Friday, 29 November 2019


எங்கே நாணயம்?

அக்டோபர் மாதச்சம்பளத்தைப் பட்டுவாடா செய்யக்கோரி 
அனைத்து சங்கக்கூட்டமைப்பு தொடர் உண்ணாவிரத அறிவிப்பு கொடுத்த அடிப்படையில் நடந்த பேச்சுவார்த்தையில் அக்டோபர் மாதச்சம்பளம் நவம்பர் 28 அன்று பட்டுவாடா செய்யப்படும் 
என BSNL நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. அதனடிப்படையில் உண்ணாவிரதம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன் பின் 
BSNLEU சங்கம் தனித்து உண்ணாவிரதம் நடத்தியது. 

26/11/2019 அன்று மனிதவள இயக்குநருடன் நடந்த சந்திப்பில் 
28/11/2019 அன்று சம்பளநிதி ஒதுக்கப்படும் எனவும், 
29/11/2019 அன்று பட்டுவாடா நடைபெறும் எனவும் 
நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் உறுதி அளித்தபடி நிர்வாகம் 29/11/2019 அன்று சம்பளப்பட்டுவாடா செய்யவில்லை. 
ஊழியர்களை வஞ்சித்துள்ளது. வங்கிக்கு கட்டவேண்டிய வட்டிக்காக சம்பளத்திற்கு சேர்க்கப்பட்ட நிதியில் இருந்து 200 கோடியை எடுத்து விட்டதாகவும், சம்பளம் போட இன்னும் 250 கோடி தேவை என்றும், அதற்கு நான்கைந்து நாட்கள் ஆகும் 
எனவும் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.

எதுவாயினும் நிர்வாகத்தின் நோக்கம் நமக்கு நன்கு புலப்படுகிறது. 
விருப்ப ஓய்வுக்கு விருப்பம் அளிக்க, விலக்க
கடைசி நாளான 03/12/2019 வரை ஊழியர்களை விரக்தி மனநிலையிலேயே வைத்திருக்க நிர்வாகம் விரும்புகிறது. 
அந்த நாடகத்தின் தொடர்ச்சிதான் அக்டோபர் மற்றும் 
நவம்பர் மாதச்சம்பளங்கள் நிறுத்தி வைப்பு.

விருப்ப ஓய்வில் செல்லாமல் பணிபுரிவோம்
என்ற முடிவில் இருந்த இரண்டு காரைக்குடி தோழர்கள் நேற்று சம்பளம் போடவில்லை என்ற விரக்தியில்... வேதனையில் 
விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்து விட்டார்கள். 
இதைத்தான் நிர்வாகம் விரும்புகிறது. 

இதனிடையே வதந்தி பரப்பும் விஷமிகள் சிலர்...
ஜனவரி 2020க்குப்பின் வீட்டுவாடகைப்படி கிடையாது... 
விலைவாசிப்படி கிடையாது என்றெல்லாம்
வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்து விட்டனர். 
58, 33 இப்போதுதான் ஓய்ந்திருக்கின்றது.

விருப்ப ஓய்வில் செல்பவர்களை மகிழ்ச்சியாக அனுப்பி வைப்போம் என்று நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. 
இரண்டு மாதச்சம்பளத்தை நிறுத்தி வைத்து நிர்வாகம் மகிழ்ச்சி அளிக்கிறதா என நமக்குப் புரியவில்லை. 
விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்காமல்... 
இருக்க நினைப்பவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்காமல் 
நிர்வாகம் துன்பம் தந்து கொண்டிருக்கின்றது.

வட்டிலில் சோறு இல்லாதவனுக்கு சோறு போடுவதை விட...
வட்டிக்குப் பணம் கட்டுவதை தனது கடமையாகக் கொண்டுள்ளது...
உழைக்கின்ற ஊழியர்கள் உழைப்புக்கான
நாணயத்தை தரக்கோரி நிற்கின்றனர்...
ஊதியம் கொடுக்க வேண்டிய நிர்வாகமோ
தனது உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல்...
நாணயம் இழந்து நிற்கின்றது...
நிர்வாகமே... 
உழைத்த எங்கள் நாணயம் எங்கே?
உறுதிமொழி அளித்த உன் நாணயம் எங்கே? 
இதுவே நிர்வாகத்திடம் நாம் கேட்கும் கேள்வி...

