது   வஞ்சகக்கூட்டம்...

பிள்ளையாரைக் கும்பிடப்பணம் தருபவர்கள் 
மதுரை வீரனைக் கும்பிட பணம் தருவதுண்டா ?
என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டோம்...
காலம் முழுக்க கடன் வாங்கித்தான்.. 
எங்கள் மதுரை வீரனைக்  கும்பிட்டோம்... 
என்று சொன்னார்கள்... நமது தோழர்கள்..


பிறப்பால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு..
பிள்ளையார் பிரதானமாகி விட்டாரா?
வீச்சரிவாள் பிடித்த வீரத்தின் அடையாளம்.. 
மதுரை வீரன்  மறக்கடிக்கப்படுகிறானா?
என்ற கேள்வி நம்முன்  எழுந்தது...

குருவி பிடிக்கும் தொழிலைக் கொண்ட  நமது தோழர்கள்...
அன்று  ஆடு மாடுகளைப் போல் நடத்தப்பட்டவர்கள்
மனிதர்களாலேயே மறுக்கப்பட்டவர்கள்...
மரங்களின் கீழே மனம் நொந்து வாழ்ந்தவர்கள்...

இன்று... இவர்கள்.. 
உண்மையாய் உழைப்பவர்கள்.. 
ஓரடி முன்னேறியவர்கள்..
சிறிதேனும் சிந்திக்கத் தெரிந்தவர்கள்..

இவர்களின் இந்த முன்னேற்றத்திற்கு 
மூலகாரணம் யார்?

முதுகு  வளைந்தவனை..
கூனல் விழுந்தவனை ...
நிமிர வைத்தது யார்?
மூலப்பொருள் பிள்ளையாரா?
மூத்திரப்பை சுமந்த பெரியாரா?

புழுதியில் கிடந்தவனை..

புத்திக்கூர்மை  இல்லாதவனை.. 
புத்தகத்தை தொட வைத்தது.. யார்? 
வினைதீர்க்கும் பிள்ளையாரா?  
அடிமை... 
விலங்கொடித்த  பெரியாரா?

உறைவிடம் இல்லாதவனை.. 
உண்டிக்கு வழி தெரியாதவனை.. 
உத்தியோகம் பார்க்க வைத்தது யார்?
உலகைச் சுற்றமுடியாத பிள்ளையாரா?
உயிருள்ளவரை  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 
ஊரும் உலகமும் சுற்றிய பெரியாரா?

பெரியாரை வணங்க வேண்டிய கரங்கள்.. 
பிள்ளையாரை வணங்கும் காரணங்கள்  என்ன?
மதவெறிகளின் மயக்க மையில்.. 
மதவெறிகளின் கோரக் கையில்..
மக்கள் மாட்டிக்கொள்ளும் மர்மம் என்ன?

திலகர் அன்று...

தேசத்தின் அடிமை விலங்கொடிக்க..
சுதந்திர உணர்ச்சியை மக்களுக்கு ஊட்ட... 
பிரிட்டிஷ் கண்ணில் மண்ணைத்தூவப் பிள்ளையாரை... 
தேசத்தின் தேவைக்காக தோளில் சுமந்தார்..

கடவுள் என்பது கற்பனை..
கடவுளை வணங்குவது.. 
காட்டுமிராண்டித்தனம்.. என 
கடுமையாகப்  பிரச்சாரம் செய்தார்.. 
பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார்.. 
1953ல்.. பிள்ளையார் சிலையை உடைத்து.. 
கல்லுக்குள்ளே கடவுள் இல்லை என்று கற்பித்தார்..

இன்றோ..

விநாயகர் விற்பனைப்பொருளாகி விட்டார்..
அருமையான லாபம் தரும்..
வியாபாரப்பொருளாகி விட்டார்...

கையடக்க களிமண் பிள்ளையார் 
காணாமல் போய்விட்டார்...
சுண்ணாம்பு பிள்ளையாரோ.. 
அண்ணாந்து பார்க்கும்.. 
அளவில் வந்துவிட்டார்...

PLASTER OF PARIS BUSINESS என்னும் 
சுண்ணாம்பு வியாபாரம்... 
கடவுள் புண்ணியத்தால்..
சூடு பிடித்து நிற்கிறது...

அடிமட்ட மக்களும் கூட..
மதமயக்கத்தில்... மதவாதிகள்  நெருக்கடியில் 
சுண்ணாம்புப்பிள்ளையாரை...   
வாங்க வேண்டிய சூழல் இங்கே நிலவுகிறது...

தோழர்களே...
பாரத நாடு பழம்பெரும் நாடு 
நீரதன் புதல்வர்.. நினைவகற்றாதீர்..
என்று பாடினான் பாரதி...

பழம்பெரும் பாரத தேசத்தின்...
தொன்று தொட்ட நம் மக்களின் 
தொன்மங்கள்...  
இன்று.. மதங்களின் பெயரால் 
இங்கே அழிக்கப்படுகின்றன...

இந்த தேசம் எங்கே செல்கிறது?
ஆண்டாண்டு காலம் நாடாண்டவர்களும்..
சுமரியாதைக்காரர்களும்...
பகுத்தறிவுவாதிகளும்...
சமுதாயச்சிந்தனையாளர்களும்...
பொதுவுடைமைவாதிகளும்.. 
முற்போக்கு வாதிகளும்...
எங்கே சென்று விட்டார்கள்?

பெரியாரை மறந்து விட்டார்களா?
அல்லது...
பிடித்து வைத்த பிள்ளையார் போல்..
எல்லோரும் ஆகிவிட்டார்களா?

2 comments:

  1. நன்றாக இருந்தது. மனம் கனத்தது.
    மதவெறி மாண்டு போகட்டும்.

    ReplyDelete
  2. நன்றாக இருந்தது. மனம் கனத்தது.
    மதவெறி மாண்டு போகட்டும்.

    ReplyDelete