Saturday, 31 January 2015

கடலூர் கருத்தரங்கத் திருவிழா...

அனைத்து சங்க கூட்டமைப்பின் 
கருத்தரங்கத் திருவிழா..
கடல்களின் சங்கமமாய்...
கடலூரிலே.. ஜனவரி 30 அன்று...
BSNL காப்போம்.. தேசம் காப்போம்..
என்னும் ஓன்று பட்டகுரல் எழுப்பி 
எழுச்சியுடன் நடந்து முடிந்துள்ளது.

கைகலப்புக்கு பெயர் பெற்ற கடலூரிலே..
கலகலப்பாய் இருந்தது...
கண்கவர் கூட்டமைப்பு மேடை...

பல தோழர்களைச் சந்தித்த போது 
ஓன்று பட்ட NFPTE சங்கத்தின் 
அந்த நாள் ஞாபகம்...
நெஞ்சிலே வந்தது...

BSNLன்.. 
இன்றைய நிலை அறிந்து...
இணக்கத்துடன் ஒற்றுமைக்குரல் கொடுக்கும் 
இயக்கத் தலைவர்களுக்கு 
நமது வாழ்த்துக்கள்...

கண்கவர் விளம்பரங்கள்... அதில் 
கருத்தாழம் மிக்க சொற்றொடர்கள்...
ஆயிரம் ஆயிரம் திரண்டு வந்தாலும்..
அன்பான.. அலுக்காத உபசரிப்பு..
தலைமை சொல்வதை 
தட்டாமல் கேட்கும் பாங்கு..  என
தனக்கென ஒரு முத்திரை கொண்டு..
தனது பாரம்பரியம் மாறாமல்..
கருத்தரங்கம் நடத்திட்ட..
கடலூர் தோழர்களுக்கு...
நமது கனிவான 
வாழ்த்துக்களும்... வணக்கங்களும்..

Friday, 30 January 2015

பல்லாண்டு வாழ்க...
அருப்புக்கோட்டையில் பிறந்து...
பாண்டிச்சேரியில் பணி சேர்ந்து..
காரைக்குடியில் கடமை முடிக்கும் 
அமைதிக்கீற்று...
அன்பின் ஊற்று...
சமூகப்புரட்சியின் சான்று...

தோழர். சுப.முத்துக்கிருஷ்ணன் 
SSS - பொதுமேலாளர் அலுவலகம் -காரைக்குடி 

அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க 
வாழ்த்துகின்றோம்...

Thursday, 29 January 2015

ஜனவரி - 30
மகாத்மா காந்தி
 நினைவு தினம் 
 விடுதலை தந்தவனுக்கு..
நிரந்தர  விடுதலை...

மதவெறி  மாய்த்தது... மகாத்மாவை 

தலை சாய்ந்தார்  தேசத்தந்தை
 தலை கவிழ்ந்தது தேசம்..

காவியாடை காந்தியைக்  கொன்றது...
கதராடைக்   காந்தியத்தைக் கொன்றது...
இனி...
இங்கே கொல்வதற்கு ஏதுமில்லை...

காந்தி மகான்...
நினைவைப்  போற்றுவோம்.....
ஜனவரி 30
கடலூர்க் கருத்தரங்கம் 

கடலூர் சிவக்கட்டும்...
கருத்தரங்கம்  சிறக்கட்டும்...

Wednesday, 28 January 2015

NFTE  
வெற்றிகளின் கோட்டை... வேலூர்..

வேலூர்...
கோட்டைகளின் நகரமது..
NFTE  
கோட்டையின் சிகரமது...
நமது முன்னணித் தலைமையது...
நமது முன்னணித் தளமது..
சொல்லிலே... முன்னணி..
செயலிலே.. முன்னணி....

மாநில மாநாடாய்..நடந்த..
மாவட்ட மாநாடு கண்டு...
மனம் மகிழ்கின்றோம்...