Thursday, 28 November 2019


NFTE மத்திய சங்கக் கடிதங்கள்

வீட்டுக்கடன் அபராத வட்டி

HBA கடன் வாங்கிய தோழர்கள் தங்களது வீட்டை ஆயுள் காப்பீடு செய்யாத காரணத்தினால் விதிக்கப்படும் அபராத வட்டியை 2 சதமாகக் குறைக்கக்கோரியும், ஆயுள் காப்பீடு செய்யாத காலத்திற்கு மட்டும் அபராத வட்டி வசூலிக்கக்கோரியும் நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
-----------------------------------------------------------------------------
TELECOM FACTORY மூடல்

TELECOM FACTORY எனப்படும் தொலைத்தொடர்பு தொழிற்சாலைகள் நாடு முழுக்க இருக்கின்றன. இந்த ஏழு தொழிற்சாலைகளில் ஏறத்தாழ 1000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த தொழிற்சாலைகளில் தற்போது சிம் கார்டு, PLB குழாய்கள்,  DROP WIRE, JUMPER WIRE போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த TELECOM FACTORYகளை மூடி விட BSNL நிர்வாகம் உத்தேசித்துள்ளதாக ஆதாரமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கண்ட தொழிற்சாலைகளை மூடக்கூடாது எனவும், தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் எனவும், குறைந்தது ஒரு தொழிற்சாலையாவது நடத்தப்பட வேண்டும் எனவும் நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
-----------------------------------------------------------------------------
ஓய்வூதியம் பற்றிய சந்தேகங்கள்

மனிதவள இயக்குநர் DIRECTOR (HR) தனது 23/11/2019 தேதியிட்ட கடிதத்தில் ஓய்வூதியம் மற்றும் தொகுப்பு ஓய்வூதியம் COMMUTATION சம்பந்தமாக விளக்கம் அளித்திருந்தார். அவரது விளக்கம் மகிழ்ச்சி தரக்கூடியதே என்றாலும் அதனை சம்பந்தப்பட்ட இலாக்காக்கள் உறுதி செய்ய வேண்டும் என நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
-----------------------------------------------------------------------------
ஓய்வூதிய விண்ணப்பங்கள்

விருப்ப ஓய்வில் செல்பவர்கள் தங்களது விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை விருப்ப ஓய்விற்கு மறுநாள் முதல் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது ஓய்வுக்கு முன்னரே ஊழியர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் ஊழியர்களின் GPF வைப்புநிதி, ஆயுள் காப்பீடு போன்ற பிடித்தங்கள் இன்று வரை வரவு வைக்கப்படாத சூழலில் ஓய்வூதிய விண்ணப்பங்களை அனுப்புவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே உடனடியாக நிர்வாகம் மேற்கண்ட பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
 -----------------------------------------------------------------------------
BSNL வருங்காலப் பணிகள்


விருப்ப ஓய்விற்குப் பின் BSNL நிறுவனத்தில் மேற்கொள்ளவிருக்கும் சீரமைப்பு மற்றும் மாற்றங்கள் குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
-----------------------------------------------------------------------------
COMMUTATION FACTOR 
தொகுப்பு ஓய்வூதிய காரணி

COMMUTATION விண்ணப்பிக்கும் ஊழியர்களின் வயதிற்கேற்ப COMMUTATION FACTOR கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தற்போது விருப்ப ஓய்வில் செல்லவிருக்கும் ஊழியர்களின் COMMUTATION FACTOR 01/01/2020 அன்று கணக்கில் கொள்ளப்படுமா? அல்லது ஓய்வூதியப்பலன்கள் கடைசியாகப் பட்டுவாடா செய்யப்படவிருக்கும் 2025ம் ஆண்டு COMMUTATION FACTOR கணக்கில்எடுத்துக்கொள்ளப்படுமா என்பது பற்றித் தெளிவுபடுத்திட வேண்டும் என நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
-----------------------------------------------------------------------------
ஊழியர்களின் மாற்றல் எல்லை...

