ERP.. வாழ்த்துக்களும்... வருத்தங்களும்...
டிசம்பர் மாத சம்பளம் ERP மூலமாக தமிழகத்தில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நமது அதிகாரிகள் குறிப்பாக கணக்கு அதிகாரிகள் இரவு பகலாக உழைத்து எப்போதும் போல் ஊழியர்களுக்கு மாதக்கடைசியில் சம்பளம் கிடைப்பதற்கு வழி செய்துள்ளனர்.
அதற்காக அவர்களுக்கு நமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நேற்று இணைய தளத்தில் டிசம்பர் மாத சம்பள பட்டியலை இறக்குமதி செய்து பார்த்த பின் வாழ்த்துக்களோடு சில வருத்தங்களையும் நாம் சொல்ல வேண்டியுள்ளது. அவை சரி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கோடு சிலவற்றை சுட்டிக்காட்டுகின்றோம்.
- குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டு தோழர்கள் பெற்று வந்த PERSONAL PAY "கட்" பண்ணப்பட்டு விட்டது. குடும்பக்கட்டுப்பாட்டுத்தொகையில் கூடுதல் கட் எதற்கு?
- உடல் ஊனமுற்ற தோழர்களுக்கு குறைந்தபட்ச போக்குவரத்துப்படி மாதம் ரூ.1000/= வழங்கப்படுகின்றது. இராமேஸ்வரத்தில் வாய் பேச முடியாத DEAF AND DUMB தோழர்.S .ஆரோக்கியதாஸ்,TM அவர்களுக்கு ரூ.400 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் ERP சட்டங்களின் படி ஊமை என்பது உடல் ஊனமில்லையாம். . ஊமைகளுக்கு... உயர்த்தப்பட்ட போக்குவரத்துப்படி பொருந்தாது என உத்திரவு இருந்தால் அந்த உத்திரவு திருத்தப்பட/கிழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியதாஸ் ஊமையாக இருக்கலாம். நாம் ஊமையாக இருக்க முடியாது.
- கையிருப்பு பணம் TAKE HOME PAY கூடுதலாக சிலருக்கு காட்டப்பட்டுள்ளது. காரணம் மொத்தப் பிடித்தம் DEDUCTION தொகையின் கூட்டலில் குளறுபடி. LKG படிக்கும் நமது குழந்தைகளே அதைக்கூட்டி விடுவார்கள். இதற்கு எதற்கு ERP?
- கையிருப்பு தொகையைக் கூடுதலாக காட்டியிருந்தாலும் வங்கிக்கணக்கில் சரியான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கையிருப்பு தொகை ரூ.10854/= என்று சம்பள பட்டியலில் காட்டப்பட்டிருந்தது. ஆனால் வங்கிக்கணக்கில் ரூ.9554/= சரியான தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது. மனைவியிடம்/கணவனிடம் சம்பளப்பட்டியலைக் காட்டி சம்பளத்தையும் ஒப்படைக்கும் தோழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் குழப்பம் வர நேரிடலாம்.
- GPF BALANCE வைப்பு நிதி கணக்குத்தொகை 0.00 என்று காட்டப்பட்டிருந்தது. பல லட்சங்களை GPFல் சேமித்து வைத்திருந்த நமது தோழியர் ஒருவருக்கு அதைப்பார்த்தவுடன் ரத்த அழுத்தம் BP 200.00 என்று ஆகி விட்டது.
- HRMSல் கிடைக்கப்பெற்ற சில கூடுதல் விவரங்கள் இதில் கிடைக்கவில்லை. உதாரணமாக ஊழியர் உறுப்பினராக உள்ள சங்கப்பெயர், வங்கிப்பெயர், LIC/PLI POLICY விவரங்கள், எந்த வங்கியில் எவ்வளவு பிடித்தம் என்ற வங்கிக்கடன் விவரம். மேம்படுத்தபட்ட தொழில் நுட்பத்தில் உருவான ERP கூடுதல் விவரங்களை தருவதுதான் நியாயமாக இருக்கும்.
- வருமான வரிக்கணக்கில் கூடுதலான குளறுபடிகள். ஊழியர்கள் அளித்த பல விவரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பழைய புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டுள்ளதாக நிர்வாகக்குறிப்பு கூறுகின்றது.
- வாடகை வீட்டில் குடியிருப்போர் கொடுத்த வாடகை ரசீது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. காரணம் வீட்டு சொந்தக்காரரின் வருமான வரி கணக்கு எண் PAN வேண்டுமாம். வீட்டுக்காரரிடம் கேட்டால் முதலில் வீட்டைக்காலி செய்யுங்கள் என்று அவர் விரட்டுகின்றார். நிர்வாகத்திற்கு சந்தேகம் வந்தால் நமது துப்பறியும் அதிகாரிகளை வைத்து துப்பு துலக்கி உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். அது விடுத்து வீட்டுக்காரரின் PAN எண்ணைக் கேட்பது நியாயமற்றது.
- உடல் ஊனமுற்ற தோழர்களுக்கு சிறப்பு வரிச்சலுகை உண்டு. அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
- வீட்டுக்கடன் பெற்ற சில தோழர்களுக்கு அவர்கள் கட்டிய வட்டி மற்றும் அசல் அவர்களது வருமான வரி கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதிலும் இரண்டு வீடு கட்டியவர்களுக்கு சிக்கலோ சிக்கல். மற்றுமொரு வீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் என்ன? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. இரண்டு வீடு என்றாலே சிக்கல்தான் போலும்.
- HRMSல் சம்பந்தப்பட்ட நிதியாண்டின் இறுதி வரை சேமிக்கப்படும் சேமிப்புத்தொகை SAVINGS கணக்கில் கொள்ளப்பட்டு வருமான வரி கணக்கிடப்படும். ERPயில் சம்பந்தபட்ட மாதம் வரை மட்டுமே சேமிப்பு கணக்கிடப்படுகின்றது.
தோழர்களே.. இது நேற்றைய நிலவரம்..
இன்றைய நிலவரம் இனிமேல்தான் தெரியும்..
எனவே வருத்தங்கள் தொடரும்....
No comments:
Post a Comment