முன்னணியில் முனைப்புடன்...
முனை மாறா கூர்மையுடன்..
முன்னிலும் கூரிய பணி  தொடர்ந்திட... 
முகமலர்ந்து வாழ்த்துகின்றோம்...
செய்திகள்
  • கனரா வங்கியுடன் BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 22/01/2016 வரை அமுலில் இருக்கும். தற்போதைய தனிநபர்க்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.
  • 01/10/2000க்கு முன் TSM ஆகப்பணி புரிந்து அதன் பின் BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற தோழர்கள் DOT  ஊழியராக சில இடங்களில் கருதப்படவில்லை. அத்தகைய தோழர்களை  DOTயில் இருந்து BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற  ஊழியர்கள் என்னும் நிலைக்கு அங்கீகரிக்க வேண்டும் என JCM தேசியக்குழுவில் பிரச்சினை எழுப்பப்பட்டது. தற்போது இது குறித்து டெல்லி நிர்வாகம் தேவையான விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.
  • BSNL விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் வைப்பதற்கான உறை KIT MONEY  வாங்குவதற்கான தொகை ரூ.2000/=ல் இருந்து 2500/= ஆகவும், நாடுகளுக்கிடையேயான போட்டியாளர்களுக்கு ரூ.2500/= லிருந்து ரூ.3000/=மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • JCM தேசியக்குழு நிலைக்குழு STANDING COMMITTEE  கூட்டம் 10/02/2015 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  NFTE சார்பாக தோழர்கள்.இஸ்லாம் அகமது,சந்தேஷ்வர்சிங் மற்றும் BSNLEU சார்பாக தோழர்கள்.அபிமன்யு, ஸ்வபன் சக்கரவர்த்தி,  பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
  • IQ ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக தங்குவோருக்கு பெருநகரங்களில் ரூ.40/=ம் ஏனைய ஊர்களில் ரூ.25/=ம்,  சொந்தப்பணி நிமித்தமாக தங்குவோருக்கு  பெருநகரங்களில் ரூ.150/=ம் ஏனைய ஊர்களில் ரூ.75/=ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Tuesday, 27 January 2015

ஜனவரி 30
 காந்தி மகான்..
நினைவு தினத்தில்..
கடலூரில்.. கருத்தரங்கம் 
மதவெறியர்கள்... 
 மகாத்மாவை... 
மண்ணில் சாய்த்த... 
ஜனவரி 30ல்...

BSNL நிறுவனத்தை
 மண்ணோடு மண்ணாக்க  முயலும்
   ஆட்சியாளர்களின் போக்கை எதிர்த்து..
மாநிலம் தழுவிய கருத்தரங்கம்...

பொதுத்துறை காத்திட..
BSNL  காத்திட... 
அனைத்து சங்கத்தோழர்களும்... 
சங்கமிப்போம்...  கடலூரில்...
வாரீர்... தோழர்களே...

Monday, 26 January 2015

மறைந்தார்.. 
திருவாளர். பொதுஜனம் 
இராசிபுரம் கிருஷ்ணசாமி லட்சுமணன் 

கோடுகளால்...
தேசத்தின்.. 
கேடுகளைச் சித்தரித்த.. 
கோட்டோவியக் கலைஞர் 
திரு.ஆர்.கே.லக்ஷ்மண் 
அவர்கள் மறைவிற்கு 
நமது அஞ்சலி...

Sunday, 25 January 2015

திருவாளர். குடியரசு...
 26/01/1950
திருவாளர். குடியரசு...
சாய்வு நாற்காலியில்...
தலை சாய்ந்து கிடக்கிறார்..
அவருக்கு  வயது இன்றோடு 66...

பாவம்.. பெரியவர்.. குடியரசு..
நாட்டு நடப்பை பார்த்து பார்த்து..
நெஞ்சு  வலிச்சுப்போச்சு..

சாதி சமய சண்டையைப் பார்த்து..
சர்க்கரை ரொம்ப ஏறிப்போச்சு...

மதவாதக்கல் அடைச்சு..
சிறுநீரகம் செயலிழந்து போச்சு...

ஏழை படும் பாட்டை பார்த்து..
இரத்தம்  கொதிச்சுப்போச்சு...

பங்கு விற்பனைக் காய்ச்சல் வந்து..
படுக்கையிலே மல ஜலம் போச்சு... 

லஞ்ச ஊழல் பேயடிச்சு..
புத்தி மொத்தமா  பேதலிச்சுப் போச்சு ..

குலவழிச்  சொத்தைக் கூவிக்கூவி 
பிள்ளைகளும்.. பேரன்களும்... விற்பதாலே..

குந்தவும்  ஒரு இடம் இன்றி...
குடிக்கவும் குவளைத்  தண்ணீ ர் இன்றி..

சாய்வு நாற்காலியில்..
தலை சாய்ந்து கிடக்கிறார்..
திருவாளர். குடியரசு...