தற்போது NON EXECUTIVE ஊழியர்களில் JUNIOR ENGINEER கேடர் தவிர ஏனையக் கேடர்கள் SSA கேடர்களாகும். JE கேடர் 2016ம் ஆண்டு மாநில அளவிலான கேடராக அறிவிக்கப்பட்டது. தற்போது விருப்ப ஒய்வு அமுல்படுத்தப்பட்டுள்ள சூழலில் எல்லாக் கேடர்களும் மாநில அளவிலான கேடர்களாக அறிவிக்கப்படும் என வதந்தி பரப்பப்படுகின்றது. சில இடங்களில் சில அதிகாரிகளுக்கு ஆர்வக்கோளாறு அதிகரித்து மாற்றல் உத்திரவை இட ஆரம்பித்துள்ளனர். இது விதிகளுக்கு முரணானது. வணிகப்பகுதி மாற்றலிலும் கூட NON EXECUTIVE கேடர் ஊழியர்கள் SSA ஊழியராகவே கருதப்படுவார்கள் என உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் மாற்றல் பிரச்சினையில் நிர்வாகம் உரிய விளக்கம் அளித்திட வேண்டும். தொழிற்சங்கங்கள் கலந்து ஆலோசனை செய்யப்பட வேண்டும்.

Wednesday, 27 November 2019


ஓய்வூதிய விண்ணப்பங்கள்

விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்களின்
ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தமாக
மாநில நிர்வாகம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது....

அதன்படி...
விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்கள்
தங்கள் ஓய்வூதிய விண்ணப்பங்களை வழக்கம் போலவே
உரிய படிவங்களில் நிரப்பி தங்களது 
மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

09/12/2019 முதல் தங்களது விவரங்களை ONLINE மூலமாக SAMPANN எனப்படும் DOTயின் ஓய்வூதிய மென்பொருள் மூலம் நிரப்ப வேண்டும்.

SAMPANNல் USER ID அவரவரது 
வருமானவரிக் கணக்கு எண் PAN NUMBER ஆகும்.
முதன்முறையாக admin@123 என்ற கடவுமொழி
PASSWORD பயன்படுத்த வேண்டும். 
அதன்பின் அவரவர் தங்களின் கடவுமொழியை மாற்ற வேண்டும்.
எல்லாவித தகவல்களும், OTP எனப்படும் தற்காலிக கடவுமொழிகளும்
ஊழியரின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.
எனவே ONLINE ஓய்வூதியப் பணிகளுக்கு
அலைபேசி எண் என்பது மிக மிக அவசியம்.

எனவே அனைவரும் 02/12/2019க்குள் ESS இணையத்தில் 
தங்களது செல்போன் எண்ணைப்பதிவு செய்ய வேண்டும். 
செல்போன் எண்ணைப் பதிவு செய்யாதவர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது தாமதப்படும்.

விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்த தோழர்கள்
உடனடியாக அந்தந்த பகுதித் தோழர்களின் உதவியோடு விண்ணப்பங்களை நிரப்பும் பணியில் ஈடுபடவேண்டும்.

Tuesday, 26 November 2019


நெஞ்சம் நிறைந்த 
நெல்லைத் தலைவன்... 

அஞ்சலி...

தோழர். S.அருணாச்சலம்
AIBSNLPWA - அகில இந்திய துணைச்செயலர்
மறைவு - 26/11/2019 
 -----------------------------------------------
சுரண்டையில் பிறந்தவன்..
சுரண்டலுக்கு எதிராய் வளர்ந்தவன்...

விருதை போற்றிய விவேகமிகு சேவகன்...
காரைக்குடி போற்றிய கண்ணியமிகு காவலன்...
மதுரை போற்றிய மாண்புமிகு மனிதநேயன்...
நெல்லை போற்றிய நேசமிகு ஊழியன்...
தமிழகம் போற்றிய தரமிகு தலைவன்....
தேசம் போற்றிய பாசமிகு தோழன்....

இருந்தாலும் ஆயிரம்...
இறந்தாலும் ஆயிரம்...
அசைந்தாடும் யானையாய்...
அன்பான அவன் உருவம்...
என்றும் நம் நெஞ்சில் நிழலாடும்...

இருந்தாலும்.. மறைந்தாலும்..
பேர் சொல்லும்.....
அன்புத்தலைவர் அருணா போல்
யாரென்று ஊர் சொல்லும்...

NFTE உயிர் மூச்சு...
AIBSNLPWA இறுதி மூச்சு...

ஓய்வறியா உத்தமத்தலைவனின்...
மறைவிற்கு நம் இதயம் கசிந்த அஞ்சலி...


ஓய்வுக்கு இல்லை...
33 வருட எல்லை....

BSNL நிறுவனத்தில்...
விருப்ப ஓய்வுத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 
பலவிதமான வதந்திகள் தொடர்ந்து வாந்தி எடுக்கப்பட்டன. 
வலைத்தளங்கள் பிழைத்தளங்களாக 
தவறான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி வந்தன. 

அவற்றுள் ஒன்றுதான் 33 வருடம் சேவை முடித்த மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு வயதான 60ஐ அடையாவிட்டாலும் 
அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்ற பிரபல வதந்தி. 

தற்போது மத்திய அரசு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்து YSR கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
திரு.கிருஷ்ண தேவராயலு MP அவர்கள்
மத்திய அரசு ஊழியர்கள் 60வயதை அடையும் முன்பே 
33 வயது சேவைக்காலம் முடித்திருந்தால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதா? 
என கேள்வி எழுப்பியிருந்தார்.

33 வருட சேவை புரிந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 
60 வயதுக்கு முன்பே ஓய்வு கொடுக்கும் திட்டம் எதுவும் 
மத்திய அரசில் இல்லை என 25/11/2019 அன்று நிதி அமைச்சக துணை அமைச்சர் திரு.தாக்கூர் நாடாளுமன்றத்தில் 
அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் 33 வருட வதந்திக்கு 
முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புவோம்...
இனி அடுத்த வதந்தியைக் கேட்க தயாராவோம்...

Monday, 25 November 2019


HBA – ஆயுள் காப்பீடும்... அபராத வட்டியும்...

31/03/2001 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட
HBA வீட்டுக்கடன்கள்  DOT கணக்கிலும்,
01/04/2001க்கு பின்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட 
HBA வீட்டுக்கடன்கள்  BSNL கணக்கிலும் வருகின்றன. 

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் தங்களது வீடுகளை
ஆயுள் காப்பீடு செய்ய வேண்டும் என்பது HBA விதி. 
அவ்வாறு ஆயுள் காப்பீடு செய்தால் வீட்டுக்கடன்
வட்டியில் 2.5 சத சலுகை அளிக்கப்படும். 
ஆயுள் காப்பீடு செய்யாவிட்டால் 2.5 சதம் 
அபராத வட்டியாக வசூலிக்கப்படும். இந்த அபராத வட்டி 
கடன்காலம் முழுமைக்கும் வசூலிக்கப்படும்.

ஒருவரது கடன்காலம் 20 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம். 
அவர் 15 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு செய்திருந்து 
மீதி 5 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு செய்யாவிட்டாலும் 
ஒட்டுமொத்த 20 ஆண்டுகளுக்கும் 
அவர் 2.5 சத அபராத வட்டி கட்ட வேண்டும்.

இதில் 2 ஆண்டுகள் வரை ஆயுள் காப்பீடு செய்யாமல் இருந்து மீதிக்காலம் முழுமைக்கும் ஆயுள் காப்பீடு செய்திருந்தால்  
அபராத வட்டி விதிக்காமல் தள்ளுபடி செய்யும் அதிகாரம் 
மாவட்ட அதிகாரிகளுக்கு உண்டு. 