தந்தை காந்தி..
அண்ணல் அம்பேத்கார்..
அன்பு கொண்ட மாமா நேரு.. 
அவரது மகள்  இந்திரா..
உயிரைக்கொடுத்து தேசம் காத்த தோழர்கள்... 
எல்லோரும் அவர் நினைவில் 
வந்து வந்து போகிறார்கள்..

அவர்கள் நினைவில் வாழ்ந்து..
அருமை உயிரைக் கையில் பிடித்து..
தர்மராஜனுக்கு தாக்கல்  சொல்லி....
தலை சாய்ந்து கிடக்கிறார்...
சாய்வு நாற்காலியில்.. 
திருவாளர். குடியரசு...

ஐந்தாண்டுக்கு ஒருமுறை.. 
அனுபவமற்ற மருத்துவர்கள்..
மாற்றி.. மாற்றி.. 
மருந்துகளை  கொடுப்பதாலே..
நோய் தீர வழியின்றி 
நொந்து கிடக்கின்றார்..
திருவாளர்.குடியரசு...

உள்ளூர் மருத்துவர்கள்.. 
உபயோகமற்றுப் போனதாலே...
உயரமாய் ஒரு மருத்துவர்..
அமெரிக்காவிலே இருந்து..
அவசரமாக வருகிறாராம்...

அவர் வந்து போன பின்பாவது...
எழும்புவாரா? குடியரசு..
மீண்டும்  பழைய நிலைக்கு 
திரும்புவாரா? குடியரசு..

துக்கம் தொண்டை அடைக்க..
துயரம் நெஞ்சைக்கவ்வ...
தவித்து நிற்குது...
அவர் மேல் பாசம் கொண்ட 
பாரத நாட்டுப்பிள்ளைகள்...
ஜனவரி 26
குடியரசு தினம் 
தங்கை விற்கிறாள்.. தேசியக்கொடியை..
தலைவர்கள் விற்கிறார்கள்.. தேசத்தை..

அனைவருக்கும் 
குடியரசு தின 
நல்வாழ்த்துக்கள் 

Friday, 23 January 2015

GPF பட்டுவாடா 

தோழர்களே.. இன்று வரை GPF 
வைப்பு நிதி  பட்டுவாடா நடைபெறவில்லை. 
 நிதி ஒதுக்கீடு வந்த பின்னரும் ஊழியர்களின் 
வங்கிக்கணக்கில் வரவு வைக்க இயலாத நிலை நிலவுகின்றது. 

 ERP என்னும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் ஊழியர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்கு பதிலாக உபத்திரவங்களை அளிக்கும் நிலை உருவாகி விட்டது. ERP திட்டம் ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அனுபவங்களின் அடிப்படையில் அங்கெல்லாம் ஏற்பட்ட நடைமுறைச்சிக்கல்கள் இங்கு வராமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை நிர்வாகம் எடுத்திருக்க வேண்டும். 
ஆனால் கூடுதல் பிரச்சினைகளைத்தான்
 ஊழியர்கள் சந்தித்துள்ளனர்.

 உரிய நேரத்தில் பணம் என்பது வராததால்...
 இனி என்று வந்தால் என்ன? 
என்ற சலிப்பு மனநிலையை ஊழியர்கள் அடைந்துள்ளார்கள். 

  பாரம்பரியம் மிக்க தொழிற்சங்கங்கள் 
தடம் பதித்த நமது துறையில் சாதாரண ஊழியர்கள் தங்களுடைய சொந்தப்பணத்தை அடைவதற்கு கூட அல்லாடும் நிலை உருவானது கண்டு மனம் வேதனை அடைகின்றது.

வரும் காலங்களிலாவது இது சரிசெய்யப்பட  வேண்டும் என்பதே அடிமட்ட ஊழியனின் எதிர்பார்ப்பு.

Tuesday, 20 January 2015

 
 வைப்புநிதி வானிலை அறிக்கை


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில்   
வைப்பு நிதி மழை பெய்ய வாய்ப்பு...

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள
 வைப்பு நிதி மன அழுத்த தாழ்வு நிலையால் 
டெல்லி மற்றும் சென்னையில்
வெப்பச்சலனம் உண்டாகி...