கடன் வாங்கி  வீடு கட்டும் எவரும் விதிகளைப் பார்ப்பதில்லை. 
விதியே என்றுதான் வீடுகளைக் கட்டுகின்றனர். 
எனவே ஆயுள் காப்பீடு செய்யப் பலர் தவறி விடுகின்றனர். 
வீட்டு லோன் முடியும் தருவாயில்...
நிர்வாகத்திடம் மாட்டிக்கொண்டு 
பல ஆயிரம் ரூபாய்களை அபராத வட்டியாகக் கட்டி 
கண்களைக் குளமாக்குகின்றனர்.

இந்த அபராத வட்டி விவகாரம் நீண்ட நாட்களாக
மத்திய அரசு ஊழியர்களின் தீராதப் பிரச்சினையாக இருந்தது. 
இப்பிரச்சினையை ஆய்வு செய்த மத்திய அரசு வீட்டுக்கடன் வாங்கியவர்கள் ஆயுள் காப்பீடு செய்யாத காலத்திற்கு மட்டும் 
அபராத வட்டி கட்டினால் போதும் எனவும், 
அபராத வட்டியை 2.5 சதத்திலிருந்து 2 சதமாகக் குறைத்தும் 09/11/2017 அன்று உத்திரவிட்டது. 

இந்த உத்திரவு BSNL நிர்வாகத்தால் இன்னும் வழிமொழியப்படவில்லை. விருப்ப ஓய்வுத்திட்டத்தில் பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேறும் நிலையில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் தங்களது வீட்டுக்கடனை ஆயுள் காப்பீட்டு உள்பட அனைத்து நிலுவைகளையும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. 

எனவே மத்திய அரசின் 09/11/2017 உத்திரவு BSNLலில் அமுல்படுத்தப்பட்டால் பல தோழர்கள் பயன் பெறுவார்கள். 

மாநிலச்சங்கத்திற்கும்... மத்தியசங்கத்திற்கும்...
இப்பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளோம்.
சாதகமாக  தீர்த்து வைப்பார்கள் என்று நம்புகிறோம்.

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களை மனமகிழ்ச்சியோடு 
அனுப்பி வைப்போம் என்று நமது CMD உறுதி அளித்துள்ளார். 

கடன்பட்ட நமது தோழர்களையும்...
அபராத வட்டியில் இருந்து விடுவித்து 
நமது நிர்வாகம் மனமகிழ்ச்சியைத் தரும் என்று நம்புவோம்.

Sunday, 24 November 2019

VRS தனிக்குழுவல்ல...
மனிதவள இயக்குநர் கடிதம்...

DIRECTOR(HR) மனிதவள இயக்குநர் 23/11/2019 அன்று
விருப்ப ஓய்வு குறித்து விளக்கக் கடிதம் வெளியிட்டுள்ளார்...

அந்தக்கடிதத்தில்...
விருப்ப ஓய்வில் செல்பவர்களைத் 
தனிக்குழுவாக நிர்வாகம் நடத்தும். 
அவர்கள் ஏனைய ஓய்வூதியர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று 
பல்வேறு சந்தேகங்கள் இன்று எழுப்பப்படுகின்றன. 

இது அர்த்தமற்ற சந்தேகம். 
மேலும் விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு 
IDA விலைவாசிப்படி அளிக்கப்படுமா? என்றும்
சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதுவும் அர்த்தமற்றது.

2019ல் விருப்ப ஓய்வில் செல்பவர்கள்
தனிக்குழுவாகக் கருதப்படமாட்டார்கள்.

அவர்கள் வழக்கமான பணிநிறைவு பெற்ற
ஊழியராகவே கருதப்படுவார்கள்.

பணிநிறைவில் செல்பவர்களுக்கு IDA வழங்ப்படுவது போலவே விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கும் IDA வழங்கப்படும்.