இன்னும் 48 மணி நேரத்தில் 
வைப்பு நிதி மற்றும் ஒப்பந்த ஊழியர் கூலியுடன்
 கூடிய  பில்மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
வைப்பு நிதி வானிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
  இன்னும் இரண்டு நாட்களில் 
பில்மழை பெய்யத்தவறினால்
 புயல் சின்னம் உருவாகும் வாய்ப்புள்ளதாக
கோபம் கொண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
நேற்றே மழை பெய்ய வாய்ப்பிருந்ததாகவும்
வைப்பு நிதி மேகங்களில்...
நிதி ஈரப்பதம் குறைந்த நிலையில் உள்ளதாலும்..
ERP இம்சைக்காற்றின் திசை மாறிய வீச்சாலும்..
மழைப்பொழிவு தள்ளிப்போனதாக...
வைப்பு நிதி வட்டார இயக்குநர் 
FUND முருகன் தெரிவித்தார்.
 
மேலும் அவர் உளறுகையில்...
நம்பிக்கைதான் வாழ்க்கை என்றும்..
அவ்வாறு நம்பிக்கை இல்லாதவர்கள்..
ஜக்கம்மா காளியிடம்..
இது குறித்து..
குறி கேட்பது சாலச்சிறந்தது..
என்றும் தெரிவித்தார்...

இத்துடன் இம்மாத 
வைப்புநிதி வானிலை செய்திகள்
வருத்தமுடன் முடிவடைகின்றன..

Monday, 19 January 2015

செய்திகள் 

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன் வழங்குவதற்காக 
அலகாபாத் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 13/01/2018 வரை மூன்று ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------
குடும்ப ஓய்வூதியம் FAMILY PENSION திருமணமாகாத மகன் மகளுக்கு அவர்களின் திருமணம் வரை வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் உடல் ஊனமுற்றவர்களாகவோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவோ, விதவையாகவோ  இருந்தால் அவர்களது திருமணத்திற்கு பின்னும் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என அரசு உத்திரவிட்டுள்ளது. அத்தகையவர்கள் தங்களுக்கு வருமானம் ஏதும் இல்லை என வருடந்தோறும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------
01/01/2015 முதல் 2.2 சதம் உயர்வு பெற்ற 
IDA உத்திரவு BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
30/01/2015 அன்று கடலூரில் அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த விளக்க கருத்தரங்க கூட்டம் நடைபெறுகின்றது. நமது சங்கத்தின் சார்பில் பொதுச்செயலர் தோழர்.சந்தேஸ்வர்சிங் கலந்து கொள்கின்றார்.
---------------------------------------------------------------------------------------------------------

 தப்பிசையில்.. ஆள்வோர்களின் தப்புக்களை சாடிய பாரதி கலைக்குழு..
அண்ணல் காந்தி.. ஆசான் ஜீவா.. வழியில்.. அடியொற்றி  வாழும் தோழர்.நல்லக்கண்ணு.. உடன் நமது தோழர்கள்..





18/01/2015 அன்று ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற
 காரைக்குடி சிராவயலில் தோழர்.ஜீவா அவர்களின் 
52வது நினைவுதின சிறப்புக்கூட்டம் சிறப்புற நடந்தேறியது. 
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தோழர்.குணசேகரன் தலைமையேற்க.. 
ஊராட்சி மன்றத்தலைவர் திரு.வேலுச்சாமி முன்னிலை வகிக்க...
தோழர்.ஜீவா ஆசிரமம் நடத்திய இடத்தின் உரிமையாளர் 
திரு.மெய்யப்ப செட்டியார் வரவேற்புரையாற்ற..

ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்க அமைப்பாளர் தோழர்.புரட்சித்தம்பி...
எழுத்தாளர் தோழர்.சந்திரகாந்தன்,
 பேராசிரியர்.பழனி இராகுலதாசன்...
திமு முன்னாள்  அமைச்சர் திரு.பெரியகருப்பன்..
 ஆகியோர் சிறப்புரையாற்ற...

 தோழர்.நல்லக்கண்ணு... தோழர்.ஜீவா பற்றிய 
அனுபவங்களை சிந்தனைகளை எடுத்துரைத்தார். 
பாரதி கலைக்குழுவினரின்  பாடல்கள் இன்றைய
 சமுதாய அவலங்களின் சாடல்களாக அமைந்தது.