விருப்ப ஓய்வில் செல்பவர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களை நிரப்புவதில் இருந்து அனைத்து வகையான பணிகளையும் 
BSNL நிர்வாகம் திறம்பட செய்து வருகின்றது.

விருப்ப ஓய்வில் செல்பவர்களின் விடுப்புப்பணம்
LEAVE ENCASHMENT உரிய நேரத்தில் வழங்கப்படும்.

EX-GRATIA எனப்படும் அருட்கொடை ஏற்கனவே அறிவித்தபடி 
உரிய கால இடைவெளியில் பட்டுவாடா செய்யப்படும். 

இதற்கான நிதிஉதவி இந்திய அரசால் வழங்கப்படுவதால் 
குறித்த காலத்தில் பட்டுவாடா நிகழும்.

இதனைப்போலவே ஓய்வூதியம், 
குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, 
தொகுப்பு ஓய்வூதியம் போன்ற 
அனைத்து பட்டுவாடாக்களும் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.

விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு 60 வயதை அடையும்போது
பணிக்கொடை, தொகுப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் 
என்பது மத்திய அமைச்சரவை முடிவாகும். 
எனவே அந்த முடிவின் சாராம்சம் விருப்ப ஓய்வில் செல்பவர்களின் ஓய்வூதியப்புத்தகத்தில் PENSION PAYMENT ORDERல் குறிப்பிடப்படும்.
-----------------------------------------------
தோழர்களே...
விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு 
பல்வேறு சந்தேகங்கள் இருந்தன... 
பல்வேறு ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டன...
அவற்றையெல்லாம் 
மனித வள இயக்குநரின் கடிதம் தீர்த்துள்ளது...

ஆனாலும்...
சந்தேகங்களைத் தீர்க்கக்கூடிய
அதிகாரம் BSNLக்கு கிடையாது...
அவற்றை DOT மற்றும் ஓய்வூதிய
இலாக்காக்கள்தான் தீர்க்க வேண்டும்
என NFTE மத்திய சங்கம் கருத்து தெரிவித்துள்ளது...

Friday, 22 November 2019


NFTE சம்மேளன தின விழா
 
N F T E
சம்மேளன தினக்கொடியேற்றம்
மற்றும் சம்மேளன தின சிறப்புக்கூட்டம்
-------------------------------------------------------
23/11/2019 – சனிக்கிழமை – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
-------------------------------------------------------
தலைமை
தோழர். பா. லால்பகதூர் 
NFTE மாவட்டத்தலைவர்
-------------------------------------------------------
சம்மேளன தினக்கொடியேற்றம்
தோழர். க. சுபேதார் அலிகான்
NFTE - மாநில அமைப்புச்செயலர்
-------------------------------------------------------
பங்கேற்பு : தோழர்கள்
ந. நாகேஸ்வரன்  
மாவட்டச்செயலர் - AIBSNLPWA

பெ. முருகன் 
மாவட்டத்தலைவர் - AIBSNLPWA

இரா. பூபதி  
மாவட்டப்பொருளர் - AIBSNLPWA

சி. முருகன்  
மாவட்டத்தலைவர் - ஒப்பந்த ஊழியர் சங்கம்

பா. முருகன்  
மாவட்டச்செயலர் - ஒப்பந்த ஊழியர் சங்கம்

வெ. மாரி 
மாவட்டச்செயலர் - NFTE

ம. ஆரோக்கியதாஸ்  
கிளைச்செயலர் - NFTE

அ. சேக் காதர் பாட்சா  
கிளைத்தலைவர் - NFTE

மற்றும் முன்னணித்தோழர்கள்....
தோழர்களே... வருக....

ஓய்வூதிய விண்ணப்பங்கள்

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின்
 ஓய்வூதிய விண்ணப்பங்களை ONLINE இணையசேவை மூலமாக நிரப்புவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்கள் 09/12/2019 முதல் 
SAMPANN மென்பொருள் வழியாக தங்களது ஓய்வூதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என DOT உத்திரவிட்டுள்ளது.