சிராவயல் தோழர்.சுப்பிரமணியன் நன்றியுரைக்க..
 அடுத்த ஆண்டு 53வது  நினைவு தினத்தில்
தோழர்.ஜீவா ஆசிரமம் நடத்திய இடத்தில் 
ஜீவா நினைவுக்கூடமும், கல்விக்கூடமும் 
எழுப்பிட உறுதி பூண்டு கூட்டம் 
இனிதே நிறைவுற்றது.

Saturday, 17 January 2015


ஜனவரி 18 
தோழர்.ஜீவா
நினைவு தினம்
தேசத்தின் சொத்து தோழர்.ஜீவா

அடிமைமுறை ஒழித்து 
அடக்குமுறை தகர்த்து 
அடிமட்ட மக்களுக்கு அரிச்சுவடி சொன்ன 
அருமைத்தோழர். ஜீவா அவர்களை
 அண்ணல் காந்தியடிகள் ..சந்தித்த 
சிறப்புமிகு சிராவயலில்...

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் 
உணர்வுடன் நடத்தும் 

தோழர்.ஜீவா புகழஞ்சலி
சிறப்புக்கூட்டம்

18/01/2015 - ஞாயிறு 
மாலை 4 மணி - சிராவயல் 

-:தலைமை:-
தோழர்.குணசேகரன் 
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 

முன்னிலை: திரு.வேலுச்சாமி 
சிராவயல் ஊராட்சி மன்றத்தலைவர் 

சிறப்புரை 
பொதுவுடைமைப் பொக்கிஷம்
தோழர்.நல்லக்கண்ணு


பாரதி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி 
மற்றும் பெரியோர்கள் பங்கேற்பு...

பொதுவுடைமை போற்றுவோம்...
தோழர்.ஜீவா புகழ் பாடுவோம்...
வாரீர்... தோழர்களே...

Friday, 16 January 2015

SHRI. ANUPAM SRIVASTHAVA



BSNL புதிய CMD

BSNL நிறுவனத்தின் புதிய CMDயாக
முதன்மை மேலாண்மை இயக்குநராக 
DIRECTOR(CM) ஆகப்பணி புரிந்த 
திரு.அனுபம் ஸ்ரீவஸ்தவா 
 நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இவரது நியமனம் 5 ஆண்டுகள் ஆகும்...
  • இவரது செயல்பாடு ஓராண்டுக்கு கண்காணிக்கப்படும்...
  • ஒராண்டிற்குப்பின் அவரது செயல்திறனைப் பொறுத்து நீட்டிப்பு வழங்கப்படும்.
  • BSNL - MTNL இணைப்பு ஏற்பட்டால் நியமனம் மறுபரிசீலனை செய்யப்படும்.

நமது காலவரையற்ற வேலை நிறுத்தத்தின்
 முக்கிய கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
 நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட CMD நியமனத்தை  
மத்திய அரசு இப்போதேனும் நிறைவேற்றியுள்ளது 
நமது போராட்ட அறிவிப்பிற்கு கிடைத்த வெற்றி.

ஆயினும் BSNL - MTNL இணைப்பு ஏற்பட்டால்
 அவரது நியமனம் மீண்டும் பரிசீலனைக்கு
 உட்படுத்தப்படும்  என்ற உத்திரவின் வரிகள் 
நமக்கு நெருடலை உண்டாக்குகின்றது. 

கன்னியாகுமரியில் நம்பிக்கை நடை துவக்க நிகழ்ச்சியில் 
BSNL - MTNL இணைப்பு இல்லை என்று நமது இலாக்கா அமைச்சர் கூறியதற்குப் பின்புதான் மேற்கண்ட உத்திரவு வெளியாகியுள்ளது.

சொல்லொன்றும் செயலொன்றுமாக உள்ள
 இந்நாள் ஆட்சியாளர்களின் நிலை போகப்போக புரியும்.

Wednesday, 14 January 2015

 
தமிழர் திருநாள் கொண்டாட்டம்

   



தமிழ்நாடு கலை
 இலக்கியப்பெருமன்றம்
பெருமையுடன் நடத்தும்
தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் 

 தைத்திங்கள் முதல் தேதி
15/01/2015 - வியாழன் 
மாலை 5 மணி 
சிவகங்கை 

தலைமை 
தோழர்.குணசேகரன் 
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 

சிறப்புரை 
தவத்திரு.குன்றக்குடி அடிகளார் 
பங்குத்தந்தை.அருள்தாஸ் 
ஜனாப்.லியாகத்  அலிகான் 

செந்தமிழன்.சீமான் 
மற்றும் ஆன்றோர்கள்...