 இதற்காக மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதற்காக HELP DESK 
உதவி மையங்களும் திறக்கப்படவுள்ளன. 

தோழர்கள் 09/12/2019க்கு மேல் விண்ணப்பங்களை 
நிரப்புவதற்கு தயாராக இருக்கவும்.

Thursday, 21 November 2019


நவம்பர் 24
NFPTE சம்மேளன தினம் 

அணையா விளக்கு...
ஆற்றலின் பெருக்கு..
உரிமைக் குரல்...
உணர்வுப் பிழம்பு...
கூரிய பார்வை...
கூனாத முதுகு...
தாழாத கரம்...
வீழாத சிரம்...
ஞானத்தின் ஒளி...
தியாகத்தின் சுடர்...
NFTE பெருமை போற்றுவோம்...

 NFTE
 சம்மேளன தின
கொடியேற்றம்
23/11/2019 – சனிக்கிழமை – மாலை 04 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
 தோழர்களே... வாரீர்... வாரீர்...

செய்திகள்
ஓய்வூதிய விண்ணப்பங்கள்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் தயார் செய்து கொடுப்பதற்கு DOT உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த தோழர்கள் சற்று பொறுமை காக்க வேண்டுகிறோம்டிசம்பர் 3 வரை விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கவும், விலக்கிக்கொள்ளவும் கால அவகாசம் உள்ளது. எனவே தோழர்கள் ஓய்வூதிய விண்ணப்பங்களை நிரப்பிட பொறுமையோடு செயல்படவும். காசோலை, வங்கிக்கணக்கு, வங்கியில் இருந்து பெறப்பட்ட MANDATE, தம்பதி புகைப்படம், குழந்தைகளின் வயதுச்சான்றிதழ் போன்ற தேவையான 
சான்றிதழ்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும்.
------------------------------------------------------------------------------
BSNLEU தலைமையில் உண்ணாவிரதம்...

நவம்பர் 20 அன்று துவங்கவிருந்த தொடர் உண்ணாவிரதம் AUABயால் வாபஸ் பெறப்பட்ட நிலையில் BSNLEU சங்கத்தின் தலையில் FNTO, BTEU BSNL உள்ளிட்ட 6 சங்கங்கள் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி  நவம்பர் 25 அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறிவிப்புச் செய்துள்ளன. நவம்பர் 25 அன்று ஓய்வூதியம் சம்பந்தமாக DOT உரிய விளக்கங்களை வெளியிடும் என்று CMD தென்மண்டல அதிகாரிகள் பங்கேற்ற காணொலிக்காட்சியில் கூறியிருந்தார். இந்நிலையில்தான் BSNLEU சங்கம் தனது தலைமையில் தனித்த போராட்டம் நடத்த உத்தேசித்துள்ளது. ஏதோ இந்த உண்ணாவிரதமாவது நடந்து  பனம்பழங்கள் விழுந்தால் சரி...
------------------------------------------------------------------------------
ஓய்வூதிய விளக்க வகுப்பு

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின் ஓய்வூதியத்தை விரைந்து பட்டுவாடா செய்யும் பொருட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஓய்வூதிய வகுப்புகளை நான்கு மண்டலங்களில் நவம்பர் 25,26,27 மற்றும் 29 ஆகிய தேதிகளில்  DOT நடத்துகின்றது. தமிழகத்தை உள்ளடக்கிய தென்மண்டல பயிற்சி வகுப்பு 25/11/2019 அன்று நடைபெறும். GM(Finance), GM(HR) மற்றும் ஓய்வூதியப்பிரிவில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். அதன்பின்பு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்படும்.

------------------------------------------------------------------------------

ஓய்வூதியம் சம்பந்தமாக NFTE கடிதம்...

பணிக்கொடை GRATUITY, தொகுப்பு ஓய்வூதியம் COMMUTATION மற்றும் ஓய்வூதியத்தில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளை CMDயிடம் நமது NFTE சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உரிய விளக்கம் அளிக்கவும்
உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் கோரியுள்ளது.