  • பாட்டு மன்றம்...
  • பட்டிமன்றம்...
  • பாராட்டு மன்றம்...
  • பரதநாட்டியம்..
  • பறையாட்டம்...
  • தப்பாட்டம்...
  • கரகாட்டம்...
  • தேவராட்டம்...
  • நையாண்டி மேளம்..
 மற்றும் 
 தோழர்.ஜீவா 
ஆவணப்பட வெளியீடு...

முழுக்க.. முழுக்க..
தமிழ் மணம் கமழும் நிகழ்ச்சிகள்...
தோழர்களே... வருக...தமிழ்ச்சுவை பருக...
பொங்கட்டும்...தங்கட்டும்... என்றும் மகிழ்ச்சி
தலை சாய்ந்தன பயிர்கள்...
தலை நிமிர்ந்தன பதர்கள் ...

பயிர்களை காத்திடுவோம்...
பதர்களை அழித்திடுவோம்...

மூடு பனி விலகட்டும்...
செங்கதிரொளி பரவட்டும்...

அனைவருக்கும் 
இனிய பொங்கல் 
தமிழர் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்... 
பொங்கலோ.... பொங்கல்   

களத்து மேடு கார் பார்க்கிங் ஆச்சு...
கண்மாய்க்கரை ரியல் எஸ்டேட் ஆச்சு... 
குத்தரிசி காணாமல்  போச்சு..
குலவைச்சத்தம் ஊமையாப்  போச்சு...
மண்பானை பொங்கி மாமாங்கம் ஆச்சு ..
பனங்கிழங்கை பார்த்து பல வருஷமாச்சு..

குக்கரிலே பொங்கல் வச்சு...
குடும்பத்துடன் டிவி பார்த்து...
குதூகலமாக பொங்கட்டும்...
தமிழர் திருநாள் ...
தரணி புகழ் உழவர் திருநாள்...

Tuesday, 13 January 2015

செய்திகள்

GPF நிதி ஒதுக்கீடு தமிழகத்திற்கு வந்து விட்டதாக
 செய்திகள் கூறுகின்றன. ஆயினும் பொங்கலுக்குப்  பின்தான்  
வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 
வங்கிகளுக்கு இது வரிசையான  விடுமுறை காலம்.
 எனவே இந்த வாரம் கைக்கெட்டினாலும்
 வாய்க்கெட்டும் வாய்ப்பில்லை. 
சரிதான்... உலைக்கு வந்தது...  இலைக்கு வராமலா போகும்...
 =====================================================
BSNL தனியாருக்குத்தாரை வார்க்கப்படாது... 
BSNL மற்றும் MTNL இணைப்பு கிடையாது.. என்று 
நமது துறை அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத் 
முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில்
நம்பிக்கை நடை  என்னும் நடைப்பயண  
துவக்க நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.  
நடையாய் நடந்தாலும் 
நாம் மந்திரிகளை சந்திக்க முடிவதில்லை. 
நடைப்பயண நிகழ்ச்சியிலாவது 
நமது நினைப்பு அவருக்கு வந்ததே என 
நாம் ஆறுதல் கொள்ளலாம். 
 நடக்கிற நிகழ்ச்சியில் சொன்ன விஷயம்
நடக்கிற விஷயமா   என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
=====================================================
சம்பளப்பட்டுவாடாவில் ERPயினால் ஏற்பட்டுள்ள
 இம்சைகளைக் களையக்கோரி மாவட்ட கணக்கு அதிகாரிகளுக்கு 
மாநில நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
======================================================
நாம் நினைத்தது போலவே 
பெயர் மாற்றக்குழுக்கூட்டம்  DESIGNATION COMMITTEE 
எந்த கேடருக்கும் பெயர் மாற்றாக்குழுக்
 கூட்டமாகவே முடிவடைந்துள்ளது.
=======================================================
கருணை அடிப்படை பணிக்கான உத்திரவுகளை டெல்லி தலைமையகத்தின் அனுமதி இல்லாமல் பிறப்பிக்க கூடாது என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. 
31/01/2015 வரை பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பற்றிய விவரங்களை 07/02/2015குள் அனுப்பிட மாநில நிர்வாகங்களை  
CORPORATE அலுவலகம்கேட்டுக்கொண்டுள்ளது. 
========================================================

Monday, 12 January 2015

கைப்பு நிதியான  வைப்பு நிதி..
வராது...ஆனாலும்....வரும்..

வைப்புநிதி...
அன்று... மாதம் மும்மாரி பெய்தது... 
இன்று...மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது  பெய்யாதா?
என BSNL பெரு மக்களை பெருமூச்சு  விட வைத்து விட்டது...

பக்திக்கும்..,பனிக்கும்  உகந்த மார்கழியிலே..
எல்லாம் வல்ல இறைவனை...
எழுப்பி நம் தோழர்கள்... 
எல்லாம் தொல்லை ERPன் இம்சை தீர துதிக்கின்றனர்... 

வைப்பு நிதி வேண்டி சிலர்....
இரு முடி கட்டினார்கள்.. எருமேலி சென்றார்கள்..
இரண்டு  மாதமாகியும்  ஏதும் கதை  நடக்கவில்லை...
திருப்பதி சென்றார்கள்.. திரும்பி வந்தார்கள்...
திருப்பம் எதுவும் நேரவில்லை...
பாத யாத்திரை சென்றார்கள்..பல நாள் நடந்தார்கள்..
பலன் ஏதும் இல்லாமல் பரிதவித்தார்கள்...

மாநிலச்சங்கங்கள் 
முதன்மைப்பொது மேலாளரிடம் முறையிட்டு விட்டன..
அகில இந்தியச்சங்கங்கள்...
CMDயிடம் சிரமங்களைச் சொல்லி விட்டன..
இனி மிச்சமிருப்பது ஐநா சபை மட்டுமே...

வைப்பு நிதி...
மூன்று மதங்களையும் முட்டிப்பார்த்த 
ஒரே மதம் (தாமதம்)...

கிறிஸ்துவர்களை தவிக்க விட்டது...
புத்தாண்டுப் பிரியர்களை புலம்ப விட்டது..
மீலாது விழாவிலும்..மீளாது நின்று விட்டது...
இனி... சங்கத்தமிழன்... மட்டுமே  பாக்கி...
ஜனவரி 15...
பானைகள் பொங்குமோ? 
பாழும் மனசுகள்..  பொங்குமோ?

தைப்பிறந்தால் வழி பிறக்கும்... என்பது பழமொழி..
தைக்கு முன்னே வைப்பு நிதி பிறக்குமா? 
என்பதே நமது தோழர்களின் கவலை மொழி...

நாளைக்குள் பிறந்தால் நன்று...
இல்லையேல்...
வைப்பு நிதி... தொழிலாளியின் 
கைப்பு நிதியாகிவிடும்...
ஒரு கோடி கையெழுத்து இயக்கம் 
இராமநாதபுரத்தில் துவக்க நிகழ்ச்சி..


முகவை மண்ணிலே...
அகவையில் மூத்த...  தோழர்.ஆர்.கே.,
கையெழுத்திடும் காட்சி 

உலகிற்கு வழிகாட்டிய விவேகாநந்தரை 
உலக மக்களுக்கு அடையாளம் காட்டிய முகவை மண்ணிலே ...
10/01/2015 அன்று கையெழுத்து இயக்கம் 
அருமைத்தோழர் ஆர்.கே., அவர்களால் 
எழுச்சியுடன் துவக்கி வைக்கப்பட்டது.

AITUC  சிவகங்கை மாவட்டச்செயலர் தோழர்.கார்வண்ணன் 
CITU மின் ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தோழர்.ஜான் சவுந்தர்ராஜ் 
BSNLEU மாநில அமைப்புச்செயலர் தோழர்.கிறிஸ்டோபர் 
கூட்டமைப்புத் தலைவர் தோழர்.மாரி 
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்  தோழர்.மகாலிங்கம் 
NFTE கிளைச்செயலர் தோழர்.காந்தி 
BSNLEU கிளைச்செயலர் தோழர்.லோகநாதன் 
மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர்.

தோழர்.ஆர்.கே அவர்களின் உரை
இனியொரு சுதந்திரம் கேட்டு வேட்டுசத்தமாய்  முழங்கியது.
கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

Sunday, 11 January 2015

ஜனவரி 12
தேசிய இளைஞர்  தினம்  
உலக ஒளிவிளக்கு 

நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை... 
இதுவே இளைஞர்களுக்கான மந்திரம்...

சுவாமி விவேகானந்தர்